உகாதி

(யுகாதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உகாதி (Ugadi) அல்லது யுகாதி (தெலுங்கு: ఉగాది, கன்னடம்: ಯುಗಾದಿ) என்பது தெலுங்கு மற்றும் கன்னடப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடும் பண்டிகை ஆகும்.[1] மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா(गुढीपाडवा) எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர். உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின்படி மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர நாட்காட்டியின்படி, உகாதி சைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.[2]

உகாதி பச்சடி

தமிழின் படி பங்குனி / சித்திரை மாத வளர்பிறை பிரதமை அன்று ரேவதி - அஷ்வினி நட்சத்திரத்துடன் கூடும் நாள்.

உகாதி கொண்டாட்டம்

தொகு

சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

உகாதி அன்று, மக்கள் அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து புத்தாடை அணிந்து கொள்வார்கள். வீட்டில் வண்ணக்கோலம் இடுவார்கள். மாவிலைத் தோரணங்களால் வீட்டை அலங்கரிப்பார்கள். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் வாங்கியும் மகிழ்வார்கள். இந் நாளில் தனித்துவமான உகாதி பச்சடி செய்து விருந்தில் பரிமாறுவார்கள். மேலும் அன்றைய தினம் கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள்.[3][4][5] உகாதி அன்று பல்வேறு இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், தெலுங்கு சாகித்ய நிகழ்ச்சிகள் மற்றும் விருது வழங்குதல் ஆகியவை உகாதி நாளன்று நடைபெறும்..[6]

சொற்பிறப்பு

தொகு

உகாதி என்கிற சொல் சமசுகிருதம் மொழியிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. சமசுகிருதத்தில் "யுக" என்ற சொல்லுக்கு வயது என்றும், "அடி" என்ற சொல்லுக்கு தொடக்கம் என்கிற பொருள் காணப்படுகிறது. "ஓர் ஆண்டின் தொடக்கம்" என்கிற பொருளில் "உகாதி" என்கிற சொல் வந்துள்ளதைக் காணலாம்.[5] உகாதி சித்திரை மாதத்தின் சுத்த பாட்டிமை தினத்தில் வருகிறது. பெரும்பாலும், இப் பண்டிகை, ஆங்கில நாட்காட்டியின் படி, மார்ச்சு மாதக் கடைசியில் அல்லது ஏப்ரல் மாத முதல் வாரத்தில் வருகிறது.[2][3] கர்நாடக மாநிலத்தில் இது "யுகாதி" என்றும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் "உகாதி" என்றும் அழைக்கப்படுகிறது.

உகாதி பச்சடி

தொகு

உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதனால், இப் பச்சடியில் இனிப்பு, காரம், கசப்பு, உவர்ப்பு போன்ற சுவைகள் கலந்துள்ளன. இது, வருகிற புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர்.[5]

பிற உணவு வகைகள்

தொகு
 
ஒப்பட்டு(ಒಬ್ಬಟ್ಟು) அல்லது பூரண போளி/பூரண போளி -ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, கருநாடகம், மற்றும் மகாராட்டிரம் மாநிலங்களில் உகாதி அன்று செய்யப்படும்.

கருநாடகம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்காணா வில் உகாதி அன்று செய்யப்படும் சிறப்பு உணவு வகை பூரண போளி ஆகும். இது மைதா மாவு, வெல்லம் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யப்படும் சுவையான சிற்றுண்டி ஆகும். மக்கள் இதனுடன் நெய், பால் கலந்து உண்ணும் பழக்கம் உள்ளது.

தமிழ் நாட்டில் உகாதி

தொகு

தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு மொழி பேசுவோராலும் ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழக தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி போன்ற உகாதியுடன் தொடர்புடையவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர்.

தொடர்புடைய விழாக்கள்

தொகு

மகாராட்டிரம் மாநில இந்துக்களால் இந்த நாள் குடீ பாடவா (மராத்தி: गुढी पाडवा) என்று கொண்டாடப்படுகிறது. .

சிந்து மாகாணம், சிந்தி இன மக்கள் இதனை சேட்டி சந்த் என்று கொண்டாடுகிறார்கள்.[7]

மணிப்பூர் வாழ் மக்கள் இதனை "சாஜிபு நொங்மா பன்பா" எனக் கொண்டாடுகின்றனர்.

பாலி மற்றும் இந்தோனேசியா வாழ் இந்துக்கள் இதனை நைபி என்று கொண்டாடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Karen-Marie Yust (2006). Nurturing Child and Adolescent Spirituality: Perspectives from the World's Religious Traditions. Rowman & Littlefield. pp. 228–229. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7425-4463-5.
  2. 2.0 2.1 Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. p. 427. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  3. 3.0 3.1 Maithily Jagannathan (2005). South Indian Hindu Festivals and Traditions. Abhinav Publications. pp. 77–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-415-8.
  4. Jeaneane D. Fowler (1997). Hinduism: Beliefs and Practices. Sussex Academic Press. pp. 72–73. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-898723-60-8.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 5.2 Narayanan, Vasudha (1999). "Y51K and Still Counting: Some Hindu Views of Time". Journal of Hindu-Christian Studies (Butler University) 12 (1): 17–18. doi:10.7825/2164-6279.1205. 
  6. K.V. Raman (2003). Sri Varadarajaswami Temple, Kanchi: A Study of Its History, Art and Architecture. Abhinav Publications. pp. 97–98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7017-026-6.
  7. "Ugadi a time to rejoice". The Hindu (Chennai, India). 4 April 2005 இம் மூலத்தில் இருந்து 6 ஏப்ரல் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050406060740/http://www.hindu.com/2005/04/04/stories/2005040402650300.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாதி&oldid=3680814" இலிருந்து மீள்விக்கப்பட்டது