ரோடாசு கோட்டை

ரோடாசு கோட்டை (Rohtas Fort, உருது: قلعہ روہتاسகிலா ரோடாசு) பாக்கித்தானின் பஞ்சாப் மாநிலத்தில் ஜீலம் நகருக்கு அருகே அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காவற் கோட்டையாகும். 16ஆம் நூற்றாண்டில் ஆப்கானிய அரசர் சேர் சா சூரியால் வடக்கு பஞ்சாப் பகுதியில் பழங்குடியினரின் புரட்சியை ஒடுக்க இக்கோட்டையை கட்டினார். இந்தக் கோட்டையின் சுற்றளவு ஏறத்தாழ 4 கிமீ ஆகும். முகலாயப் பேரரசர் நசிருதீன் உமாயூனை வீழ்த்திய சூர் பரம்பரையை எதிர்த்து போடோகர் பழங்குடிகள் போராடி வந்தனர்; இவர்களை ஒடுக்கவே இந்தக் கோட்டை கட்டப்பட்டது.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ரோடாசு கோட்டை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
காபூலி வாயில், ரோடாசு கோட்டை.
வகைபண்பாடு
ஒப்பளவுii, iv
உசாத்துணை586
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21வது தொடர்)

இந்தக் கோட்டையை கட்ட எட்டு ஆண்டுகள் ஆயிற்று; 1555இல் முகலாய பேரரசர் நசிருதீன் உமாயூன் இக்கோட்டையைக் கைப்பற்றினார்.[1]ஈரானின் துருக்கிய அரசர் நாதிர் ஷா, ஆப்கானிய அரசர் அகமது ஷா துரானி மற்றும் மராத்தா படைகளும் பஞ்சாப் பகுதியில் போரிட்டபோது இங்கு முகாமிட்டுள்ளனர். 1825இல் இக்கோட்டையை கைப்பற்றிய சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கும் நிர்வாகத்திற்காக இக்கோட்டையை அவ்வப்போது பயன்படுத்தி உள்ளார்.[2][3]

கட்டப்பட்டதற்கான காரணங்கள்

தொகு

கனூஜ் சண்டையில் தோற்கடிக்கப்பட்ட உமாயூன் பெர்சியாவில் தங்கியிருந்தார்; அவர் மீண்டும் இந்தியா வருவதை தடுக்கும் எண்ணத்துடனேயே சேர் ஷா சூரி இந்தக் கோட்டையை கட்டினார். மலைப்பாங்கான ஆப்கானித்தானுக்கும் பஞ்சாப் சமவெளிக்கும் இடையில் பெரும் தலைநெடுஞ்சாலையில் இந்தக் கோட்டை அமைந்துள்ளது. முகலாயப் பேரரசுக்கு விசுவாசமாக இருந்த போடோகர் பழங்குடிகள் சேர் சா சூரிக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். இவர்களை ஒடுக்கவே இக்கோட்டை வலிமையுடன் கட்டப்பட்டது.[4] 1555இல் உமாயூன் இக்கோட்டையைக் கைப்பற்றினார்.

அமைவிடம்

தொகு

மலைப்பாங்கான வடமேற்கு எல்லை மாகாணத்திற்கும் சமவெளியான பஞ்சாபிற்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பெரும் தலைநெடுஞ்சாலையில் இக்கோட்டை அமைந்துள்ளது. ஜூலம் நகரத்திற்கு வடமேற்கில் 16 கிமீ தொலைவிலும் தினா நகரிலிருந்து 7 கிமீ தொலைவிலும் ஆழ்ந்த பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ககான் ஆறும் பர்னால் காசு ஓடையும் சேர்ந்து கிழக்கில் தில்லா ஜோகியன் நோக்கிச் செல்லுமிடத்தில் சிறு குன்றில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை தனது சுற்றுப்புறத்திலிருந்து 300 அடிகள் (91 m) உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2660 அடி (818 மீ) உயரத்தில் 12.63 ஏக்கர்கள் (51,100 m2) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

கட்டமைப்பு

தொகு
 
வரைபடம்

ரோடாசு கோட்டை காவற்கோட்டமாகும்; இதில் 30,000 படைவீரர்கள் தங்கக்கூடியதாக உள்ளது. இதன் அமைவிடம், பெரும் சுவர்கள், பொறி வாயில்கள் மற்றும் 3 படிக் கிணறுகள் காரணமாக எத்தகைய முற்றுகையையும் தாங்கக்கூடியதாக இருந்தது. இருப்பினும் இக்கோட்டையை எவரும் முற்றுகை இடவில்லை.

கோட்டையின் பெரும்பகுதி செவ்வகமாக வெட்டப்பட்டக் கற்களால் ஆனது. இவை அடுத்துள்ள தர்ராக்கி போன்ற சிற்றூர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டன. கோட்டையின் சில பகுதிகள் செங்கற்களால் ஆனவை.

இக்கோட்டை எவ்வித ஒழுங்கான வடிவமுமின்றி அமைந்திருந்த குன்றின் வடிவத்தை எடுத்திருந்தது. இதன் சுற்றளவு 5.2 கிமீயாக இருந்தது. 533 மீட்டர் நீளமுள்ள அரண் கோட்டைத் தலைவரின் மையப்பகுதியை மற்ற பகுதிகளிலிருந்து பிரித்தது.

கோட்டையில் ஒழுங்கற்ற இடைவெளிகளில் 68 கொத்தளங்கள் (கோபுரங்கள்) உள்ளன. மூன்று படிக்கிணறுகளில் ஒன்று மையப்பகுதியிலும் மற்றவை மற்ற பகுதிகளிலும் அமைந்துள்ளன. இலங்கர் கனி என்ற வாயில் மையப்பகுதிக்கு திறக்கின்றது; இது ஓர் பொறி வாயிலாகும்; கொத்தளங்களிலிருந்து இந்த வாயிலை நோக்கி நேரடியாக தாக்க முடியும்.

குவாசு கனி என்ற வாயில் இரட்டைச் சுவர் முறைக்கு காட்டாகும். மேற்குப்பகுதியில் உள்ளதோர் பகுதி மையப்பகுதியினுள் உள்ள பாதுகாப்புப் பகுதியாகும். இதற்கு ஒரு வாயிலே உள்ளது; படிக்கிணறுடன் இருந்த இப்பகுதியே கோட்டைத் தலைவரும் அவர் குடும்பத்தினரும் வாழ்வதற்கான பகுதியாகும். இந்த பாதுக்காக்கப்பட்ட பகுதியில் சாஹி மசூதி என்ற அழகான மசூதி அமைந்துள்ளது. இந்தக் கோட்டையில் அரண்மனை எதுவும் கட்டப்பட்டிருக்கவில்லை. இராசா மான்சிங் மட்டுமே தற்போது மான்சிங் அவேலி எனப்படும் கட்டமைப்பை கட்டியுள்ளார். இது பாதுக்காக்கப்பட்ட பகுதியின் உயரமான பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

காட்சியகம்

தொகு
 
இராசா மாண்சிங் அவேலி
ரோடாசு கோட்டை வாயில் அகலப்பரப்புக் காட்சி

மேற்சான்றுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோடாசு_கோட்டை&oldid=3227201" இலிருந்து மீள்விக்கப்பட்டது