நசிருதீன் உமாயூன்

இரண்டாவது முகலாய பேரரசர்

நசிருதீன் உமாயூன் (Nasir-ud-Din Muḥammad, பாரசீக மொழி: نصيرالدين همايون) நசிருதீன் ) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியா ஆகியவற்றை ஆண்ட இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இப்பகுதிகளை 1530-1540 வரையும் பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபரை போலவே இவரும் தனது இராச்சியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு பாரசீகத்தின் சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556 இல் உமாயூனின் இறப்பின்போது முகலாய பேரரசானது கிட்டத்தட்ட 10 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது.

உமாயூன்
This painting depicts Humayun (1530-56).jpg
நசிருதீன் உமாயூன்
Fictional flag of the Mughal Empire.svg இரண்டாம் முகலாயப் பேரரசர்
ஆட்சிக்காலம்26 டிசம்பர் 1530 – 17 மே 1540
22 பிப்ரவரி 1555 – 27 சனவரி 1556
முடிசூட்டுதல்30 டிசம்பர் 1530, ஆக்ரா
முன்னையவர்பாபர்
பின்னையவர்பேரரசர் அக்பர்
பிறப்புமார்ச்சு 17, 1508(1508-03-17)
காபூல்
இறப்பு1556 சனவரி 27
தில்லி
புதைத்த இடம்
வாழ்க்கைத் துணைகள்அமீதா பானு பேகம்
குடும்பம்உறுப்பினர்பேரரசர் அக்பர், மகன்
மொகம்மத் ஹகீம், மகன்
அரசமரபுமுகலாயப் பேரரசு
தந்தைபாபர்
தாய்மகம் பேகம்
மதம்இசுலாம்

டிசம்பர் 1530 இல் தனது தந்தைக்குப் பிறகு உமாயூன் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த முகலாய பகுதிகளுக்கு ஆட்சியாளராக தில்லி அரியணைக்கு வந்தார். அப்போது உமாயூனுக்கு வயது 22 தான். அவர் அனுபவமற்ற ஆட்சியாளராக இருந்தார். இவரது ஒன்றுவிட்ட சகோதரரான கம்ரான் மிர்சா அவர்களது தந்தையின் பேரரசின் வடக்கு பகுதிகளான காபூல் மற்றும் காந்தாரம் பகுதிகளை பெற்றிருந்தார். மிர்சா பிற்காலத்தில் உமாயூனின் கடினமான போட்டியாளர் ஆனார்.

உமாயூன் முகலாய பகுதிகளை சேர் சா சூரியிடம் இழந்தார். ஆனால் பதினைந்து வருடங்களுக்கு பிறகு சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். பாரசீகத்தில் இருந்து திரும்பிய உமாயூன் தன்னுடன் ஒரு பெரிய பாரசீக உயர்குடியினரின் பரிவாரத்துடன் வந்தார். முகலாய அவை கலாச்சாரத்தில் ஏற்படப்போகும் ஒரு முக்கியமான மாற்றத்தை இந்த சமிக்கை காட்டியது. முகலாய அரசமரபின் நடு ஆசிய பூர்வீகமானது பாரசீக கலை, கட்டடக்கலை, மொழி மற்றும் இலக்கிய தாக்கத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டது. உமாயூனின் காலத்திலிருந்து பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாரசீக கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவில் கிடைக்கின்றன.

பின்னர் உமாயூன் குறுகிய காலத்திலேயே தனது பேரரசை விரிவாக்கினார். இதன் மூலம் தனது மகன் அக்பருக்கு மரபை விட்டு சென்றார்.

பதவியேற்றம்தொகு

இவரது தந்தையான பாபர் தன் இறுதிக்காலங்களில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பாபரின் தங்கையின் கணவரான மாது காஜ்வா தன்னை அரசராக்கி கொள்ளலாம் என நினைத்திருந்தார். ஆனால் பாபரின் மகனான ஹூமாயூனால் இது தடைப்பட்டது. இவரின் ஆட்சிக்குப்பின் இவரது மகனான ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார்.

இக்கட்டான சூழலும் பொறுப்பிலா உமாயூனும்தொகு

இவர் பதவியேற்கும் பொது முகலாயப் பேரரசு பல இடர்களுக்குள் சிக்கியிருந்தது. பஞ்சாப்பும் அதற்கு கிழக்கே உள்ள சில பகுதிகளும் மட்டுமே இவர் ஆட்சியேற்ற போது முகலாயப் பேரரசின் கீழ் இருந்தன. வங்காளத்தில் முகமது லோடியும் செர்கானும் தங்கள் ஆப்கானிய இனத்தின் வல்லமையை அதிகப்படுத்தி இருந்தனர். குஜராத், மாளவம் போன்ற நாடுகளை ஆண்ட பகதூர் சா தில்லியை தாக்க தருணம் பார்த்திருந்தார். இராசபுத்திரபுத்திர மன்னர்களும் முகலாயப் பேரரசை எதிர்க்க தருணம் பார்த்திருந்தினர். மேலும் உமாயூனின் சகோதரரான கம்ரான் காபூலை கவர்ந்ததால் பஞ்சாப் பகுதியையும் உமாயூன் தன் சகோதரருக்கே கொடுத்து விட்டார். துரோகம் செய்த இளைய சகோதரர்களுக்கே ஆட்சியை கொடுத்ததாலும் போதை பழக்கத்துக்கு அடிமையானதாலும் இவரால் இவர் தந்தையான பாபர் போல் ஆட்சியை திறம்பட நடத்தவில்லை.

சிற்றரசர் நிலைக்கு தாழ்தல்தொகு

உமாயூன் செர்கானுடன் நட்புறவு செய்து கொண்டு முகமது லோடியை முதலில் தோற்கடித்தார். பகதூர் சாவை வென்று குஜராத்தையும் மாளுவத்தையும் கைப்பற்றினார். ஆனால் பகதூர் சா சில நாட்களுக்குப் பின் இப்பகுதிகளை மீண்டும் பிடித்துக் கொண்டார். செர்கான் அக்காலத்தில் பீகாரையும் வங்காளத்தையும் ஆண்டு வந்தார். அவருடன் முரண்பட்ட உமாயூன் அவரைத் தாக்கி சூனார் என்னும் கோட்டையையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் பிடித்துக் கொண்டார். சில காலம் கழித்து வங்காளத்தையும் பிடித்துக்கொண்டார். ஆனால் அதை சரிவர நிர்வகிக்காதலால் செர்கான் உமாயூன் மீது படை எடுத்தார். பீகார், காசி, சூணார்க்கு கோட்டை போன்ற முக்கிய நாடுகளையும் கோட்டைகளையும் செர்கான் கைப்பற்றினார். மேலும் சௌன்சாவிலும் கனோச்சியிலும் நடந்த போர்களில் செர்கான் உமாயூனை தோற்கடித்தார். அதனால் உமாயூன் ஆக்ராவுக்கு சென்று அங்கிருந்து இலாகூருக்கு தப்பினார். செர்கான் செர்சா என்ற புனைப் பெயருடன் வட இந்தியாவின் முக்கியப் பகுதிகளை ஆண்டார்.

பாரசீகத்தில் தஞ்சம்தொகு

 
ஷா தமஸ்ப் உமாயூனுக்கு 12,000 குதிரைப் படை, 300 அனுபவமிக்க தனது பாதுகாவலர்கள் மற்றும் பொருட்களை தன் விருந்தாளிகள் இழந்த பகுதிகளை வெல்ல வேண்டும் என்பதற்காக வழங்கினார்.[1]
 
இஸ்பஹானில் ஷா முதலாம் தமஸ்ப் மற்றும் முகலாய பேரரசர் உமாயூன்.

பாரசீகத்தில் இருந்த சபாவித்து பேரரசில் தஞ்சம் அடைவதற்கு உமாயூன், 40 வீரர்கள், அவரது மனைவி பேகா பேகம்,[2] மற்றும் அவரது மனைவியின் உதவியாளர் ஆகியோருடன் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை கடந்து பயணித்தார். இப்பயணத்தில் அவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். உணவிற்காக வீரர்களின் தலைக்கவசத்தின் குதிரை மாமிசத்தை வேகவைத்து உண்டனர். ஹெராத்தை அடைவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு அவர்கள் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளாகினர். எனினும் ஹெராத்தை அடைந்தபிறகு நன்றாக கவனித்துக் கொள்ளப்பட்டனர். நகருக்குள் நுழையும் போது உமாயூன் ஆயுதமேந்திய வீரர்களால் வரவேற்கப்பட்டார். அனைவரும் உயர்தர விருந்து மற்றும் ஆடைகளுடன் கவனித்துக் கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு தங்குவதற்கு சிறப்பான முறையில் வசதிகள் செய்து தரப்பட்டன. சாலைகளில் இருந்த தடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. ஷா தமஸ்ப் உமாயூனின் சொந்த குடும்பத்தினரை போல் இல்லாமல் முகலாய உமாயூனை வரவேற்று தனது தேசிய மதிப்பு வாய்ந்த விருந்தாளியாக கவனித்துக் கொண்டார். இங்கு உமாயூன் சுற்றி பார்ப்பதற்காக சென்றபோது பாரசீக ஓவியங்கள் மற்றும் கட்டடங்களை கண்டு வியந்தார்: அவற்றில் பெரும்பாலானவை தைமூரிய சுல்தானான உசைன் பய்கராஹ் மற்றும் அவரது முன்னோர், இளவரசி கவுகர் ஷாத் ஆகியோரின் வேலைகள் ஆகும். இவ்வாறாக உமாயூனால் தனது உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் வேலைகளை ரசிக்க முடிந்தது.[சான்று தேவை]

இங்கு உமாயூன் பாரசீக சிறு ஓவியம் வரைபவர்களின் அறிமுகம் பெற்றார். கமாலுதீன் பெசாத்தின் 2 மாணவர்கள் உமாயூனின் அவையில் இணைந்தனர். அவர்களது வேலைப்பாடுகளை கண்டு வியந்த உமாயூன் இந்துஸ்தானை தான் வென்றால் தனக்காக பணியாற்றுவீர்களா என்று அவர்களிடம் வினவினார்: அவர்கள் ஒத்துக் கொண்டனர். இவ்வாறாக உமாயூன் பல்வேறு கலைகளை கவனிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். ஜூலை மாதம் வரை ஷாவை சந்திக்கவே இல்லை. அப்போது உமாயூன் பாரசீகத்திற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. ஹெராத்திலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு கஸ்வின் நகரத்தில் இருவரும் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு ஆட்சியாளர்களின் சந்திப்பானது இஸ்பஹானில் உள்ள செகேல் சோடோன் (நாற்பது வரிசைகள்) அரண்மனையில் உள்ள புகழ்பெற்ற சுவர் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

திருமணமும் மகனும்தொகு

உமாயூனுக்கும் மனைவிகள் பலர் இருந்தனர். அதில் அமீதா பேகம் முக்கியமானவர். உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார். 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் அக்பரை பெற்றெடுத்தார்.

மீண்டும் பேரரசராதல்தொகு

செர்சா சில ஆண்டுகள் வட இந்தியாவை திறம்பட ஆட்சி செய்தார். காலிஞ்சர் கோட்டை முற்றுகையின் போது நடந்த குண்டு வெடிப்பினால் செர்சா இறந்தார். அவருக்கு பின் வந்தவர்கள் கீழ் பத்து ஆண்டுகளே வட இந்தியப் பகுதிகளை ஆண்டனர். அப்போது நடந்த குழப்பங்களை பயன்படுத்திக் கொண்ட உமாயூன் பாரசீகத்தில் படைபலத்தை பெருக்கிக் கொண்டு மீண்டும் செர்சா அரசின் மீது படையெடுத்து பழைய ஆட்சிப் பகுதிகளை பிடித்தார். செர்சா அரசின் கடைசி மன்னனான சிகந்தரை தோற்கடித்து மீண்டும் பேரரசர் ஆனார்.

இறப்பும் அக்பர் பதவியேற்பும்தொகு

இஸ்லாம் ஷாவின் (ஷெர் கான் சூரியின் மகன்) ஆட்சி ஏற்பை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் உமாயூன் டெல்லியை மீண்டும் 1555-ல் வெற்றி கொண்டார். அவர் ஷா தஹ்மாஸ்ப் தந்த பாரசீகப் படையினரில் ஒரு பகுதியை வழி நடத்திச் சென்று வெற்றி பெற்றார். சில மாதங்கள் கடந்து ஹுமாயுன் இறந்தார். பைராம் கான், அக்பர் ஆட்சி ஏற்பதற்கான ஆயத்தங்களைச் செய்வதற்காக உமாயூனின் இறப்பைத் தந்திரமாகச் சில நாட்கள் மறைத்தார். அக்பர் தனது தந்தையை தொடர்ந்து பிப்ரவரி 14,1556 கிரகேரியன் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.

உமாயூனின் சமாதிதொகு

உமாயூனின் சமாதி பல கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு தொகுதியாக உள்ளது. இது இந்தியாவின் தலை நகரமான தில்லியில், நிசாமுத்தீன் கிழக்குப் பகுதியில், 1533 ஆம் ஆண்டில் உமாயூன் கட்டுவித்த புராணா கிலா எனப்படும் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. கிபி 1562 ஆம் ஆண்டில் உமாயூனின் மனைவியான அமீதா பானு பேகம் இதனைக் கட்டுவிக்கத் தொடங்கினார். இதனை வடிவமைத்தவர் மிராக் மிர்சா கியாத் என்னும் பாரசீகக் கட்டிடக் கலைஞர். இவ்வளவு பெரிய கட்டிடத்தில் சிவப்பு மணற்கற்கள் பயன்படுத்தப்பட்டதும் இதுவே முதல் தடவை ஆகும். இக் கட்டிடத் தொகுதி, முக்கியமான கட்டிடமாகிய பேரரசர் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தை உள்ளடக்கியுள்ளது. இங்கேயே அவரது மனைவியான அமீதா பேகம், பின்னாட் பேரரசரான சா சகானின் மகன் தாரா சிக்கோ ஆகியோரதும்; பேரரசர் சகாந்தர் சா, பரூக்சியார், ராஃபி உல்-தார்சத், ராஃபி உத்-தௌலத், இரண்டாம் ஆலம்கீர் போன்ற பல முகலாயர்களதும் சமாதிகளும் இங்கே உள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள இது முகலாயக் கட்டிடக்கலை வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

மூலம்தொகு

  • இராசகணபதி (2008). கஜினி முதல் சிவாஜி வரை. தியாகராஜ நகர், சென்னை.: பாண்டியன் பாசறை. 
  1. Eraly, Abraham (2000). Emperors of the Peacock Throne: The Saga of the Great Mughals. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780141001432. https://books.google.com/?id=04ellRQx4nMC&pg=PA108&dq=Shah+Tahmasp+Humayun+12,000+cavalry#v=onepage&q=Shah%20Tahmasp%20Humayun%2012%2C000%20cavalry&f=false. 
  2. Rapson, Edward James; Haig, Sir Wolseley; Burn, Sir Richard (1968). The Cambridge History of India. Volume 5. Cambridge University Press Archive. "The tomb was built by Humayun's widow, Haji Begum, who shared his long exile at the court of the Safavids." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசிருதீன்_உமாயூன்&oldid=3401406" இருந்து மீள்விக்கப்பட்டது