லிசியே நகரின் தெரேசா

லிசியே நகரின் தெரேசா (Thérèse of Lisieux)(2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897) என்பவர் ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார்[1]. மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில் குழந்தை இயேசு மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.

லிசியே நகரின் புனித தெரேசா
கார்மேல் சபை உடையில் லிசியே நகரின் புனித தெரேசா (1895)
கன்னியர் மற்றும் மறைவல்லுநர்
பிறப்பு(1873-01-02)2 சனவரி 1873
அலேசான், பிரான்சு
இறப்பு30 செப்டம்பர் 1897(1897-09-30) (அகவை 24)
லிசியே, பிரான்சு
ஏற்கும் சபை/சமயங்கள்உரோமன் கத்தோலிக்க திருச்சபை
அருளாளர் பட்டம்29 ஏப்ரல் 1923 by பதினொன்றாம் பயஸ்
புனிதர் பட்டம்17 மே 1925 by பதினொன்றாம் பயஸ்
முக்கிய திருத்தலங்கள்புனித தெரேசா பேராலயம், லிசியே நகர், பிரான்சு
திருவிழா1 அக்டோபர்
3 அக்டோபர் - பொது நாள்காட்டி (1927-1969)
சித்தரிக்கப்படும் வகைரோஜாக்கள்
பாதுகாவல்மறைப்பணியாளர்கள்; பிரான்சு; உருசியா; எய்ட்சு நோயாளிகள்; தோட்டக்கலைஞர்; அனாதைகள்; காச நோயாளிகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஓர் ஆன்மாவின் வரலாறு (தன்வரலாற்று நூல்)

15 வயதே நிரம்பிய தெரேசா தம் இளம் பருவத்திலேயே இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, 1888 இல், பல்வேறு தடைகளையும் தாண்டி, கார்மேல் சபையில் சேர்ந்தார். அவர் புகுந்த அடைப்புநிலை (cloistered) கார்மேல் சபை மடம் பிரான்சு நாட்டில் நோர்மாண்டி மாநிலத்தில் லிசியே (Lisieux) நகரில் அமைந்திருந்தது. அத்துறவற இல்லத்தில் தெரேசா ஒன்பது ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு திருப்பணிக் காப்பகப் பொறுப்பாளர்(sacristan), பயிற்சிநிலைத் துறவியரின் துணைப் பயிற்சியாளர் போன்ற பல பணிகளை ஆற்றினார். அவர்தம் வாழ்க்கையின் இறுதி பதினெட்டு மாதங்களில் அவர் "இறைநம்பிக்கையின் இருண்ட கால" வேதனையை அனுபவித்தார். அவர் காச நோயால் பீடிக்கப்பட்டு, தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார்.

இவரின் ஓர் ஆன்மாவின் வரலாறு என்னும் தன்வரலாற்று நூலை இவரின் இறப்புக்கு பின் சிறிதளவே அச்சிட்டு வெளியிட்டனர். ஆனாலும் அது பலராலும் படிக்கப்பட்டு, இவரை 20-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் புனிதருள் ஒருவராகப் பிறர் கண்டுணர வழிவகுத்தது. இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923இலும், புனிதர் பட்டம் 1925இலும் வழங்கப்பட்டது. பதினொன்றாம் பயஸ் இவருக்கு புனிதர் பட்டம் வழங்கி, இவரைத் தம் ஆட்சியின் விண்மீன் ஆக்கினார் என்பர்.[2]

குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு இன்று உலகம் முழுவதிலும் வணக்கம் செலுத்தப்படுகிறது[3].

தெரேசா ஒரு மறைந்த வாழ்க்கை வாழ்ந்து, அறியப்படாமல் இருக்க வேண்டும், என்றே விரும்பினார். ஆனால் இவரின் இறப்புக்கு பின் இவரின் தன்வரலாற்று நூல் இவரை வெளி உலகிற்கு காட்டியது. இவரின் கடிதங்கள், கவிதைகள், சமய நாடகங்களில், இறை வேண்டல்கள், மற்றும் இவரது கடைசி உரையாடல்கள், இவரது சகோதரிகள் பதிவு செய்த இவரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் - (பெரும்பாலும் சகோதரி செலின்னால் செய்யப்பட்டவை) இவரைப் பலரும் கண்டுணர வழிவகுத்தது.

இவரது ஆன்மீக வாழ்வின் ஆழம், பலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. இவர் அதனைப்பற்றி கூறும் போது, "என் வழி முழுவதும் நம்பிக்கை கொள்வதும் அன்பு செய்வதும் தான்" என்றார். தனது தாழ்ச்சியிலும் எளிமையிலும், இவர் கடவுளையே தனது புனிதமாக நம்பினார்.

புதியதொரு "சிறு வழியில்" ("little way") சென்று தெரேசா விண்ணகம் அடைய விரும்பினார். "இயேசுவைச் சென்று சேர்ந்திட ஒரு மின்தூக்கி (elevator) கண்டுபிடிக்க விரும்பினேன். சிறியவளான என்னைத் தூக்கி உயர்த்துகின்ற இயேசுவின் கைகளே அந்த மின்தூக்கி என அறிந்துகொண்டேன்" என்று தெரேசா குறிப்பிடுகின்றார்.

லிசியே நகரில் உள்ள, புனித தெரேசா பேராலயம், பிரான்சு நாட்டிலேயே, லூர்து நகருக்கு அடுத்து மிக அதிக திருப்பயணியர் வரும் இடமாக உள்ளது.[4][5]

பிறப்பு

தொகு

தெரசா பிரான்ஸ் நாட்டில் அலேசான் என்னும் இடத்தில் கி.பி. 1873-ம் ஆண்டு சனவரி திங்கள் 2-ம் நாள் லூயிஸ்-செலின் தம்பதியரின் 9-வது குழந்தையாக பிறந்தார். தனது சிறுவயதிலேயே தன் தாயை இழந்தார்.15 வயதே நிரம்பிய தெரேசா தம் இறை ஆர்வத்தால் திருதந்தையின் சிறப்பு அனுமதி பெற்று , 1888-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9-ம் நாள், கார்மேல் சபையில் சேர்ந்தார்.

சிறு வழியைக் கண்டுபிடித்தல்

தொகு

தெரேசா கார்மேல் மடம் புகுந்த வேளையில் ஒரு புனிதையாக மாறவேண்டும் என்னும் தீர்க்கமான முடிவோடுதான் சென்றார். ஆனால், ஆறு ஆண்டுகள் துறவியாக வாழ்ந்தபின்னும், 1894இல் தான் எத்துணை சிறியவள், வலுவற்றவள் என்பதை உணர்ந்தார். எவ்வளவுதான் முயன்றாலும் தன்னிடம் குறைபாடுகள் பல இருந்ததை அவர் கண்டார். அளவற்ற அன்பு காட்ட அவருக்கு விருப்பமாயிருந்தாலும் அவரது சிறுமை அவரை மேற்கொண்டது.

படிப்படியாகத் தன் சிறுமையே தன் வளர்ச்சிக்கு வழியாகும் என்றும், தன் சிறுமையில் கடவுளின் உதவியை நாடிச் செல்வதென்றும் முடிவுசெய்தார். தெரேசாவின் சகோதரி செலின் கொண்டுவந்திருந்த பழைய ஏற்பாட்டை தெரேசா புரட்டினார். அங்கே, நீதிமொழிகள் என்னும் நூலின் ஒரு பகுதி (9:4) அவரைக் கவர்ந்தது.

என்று கடவுளின் "ஞானம்" பற்றி அந்நூலில் வரும் பகுதி தெரேசாவின் கண்களைத் திறந்தது.

அதுபோலவே, எசாயா இறைவாக்கினர் நூலில் வரும் 66:12-13 பகுதி தெரேசாவுக்குப் புதியதொரு பொருளை விளக்குவதாக அமைந்தது. இதோ அப்பகுதி:

கடவுளின் வார்த்தையை விவிலியத்தில் கண்ட தெரேசா தனக்குக் கடவுள் தரும் செய்தி என்னவென்று உணர்ந்தார். தன் சிறுமையும் வலுவின்மையும் ஒரு குறையல்ல, மாறாக, அவற்றின் வழியாகவே இயேசு தன்னைப் புனித நிலையின் உச்சிக்கு இட்டுச் செல்வார் என்று அறிந்தார். எனவே, உள்ளம் தளர்வதற்கு மாறாக மகிழ்ச்சியடைய வேண்டும். இது தெரேசாவுக்கு ஓர் அற்புதமான கண்டுபிடிப்பாக அமைந்தது.

இதையே அவர் "சிறு வழி" (little way; பிரஞ்சு மூலத்தில் petite voie) என்று அழைத்தார். 1895 பெப்ருவரி மாதத்திலிருந்து தான் எழுதிய மடல்களில் எல்லாம் தெரேசா தன் பெயருக்கு முன்னால் "மிகச் சிறிய" (toute petite) என்னும் அடைமொழியை இடத் தொடங்கினார்.

தன் குறைகளை வெல்வதற்குத் தன் சொந்த சக்தி போதும் என்று தெரேசா எண்ணவில்லை. மாறாக, கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து, தன் கடமைகளைப் பொறுப்போடு ஆற்றி, நற்செயல்கள் புரிந்து வாழ்ந்தால் அதுவே கடவுளின் விருப்பம் என்னும் உறுதிப்பாடு அவரிடம் இருந்தது.

"ஆண்டவர் ஒரு தாயை விடவும் பாசம் கொண்டவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். தன் குழந்தை அறியாத்தன்மையால் தவறு செய்யும்போது அதைத் தாய் மன்னித்துவிடுவார். குழந்தைகள் எப்போதும் குறும்புத்தனம் செய்வார்கள், கீழே விழுவதும், அழுக்கில் புரள்வதும், பொருள்களை உடைப்பதும் அவர்கள் வேலை. ஆனால் இதெல்லாம் நிகழ்ந்தபிறகும் பெற்றோர் தம் குழந்தைகளை அன்புசெய்வதில் குறைபடுவதில்லை" [6]

தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு

தொகு
 
லிசியே நகரில் உள்ள புனித தெரேசா பேராலயத்தின் உட்புறம்

தெரேசாவை வெளி உலகிற்கு தெரிவித்தது, அவரின் தன்வரலாற்று நூல் – ஓர் ஆன்மாவின் வரலாறு (L'histoire d'une âme) ஆகும். அதை அவர் தன் சபைத் தலைவியின் கட்டளைக்குப் பணிந்து எழுதினார். இதை 1985-இல் தன் இளம் பருவ நினைவுகளிலிருந்து எழுதலானார். மற்றும் 1986-இல் தன் சகோதரியும், அம்மடத்திலேயே கன்னியராகவும் இருந்த சகோ. திரு இருதயத்தின் மரியாளுக்கு எழுதிய கடிதத்தின் தொகுப்பும் சேர்த்து ஓர் ஆன்மாவின் வரலாறு என வெளியிடப்பட்டது.

இந்நூல் மறைத்திரு. பி.பி. சேவியரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, புதுவையில் உள்ள மிஷன் அச்சகத்தில் 1998-இல் வெளியிடப்பட்டது.

இறப்பு

தொகு

தெரசா இறக்கும் தருவாயில் இருந்த போதும் அவர் முகத்தில் புன்னகை குறையவே இல்லை.அவர் காச நோயால் பாதிக்கப்பட்டு,1897-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30-ம் நாள் தம் 24ஆம் அகவையில் இறையடி எய்தினார். இவருக்கு முத்திப்பேறுபெற்ற பட்டம் 1923-ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29-ம் நாள் வழங்கப்பட்டது.புனிதர் பட்டம் 1925-ம் ஆண்டு மே திங்கள் 17-ம் நாள் திருதந்தை பதினொன்றாம் பயஸால் வழங்கப்பட்டது. 1927-இல் குழந்தை இயேசுவின் புனித தெரேசா மறை பரப்பு நாடுகளின் துணை பாதுகாவலியாக பிரான்சிஸ் சவேரியாருடன் அறிவிக்கப்பட்டார். 1944-இல் பிரான்சு நாட்டின் பாதுகாவலியாக ஜோன் ஆஃப் ஆர்கோடு அறிவிக்கப்பட்டார். 19 அக்டோபர் 1997-இல் இரண்டாம் யோவான் பவுல் இவரை கத்தோலிக்க திருச்சபையின் 33-ஆம் மறைவல்லுநராக அறிவித்தார். இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இவரே வயதால் மிக இளையவரும், மூன்றாவது பெண்ணும் ஆவார்.

புனித தெரேசாவின் பெற்றோருக்கு முத்திபேறுபட்டம்

தொகு
 
புனித தெரேசாவின் தாய்
 
புனித தெரேசாவின் தந்தை

தெரேசாவின் பெற்றோருக்கு புனிதர்பட்ட செயல்கள் துவங்கி உள்ளன. இவர்கள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால், 1994-இல் வணக்கத்திற்குரியவர் என அறிவிக்கப்பட்டனர். 2004-இல் மிலான் நகர பேராயர், நுரையீரலில் நோய் உள்ள ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட குணத்தை ஏற்றுக்கொண்டு, 12 ஜூலை 2008 அன்று, கார்தினால் சரைவா மார்டின்ஸ் முயற்சியால் இவர்களின் 150-ஆவது திருமண நாளன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் முத்திபேறுபட்டம் அளிக்கப்பட்டது.[7][8] இவர்களுக்கு புனிதர் பட்டம், 18 அக்டோபர் 2015 அன்று, திருதந்தை பிரான்சிஸால் அளிக்கப்பட்டது.[9] 2011-இல் இவர்களின் கடிதங்கள் A Call to a Deeper Love: The Family Correspondence of the Parents of Saint Thérèse of the Child Jesus, 1863-1885 என்னும் பெயரில் வெளியிடப்பட்டது.[10]

இணைப்புகள்

தொகு

புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம், கண்டன்விளை

மேற்கோள்கள்

தொகு
  1. லிசியே நகரின் தெரேசா
  2. Guy Gaucher, The Spiritual Journey of Therese of Lisieux, p 211, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-232-51713-4
  3. Thérèse of Lisieux: God's gentle warrior by Thomas R. Nevin, 2006 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-530721-6 page 26
  4. Vatican website: Proclamation as Doctor of the Church
  5. CatholicForum.com: Patron Saints Index: Thérèse of Lisieux பரணிடப்பட்டது 2009-10-04 at the வந்தவழி இயந்திரம் Retrieved on 1 அக்டோபர் 2006
  6. Gorres, p.331
  7. "Béatification à Lisieux des parents de sainte Thérèse". L'essemtiel des saints et des prénoms. Prenommer. 19 அக்டோபர் 2008. Archived from the original (in French) on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2008. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  8. "God's Word renews Christian life". l'Osservatore Romano (Holy See). 22 அக்டோபர் 2008. http://www.vatican.va/news_services/or/or_eng/043w01.pdf. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2008. 
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
  10. Saint Therese of Lisieux: A Gateway

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thérèse de Lisieux
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லிசியே_நகரின்_தெரேசா&oldid=3602632" இலிருந்து மீள்விக்கப்பட்டது