வலைவாசல்:தமிழீழம்/தமிழீழ நபர்கள்/8

சுவாமி விபுலாநந்தரின் உருவப்படம். ஓவியர் ஞானம் வரைந்தது 2006

சுவாமி விபுலாநந்தர் கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 இல் சாமித்தம்பி, கண்ணம்மையார் தம்பதிகளுக்கு பிறந்தார். சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம் பூதூர்த் திருக்கோயிலில் நாளும் செந்தமிழ் இசைபரப்பிய ஞானசம்பந்தனின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள் வியக்க, கற்றோரும், மற்றோரும் பாராட்ட தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார்.

யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் அமரத்துவம் அடைந்தார். சுவாமி அவர்களின் பூதவுடல், சுவாமி அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.