வலைவாசல்:துடுப்பாட்டம்/சிறப்புக் கட்டுரை/16
இயன் போத்தம் என்பவர் துடுப்பாட்ட விமர்சகரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றின் தலைசிறந்த பன்முக ஆட்டக்காரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து அணிக்காக தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் வலது-கை மட்டையாளராகவும் வலது கை மிதவேகப் பந்துவீச்சாளராகவும் இருந்துள்ளார். பன்முக ஆட்டக்காரராக இவர் படைத்த பல்வேறு சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளன.
இவர் 21 தேர்வுப் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் எடுத்ததுடன் 100 மட்டையாளர்களை வீழ்த்தியதன் மூலம் துடுப்பாட்ட வரலாற்றின் அதிவேகப் பன்முக ஆட்டக்காரர் என்ற சிறப்பைப் பெற்றார். மேலும் தேர்வுப் போட்டிகளில் ஒரே ஆட்டப் பகுதியில் 5 மட்டையாளர்களை வீழ்த்தி 100 ஓட்டங்கள் எடுத்த சாதனையை 5 முறை நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. 15 பிப்ரவரி 1980ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தின் போது ஒரு போட்டியில் 114 ஓட்டங்கள் எடுத்ததுடன் 13 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே பன்முக ஆட்டக்காரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார்.
வறியோர்க்கு இயன் போத்தம் ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் 2007ஆம் ஆண்டு அவருக்கு வீரப்பெருந்தகை பட்டம் வழங்கப்பட்டது. இவர் 2009ஆம் ஆண்டு ஐசிசியின் புகழவையில் இடம்பெற்றார்.