வலைவாசல்:மெய்யியல்/இந்தவாரத் தத்துவஞானி/1
அரிசுட்டாட்டில் ஒரு பண்டைக் கிரேக்க தத்துவஞானி. அவர் இயற்பியல், கவிதை, விலங்கியல், ஏரணம், சொல்லாடல், அரசியல், அரசாங்கம், நன்னெறி, உயிரியல் உள்ளிட்ட பல துறைகளில் தம் கருத்துகளைப் பதிவு செய்தார். அரிசுட்டாட்டில், அவரது ஆசான் பிளேட்டோ, அவரது ஆசான் சாக்கிரட்டீசு ஆகிய மூவரையே பண்டை கிரேக்க மெய்யியலாளருள் மிகுந்த செல்வாக்குடையவராகக் கருதப்படுவர். அவர்களே சாக்கிரட்டீசிற்கு முந்தைய கிரேக்க மெய்யியலை இப்போதிருக்கும் மேற்கத்திய மெய்யியலின் அடிப்படையாக வார்த்தெடுத்தனர். பிளேட்டோ மற்றும் அரிசுட்டாட்டிலின் எழுத்துக்களே பண்டைய மேற்கத்திய மெய்யியலின் இரு முக்கியக் கூறுகளை நிறுவின.
அரிசுட்டாட்டில் ஒரு பல்துறை வல்லுநர். ஏறத்தாழ, அக்காலத்தில் அறியப்பட்ட அனைத்துத் துறையிலும் ஆய்வு செய்து அவற்றில் பல முக்கிய பங்களித்துள்ளார். அறிவியலில் உடற்கூற்றியல், வானியல், பொருளியல், கருவியல், புவியியல், நிலவியல், வானிலையியல், இயற்பியல், மற்றும் விலங்கியல் ஆகிய துறைகளில் ஆய்வு மேற்கொண்டார். மெய்யியலில் அழகியல், நன்னெறி, அரசாங்கம், மீவியற்பியல், அரசியல், உளவியல், சொல்லாட்சி மற்றும் இறையியல் ஆகிய துறைகளில் பங்களித்தார். மேலும் அவர் கல்வி, வெளிநாட்டுச் சுங்கம், இலக்கியம் மற்றும் கவிதை ஆகியவற்றையும் கையாண்டார். அவரது மொத்தப் பணிகளின் தொகுப்பு கிரேக்க அறிவின் கலைக்களஞ்சியமாகவே திகழ்கிறது...