பதிலித்தாய்

(வாடகைத் தாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பதிலித்தாய் (surrogate mother) என்பவர் வேறொரு தம்பதிக்காகவோ, அல்லது ஒரு தனியான மனிதருக்காகவோ கருத்தரிப்புக்கு உள்ளாகி ஒரு குழந்தையை சுமந்து, பெற்றெடுத்து கொடுப்பவர் ஆவார். இவர் அதனை பணம் பெற்றுக் கொண்டு செய்வாராயின், அந்த பதிலித்தாய், வாடகைத்தாய் என அழைக்கப்படுவார். பதிலித்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவியிருப்பின், பதிலித்தாயே குழந்தையின் மரபியல் தாய் ஆவார். சில சமயங்களில் வேறொரு பெண்ணின் முட்டையானது, ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருக்கட்டலுக்கு உட்பட்ட பின்னர், அந்த முளையமானது பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படுமாயின், பதிலித்தாயானவர் குழந்தையுடன் மரபியல் தொடர்பெதுவும் அற்றவராக இருப்பார். அந்நிலையில் கருசுமக்கும் தாய் ஆக மட்டுமே இருப்பார்.

தங்களுக்குக் குழந்தையைப் பெற்றுத் தரப்போகும் பெண்ணுடன் குழந்தை பிறப்பின்போது பெற்றோர்கள்

பதிலித்தாய் ஒரு குழந்தையின் கருக்காலம் மட்டுமே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். சிலசமயம் தாய்ப்பாலூட்டலுக்காகத் தொடர்ந்து சில மாதங்கள் வரை தாயாக இருக்க அனுமதிக்கப்படுவார்.

பதிலித்தாயானவர் மரபியல் தாயாகவும் இருப்பாராயின், அவர் பொதுவாக செயற்கை விந்தூட்டல் மூலம் கருத்தரிப்புக்கு ஆட்பட்டிருப்பார். அவருக்குச் செலுத்தப்படும் விந்தானது குறிப்பிட்ட தம்பதிகளில் ஆணின் விந்தாகவோ அல்லது வேறொரு ஆணிடமிருந்து பெறப்பட்டு குளிர்நிலையில் பாதுகாக்கப்பட்டு வரும் விந்தாகவோ இருக்கலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டலிலும் இவ்வாறாக பதிலித்தாயைப் பயன்படுத்தவும் முடியும். அந்நிலையில் குழந்தைக்குத் தாயாகப் போகும் பெண்ணின் முட்டையும், தகப்பனாகப் போகும் ஆணின் விந்தும் கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கருமுட்டை பதிலித்தாயின் கருப்பையினுள் வைக்கப்படும். சிலசமயம் முட்டை அல்லது விந்து அல்லது இரண்டுமே கூட வழங்கி/வழங்கிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகவும் இருக்கக் கூடும்.

குழந்தையைச் சொந்தமாக்கிக்கொள்ளப் போகும் பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமோ மலட்டுத்தன்மை உள்ளவராக இருப்பின், அல்லது பெற்றோர் தற்பால்சேர்க்கை உள்ளவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிப்பதிலோ, அல்லது குழந்தைப் பேறிலோ விருப்பமற்றவராக இருப்பின், அல்லது பெண் கருத்தரிக்கவோ, குழந்தை பெற்றுக்கொள்ளவோ முடியாத நிலை அல்லது மருத்துவ ரீதியான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருப்பின் இவ்வாறான பதிலித்தாய் ஏற்பாட்டைச் செய்வார்கள். சிலசமயம் ஒரு தனி பெண் அல்லது ஆண், வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்ளாமல், தனக்குரிய மரபியல் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், முறையே தனது கருமுட்டையை அல்லது விந்தைக் கொண்டு உருவாக்கப்படும் முளையத்தை பதிலித்தாய் மூலம் பெற்றெடுத்துக் கொள்வதற்காய் இத்தகைய ஏற்பாட்டை செய்வதும் உண்டு. குழந்தையை சுமக்கும்காலத்தில் குழந்தைக்கும், பதிலித்தாயானவருக்கும் ஏற்படக்கூடிய பிணைப்பானது, குழந்தை பிறந்து குறிப்பிட்டவர்களிடம் வழங்கப்பட்ட பின்னர், பதிலித்தாய்க்கு உளவியல் ரீதியான ஒரு பிரச்சனையாக உருவாவதும் உண்டு. இத்தகைய உணர்வுபூர்வமான பல சிக்கல்கள் ஏற்பட சாத்தியங்கள் இருப்பதனால், ஒவ்வொரு நாட்டிலும் இவ்வகையான பதிலித்தாய் நடைமுறைக்கு பல சட்டதிட்டங்கள், விதிமுறைகள் உள்ளன. பதிலித்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா நவம்பர் 1 , 2013 முதல் இல்லை என இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.[1]

முறைகள்

தொகு

பதிலித்தாயைப் பயன்படுத்துவது பாரம்பரியமாகவோ அல்லது கர்ப்பகாலத்துக்கு உரியதாகவோ இருக்கலாம். இவை முட்டையின் மரபியல் சார்ந்த தோற்றத்தால் வேறுபடுகின்றன. கர்ப்பகால பதிலித்தாய் முறையானது பாரம்பரிய பதிலித்தாய் முறையை விட மிகவும் பொதுவானது மற்றும் சட்டரீதியாக குறைவான சிக்கலானதாகக் கருதப்படுகிறது.[2]

பாரம்பரிய முறை

தொகு

ஒரு பாரம்பரிய பதிலித்தாய் முறையானது (பகுதியான, இயற்கையான அல்லது நேரான பதிலித்தாய் என்றும் அழைக்கப்படுகிறது) கருவைச் சுமக்கப் போகும் பெண்ணின் முட்டையுடன், குழந்தையைப் பெற்றுக்கொள்ளப்போகும் ஆணின் விந்துடனோ, அல்லது வேறொரு கொடையாளியின் (donor) விந்துடனோ கருக்கட்டப்பட்டு உருவாகும் முளையம் பதிலித்தாயின் கருப்பையில் வளர்வதைக் குறிக்கும். இது இயற்கையானதாகவோ (பாலுறவு மூலமாகவோ), செயற்கையானதாகவோ (செயற்கை விந்தூட்டல்) இருக்கலாம். ஒரு கொடையாளியின் விந்தணுவைப் பயன்படுத்தினால், குழந்தையைப் பெற்றுக்கொள்ளப் போகும் பெற்றோருடன் குழந்தை மரபியல் தொடர்பற்றதாக இருக்கும். அல்லாமல் பெற்றுக்கொள்ளப்போகும் ஆணின் விந்து பெறப்பட்டால் அந்த ஆணுக்கும், பதிலித்தாய்க்கும், குழந்தையுடன் மரபியல் தொடர்பு காணப்படும்.[3][4]

சில சந்தர்ப்பங்களில், மருத்துவர் அல்லது மருத்துவரின் தலையீடு இல்லாமல் சிலர் தனிப்பட்ட முறையில் இதனைச் செய்யலாம். சில அதிகார வரம்புகளில், நன்கொடையாளர் விந்தணுவைப் பயன்படுத்த விரும்பும் பெற்றோர், அதன் விளைவாக வரும் குழந்தையின் சட்டப்பூர்வ பெற்றோரின் உரிமைகளைப் பெற தத்தெடுக்கும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். பல கருவுறுதல் மையங்கள் சட்ட செயல்முறை மூலம் இந்த முறைக்கு உதவுகின்றன.

கர்ப்பகால முறை

தொகு

கர்ப்பகால பதிலித்தாய் (வழங்கி அல்லது முழு பதிலித்தாய் என்றும் அழைக்கப்படுகிறது[5]) முறை ஏப்ரல் 1986 இல் முதன்முதலில் அடையப்பட்டது.[6]

இங்கு வெளிச் சோதனை முறை கருக்கட்டல்‎‎ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஒரு கருவை, பதிலித்தாய் சுமப்பதைக் குறிக்கும். சில சமயங்களில் கர்ப்பகாலக் காவி என்றும் அவர் அழைக்கப்படுவார். இதன் விளைவாக வரும் குழந்தை மரபியல் ரீதியாக பதிலித்தாய்க்கு தொடர்பில்லாதது. வெவ்வேறு முறையில் இது நடைபெறலாம்.

  • கருவானது தந்தையின் விந்தணுவையும், தாயின் கருமுட்டையையும் பயன்படுத்தி உருவாக்கலாம்.
  • கருவானது தந்தையின் விந்து மற்றும் தானம் செய்பவரின் முட்டையைப் பயன்படுத்தி உருவாக்கலாம்.
  • கருவானது தாயின் முட்டை மற்றும் நன்கொடை விந்தணுவைப் பயன்படுத்தி உருவாக்கலாம்.
  • நன்கொடையாளர்களின் கரு பதிலித்தாயில் வளர்க்கப்படலாம். வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் (அதாவது வேறு சிலருக்குச் சொந்தமான மீதம் இருக்கும் கருக்கள்) அவர்களால் நன்கொடையளிக்கப்பட்டிருந்தால், அத்தகைய கரு பயன்படுத்தப்படலாம். இதன் விளைவாக வரும் குழந்தை மரபியல் ரீதியாக பெற்றோருடன் தொடர்பில்லாததாக இருக்கும்.[7]

மும்பை நீதிமன்ற தீர்ப்பு

தொகு

ஒரு பெண் தாய்மை அடைய முடியாத காரணத்தினால் வாடகைத்தாய் நியமித்து பிள்ளை பெற்றுக்கொண்டாலும் குழந்தை பிறந்த மறுநாளிலிருந்து வாடகைத்தாய் அக்குழந்தையை குழந்தையின் உண்மையான தாயின் பராமரிப்பிற்கு விட்டுவிட வேண்டும். ஆகையினால் இப்பெண்ணுக்கு 6 மாதம் பேறுகால விடுமுறையை அலுவலகங்கள் கொடுக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. "வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியாவில் சுற்றுலாப் பயணி விசா இனி இல்லை". தீக்கதிர்: p. 4. நவம்பர் 1 , 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. 
  2. "Using a Surrogate Mother: What You Need to Know". WebMD. பார்க்கப்பட்ட நாள் April 6, 2014.
  3. Bhatia, Kalsang; Martindale, Elizabeth A.; Rustamov, Oybek; Nysenbaum, Anthony M. (2009). "Surrogate pregnancy: an essential guide for clinicians" (in en). The Obstetrician & Gynaecologist 11 (1): 49–54. doi:10.1576/toag.11.1.49.27468. பன்னாட்டுத் தர தொடர் எண்:1744-4667. 
  4. "Surrogacy: what is it? Different types of surrogacy". VittoriaVita.
  5. Imrie, Susan; Jadva, Vasanti (4 July 2014). "The long-term experiences of surrogates: relationships and contact with surrogacy families in genetic and gestational surrogacy arrangements". Reproductive BioMedicine Online 29 (4): 424–435. doi:10.1016/j.rbmo.2014.06.004. பப்மெட்:25131555. 
  6. "And Baby Makes Four: for the First Time a Surrogate Bears a Child Genetically Not Her Own". People.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-29.
  7. Brinsden, Peter R. (2003-09-01). "Gestational surrogacy" (in en). Human Reproduction Update 9 (5): 483–491. doi:10.1093/humupd/dmg033. பன்னாட்டுத் தர தொடர் எண்:1355-4786. பப்மெட்:14640380. 
  8. தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கும் விடுமுறை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு தி இந்து தமிழ் 02 பிபிரவரி 2016

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிலித்தாய்&oldid=3526821" இலிருந்து மீள்விக்கப்பட்டது