வோல்கா ஆறு

ருசியாவிலுள்ள ஆறு, ஐரோப்பாவில் மிக நீளமான ஆறு
(வால்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வோல்கா ஆறு (உருசியம்: Во́лга, பஒஅ[ˈvolɡə]( கேட்க)) ஐரோப்பாக் கண்டத்தின் மிகவும் நீளமான ஆறு. இது உருசிய நாட்டின் மத்திய பகுதியினூடாகப் பாய்ந்து காஸ்பியன் கடலில் கலக்கிறது. இது உருசியாவின் தேசிய ஆறாகவும் கருதப்படுகிறது. உருசிய நாட்டின் தலைநகர் மாஸ்கோ உட்பட ரசிய நாட்டின் 20 பெரிய நகரங்களுள் 11 இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.

வோல்கா ஆறு (Река Волга)
ஈரோஸ்லாவல் நகரத்தில் வோல்கா
நாடு ரசியா
முதன்மை
நகரங்கள்
அஸ்ட்ரகான், வோல்காகிராத், சமாரா, கசான், உலியாநொவ்ஸ்க், நீஸ்னி நோவ்கோரத், ஈரோஸ்லாவல்
நீளம் 3,692 கிமீ (2,294 மைல்)
வடிநிலம் 13,80,000 கிமீ² (5,32,821 ச.மைல்)
வெளியேற்றம் வோல்காகிராத்
 - சராசரி
மூலம் வோல்காவேர்கொவியே
 - அமைவிடம் வல்தாய் மேட்டுப் பகுதி, திவேர் மாகாணம்
 - உயரம் 228 மீ (748 அடி)
கழிமுகம் காசுப்பியன் கடல்
 - உயரம் −28 மீ (−92 அடி)
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - இடம் காமா ஆறு
 - வலம் ஒகா ஆறு
வோல்காவின் நீர்வடிப்பகுதியின் வரைபடம்
வோல்காவின் நீர்வடிப்பகுதியின் வரைபடம்
வோல்காவின் நீர்வடிப்பகுதியின் வரைபடம்

திவேர் மாகாணம் அஸ்தாவ்ஸ்கிப் பகுதியில் உள்ள வோல்காவேர்கொவியே எனும் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 228 மீட்டர்கள் உயரத்தில் வோல்கா ஆற்றின் நீரூற்று அமைந்துள்ளது. வோல்காவின் நீரேந்து பிரதேசம் வல்தாய் மேட்டுப் பகுதிகள், மத்திய உருசிய மேட்டுப் பகுதிகள் ஆகியனவற்றில் தொடங்கி கிழக்கு நோக்கி உரால் மலைகள் வரை பரந்துள்ளது. வோல்கா ஆற்றின் நீளம் 3690 கிலோமீட்டர்கள் ஆகும்.[1] உருசியக் கலாச்சாரத்தில் இந்த ஆறு ஒரு முக்கிய அடையாளத்தைக் கொண்டுள்ளதுடன் உருசிய இலக்கியத்திலும் நாட்டுப்புறக் கலைகளிலும் வோல்கா-மாத்துஷ்கா (தாய் வோல்கா) என அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.

பெயரீடு

தொகு

கி.பி. முதலாம் நூற்றாண்டின் நூலாசிரியர்களான தொலெமி மற்றும் அமியானஸ் மார்செளினஸ் ஆகியோரால் வோல்கா ஆறானது ரா எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[2] [3] இது ஈரானியப் பழமை மொழியான சிதியன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது.

ஐரோப்பிய மத்திய காலத்தில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசித்த துருக்கிய மக்களால் "பெரிய ஆறு" எனக் கருத்து வருமாற்போல் இட்டில் அலல்து அட்டேல் என அழைக்கப்பட்டது.[4] இன்றைய துருக்கி மொழிகளில் இடெல் (தடர மொழி), அத்தால் (சுவாசு மொழி), இதெல் (பசுகிர மொழி), இடில் (துருக்கிய மொழி) என்று வோல்கா அழைக்கப்படுகின்றது.

ஆற்றின் உருசியப் பெயர் வோல்கா (Волга) சிலாவிய முந்து மொழியில் காணப்பட்ட "வோல்கா" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. இதன் கருத்து ஈரம் என்பதாகும். இது பெரும்பாலான சிலாவிய மொழிகளில் இன்றும் பேணப்படுகின்றது. உருசிய, பல்கேரிய, சுலோவேனிய மொழிகளில் விளாகா (влага), உக்ரைன் மொழியில் வலோகா (воло́га) என்பது ஈரத்தைக் குறிக்கின்றது. [5]

வரலாற்றுத் தரவுகள்

தொகு
 
வோல்காவின் "மாபெரும் வளைவு" அமைந்துள்ள நகரம் வோல்காகிராத்.

வோல்காவைப் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு எரோடோட்டசால் பாரசீக மன்னன் முதலாம் தாரியசுக்கும் சிதியர்களுக்கும் இடையேயான போரைப்பற்றிய வரலாற்றுக் குறிப்பில் எழுதப்பட்டுள்ளது. [6] வோல்காவின் பிரதேசங்களில் ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களது நாகரிகம் மற்றும் குடியேற்றம் உருவாகியது என்று பரவலாக அறியப்படுகின்றது. முதலாம் ஆயிரமாண்டுகளில் ஹன் மற்றும் துருக்கி இனக் குழு மக்கள் இங்கு குடியேறியதைத் தொடர்ந்து அங்கிருந்த சிதியர்கள் இடம்பெயர்ந்தனர்.

பண்டைய காலத்து அறிவியலாளரான தொலெமி தனது புவியியல் வரைபடத்தில் (நூல் 5, அத்தியாயம் 8, ஆசியாவின் இரண்டாவது நிலப்படம்) இதனை ரா என்று குறிப்பிட்டுள்ளார். டொன் எனப்படும் ஆறும் வோல்காவும் ஒரே மேற்கிளைகளைப் பகிருகின்றன என்று தொலெமி நம்பியிருந்தார்.

வோல்காவின் நீரேந்து பிரதேசம் ஆசியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு மக்கள் நகருவதற்கு ஏற்றதொரு பகுதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஏழாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் காமா எனும் ஆற்றுடன் வோல்கா ஆறு இணையும் இடத்தில் அமைந்த பிரதேசம் வோல்கா பல்காரியா[7][8] என்று அழைக்கப்பட்டது, இது தற்போதைய ஐரோப்பிய உருசியா ஆகும். அடில், சாக்சின், சராய் என்பன ஐரோப்பிய மத்திய காலப்பகுதியில் அமைந்த வோல்கா நகரங்கள் ஆகும். இந்த ஆறு எசுக்காண்டினாவியா, ருஸ், வோல்கா பல்காரியா ஆகியனவற்றை கசாரியா மற்றும் பாரசீகத்துடன் இணைத்து முக்கிய வர்த்தகப் பாதையை உருவாக்கிக்கொள்ள ஏதுவாக இருந்தது. வோல்காவின் கீழ்ப்பகுதிகளை கசார்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பின்னர் இந்த இராச்சியங்கள் கசானிய கான்கள் மற்றும் அஸ்ட்ரகான் கான்கள் என இரண்டாக பிளவுபட்டது. இந்த இரண்டு இராச்சியங்களும் பதினாறாம் நூற்றாண்டில் உருசிய-கசான் போரின் பின்னர் உருசியர்களால் வெற்றிகொள்ளப்பட்டது.

வோல்காவின் மாபெரும் வளைவு அமைந்துள்ள நகரம் வோல்காகிராத் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஸ்டாலின்கிராட் எனும் பெயரைக் கொண்டிருந்த இந்நகரத்தில் உருசியர்களுக்கும் செருமானியர்களுக்கும் இடையே வலுவான போர் ஏற்பட்டிருந்தது.

புவியியல் தரவுகள்

தொகு
 
வோல்காவின் ஊற்று அமைந்துள்ள பகுதி. 2009 ஆம் ஆண்டு

மாஸ்கோவின் வடமேற்குப் பகுதியிலும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் அமைந்துள்ள வல்தாய் மேட்டுப் பகுதியில், திவேர் மாகாணம் அஸ்தாவ்ஸ்கியில் அமைந்துள்ள வோல்காவேர்கொவியே எனும் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 228 மீட்டர்கள் உயரத்தில் வோல்கா ஆறு உற்பத்தியாகின்றது. இங்கு ஊற்றெடுத்து சிறிய ஏரிகள் ஊடாகப் பயணித்துப் பின்னர் இசுதேர்சு, விசியேலுக், பேனோ, வோல்க போன்ற பெரும் ஏரிகள் ஊடாக ஓடுகின்றது.

அஸ்தாவ்ஸ்கியில் தொடங்கிய வோல்கா ஆறு கிழக்கு நோக்கி இசுதேர்சு ஏரி, திவேர், துப்னா, ரிபின்ஸ்க், ஈரோஸ்லாவல், நீஸ்னி நோவ்கோரத், கசான் நகரங்களை அடைந்து, அதன் பின்னர் தெற்கு நோக்கித் திரும்பி உலியாநொவ்ஸ்க், தொலியாத்தி, சமாரா, சரதோவ், வோல்காகிராத் ஆகிய நகரங்களை அடைகின்றது. இங்கு டொன் எனும் ஆறும் வோல்காவும் தமது வளைவுகளை ஏற்படுத்துகின்றன. இறுதியில் அஸ்த்ரகான் நகரத்தினூடு சென்று காஸ்பியன் கடலில் சங்கமிக்கின்றது.

வோல்காவின் கிளைகள்

தொகு

வோல்கா ஆறு பல கிளைகளைக் கொண்டது, அவற்றுள் முக்கியமானவை காமா, ஒகா, வெத்லூகா, சுரா என்பனவையாகும். வோல்காவும் அவற்றின் கிளைகளும் சேர்ந்து வோல்கா ஆற்று ஒருங்கியத்தை உருவாக்கின்றன. வோல்கா ஆற்றின் கழிமுகம் ஏறத்தாழ 160 கிலோமீட்டர்கள் நீளம் கொண்டது, இதில் பல கால்வாய்களும் சிறிய நதிகளும் அடங்குகின்றன.

வோல்கா ஆறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றது: மேல் வோல்கா, நடு வோல்கா, கீழ் வோல்கா.

மேல் வோல்கா

தொகு
 
வோல்காகிராத் வோல்கா செயற்கைக்கோள் நிழற்படம்.

நதி ஊற்றின் பின்னர் அமைந்துள்ள வோல்காவின் மக்கள் செறிவுள்ள முதல் நகரம் ரிசேவ். மாஸ்கோக் கடல் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் இவான்கோவ் நீர்த்தேக்கம் திவேர் மற்றும் ரிபின்ஸ்க் நகரங்களுக்கு இடையே உருவாக்கப்பட்டது. இவை தவிர ஊக்லிச் நீர்த்தேக்கம் (ஊக்லிச் நகரம்), ரிபின்ஸ்க் நீர்த்தேக்கம் (ரிபின்ஸ்க்), கோர்கோவ் நீர்த்தேக்கம் (நீஸ்னி நோவ்கோரத் மேலேயுள்ள கரதேயிட்ஸ் நகரம்) ஆகியன மேல் வோல்காவில் காணப்படும் நீர்த்தேக்கங்கள் ஆகும்.

மேல் வோல்காவின் கிளைகள்

தொகு
  • செலிசாரவ்கா (திவேர் மாகாணம்)
  • திமா (திவேர் மாகாணம்)
  • திவேர்ட்சா (திவேர் மாகாணம், திவேர்)
  • மலோகா (திவேர், நோவ்கோரத், வலோகோத் மாகாணங்கள்)
  • ஷெக்ஸ்னா (வலோகோத் மாகாணம்)
  • கோத்தரஸ்ல் (ஈரோஸ்லாவல் நகரம்)
  • ஊன்சா (வலோகோத், கஸ்த்ரமா மாகாணங்கள்)
 
திவேரில் பனி காலத்தில் வோல்கா உறைந்திருப்பதை இப்படத்தில் காணலாம். இக்காலத்தில் மக்கள் வோல்காவை நடந்து கடப்பதை அவதானிக்கமுடியும்.

நடு வோல்கா

தொகு

ஒகா ஆற்றுக் கிளையின் கீழே ஓடும் வோல்காவில் நீர் மிகையாகக் காணப்படுகின்றது.

நடு வோல்காவின் கிளைகள்

தொகு
  • ஒகா
  • சுரா
  • வெத்லூகா
  • சிவியாகா

கீழ் வோல்கா

தொகு

காமா ஆறு வோல்காவுடன் இணைந்த பிற்பாடு வலுவான ஆறாக வோல்கா மாற்றம் பெறுகின்றது.

கீழ் வோல்காவின் கிளைகள்

தொகு
 
வோல்கா சூரியோதயம், சமாரா மாகாணம்.
  • சோக் (ஒரின்பூர்க் சமாரா மாகாணங்கள்)
  • சமாரா (சமாரா நகரம்)
  • பல்ஷோய் இக்ரீஸ் (சமாரா, சரத்தோவ் மாகாணங்கள்)
  • எருஸ்லான் (சரத்தோவ், வோல்காகிராத் மாகாணங்கள்)

பயன்பாடுகள்

தொகு

நீர்ப்பாசனம், நீர் மின்னாற்றல் ஆகியனவற்றை வோல்காவின் நீர்நிலைகள் மூலம் ஐரோப்பிய உருசியப் பகுதியினர் பெற்றுக்கொள்கின்றனர். மசுக்குவாக் கால்வாய், வோல்கா-டொன் கால்வாய், வோல்கா-பால்டிக் நீர்வழி ஆகியன மாஸ்கோவை வெண் கடல், பால்டிக் கடல், காஸ்பியன் கடல், அசோவ் கடல், கருங்கடல் முதலியனவற்றுடன் இணைப்பதன் மூலம் சொகுசுப் பயணக் கப்பல்கள் பயணிக்கக்கூடிய நீர் மார்க்கங்களாகத் திகழ்கின்றன. வோல்காவின் கனிமவளம் செறிந்த நீர்ப்பாசனம் கோதுமையை மிகை அளவில் உற்பத்தி செய்வதற்குத் துணைபோகின்றது.

கப்பல் போக்குவரத்து

தொகு
 
வோல்காவின் வழியாகக் கப்பற் போக்குவரத்து.

ஊர்களுக்கிடையே பயணிக்கவும் சரக்குகளைக் கொண்டு செல்லவும் ஜோசப் ஸ்டாலின் காலத்து தொழில்மயமாதல் மூலம் வோல்கா வழியான கப்பல் போக்குவரத்து முக்கியத்துவம் அடைந்தது. இச்சமயத்தில் கட்டப்பட்ட போக்குவரத்து மடைகளையுடைய அணைகள், காஸ்பியன் கடலில் இருந்து வோல்கா ஆற்றின் முடிவு வரை பயணிக்கக்கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்தது. கருங்கடல் டொன் ஆற்றுடன் உள்ள இணைப்பு வோல்கா-டொன் கால்வாயூடு சாத்தியமாகின்றது. வடக்கில் உள்ள ஏரிகள் லடோகா, அனேகா, சென் பீட்டர்ஸ்பேர்க், பால்டிக் கடல் ஆகியனவற்றின் இடையேயான போக்குவரத்து வோல்கா-பால்டிக் வழியூடு சாத்தியமாகின்றது. மாஸ்கோ இடையேயான வர்த்தகங்கள் மாஸ்கோ கால்வாய் வோல்காவை மொஸ்கோ ஆற்றுடன் இணைப்பதன் மூலம் வசதிப்படுகின்றன.

பிந்தைய சோவியத் காலம் முதல் இற்றைவரைக்கும் தானியவகைகள், எண்ணெய் ஆகியன வோல்கா வழியாக மேற்கொள்ளப்படும் பெரும் ஏற்றுமதிச் சரக்குகளாக விளங்குகின்றன. [9] இன்று வரை உருசிய நீர் வழியூடாகச் செல்வதற்குரிய அணுக்கம் மிக மட்டுப்படுத்தபட்டே வெளிநாட்டவருக்குக் கிடைக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் உருசியாவுக்கும் இடையேயான தொடர்புகள் பெருகி வரும் நிலை காரணமாக உருசிய நீர் வழியூடாகச் செல்வதற்குரிய அணுக்கக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுகின்றன. மிக விரைவில் வெளிநாட்டுக் கப்பல்கள் உருசிய ஆற்றில் பயணிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [10]

 
சரத்தோவ் நீர் மின் ஆற்றல் நிலையம்

இலக்கியத்தில் வோல்கா

தொகு

உருசிய நூல்கள்

தொகு
  • வனங்களில், மலைகளில் (உருசியம்: வ் லேசாஃக், நா கோராஃக்) - ஆ. பெ. மேல்னிகோவ்
  • ஈகர் புளிச்செவும் மற்றவர்களும் (உருசியம்: ஈகர் புளிச்சேவ் இ துருகீய) - மக்சீம் கோர்க்கி
  • வோல்காவில் (உருசியம்:நா வோல்கே) - நி. அ. நெக்ராசவ்

திரைப்படங்கள்

தொகு
  • வோல்கா வோல்கா (1938, இசை நகைச்சுவைத் திரைப்படம்)
  • பாலம் கட்டப்படுகின்றது ( ஸ்த்ரோய்ட்சா மொஸ்த், 1965, கலைநயத் திரைப்படம் )

தமிழ் நூல்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Волга". Большая советская энциклопедия 5. (1969—1978). Ed. А. М. Прохоров. 293. அணுகப்பட்டது 13 மே 2017. 
  2. Бронштэн В. А. Клавдий Птолемей: II век н. э. — М.: Наука, 1988. — 240 с. — С. 144 — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5-02-001300-5.
  3. J.P. Mallory & D.Q. Adams, Encyclopedia of Indo-European Culture, s.v. "dew" (London: Fitzroy Dearborn, 1997), 158-9.
  4. Чичуров И. С. Экскурс Феофана о протобулгарах // Древнейшие государства на территории СССР. 1975. — Москва: Наука, 1976. — С. 65—80.
  5. See Max Vasmer's dictionary under "Волга".
  6. Геродот. История (IV, 123—124). {{cite book}}: Empty citation (help)
  7. Nicolle, David (2013). Armies of the Volga Bulgars & Khanate of Kazan. p. 14.
  8. Champion, Timothy (2014). Nationalism and Archaeology in Europe. p. 227. {{cite book}}: External link in |ref= (help)
  9. Korotenko, K. A.; Mamedov, R. M.; Mooers, C. N. K. (2000). "Prediction of the Dispersal of Oil Transport in the Caspian Sea Resulting from a Continuous Release". Spill Science & Technology Bulletin 6 (5–6): 323. doi:10.1016/S1353-2561(01)00050-0. 
  10. "NoorderSoft Waterways Database". Noordersoft.com. Archived from the original on November 9, 2005. பார்க்கப்பட்ட நாள் 2010-06-11.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Volga
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்கா_ஆறு&oldid=3957347" இலிருந்து மீள்விக்கப்பட்டது