விக்கிப்பீடியா:இரங்கல்/பயனர் கே. எஸ். பாலச்சந்திரன்

பயனர்:பாலச்சந்திரன் 2007 பெப்ரவரியில் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்தார். இவர் தொகுத்த முதல் கட்டுரை "இலங்கை வானொலி நாடகத்துறை" ஆகும். தமிழ் விக்கியில் இவர் 136 கட்டுரைகளை எழுதியுள்ளார். 1542 தொகுப்புகளைச் செய்துள்ளார். இவர் கடைசியாக "தெய்வம் தந்த வீடு" எனும் கட்டுரையில் தொகுப்பு ஒன்றினை சனவரி 8, 2013 அன்று செய்துள்ளார். இவரது கட்டுரைகள் பெரும்பாலனவை இலங்கை மற்றும் கனடிய வானொலித்துறை, திரைப்படத்துறை, நாடகத்துறை, ஈழத்துக் கலைஞர்கள், கரவெட்டி ஆகியன பற்றியவை ஆகும். அவர் விக்கி உரையாடல்களில் கலந்து கொண்டார். விக்கியை எப்படிப் பயன்படுத்துவது, எப்படிப் பங்களிப்பது என்று விரிவாகக் கற்றுக் கொண்டார். தனது பேச்சுப் பக்கத்தில் "என் கலைப்பணியின் ஒரு அங்கமாக நான் விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பு செய்வதையும் கருதுகின்றேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

கே. எஸ். பாலச்சந்திரன் ஒரு முன்னோடித் தமிழ் விக்கியர். இவரது மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை விக்கிச் சமூகம் தெரிவித்துக் கொள்கிறது.

கே. எஸ். பாலச்சந்திரன் ஈழத்தின் அறியப்பெற்ற நாடக, நகைச்சுவை, திரைப்படக் கலைஞர் ஆவார். புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த பாலச்சந்திரன் 2014ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 2007 முதல் 2013 வரை ஈழத்துக் கலைஞர்கள், ஒலிபரப்புக் கலை, நாடகத் துறை, திரைப்படத் துறை முதலிய துறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதினார். நா. சோமகாந்தன், சுப்பு ஆறுமுகம், அ. பாலமனோகரன், ஏரம்பு சுப்பையா, இலங்கை வானொலி நாடகத்துறை, 1999 (திரைப்படம்), நான் உங்கள் தோழன், உடப்பு, கரவெட்டி ஆகிய கட்டுரைகள் இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில.