விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 2, 2012
மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு முடியாட்சி நாடு. மலேசியா தீபகற்ப மலேசியா அல்லது மேற்கு மலேசியா என்றும், கிழக்கு மலேசியா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவை, மலேசிய போர்னியோ என்று அழைப்பதும் உண்டு. மலேசியாவின் நில எல்லைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், புரூணை ஆகிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர். நடுவண் அரசின் நிர்வாக மையம் புத்ராஜெயாவில் உள்ளது. மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் மலாய் மக்கள் பெரும்பான்மையானவர். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள். மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இட தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது. மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன. மேலும்...
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நேரங்களில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது என்றும் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்றும் கருதிய இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்தார். 1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற வானொலியையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனி கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். மேலும்...