விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 13, 2013

தமிழர் நெசவுக்கலை என்பது வேட்டி, புடவை அல்லது துண்டு போன்ற உடைகளைத் தயாரிக்கும் கலை ஆகும். பருத்தியிலிருந்து தக்ளி மற்றும் ராட்டையின் மூலம் நூல் நூற்றலையும், கைத்தறியையும், தையலையும் பண்டைக்காலம் தொட்டே தமிழர் அறிந்திருந்தனர். தமிழர்கள் இத்துறையில் கொண்ட தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் தமிழர் நெசவுக்கலை குறிக்கின்றது. தமிழர்கள் பண்டைக் காலம் முதற்கொண்டு பருத்தி, பட்டு, கம்பளி ஆடைகளை அணிந்தும் சரிகைகள் இணைந்த ஆடைகளைப் புனைந்தும் வந்துள்ளனர். ஆதிச்ச நல்லூரில் கிடைத்த தாழிகளில் மண்வெட்டி, கொழு, நெல், உமி, பழைய இற்றுப்போன பஞ்சாடை ஆகியவை கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிச்ச நல்லூரில் புதைக்கப்பட்டவர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல், பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்தது மட்டுமல்ல நெசவுத் தொழிலும் செய்து வந்தனர் என்று அறியமுடிகிறது. மேலும்...


அணிக்கோவை என்பதுகணிதத்தில், நேரியல் இயற்கணிதப் பிரிவில் ஒவ்வொரு சதுர அணியுடனும் இணைக்கப்பட்ட ஒரு மதிப்பாகும். அச்சதுர அணியின் உறுப்புகள் ஒரு நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் குணகங்களாக இருக்கும்போது அந்த அணியின் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே அச்சமன்பாடுகளின் தீர்வு தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அதேபோல அச்சதுர அணி ஒரு நேரியல் உருமாற்றத்தைக் குறிக்கும்போது அதன் அணிக்கோவையின் மதிப்பு பூச்சியமாக இல்லாமல் இருந்தால், இருந்தால் மட்டுமே அந்த உருமாற்றத்திற்கு நேர்மாறு உருமாற்றம் இருக்க முடியும். மெய்யெண் உறுப்புகளைக் கொண்ட ஒரு சதுர அணியின் அணிக்கோவை மதிப்பின் உள்ளுணர்வான விளக்கத்தைப் பின்வருமாறு தரலாம். ஒரு அணிக்கோவையின் தனி மதிப்பானது, அதன் அணி குறிப்பிடும் உருமாற்றத்தினால் மாறும் பரப்பின் (கன அளவு) பெருக்கத்தின் (குறுக்கம்) அளவைக் குறிக்கிறது. மேலும்...