விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜூன் 23, 2013

ஆலிவர் கிராம்வெல் (ஒலிவர் குரொம்வெல், 25 ஏப்ரல் 1599 – 3 செப்டம்பர் 1658) இங்கிலாந்தின பெருந்திறமை வாய்ந்த எழுச்சியூட்டும் இராணுவத் தலைவராக விளங்கியவர். இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்போது நாடாளுமன்ற படைகளுக்குத் தலைமை தாங்கிப் போரிட்டு வெற்றி தேடித் தந்த செயல் வீரர். இவர் இங்கிலாந்தின் வரம்பற்ற முடியாட்சி முறையை மாற்றி நாடாளுமன்ற மக்களாட்சி அரச முறையாக அமைப்பதற்கு மூல காரணமாக இருந்தவர். 1628 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு தமது 30 ஆம் வயதில் தேர்ந்த்தெடுக்கப்பட்டார். இவர் தமது இளமைக் காலத்தில் சமயப் பூசல்களால் அலக்கழித்துக் கொண்டிருந்த இங்கிலாந்தில் வாழ்ந்தார். அப்போது வரம்பற்ற முடியாட்சி மீது நம்பிக்கை கொண்டு அதை நடைமுறைப்படுத்த விரும்பிய முதலாம் சார்லஸ் மன்னர் இங்கிலாந்தை ஆண்டு வந்தார். எனவே 1629 -ல் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டுத் தாமே நாட்டை ஆளத் தொடங்கினார். எனவே கிராம்வெல் நாடாளுமன்ற உறுப்பினராக சிறிது காலமே பணியாற்றினார். 12 ஆண்டுகள் வரையில் சார்லஸ் மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டவே இல்லை. 1640 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பதற்காக மன்னருக்குப் பணம் தேவைப்பட்டது. அந்தப் பணத்தைப் பெறுவதற்காகவே மன்னர் நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அந்தப் புதிய நாடாளுமன்றத்தில் ஆலிவர் கிராம்வெல் 1642 வரை உறுப்பினராக இருந்தார். மேலும்...


வித்து அல்லது விதை என்பது சில தாவரங்கள் தம் இனத்தைப் பெருக்கிக் கொள்ள, தம்முள்ளே உருவாக்கும் ஓர் தாவர அங்கமாகும். இந்த வித்தானது விழுந்து அல்லது விதைக்கப்பட்டு முளைப்பதன் மூலம் அவ்வினத்தைச் சேர்ந்த புதிய உயிரினம் உருவாகும். விதைகள் பொதுவாக தம்முள்ளே உணவுச் சேமிப்பைக் கொண்டிருக்கும் முளையத் தாவரமாகும். பூக்கும் தாவரங்கள் மற்றும் வித்துமூடியிலித் தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை, அதைத் தொடர்ந்த கருக்கட்டல் செயல்முறைகளின் பின்னர் முதிர்ச்சியுறும் சூலகமே விதையாக விருத்தியடைகின்றது. இவ்வகைத் தாவரங்கள், விதைகளின் துணையுடனேயே தமது வாழ்க்கை வட்டத்தைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. அத்துடன் விதைகள் பலவகை சூழ்நிலைகளைத் தாங்கி வாழக்கூடிய இயல்பினைக் கொண்டிருப்பதனால், பல சூழ்நிலைகளிலும் இத்தகைய தாவரங்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முடிகின்றது. விதைகள் நீர், காற்று மற்றும் அளவான வெப்பநிலை போன்ற தமக்கு சாதகமான சூழல் வழங்கப்படுகையில் முளைத்தல் செயல்முறை மூலம் நாற்றாக உருவாகும். பின்னர் அந்த நாற்று விருத்தியடைந்து புதிய தாவரமாக வளரும். முளைத்தல் செயல்முறைக்கு சூரிய ஒளி அவசியமில்லை. சில விதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வித்து உறங்குநிலை என அழைக்கப்படும் ஒரு நிலையில் இருந்த பின்னரே முளைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். மேலும்...