விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி

இது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் வருகின்றது. இந்தக் கொள்கைக்குப் பயனர்களின் பரவலான ஒப்புதல் உண்டு. இந்தக் கொள்கையையும் வழிகாட்டல்களையும் அனைவரும் மதித்து செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதுக் கருத்துக்களையும், மாற்றுக் கருத்துகளையும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கலாம். குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், அந்த மாற்றங்களை நோக்கி இணக்க முடிவை எட்டிய பின்னர் ஏற்படுத்தவும்.


தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள்

ஐந்து தூண்கள்
தமிழ் விக்கிப்பீடியா எவை அல்ல
விதிகளை மீறு
கொள்கைகளும் வழிகாட்டல்களும்
பதிப்புரிமை

தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம்

நடுநிலை நோக்கு
மெய்யறிதன்மை
மேற்கோள் சுட்டுதல்
கிரந்த எழுத்துப் பயன்பாடு
கேள்விக்குட்படுத்தல்
புத்தாக்க ஆய்வும் கட்டுரைக்கான ஆய்வும்
படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும்
வெளி இணைப்புகள்
வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு
தன்வரலாறு
கைப்பாவை
தானியங்கித் தமிழாக்கம்
தரவுத்தள கட்டுரைகள்
கட்டுரை ஒன்றிணைப்பு
தணிக்கை

தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல்

கண்ணியம்
இணக்க முடிவு
பாதுகாப்புக் கொள்கை
ஒழுங்குப் பிறழ்வுகள்
விக்கி நற்பழக்கவழக்கங்கள்
தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்
விசமிகளை எதிர்கொள்வது எப்படி?


விக்கி நிர்வாகிகள் பள்ளி என்னும் இத்திட்டம், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பல நிர்வாகிகளை உருவாக்கிப் பயிற்றுவித்து, தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கோடு பரிந்துரைக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு காலாண்டிலும் ஆகக் கூடுதலாக 6 புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவிக்கலாம்.

இவர்கள்:

நிர்வாகிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,

  • குறைந்தது 1000 முதன்மை வெளித் தொகுப்புகள்

மற்றும்/அல்லது

  • குறைந்தது 50 கட்டுரைகள் உருவாக்கம்

ஆகியவற்றைச் செய்து

  • கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
  • பொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
  • பொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
  • பொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்

இருந்தால் போதுமானது.

இந்தப் பண்புகளை உடைய ஆறு பேர் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும் போது என்ன காரணத்துக்காகப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்குப் பயனர்கள் தங்கள் ஏற்பைத் தெரிவித்து நிர்வாக அணுக்கம் கொண்டு எத்தகைய பணிகளைச் செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஒரு வார காலம் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிரு முறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளைப் பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது.

இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்

  • ஆறு பயனர்களுக்கு
  • அடுத்த மூன்று மாதங்களுக்கு

உடனடியாக நிர்வாக அணுக்கம் வழங்குவதுடன், தேங்கி நிற்கும் நிர்வாகப் பணிகளில் அவர்கள் எவ்வாறு பங்களிக்கலாம் என்பதையும் குறிப்பிட்டு வழிகாட்ட வேண்டும். ஏற்கனவே நிர்வாகிகளாக இருப்போரும் நிர்வாகப் பணிகளின் தன்மை அறிந்த நீண்ட நாள் பயனர்களும் புதிய நிர்வாகிகளுக்கு 1:1 வழிகாட்ட முனையலாம் (mentoring).

மூன்று மாத காலத்துக்குப் பிறகு நிர்வாகிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப, தொடர்ந்து

  • 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
  • 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
  • நிலையான நிர்வாக அணுக்கம்

என்று நிர்வாக அணுக்கத்தைத் தரலாம்.

  • 3 மாத காலத்துக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் புதிய நிர்வாகிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. நிர்வாக அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.
  • நிர்வாக அணுக்கத்தைப் பெற்றமையாலேயே ஒரு பயனர் குறிப்பிட்ட அளவு கூடுதலாக விக்கி, நிர்வாகப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒருவர் அவரது நிர்வாக அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக் கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முன், இக்கொள்கையை மேம்படுத்த வாய்ப்புண்டா என்பதை ஆய்வு செய்ய ஒரு வார காலம் கலந்துரையாடல் நடைபெறும்.
  • இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை, புதிய நிர்வாகிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம்.
  • இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து, அதிகாரிகள் தெரிவிற்கும் இதே போன்ற முறையினைச் செயற்படுத்தலாம். ஆனால், அப்பொறுப்புக்கு ஏற்ப வேறு வகையான விதிகள் முன்மொழியப்பட்டு தனியே இன்னொரு புதிய கொள்கை வகுக்க வேண்டி வரும். மேலும் விவரங்களுக்கும் உரையாடலுக்கும் பேச்சுப் பக்கம் காண்க.