விட்டல் ராம்ஜி ஷிண்டே
மகரிஷி விட்டல் ராம்ஜி ஷிண்டே (Mahrshi Vitthal Ramji Shinde) (1873 ஏப்ரல் 23 - 1944 சனவரி 2 இவர் இந்தியாவின் மகாராட்டிராவின் மிக முக்கியமான சமூக மற்றும் மத சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார். இவர் சுதந்திரத்திற்கு முன்னர், இந்தியாவில் தாராளவாத சிந்தனையாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவர். தீண்டாமை நடைமுறையை அகற்றி, இந்திய சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சமத்துவத்தை ஏற்படுத்த முயற்சித்ததே இவரது மிகப்பெரிய பங்களிப்பாகும்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் 1873 ஏப்ரல் 23 அன்று இந்தியாவின் கருநாடகாவில் உள்ள ஜமகண்டி மாநிலத்தில் மராத்திய மொழி பேசும் மகாராட்டிர குடும்பத்தில் பிறந்தார். இவரது ஆரம்பகால குழந்தைப்பருவம் ஒரு தாராளவாத குடும்ப சூழலால் பாதிக்கப்பட்டது. குடும்ப நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்கள் எல்லா மதங்களிலிருந்தும் சாதியிலிருந்தும் வந்தவர்கள். மதம் என்பது ஒரு குருட்டு நம்பிக்கை மற்றும் அர்த்தமற்ற சடங்குகள் அல்லது பூஜைகள் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் மற்றும் உணர்ச்சிபூர்வமாக கடவுளின் சேவையில் ஈடுபடுவது என்று இவர் கருதினார்.
இவரது ஆரம்பகால ஆன்மீக விழிப்புணர்வு மகாராட்டிராவின் துக்காராம், ஏக்நாத் மற்றும் இராம்தாஸ் ஆகியோரின் வாசிப்பிலிருந்து வந்தது.
அரி நாராயண் ஆப்தே, முதல்வர் கோபால் கணேஷ் அகர்கர், ஜான் ஸ்டூவர்ட் மில், எர்பர்ட் இஸ்பென்சர் மற்றும் மாக்ஸ் முல்லர், தலைமை நீதிபதி மகாதேவ் கோவிந்து ரனதே மற்றும் சர் ஆர்.ஜி.பண்டார்கர் போன்ற பல அறிவுஜீவிகளின் எழுத்துக்களால் இவரது அறிவுசார் விழிப்புணர்வு தாக்கத்தை ஏற்படுத்தியது.
கல்வி
தொகு1898 ஆம் ஆண்டில் இந்தியாவின் புனேவில் உள்ள பெர்குசன் கல்லூரியில் இளங்கலை கலை பட்டம் பெற்றார். முதல் ஆண்டு சட்டத்தையும் படித்து நிறைவேற்றிய இவர் இளங்லைச் சட்டம் படிப்பதற்காக மும்பைக்குச் சென்றார் .ஆனலும், தனது வாழ்க்கையில் மற்ற கட்டாய அழைப்புகளுக்குச் செல்ல இந்த பாடத்திட்டத்தை கைவிட்டார். அதே ஆண்டு இவர் பிரார்த்தனா சமாஜத்தில் சேர்ந்தார். அங்கு இவர் ஜி.பி. கோட்கர், சிவராம்பந்த் கோகலே, நீதிபதி மகாதேவ் கோவிந்து ரனதே, சர் ராமகிருஷ்ணா கோபால் பண்டார்கர் மற்றும் கே.பி. மராத்தே ஆகியோரால் மேலும் ஈர்க்கப்பட்டு செல்வாக்கு பெற்றார். இவர் பிரார்த்தனா சமாஜத்தை பரப்பும் பணியை மேற்கொண்டார்.
யூனிடேரியன் தேவாலயத்தால் நிறுவப்பட்ட ஆக்சுபோர்டில் உள்ள மான்செஸ்டர் கல்லூரியில் ஒப்பீட்டு மதத்தைப் படிக்க 1901 ஆம் ஆண்டில் இங்கிலாந்து செல்ல பிரார்த்தனா சமாஜம் இவரைத் தேர்ந்தெடுத்தது. ஒரு முற்போக்கான மற்றும் சீர்திருத்தவாதியான பரோடாவைச் சேர்ந்த மூன்றாம் மகாராஜா சாயாஜிராவ் கெய்க்வாட் , இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு சில நிதி உதவிகளை வழங்கினார்.
வாழ்க்கைப்பணி
தொகு1903 இல் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பின்னர், இவர் தனது வாழ்க்கையை மத மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்காக அர்ப்பணித்தார். பிரார்த்தனா சமாஜத்திற்கான தனது பணிகளைத் தொடர்ந்தார். இவரது முயற்சிகள் முக்கியமாக இந்தியாவில் தீண்டாமையை அகற்றுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் புனேவில் தலித் குழந்தைகளுக்காக ஒரு இரவுப் பள்ளியை நிறுவினார். 1906 ஆம் ஆண்டில் மும்பையில் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் பள்ளியைத் ஹொடங்கினார். 1910 ஆம் ஆண்டில் இவர் முரளி பிரதிபந்தக சபாவை நிறுவினார். 1917 இல் தீண்டாமையைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை இந்திய தேசிய காங்கிரசு நிறைவேற்றுவதில் இவர் வெற்றி பெற்றார்.
1918 முதல் 1920 வரை, இவர் அகில இந்திய தீண்டாமை நீக்குதல் மாநாடுகளை கூட்டினார். இந்த மாநாடுகளில் சில மகாத்மா காந்தி மற்றும் மகாராஜா சயாஜிராவ் கெய்க்வாட் ஆகியோரின் தலைமையின் கீழ் கூட்டப்பட்டன. இச்சமயத்தில் மகாத்மாவுக்கு இவர் எழுதிய கடிதங்கள் குறிப்பிடத்தக்கவை. 1919 ஆம் ஆண்டில் இவர் சவுத்பரோ உரிமையாளர் குழு முன் சாட்சியங்களை வழங்கினார், தீண்டத்தகாத சாதிகளுக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் கேட்டார். தீண்டத்தகாத சாதிகளின் உறுப்பினர்கள் சிலர் அதன் சொந்த தலைவர்களை மிஷன் விவகாரங்களை நிர்வகிக்க விரும்பியதால் 1923 ஆம் ஆண்டில் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் அமைப்பின் நிர்வாகி பதவியிலிருந்து வெளியேறினார். தலித்துகளின் தலைவர்களின் பிரிவினைவாத அணுகுமுறையால், குறிப்பாக பி.ஆர்.அம்பேத்கரின் தலைமையின் கீழ் இவர் ஏமாற்றமடைந்தாலும், இவரது பணி மற்றும் அமிப்புடனான தொடர்பு தொடர்ந்தது. மகாத்மா காந்தியைப் போலவே, இவர் தலித்துகள் மற்றும் இந்து சாதியினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த விரும்பினார். மேலும் பிரிட்டிசு ஆட்சி இந்திய சமுதாயத்திற்குள்ளான இத்தகைய பிளவுகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நலனுக்காக சுரண்டப்படும் என்று அஞ்சினார்.
1930 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் சட்ட ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற இவர் புனேவுக்கு அருகிலுள்ள ஏர்வாடா மத்திய சிறையில் ஆறு மாதம் அடைக்கப்பட்டார்.
1933 ஆம் ஆண்டில் இவரது புத்தகமான பாரதிய அஸ்ப்ரூஷ்யதேச்ச பிரஷ்னா ("இந்தியாவின் தீண்டாமை கேள்வி") வெளியிடப்பட்டது. இந்து மதம் மற்றும் சமூக கலாச்சாரம் குறித்த இவரது எண்ணங்களும் ஆய்வுகளும், இராசாராம் மோகன் ராய் மற்றும் தயானந்த சரஸ்வதி ஆகியோரின் கருத்துக்களைப் போலவே இருந்தன. இவர் தனது எழுத்துக்களில், சாதி அமைப்பு, சிலை வழிபாடு மற்றும் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தார். அர்த்தமற்ற சடங்குகளையும், பரம்பரை ஆசாரியத்துவத்தின் ஆதிக்கத்தையும், கடவுளுக்கும் அவருடைய பக்தர்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய ஒரு பூசார் தேவைப்படுவதையும் இவர் எதிர்த்தார்.
மகரிஷி விட்டல் ராம்ஜி ஷிண்டே 1944 சனவரி 2 அன்று இறந்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்புக்கான அமைப்பு
தொகுஇந்தியாவில் தலித் இயக்கத்தின் முக்கிய பிரச்சாரகராக இருந்தார். இவர் தலித்துகளுக்கு கல்வி வழங்க இந்தியாவின் தாழ்த்தப்பட்ட வகுப்புகள் அமைப்பை நிறுவினார். [1] தேசிய அளவில் தீண்டாமைக்கு எதிராக செயல்படுவதற்காக 1906 அக்டோபர் 18 அன்று இவர் மனச்சோர்வடைந்தவர்கள் சார்பான அமைப்பிற்கு அடித்தளம் அமைத்தார். இந்த பணியின் நோக்கங்கள்:
- தீண்டாமையிலிருந்து விடுபட முயற்சிப்பது.
- தலித்துகளுக்கு கல்வி வசதிகளை வழங்குவது.
- தலித்துகளுக்கு பள்ளிகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்குவது.
- அவர்களின் சமூக பிரச்சினைகளை தீர்ப்பது
இந்த அமைப்பின் மூலம் பல பள்ளிகள் மற்றும் விடுதிகள் நிறுவப்பட்டன.[2]
ஆதாரங்கள்
தொகு- ↑ Kshīrasāgara, Rāmacandra (1994). Dalit Movement in India and Its Leaders, 1857-1956. M.D. Publications Pvt (. Ltd. p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85880-43-3. பார்க்கப்பட்ட நாள் 2008-01-07.
- ↑ Study books of Nathe, K'Sagar and Chanakya mandal publications.
Dr. G.M. Pawar, English translation by Sudhakar Marathe "The life and work of Maharshi Vitthal Ramji Shinde, Sahitya Akademi 2013, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-4064-3
- Gore, M.S.; Vitthal Ramji Shinde, An Assessment of his Contribution (book in English language), (1989), Tata Institute of Social Sciences, Bombay, India.
- Pawar, G.M.; Maharshi Vitthal Ramji Shinde, Jeevan wa Karya (book in Marathi language), (2004), Mumbai (Bombay), India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-88284-37-8.
- Katare.maharashtra history (2013) edition ..