விலங்குப் பண்ணை (புதினம்)

அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை, Animal Farm) என்பது ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ஓர் உருவகப் புதினம் ஆகும். இங்கிலாந்தில் 1945 ஆம் ஆண்டில் ஆகத்து 17 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன், சுடாலின் காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பிரதிபலித்தது. ஜனநாயக சமத்துவவாதியாகவும்[1] மற்றும் பல வருடங்கள் சுதந்திர தொழிற் கட்சி உறுப்பினராகவும் இருந்த ஆர்வெல் சோசப்பு சுடாலினை விமர்சனம் செய்தவர். எசுப்பானிய உள்நாட்டுப் போரின் போது சோவியத் ஒன்றியத்தின் உளவுத்துறையுடன் ஆர்வெலுக்கு நேர்ந்த அனுபவங்கள், கம்யூனிசத்தின் தீய தாக்கங்களாக அவர் கருதியவை அவரை மாசுக்கோவிலிருந்து திணிக்கப்பட்ட சுடாலினியத்துக்கு எதிராக அவரைத் திருப்பின.

அனிமல் ஃபார்ம்
நூலாசிரியர்ஜார்ஜ் ஆர்வெல்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
வகைசெவ்வியல், பகடி
வெளியீட்டாளர்செக்கர் & வார்பர்க் (இலண்டன்)
வெளியிடப்பட்ட நாள்
17 ஆகத்து 1945

இந்தப் புதினத்தின் மூலத் தலைப்பு அனிமல் ஃபார்ம்: எ ஃபேரி ஸ்டோரி (Animal Farm: A Fairy Story) என்பதாகும். ஆனால் 1946 ஆம் ஆண்டில் இதை வெளியிட்ட அமெரிக்கப் பதிப்பாளர்கள் இதில் எ ஃபேரி ஸ்டோரி என்பதை நீக்கிவிட்டனர். இந்தப் புதினத்திற்கு இடப்பட்ட பிற மாற்றுத்தலைப்புகள் எ சாட்டையர் (A Satire) மற்றும் எ காண்டெம்பரரி சாட்டையர் (A Contemporary Satire) ஆகியவை ஆகும்.[2] ஆர்வெல் பிரெஞ்சு மொழி பெயர்ப்புக்கு எடுத்துரைத்த தலைப்பு சோவியத் சோசலிச விலங்குகள் ஒன்றியம் (Union des républiques socialistes animales) என்பதாகும்.[2]

டைம் நாளிதழ் இந்தப் புத்தகத்தைச் சிறந்த 100 ஆங்கில மொழிப் புதினங்களில் (1923 முதல் 2005 வரை)[3] ஒன்றாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது மேற்கத்திய உலகின் சிறந்த புத்தகங்கள் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் புதினம் புரட்சி அதன் தலைவர்களால் சோரம் போவதை விவரிக்கிறது. மேலும் ஏற்றத்தாழ்வற்ற ஒரு கனவுலகத்தின் உருவாக்கத்தை தீய எண்ணம், அலட்சியம், அறியாமை, பேராசை மற்றும் குறுகிய எண்ணம் ஆகியவை எப்படி அழிக்கின்றன என்பதையும் விவரிக்கிறது. புரட்சிப் பதையை தீயதாகச் சித்தரிக்காத இப்புதினம் அதன் ஊழல்வாதித் தலைவர்களே அதிலுள்ள குறைபாடு என்கிறது. அதே வேளை புரட்சிக்குப் பின் சுமூகமான மக்களாட்சி மாற்றம் ஏற்படவில்லையெனில் அறியாமையும் அலட்சியமும் பெரும் தீவிளைவுகளை உருவாக்கிவிடும் என்றும் சொல்கிறது.

கதைக் கரு

தொகு

மேனோர் பண்ணையின் முதுமையான படைப் பணித் தலைவர் பன்றி, பண்ணையில் உள்ள அனைத்து விலங்குகளையும் கூட்டத்திற்கு அழைக்கிறது. அக் கூட்டத்தில், மனிதர்களை அது ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிடுவதுடன், விலங்குகளுக்குப் புரட்சிகரமான பாடலையும் கற்றுக் கொடுக்கிறது.

மூன்று நாட்களுக்குப் பின் படைப்பணித் தலைவர் இறந்த பின் சுனோபால், நெப்போலியன் எனும் இரண்டு இளம் பன்றிகள், தலைமைப் பொறுப்பை ஏற்றன. படைப்பணித் தலைவரின் கனவை, தத்துவத்தை நனவாக்க முடிவு செய்தன. விலங்குகள் வெகுண்டெழுந்து, குடி போதையில் இருக்கும் பொறுப்பற்ற திரு. ஜோன்ஸை பண்ணையை விட்டே விரட்டிய பின், பண்ணைக்கு "அனிமல் ஃபார்ம்" (விலங்குப் பண்ணை) என மறு பெயரிட்டன.

கொட்டகையின் சுவர்களில் விலங்கினக் கொள்கைகளான ஏழு கட்டளைகள் எழுதப்பட்டன. அவற்றில் மிக முக்கியமானது "அனைத்து விலங்குகளும் சமம்" என்பதாகும். அனைத்து விலங்குகளும் வேலை செய்தன. ஆனால் அதில் அதிகம் பணியாற்றிய பாக்சர் என்னும் குதிரை மற்ற விலங்குகளை விட அதிக வேலை செய்து, 'நான் அதிக வேலை செய்வேன்" என்ற அடைமொழியைப் பெற்றது.

பண்ணை மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது, உணவு அதிகமாகக் கிடைத்தது. சுனோபால் விலங்குகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுத் தர முயற்சிசெய்தது. பன்றிகள் தம்மை தலைமைப் பொறுப்புக்கு உயர்த்திக் கொண்டு, தமது உடல் நலத்துக்காக ஒதுக்குவதாக வெளிப்பார்வைக்குக் கூறி சிறப்பு உணவுப் பொருட்களைத் தனியே எடுத்து வைத்தது. நெப்போலியன் பண்ணையிலுள்ள நாய்களிடமிருந்து நாய்க்குட்டிகளை தேர்ந்தெடுத்து அவற்றுக்குத் தனியே பயிற்சி அளித்து வந்தது. திரு.ர் ஜோன்ஸ் பண்ணையைத் திரும்பப் பெற முயற்சி செய்த போது, விலங்குகள் அவரை "மாட்டுக்கொட்டகைச் சண்டை"யில் (Battle of the Cowshed) தோற்கடித்தன. நெப்போலியனும் சுனோபாலும் தலைமைப் பதவிக்காகப் போட்டியிட்டன. சுனோபால் கூறிய காற்றாலை யோசனையை நெப்போலியன் எதிர்த்தது. ஸ்னோபால் காற்றாலை வைப்பதற்கு ஆதரவாகப் பேசிய போது, நெப்போலியன் தனது நாய்களைக் கொண்டு சுனோபால் துரத்தியடித்தது. சுனோபால் இல்லாத போது, நெப்போலியன் தன்னைத் தலைவரென அறிவித்துக் கொண்டு மாறுதல்களைச் செய்ய ஆரம்பித்தது. கூட்டங்கள் வைத்து கலந்தாலோசிக்காமல், அதற்குப்பதிலாகப் பன்றிகளின் குழு மட்டும் பண்ணையை நடத்தியது.

நெப்போலியன், சுக்வீலர் என்ற இளம் பன்றியின் உதவியுடன், காற்றாலைப் பற்றிய தனது யோசனையை சுனோபால் திருடி விட்டதாகப் புரளி கிளப்பியது. விலங்குள் காற்றாலையினால் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற வாக்குறுதியால் கடினமாக வேலை செய்தன. மிருகங்கள் ஒரு மிகக் கொடூரமான புயலுக்குப் பின், காற்றாலை அழிந்திருப்பதைக் கண்டன. சுற்றுவட்டார விவசாயிகள் உடைந்த பகுதியில் காற்றாலையின் சுவர்கள் மிகவும் மெலிந்து காணப்பட்டதாகக் கூறிய போதும், காற்றாலையின் அழிவிற்கு சுனோபாலே காரணம் என நெப்போலியனும் ஸ்குவீலரும் மற்ற மிருகங்களை நம்ப வைத்தன. இவ்வாறு ஸ்னோபாலை பலிகடாவாக்கிய பின், நெப்போலியன் பண்ணையை ஆக்கிரமித்து, சுனோபாலின் கூட்டாளிகள் அனைவரையும் குற்றவாளிகளாக்கி கொல்ல ஆரம்பித்தது. இதற்கிடையே, பாக்சர் அடுத்த அடைமொழியாக, "நெப்போலியன் எப்போதுமே சரியானவர்" என்ற கூற்றை ஏற்றது.

நெப்போலியனது அதிகார அத்துமீறல் பயன்பாட்டா விலங்குகள்மி துன்பப்பட்டன; பன்றிகள் தம் வசதிக்காகப் பல்வேறு கட்டுப்பாடுகளை மற்ற விலங்குகளின் மேல் திணித்தன. பன்றிகள் சுனோபாலைத் தீயவனாகச் சித்தரித்தும், நெப்போலியனை புகழ்ந்தும் வரலாற்றை மாற்றியமைத்தன. சுக்வீலர் நெப்போலியன் கொண்டு வந்த ஒவ்வொரு மாற்றத்தையும் நியாயப்படுத்தியது. இதில் பன்றிகளால் மாற்றியமைக்கப்பட்ட விலங்கினத்தின் ஏழு கட்டளைகளும் அடங்கும். விவசாயியின் விஸ்கியை கண்டெடுத்த போது, பன்றிகள் "மிருகங்கள் சாராயம் குடிக்கக் கூடாது" என்ற வாசகத்தை மிருகங்கள் அதிகமாகச் சாராயம் குடிக்கக் கூடாது" என மாற்றியமைத்தன. மிருகப் பண்ணையின் கனவு நனவாகி விட்டதாகக் கூறி நெப்போலியன் புரட்சிகரப் பாடல் ("பீஸ்ட் ஆஃப் இங்கிலாந்து") இனி ஏற்றதல்ல எனத் தடை செய்தது. அதற்குப் பதிலாக மனிதர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றிய நெப்போலியனைப் புகழ்ந்து பாடும் கீதம் இயற்றப்பட்டது. மிருகங்கள், குளிர், பட்டினி, அதிக வேலையினால் சிரமப்பட்ட போதும், திருவாளர் ஜோன்ஸின் ஆட்சிக் காலத்தை விடத் தற்போதைய நிலை மேம்பட்டிருப்பதாகத் தம்மைத் தாமே சமாதானம் செய்து கொண்டன.

அருகில் இருந்த விவசாயிகளுள் ஒருவரான ஃபிரட்ரிக்கு, கள்ளப் பணத்தைக் கொடுத்துப் பழைய மரங்களை நெப்போலியனிடம் ஏமாற்றி வாங்கிய பின், பண்ணையைத் தாக்க முயன்றார். காற்றாலையை வெடித் தூள் கொண்டு அழிக்கவும் முயற்சி செய்தார். பாக்சர் உட்பட பல்வேறு மிருகங்கள் இந்தச் சண்டையில் படுகாயமடைந்தன. அதிக இழப்பிற்குப் பின் விலங்குகள் இந்தச் சண்டையில் வெற்றி அடைந்தன. பாக்சர் மென்மேலும் கடினமாக உழைத்தது, ஒருநாள் காற்றாலையில் வேலை செய்யும் போது துவண்டு விழுந்தது. நெப்போலியன் பாக்சரை மிருக வைத்தியரிடம் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்ப ஊர்தி ஒன்றை வரவழைத்தது. "பன்றிகளை போலவே நன்றாக படிக்கத் தெரிந்த"[4] பெஞ்சமின் என்ற கழுதை, ஊர்தியில் "ஆல்ஃபிரட் சிம்மன்ட், குதிரை இறைச்சி, மிருகப் பசை தயாரிக்குமிடம்", என எழுதியிருப்பதைப் பார்த்துப் பாக்சரை காப்பாற்ற முயற்சி செய்தது; ஆனால் மிருகங்களின் முயற்சி பலனளிக்கவில்லை. ஸ்குவீலர் அந்த ஊர்தியை மருத்துவமனை வாங்கி விட்டதாகவும், முன்பு இந்த ஊர்தியை வைத்திருந்தவர் எழுதிய வாசகங்களை இன்னும் மாற்றவில்லை என்றும் கூறியது. மேலும் திறன் பெற்ற மருத்துவர்கள் முயற்சி செய்தும் பாக்சர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தது. பாக்சர் இறந்த சில மணி நேரங்களிலேயே பன்றிகள் மேலும் விஸ்கியை வாங்கியதாகச் செய்தி வெளி வந்தது.

சில வருடங்களில் பன்றிகள் உடைகள் உடுத்தி, கையில் சாட்டைகள் ஏந்தி நேராக நடக்க ஆரம்பித்தன. ஏழு கட்டளைகள் குறுகி ஒரே வாசகமாக மாறியது. "அனைத்து மிருகங்களுமே சமம் ஆனால் சில மற்றவையை விட அதிக சமம்" . ஒருநாள் நெப்போலியன், பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இரவு விருந்தளித்தது. கலந்து கொண்டவர்கள் நெப்போலியனை அந்நாட்டிலேயே குறைந்த உணவு பெற்று அதிகமாய் உழைக்கும் மிருகங்களைக் கொண்ட பண்ணையைக் கொண்டவர் எனப் புகழ்ந்தனர். இச்சமயம் நெப்போலியன் மனிதர்களுடனான கூட்டை இரு சமுதாய உழைப்பு வர்க்கத்தினரின் எதிர்ப்புக்கிடையே அறிவித்தது. மேலும் புரட்சிக் காலத்தில் ஏற்பட்ட கலாசாரம் மற்றும் வழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவந்து பண்ணையின் பெயரையே "மேனோர் பண்ணை" என மீண்டும் மாற்றி அமைத்தது.

மிருகங்கள், பன்றிகளின் முகங்கள் மாறுவதை மற்றவைகளிடமிருந்து கேட்டும் பார்த்தும் உணர்ந்தன. ஒருமுறை நெப்போலியனும் திருவாளர் பில்கிங்டனும் போக்கர் விளையாடிக்கொண்டிருக்கும் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டன. அப்போது அதைப் பார்த்துக்கொண்டிருந்த மற்ற மிருகங்கள் பன்றிகளின் முகம் மனித முகத்தைப் போலவே இருப்பதாக உணர்ந்தன.

விலங்கினக் கொள்கை

தொகு

இப்புதினத்தில் வரும் விலங்கினக்கொள்கை சோவியத் ஒன்றியத்தின் பிரதி பிம்பமாக, குறிப்பாக 1910 முதல் 1940 வரையான கால கட்டத்தில் ரஷ்ய புரட்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் சிந்தனை மாற்றங்களைச் சித்தரிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. கதையின் படி மிகவும் கவுரவமான பன்றியான முதுமையான படைப் பணித் தலைவர் பன்றி இக்கருத்தைக் கண்டுபிடிக்கின்றது. மற்ற பன்றிகளாகிய ஸ்னோபால், நெப்போலியன் மற்றும் ஸ்குவீலர் மூதறிஞரின் கருத்துக்களை தத்துவங்களாக மாற்றி விலங்கினக் கொள்கைகளை ஏற்படுத்துகின்றன. இதைத் தொடர்ந்து நெப்போலியன் மற்றும் ஸ்குவீலர் மனிதர்களைப்போன்றே நடக்க ஆரம்பிக்கின்றன (அதாவது மது குடிப்பது, படுக்கைகளில் உறங்குவது, வியாபாரம் செய்வது போன்றவை). ஸ்குவீலர் அதன் மனித தகவமைப்பிற்கு ஏற்ப ஏழு கட்டளைகளை மாற்றி அமைக்கும் பணியில் அமர்த்தப்படுகின்றது. இது சோவியத் அரசு பொதுவுடைமைக் கொள்கைகளை, முதலாளித்துவ கொள்கைகளை போல் மாற்றியமைத்ததை சுட்டுகிறது.

இந்த விலங்குப்பண்ணையில் ஒழுங்குமுறைகளை கடைபிடிக்க ஏழு கட்டளைகள் விதிகளாக உருவாக்கப்பட்டன. இந்த ஏழு கட்டளைகளும் விலங்குகளை ஒருங்கிணைத்து மனிதர்களிடமிருந்தும் அவர்தம் தீய பழக்கங்களிலிருந்தும் விலகி இருக்க வடிவமைக்கப்பட்டது. எல்லா மிருகங்களாலும் அனைத்து கட்டளைகளையும் நினைவில் வைத்திருப்பது கடினமாதலால் இதன் சாரம் ஒரே வாசகமாக்கப்பட்டு "நான்கு கால்கள் நல்லவை, இரண்டு கால்கள் தீயவை" என்பது உருவாக்கப்பட்டது. செம்மறி ஆடுகளால் இந்த வாசகம் தொடர்ந்து முழக்கமிடப்பட்டு பன்றிகளின் மற்ற பொய்களிலிருந்து விலங்குகள் திசை திருப்பப்பட்டன. அந்த ஏழு அடிப்படை கட்டளைகளாவன:

  1. இரு கால்களில் நடப்பவை எதிரி
  2. நான்கு கால்கள் கொண்டவை மற்றும் பறப்பன நம் நண்பர்கள்.
  3. எந்த விலங்கும் ஆடை அணியக்கூடாது.
  4. எந்த விலங்கும் படுக்கையில் உறங்கக்கூடாது.
  5. எந்த விலங்கும் மது அருந்தக்கூடாது.
  6. எந்த விலங்கும் மற்ற விலங்குகளைக் கொல்லக்கூடாது.
  7. எல்லா விலங்குகளும் சமம்.

பிறகு நெப்போலியனும் மற்ற பன்றிகளும் அதிகார மயக்கத்தால் ஊழல் புரிய ஆரம்பித்தன. அவர்களின் புகழைத் தக்க வைத்துக்கொள்ளவும் விதிகளை மதிப்பதாக நம்பவைக்கவும் ஸ்குவீலர் விதிகளில் மாற்றங்களை ரகசியமாகச் சேர்த்து எழுதி வைத்தது. உதாரணமாக, எந்த விலங்கும் மது அருந்தக்கூடாது என்பதை அதிகமாக அருந்தக்கூடாது என்றும் எந்த விலங்கும் படுக்கையில் உறங்கக்கூடாது என்பதை விரிப்பின் மேல் உறங்கக்கூடாது என்றும் மாற்றி எழுதியது. இறுதியாக இந்த விதிகள் "அனைத்து மிருகங்களுமே சமம் ஆனால் சில மற்றவையை விட மதிப்பு மிகுந்தவை” என்றும் "நான்கு கால்கள் நல்லவை ஆனால் இரண்டு கால்கள் அவற்றை விடச் சிறந்தவை” எனவும் மாற்றி எழுதப்பட்டன.

கதை மாந்தர்

தொகு

இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் அனைத்தும் பொதுவுடைமைக் கொள்கைகள், எதேச்சாதிகாரம் மற்றும் பொதுவான மனித குணம் ஆகியவற்றை பகடி செய்யும் வண்ணம் அமைக்கப் பெற்றுள்ளன.

பன்றிகள்

தொகு
மேஜர் கிழவன்
இக்கதையில் மிருகங்களுக்கு உத்வேகமளித்து புரட்சிக்கு வித்திடும் கதாபாத்திரமாக இந்தப் பன்றி வருகின்றது. கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரை நினைவு படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இது லட்சிய நோக்கினைப் பேசுகையில் (மனிதர்களைத் தூக்கிவீசி விலங்குகளின் ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கலாம் என பேசுவதாக வரும் இடம்) இப்பாத்திரம் மார்க்சையும், இதன் மண்டை ஓடு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுவதாகக் கூறப்படும் இடத்தில் லெனினை நினைவுபடுத்துகிறது.
நெப்போலியன்
இது பண்ணையில் உள்ள ஒரே பெர்க்சயர் வகைப் பன்றி. மிகப்பெரிய உக்கிரமான உருக் கொண்டது. அதிகம் பேசாது, ஆனால் நினைத்ததை சாதிக்கும் குணம் கொண்டது.[5] நெப்போலியன் அனிமல் ஃபார்மில் தீயவனாகவும் அடக்குமுறையாளனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது ஜோசப் ஸ்டாலினை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நெப்போலியன் ஜெஸ்ஸி மற்றும் புளூ பெல் ஆகிய இரு நாய் குட்டிகளையும் அவற்றின் பெற்றோர்களிடமிருந்து பெற்று வந்து தனது அதிகாரத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவேற்றுகிறது. பின்பு அந்த நாய்க்குட்டிகளை வெளிப்படையாக ரகசிய காவல் நாய்களாகவும் பதவியில் அமர்த்துகிறது. ஸ்னோபாலை பண்ணையை விட்டு வெளியே துரத்தியதற்குப் பின் நெப்போலியன் ஸ்குவீலரின் உதவி கொண்டு தவறான கருத்துக்களைப் பரப்பி மற்றும் தன் நாய்களைக்கொண்டு அடக்குமுறையைக் கையாண்டு முழு அதிகாரத்தையும் எடுத்துக்கொள்கிறது. காலவாக்கில் இது கட்டளைகளையும் தனக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்துக்கொள்கிறது. கதையின் பிற்பகுதியில் நெப்போலியனும் அதன் துணை பன்றிகளும் தான் எதிர்த்து புரட்சி செய்த மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளவும் நிமிர்ந்து இரு கால்களில் நடக்கவும் ஆரம்பித்தன.[6]
ஸ்னோபால்
ஜோன்சை தூக்கி வீசிய பின் பண்ணையின் முதல் தலைவரான ஸ்னோபால் நெப்போலியனின் எதிரி. இந்தக் கதாபாத்திரம் லியோன் டிராட்ஸ்கியை நினைவு படுத்துகிறது. லெனினது சில குணங்களும் இதற்கு உள்ளன.. ஸ்னோபால் முதல் அறுவடையை வெற்றிகரமாக நடத்தி எல்லா விலங்குகளின் நம்பிக்கையையும் சம்பாதிக்கின்றது. ஆனால் பிறகு நெப்போலியனால் பண்ணையிலிருந்து வெளியேற்றப்படுகின்றது. ஸ்னோபால் பண்ணைக்காக உண்மையாக உழைக்கின்றது. மேலும் சமதர்ம உலகம் என்னும் இலட்சியவாத சமுதாயத்தை உருவாக்க முனைகின்றது. ஆனால் நெப்போலியனோ ஸ்னோபால் மேல் மோசடிக் குற்றச்சாட்டையும் மற்றும் விலங்குகளின் வளர்ச்சிக்கான முயற்சிகளை முறியடிப்பதான குற்றச்சாட்டுகளையும் சுமத்தி தன் நாய்களின் துணை கொண்டு பண்ணையை விட்டே வெளியே துரத்துகின்றது.
ஸ்குவீலர்
இந்த சிறிய பன்றி நெப்போலியனின் வலது கை போலவும் மற்றும் அதன் கொள்கை பரப்புரைச் செயலாளராகவும் வருகின்றது. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் மோலடோவின் நிலையை ஒத்தது இதன் நிலை. ஸ்குவீலர் தன் வார்த்தை ஜாலங்களால் நெப்போலியனின் செயல்களை நியாயப்படுத்தவும் மற்ற மிருகங்கள் அதை ஏற்கவும் செய்கின்றது. ஸ்குவீலர் தன் வாதத்திறமைக்கொண்டு மற்ற விலங்குகளை குழப்பி அனுகூலம் தேட முற்படும். உதாரணமாக மற்ற பிரச்சினைகள் முன்வரும்போதெல்லாம் பண்ணையின் முன்னாள் உரிமையாளர் ஜோன்ஸ் எப்போதும் திரும்ப வந்து விடலாம் என பயமுறுத்தி அந்த பிரச்சினைகள் மீதான விவாதத்தை தடுத்து விடும். பன்றிகளின் ஆடம்பர வாழ்க்கை முறை அவை ஒழுங்காக செயல்பட மிகவும் தேவை எனக் கூறி அவற்றின் வாழ்க்கை முறைக்கு நியாயம் கற்பிக்கும். ஸ்குவீலர் விலங்குகளின் வாழ்க்கைத்தரம் உயர்வதாக புள்ளிவிவரங்களைக் கொண்டு நம்ப வைத்தது. பெரும்பாலான விலங்குகளுக்கு புரட்சிக்கு முந்தைய வாழ்க்கையைப்பற்றி வெகுசிறிதே ஞாபகம் இருந்ததனால் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டன. இப்பன்றியே பின்னிரு கால்களால் நிமிர்ந்து நடந்த முதல் பன்றியாகும்.
மினிமஸ்
"பீஸ்ட் ஆஃப் இங்கிலாந்து" பண் தடை செய்யப்பட்ட பின் விலங்குப் பண்ணை யின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தேசிய கீதங்களை இயற்றிய பன்றிக் கவி.
பன்றிக்குட்டிகள்
இவை நெப்போலியனின் குழந்தைகளாக கருதப்படுகின்றது (ஆனால் இப்புதினத்தில் அவ்வாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை). மேலும் விலங்குகளில் சமமில்லாத உயர் சாதியாகக் கருதப்பட்ட முதல் தலைமுறையைச் சார்ந்தவையாகும்.
இளம் பன்றிகள்
நெப்போலியன் அதிகாரத்தைக் கைப்பற்றியதைக் குறைகூறும் நான்கு இளம்பன்றிகள். கைதுக்கு எதிராகப் புரட்சி செய்து பிறகு அடக்கப்பட்டு மரண தண்டனை பெற்ற பன்றிகள் ஆகும்.
பிங்க் ஐ (Pinkeye)
இக்கதையில் இப்பன்றி ஒரே ஒரு இடத்தில் மட்டும் குறிப்பிடப்படுகின்றது. நெப்போலியனை கொல்ல சதித் திட்டம் இருப்பதாக வதந்தி கிளம்பிய போது அதன் உணவில் நச்சு கலந்துள்ளதா எனப் பரிசோதிக்கும் மிருகமாக வருகின்றது.

மனிதர்கள்

தொகு
திரு. ஜோன்ஸ்
இவர் பண்ணையின் முன்னாள் முதலாளியாவார். இவருக்கு மிகுந்த மது அருந்தும் பழக்கம் இருந்தது. அவ்வாறு குடித்திருக்கும் நிலையில் விலங்குகளுக்கு உணவளிக்கவோ அவற்றை கவனிக்கவோ தவறியதால் அனைத்து விலங்குகளும் புரட்சியில் ஈடுபடுகின்றன. ஜோன்ஸ் மற்றும் அவர் உதவியாளர்கள் பண்ணையைத் திரும்பப் பெற தொடுத்த மாட்டுத் தொழுவச் சண்டையில் தோற்கடிக்கப்பட்டார்.
ஃபிரடரிக் (Frederick)
இவர் அருகே இருந்த பின்ச்ஃபீல்டு பண்ணையின் முதலாளி. இவர் விலங்குகளிடமிருந்து மரக் கட்டைகளை கள்ளநொட்டுகளைக் கொடுத்து வாங்குகிறார். இவரே பிறகு அவற்றின் மீது பண்ணையை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் தாக்குதல் நடத்தி காற்றாலையை அழிக்கின்றார். ஆனால் முடிவில் தோல்வியைத் தழுவுகின்றார். அவரைப் பற்றிய குறிப்பில் அவர் தன் விலங்குகளை கொடுமைப்படுத்துவதாக விவரிக்கப்படுகின்றது. உதாரணமாக அவர் தன் நாயை அடுப்பிற்குள் தூக்கி எறிந்தது போன்ற செயல்கள் இதனை விளக்குகிறது. பின்ச்ஃபீல்டு அருகே இருந்த பில்கிங்க்டன் ஃபாக்ச்வுட் பண்ணையை விட அளவில் சிறியதாய் இருந்தது ஆனால் சிறந்து நிர்வகிக்கப்பட்டிருந்தது. ஃபிரடரிக் சிறு காலத்திற்கு மரக்கட்டைகளை வாங்குவதன் மூலம் நெப்போலியனுடன் கூட்டணி ஏற்படுத்துவது போல நடிக்கிறார். ஆனால் பின் அக்கூட்டணிக்கு துரோகமிழைத்து ஏமாற்றி விலங்குப் பண்ணையை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் அவற்றின் மீது போர்த் தொடுக்கின்றார்.
பில்கிங்க்டன்
இவர் அருகாமையில் இருந்த பராமரிப்பற்ற ஃபாக்ச்வுட் பண்ணையின் முதலாளியாக, எதையும் எளிதில் எடுத்துக் கொள்ளக் கூடியவராக சித்தரிக்கப்பட்டவர். கதையின் பிற்பகுதியில் இவரும் நெப்போலியனும் சீட்டாட்டம் ஆடுகின்றனர். அதில் இருவரும் துருப்புச் சீட்டை எடுக்க முயன்று பலமான வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். ஃபாக்ச்வுட் பின்ச்ஃபீல்டை விட மிகப் பெரியதாக இருந்தும் சரியான பராமரிப்பு அற்ற பண்ணையாக சித்தரிக்கப்படுகின்றது.
திரு. விம்பர்
இவர் நெப்போலியனால் மனித சமூகத்தில் கொள்கை பரப்புச் செயலராக இருக்க பணியிலமர்த்தப்பட்டார். இவர் விலங்குகள் தானாகவே உற்பத்தி செய்ய இயலாதவைகளை மனித சமுதாயத்திலிருந்து பெற உதவுகிறார். முதலில் அத்தியாவசிய தேவையான காற்றாலை உறுப்புகளை தானாகவே உற்பத்தி செய்ய இயலாத நிலையில் வாங்க உதவுகிறார். பிறகு இவரைக் கொண்டே பன்றிகள் தங்கள் ஆடம்பரத் தேவைகளான மது பானங்களையும் பெறுகின்றன.

குதிரைகள்

தொகு
பாக்சர்
பாக்சர் விலங்குப் பண்ணையின் நம்பிக்கைக்குப் பாத்திரமான, இரக்க குணம் மிக்க, அர்ப்பணிப்புத்தன்மை மிக்க மதிப்புமிக்க குதிரையாகும். அப்பண்ணையிலேயே மிகப் பலமான விலங்காக இருந்தாலும் எளிதில் அதனை வசப்படுத்திவிடலாம் என்பதால், புரட்சி பிறழ்ந்த பின்னரும் "நான் நன்றாக உழைப்பேன்" "நெப்போலியன் செயல்கள் அனைத்துமே சரி" போன்ற வாசகங்களை சொல்லித் திரிந்தது.
க்ளோவர்
க்ளோவர் பாக்சரை கவனித்துக் கொள்ளும் துணைப் பெண் குதிரையாகும். இக்குதிரை மற்ற குதிரைகள் மற்றும் விலங்குகளுக்கு ஒரு தலைவி போல இருந்தது.
மோல்லி (Mollie)
மோல்லி ஒரு தன்னார்வம் கொண்ட தற்பெருமை கொள்ளும் வெண் குதிரையாகும். இது தன் பிடரியில் நாடாக்கள் அணிவதையும் சர்க்கரைக் கட்டிகளை உண்ணவும் மனிதர்களால் அதிக கவனம் செலுத்தப்படுவதையும் விரும்பும் குதிரையாகும். வந்த சில நாட்களிலேயே இது வேறு பண்ணைக்கு அனுப்பப்படுகிறது. பிறகு கதையில் ஒரே ஒரு இடத்தில் இது குறிப்பிடப்படுகின்றது.
பெஞ்சமின்
பெஞ்சமின் விலங்குப் பண்ணையில் வெகு காலம் வாழ்ந்து வரும், படிக்கத் தெரிந்த, எளிதில் கோபம் கொள்ளும் கழுதையாகும்.[7] இது பாக்சரின் விசுவாசமுள்ள நண்பன். இது பன்றிகளின் ஊழலைப் பற்றி மற்ற விலங்குகளை எச்சரிக்கவில்லை, மாறாக அது தானாகவே வெளிவரும் என்பதை இரகசியமாக அறிந்திருந்தது. பெஞ்சமினிடம் புரட்சிக்கு முந்தைய காலம் மகிழ்வானதா அல்லது புரட்சிக்குப் பிந்தைய காலம் மகிழ்வானதா என்று கேட்டதற்கு அது, "கழுதைகள் வெகு காலம் வாழும். உங்களில் எவரும் இறந்த கழுதையைக் கண்டதில்லை", என்று கூறியது. அது எப்போதுமே சோர்வு மற்றும் சந்தேக குணத்துடனேயே இருந்தது. "வாழ்க்கை எப்போதும் போல நகர்ந்து கொண்டே இருக்கும் - மோசமாக" என்பது அது அடிக்கடி கூறும் வாசகம் ஆகும். ஆனாலும் அப்பண்ணையில் வசித்து வந்த அறிவார்ந்த விலங்குகளில் ஒன்றாக இருந்ததோடு பன்றிக்கு இணையாகப் படிக்கத் தெரிந்த விலங்குமாக இது திகழ்ந்தது.[7]

மற்ற விலங்குகள்

தொகு
முரியேல் (Muriel)
எல்லோரிடமும் அன்புடன் இருக்கும் பகுத்தறிவுள்ள ஆடு ஆகும். இப்பெண் ஆடு பெஞ்சமின் மற்றும் ஸ்னோபால் போன்றே படிக்கத் தெரிந்த விலங்குகளில் ஒன்றாகும் (எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தது). மேலும் ஏழு கட்டளைகளும் தொடர்ந்து மாற்றப்பட்டதை க்ளோவர் கண்டுபிடிக்க உதவிய விலங்காகும்.
நாய்க்குட்டிகள்
ஜெல்லி மற்றும் ப்ளுபெல்லின் குழந்தைகளாகிய இவை பிறந்த தருணத்திலேயே நெப்போலியனால் பெற்றோரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டு அதனது பாதுகாவலர்களாக வளர்க்கப்பட்டது. இந்நாய்களை கொடூர குணத்துடன் நெப்போலியன் வளர்த்தது. இதன் உதவி கொண்டு நான்கு இளம் பன்றிகள் ஓர் செம்மறி ஆடு மற்றும் பல கோழிகள் கடித்துக் குதறிக் கொல்லப்பட்டன. இவை பாக்சரையும் தாக்க முற்படுகின்றன. அப்போது பாக்சர் ஒரு குட்டியை தன் கால் குளம்பால் தடுத்துச் சிறைப்படுத்துகிறது. நாய்க்குட்டி தன்னை மன்னிக்கும்படி கெஞ்சியது. பின்னர் நெப்போலியனின் ஆணையால் அதனை விடுவிக்கின்றது.
மோசஸ் காகம்
இது ஒரு வயதான பறவை. அரிதாக விலங்குப் பண்ணைக்கு செல்லும். அவ்வாறு செல்லும் போது வானத்தில் சர்க்கரைக் கட்டி மலை இருப்பதாகவும், சிறப்பாக உழைக்கும் விலங்குகள் இறந்த பின் அங்கே செல்லும் என்பதுமான கதைகளை அது கூறும்.[8] தான் உழைக்காமல் மற்றோருக்கு சர்க்கரைக் கட்டி மலையைப் பற்றியும் அதைப் சென்றடையும் வழி பற்றியும் இது சொல்லித் திரியும். இது தன்னை மற்ற விலங்குகளுடன் இணையாக நினைக்காததால் எல்லா விலங்குகளும் சமமானவை என்ற நிலை புரட்சிக்குப் பின் ஏற்பட்ட போது பண்ணையை விட்டு வெளியேறியது. ஆனாலும் கதையின் பிற்பகுதியில் இது திரும்பப் பண்ணைக்கு வந்து சர்க்கரைக் கட்டி மலை இருப்பதை நியாயப்படுத்திக் கூறியது. மற்ற விலங்குகள் பன்றிகள் மோசஸிடம் நடந்து கொள்ளும் முறையில் குழப்பம் கொண்டன. ஏனென்றால் பன்றிகள் மோசஸ் கூறுவதை ஏற்க இயலாது எனக் கூறினாலும் அதனைப் பண்ணைக்குள் இருக்கச் சம்மதித்திருந்தன. மற்ற விலங்குகள் பூவுலக வாழ்க்கைக்குப் பின் சர்க்கரைக் கட்டி மலை இருப்பதாக நினைத்தால், தங்களுக்கு எதிரான புரட்சியில் ஈடுபடாமல் இருக்கும் என்ற எண்ணத்தில் பன்றிகள் அனுமதித்தன.
செம்மறி ஆடு
இவைகள் மிகச் சிறிதளவே நடப்பவற்றை புரிந்து கொண்டாலும் கண்மூடித்தனமாக நெப்போலியனின் கொள்கைகளை ஆதரித்தன. இக்கதையில் இவை திரும்பத்திரும்ப, "நான்கு கால்கள் நல்லவை, இரண்டு கால்கள் தீயவை" என்பதையே கூறித் திரிகின்றன. கதையின் முடிவில் பன்றிகள் இருகால்களில் நடக்க ஆரம்பித்தவுடன் ஏழு கட்டளைகளில் ஒன்றை மாற்றி "நான்கு கால்கள் நல்லவை, ஆனால் இருகால்கள் மேலானவை" என்று முழக்கமிட ஆரம்பித்தன. பன்றிகள் கூறும் எதையும் நம்பத்தகுந்த வகையில் திரும்பக் கூறும் தன்மை கொண்டவையாய் இவை இருந்தன.
கோழிகள்
அதிகாரத்திலிருப்பவர்கள் (பன்றிகள்), இவற்றின் முட்டைகளை மனிதர்களுக்கு விற்க முனைந்ததால், தானே அவற்றை அழித்து விடுகின்றன. நெப்போலியன் பிறகு அவைகளை பட்டினி போட்டும், பயமுறுத்தியும் பன்றிகளுக்கு வேண்டியவற்றை இவற்றிடமிருந்து பெறுகின்றது.
மாடுகள்
பன்றிகள் இவைகளிடமிருந்து பால் கறக்க கற்றுக் கொண்டு பாலைத் திருடுகின்றன. மேலும் மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஆடம்பரமாக பன்றிகள் அவற்றின் தின உணவில் பாலைக் கலந்து உண்டன.
பூனை

ஒருபோதும் வேலை செய்து பார்த்திராத இந்தப் பூனை நெடுங்காலத்திற்குத் தலை தட்டுப்படாமலேயே இருக்கிறது. ஆனாலும் “அதன் மிகச் சிறந்த எண்ணங்களைக் கொண்டு பார்க்கும்போது அது கூறுவதை நம்பாமல் இருக்க முடியாது” என்று கூறி இது எளிதாக மன்னிப்பட்டு விடுகிறது. பண்ணையின் அரசியலில் இதற்கு எந்த ஆர்வமும் இல்லை. ”இரு தரப்புக்கும் வாக்கு” பதிவு செய்திருந்த நிகழ்வு தான் இப்பூனை கடைசியாய் பங்குபெற்றதாய் அறியப்படும் நிகழ்வாய் இருக்கிறது.

படைப்பும் வெளியீடும்

தொகு

எசுப்பானிய உள்நாட்டுப் போரில் ஆர்வெல் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைத் தொடர்ந்து 1943-1944 இல் அனிமல் ஃபார்மின் முதல் பிரதியை எழுதினார். ”ஜனநாயக நாடுகளில் அறிவொளி பெற்ற மக்களின் கருத்தினை சர்வாதிபத்திய பரப்புரைகள் எவ்வளவு எளிதாகக் கட்டுப்படுத்த முடியும்” என்பதை ஸ்பெயினில் நிகழ்ந்த கம்யூனிஸ்டுகளின் களைபிடுங்கல் நடவடிக்கைகளிலிருந்து தான் தப்ப நேர்ந்த போது தான் கற்றுக் கொண்டதாக அனிமல் ஃபார்ம் 1947 உக்ரைனிய பதிப்பின் முகவுரையில் அவர் விவரிக்கிறார். உண்மையான சோசலிச லட்சியங்களின் ஸ்டாலினியப் பிறழ்வாகத் தான் கருதியவற்றை அம்பலப்படுத்த வேண்டும், கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்கிற உந்துதலை ஜார்ஜ் ஆர்வெலுக்கு இது அளித்தது.[9] அதே முகவுரையில், ஒரு விலங்குப் பண்ணையைப் புதினத்தின் கதைக்களமாகத் தேர்வு செய்தது குறித்து ஆர்வெல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, ஒரு குறுகிய தெருவில் ஒரு பெரிய குதிரைவண்டி செல்வதைப் பார்த்தேன். அது பக்கவாட்டில் திரும்ப முயன்ற போதெல்லாம் சாட்டையால் அடிக்கப்பட்டது. பணக்காரர்கள் பாட்டாளி வர்க்கத்தைச் சுரண்டுவதைப் போல மனிதர்கள் விலங்குகளைச் சுரண்டுகிறார்கள. இத்தகைய விலங்குகளுக்குத் தங்களது வலிமை குறித்த விழிப்புணர்வு தோன்றி மனிதர்களுக்கு அவற்றின் மீது அதிகாரம் செலுத்த முடியாது போனால் என்னவாகும் என்ற சிந்தனை அப்போது எனக்குத் தோன்றியது.

ஆர்வெல், அனிமல் ஃபார்ம் புதினத்தைப் பதிப்பிக்க முயன்ற போது பெரும் சிக்கல்களை எதிர்கொண்டார். நான்கு வெளியீட்டாளர்கள் மறுத்து விட்டனர். வழக்கமாய் தனது புத்தகங்களை வெளியிடும் கோலான்ஸ் உட்பட அநேக பெரிய புத்தக பிரசுரங்கள் சோவியத் விரோத இலக்கியம் போன்ற விடயங்களை அணுக விரும்புவதில்லை என்பதை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஆர்வெல் தெளிவாய் தெரிந்து கொண்டார். கவிஞர் டி. எஸ். எலியட் இயக்குநராய் இருந்த ஃபேபர் அண்ட் ஃபேபர் புத்தக நிறுவனத்திற்கும் இவர் தனது கையெழுத்துப் பிரதியைச் சமர்ப்பித்திருந்தார். ஆனால் அந்நிறுவனமும் இதனை நிராகரித்து விட்டது. எலியட் ஆர்வெலுக்கு எழுதிய பதிலில் புதினத்தின் டிராட்ஸ்கிய நோக்கு மீது தங்களுக்கு சிறுதளவும் ஈர்ப்பில்லை எனவே வெளியிட இயலாதெனக் குறிப்பிட்டிருந்தார்.[10][11] ஒரு பதிப்பாளர் ஆரம்பத்தில் ஒப்புக் கொண்டாலும், பின் பிரித்தானிய தகவல் அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் செய்த எச்சரிக்கையினால் அதனை வெளியிட மறுத்து விட்டார்.[12][13] அவ்வாறு எச்சரித்த அதிகாரி ஒரு சோவியத் உளவாளி என்று பின்னாளில் தெரிய வந்தது.[14]

இறுதியில் செக்கர் அண்ட் வார்பர்க் பதிப்பகம், இதன் முதல் பதிப்பை 1945 ஆம் ஆண்டு வெளியிட்டது.

முக்கியத்துவம்

தொகு
 
புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ”ஊது குழலும் குதிரைக் குளம்பும்” கொடி, பொதுவுடைமைக் கட்சியின் ”சுத்தியல் அரிவாள்” கொடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

கிழக்கத்திய தொகுப்பு நாடுகளில் அனிமல் ஃபார்மும் ஆர்வெலில் மற்றொரு புதினமான நைன்டீன் எய்ட்டி-ஃபோர் இரண்டும், 1989 இல் கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் கம்யூனிசம் வீழும் வரை தடை செய்யப்பட்டிருந்தன. அவை கையெழுத்துப் பிரதிகளின் ரகசிய வலைப்பின்னல் மூலமாக மட்டுமே கிடைக்கத்தக்கதாய் இருந்தன.[15]

இந்தப் புதினத்தின் பேட்டில் ஆஃப் விண்ட்மில் (காற்றாலைச் சண்டை) அத்தியாயம் ”புதினத்தின் மையக்கருவின் சாரத்தை அடக்கியிருக்கும் முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று” என்று சன்ட் சிங் பால் குறிப்பிடுகிறார்.[16][17] இக்கற்பனைச் சண்டை மாபெரும் தேசப்பற்றுப் போரை, (இரண்டாம் உலகப் போர்)[18] குறிப்பாகச் சுடாலின்கிராட் சண்டையினையும் மாஸ்கோ சண்டையினையும் குறிப்பதாகப் பீட்டர் எட்கர்லி ஃபிர்கௌ மற்றும் பீட்டர் டேவிசன் ஆகியோர் கருதுகின்றனர்.[19] அவ்வாறே அனிமல் ஃபார்ம் புதினத்துக்கான பிரெஸ்ட்விக் ஹவுஸின் செயல்பாட்டுத் தொகுப்பும் இனம்காண்கிறது. ஆயினும் காற்றாலை சண்டைக்கான வினையூக்கி தெளிவின்றி இருப்பதாகக் குறிப்பிடுகிறது.[20] சண்டையின் போது, ஃபிரடெரிக் ஒரு துளையிட்டு அதில் வெடிபொருட்களை வைக்கிறார். அப்போது ”நெப்போலியன் தவிர்த்த அனைத்து மிருகங்களும்” ஓடி ஒளிகின்றன என்று உள்ளது. இந்த வாசகம் முதலில் “நெப்போலியன் உள்ளிட்ட அனைத்து மிருகங்களும்” என இருந்தது. ஆனால் ஜெர்மனிப் படைகள் சோவியத் ஒன்றித்தினுள் முன்னேறிய போது, ரஷ்யாவிலேயே தொடர்ந்து இருப்பது என்று ஜோசப் ஸ்டாலின் செய்த முடிவினை பிரதிபலிக்கும் விதமாக விதமாக ஆர்வெல் இதனை மாற்றிவிட்டார்.[21] கதையில் வரும் “மாட்டுத்தொழுவ சண்டை” என்பது 1918 ஆம் ஆண்டில்[19] சோவியத் ஒன்றியத்தின் மீதான நேச நாட்டுத் தாக்குதலையும் ரஷ்ய உள்நாட்டுப் போரில் வெள்ளை ரஷ்யர்கள் தோற்கடிக்கப்பட்டதையும் குறிக்கிறது.[18]

தழுவல்கள்

தொகு

அனிமல் ஃபார்ம் புதினம் இரண்டு முறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1954 இல் ஒரு அசைப்படமாகவும். 1999 இல் தொலைக்காட்சி நேரலைத் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இரண்டுமே புதினத்திலிருந்து வித்தியாசப்படுபவை. 1954 திரைப்படத்தில் நெப்போலியன் இரண்டாவதாக நடக்கும் ஒரு புரட்சியில் தூக்கியெறியப்படுகிறார். 1999 திரைப்படம் நெப்போலியனின் ஆட்சி, சோவியத் ஒன்றியத்தில் இறுதியில் நிகழ்ந்ததைப் போல, தானாகவே உருக்குலைந்து போவதாய் காட்டுகிறது. பல புனைவுப் படைப்புகள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் அனிமல் ஃபார்ம் மற்றும் அதன் கதை மாந்தர்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மொழிபெயர்ப்பு

தொகு

உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பதிப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "நான் ஏன் எழுதுகிறேன் (Why I Write)" (1936) (ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய கட்டுரைகள், கடிதங்கள், இதழியலின் தொகுப்பு 1 - An Age Like This 1945-1950 ப.23 (பெங்குவின்))
  2. 2.0 2.1 Davison 2000
  3. கிராஸ்மேன் 2005 (Grossman)
  4. ஆர்வெல், ஜார்ஜ் (1946). அனிமல் ஃபார்ம். லண்டன்: பெங்குவின் குரூப். ப. 21.
  5. ஆர்வெல், 1979, அத்தியாயம் II, ப.15
  6. Jean Quéval (1981). La ferme des animaux. Edition Gallimard. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2-07-037516-5. {{cite book}}: Unknown parameter |collection= ignored (help)
  7. 7.0 7.1 Orwell, George (1946). Animal Farm. New York: The New American Library. p. 40.
  8. http://www.sparknotes.com/lit/animalfarm
  9. ஆர்வெல் 1947
  10. ரிச்சர்ட் பரூக், "டி எஸ் எலியட் அனிமல் ஃபார்ம் பிரசுரிக்க நிராகரிப்பு", சண்டே டைம்ஸ் , 29 மார்ச் 2009.
  11. Eliot, Valery (6 January 1969). "T.S. Eliot and Animal Farm: Reasons for Rejection". Full text of the T.S. Eliot rejection letter (London: தி டைம்ஸ்). http://archive.timesonline.co.uk/tol/viewArticle.arc?articleId=ARCHIVE-The_Times-1969-01-06-09-004&pageId=ARCHIVE-The_Times-1969-01-06-09. பார்த்த நாள்: 2009-04-08. 
  12. Dag 2004
  13. ஆர்வெல் 1976 பக்கம் 25 La libertà di stampa
  14. "The whitewashing of Stalin". BBC News. 11 November 2008. http://news.bbc.co.uk/2/hi/uk_news/magazine/7719633.stm. 
  15. ஜெர்மன் விக்கிபீடியாவின் பதிப்பாசிரியர்
  16. சான் சிங் பால்(Sant Singh Bal), ஜார்ஜ் ஆர்வெல் (1981), 124.
  17. ஹெரால்ட் ப்ளூம், ஜார்ஜ் ஆர்வெல் (2007), 148.
  18. 18.0 18.1 பீட்டர் எட்கர்லி பிர்ச்சோ (Peter Edgerly Firchow), எச். ஜி. வெல்ஸ் முதல் ஐரிஸ் முர்டாக் வரை எழுதிய நாகரிக யுடோபியா கதைகள் (2008), 102.
  19. 19.0 19.1 பீட்டர் ஹாப்லி டேவிசன், ஜார்ஜ் ஆர்வெல் (1996), 161.
  20. ஜார்ஜ் ஆர்வெல், அனிமல் ஃபார்ம்
  21. ஜோசப் கான்ராட் மாறும் பால் கிஷ்னர், அண்டர் வெஸ்டர்ன் ஐஸ் (Under Western Eyes) (1996), 286.

மேலும் படிக்க

தொகு

புற இணைப்புகள்

தொகு