விலங்கு நலன்

மனிதர் அல்லாத விலங்குகளின் பாதுகாப்பு

விலங்கு நலன் (ஆங்கிலம்: animal welfare) என்பது மனிதரல்லா விலங்குகளின் (non-human animals) நலவாழ்வு குறித்த செயற்பாடு ஆகும். விலங்கு நலனின் முறையான தரநிலைகள் சூழல்களுக்கிடையே வேறுபடுகின்றன. எனினும் இவை பெரும்பாலும் விலங்கு நலக் குழுக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்களால் போன்றோரால் விவாதிக்கப்படுகின்றன.[1][2] விலங்கு நல அறிவியலானது விலங்குகளின் ஆயுட்காலம், நோய், நோயெதிர்ப்புத் தடுப்பு, நடத்தை, உடலியங்கியல், இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒரு அளவீடுகளாகப் பயன்படுத்தினாலும்[3] இவற்றில் எது சிறந்த விலங்கு நலனைக் குறிக்கிறது என்பது இன்னும் விவாதத்தில் உள்ளது.

Animal welfare
வெள்ளத்தில் சிக்கிய பிறந்து நான்கு வாரங்களேயான குட்டி நாய் ஒன்று காப்பாற்றப்பட்டு உணவளிக்கப்படுகிறது.

விலங்கு நலனுக்கான மதிப்பீடு பெரும்பாலும் மனிதரல்லா விலங்குகளும் உணர்திறன் கொண்டவை தான் என்ற கருத்தின் அடிப்படையில், அதிலும் குறிப்பாக விலங்குகள் மனிதப் பராமரிப்பில் இருக்கும் போது அவற்றின் நலனையும் இன்பதுன்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில், கொள்ளப்படுகிறது.[4] உணவுக்காக விலங்குகள் எவ்வாறு கொல்லப்படுகின்றன, அறிவியல் ஆராய்ச்சியில் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, செல்லப்பிராணிகளாகவும், உயிரியல் பூங்காக்களிலும், பண்ணைகளிலும், வட்டரங்குகளிலும் அவை எவ்வாறு வளர்க்கப்படுகின்றன, மனித நடவடிக்கைகள் காட்டு விலங்குகளின் நலனையும் வாழ்வையும் எவ்வாறு பாதிக்கின்றன உள்ளிட்ட அனைத்தும் இம்மதிப்பீட்டில் அடக்கம்.

விலங்கு நலன் பற்றிய கருத்துக்கு இரண்டு வகையான பார்வைகள் அல்லது விமர்சனங்கள் முற்றிலும் எதிர் நிலைகளிலிருந்து வைக்கப்படுகின்றன. ஒன்று, வரலாற்றில் சில சிந்தனையாளர்கள் நினைத்தது போல், மனிதர்களுக்கு விலங்குகளிடம் எந்தவிதமான கடமைகளும் இல்லை என்ற கருத்து. மற்றொன்று விலங்குகள் உடமைகளாகப் பார்க்கப்படக்கூடாது என்றும் விலங்குகள் மனிதர்களால் பயன்படுத்தப்படுவதென்பது எந்நிலையிலும் ஏற்புடையது அன்று என்றும் கூறும் விலங்குரிமை நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, சீரிய விலங்கு நலன் என்ற கருத்து விலங்குகள் மனிதர்களால் சுரண்டப்படும் நிலை தொடரவும் அது மென்மேலும் அதிகரிக்கவும் வழி வகுக்கிறது என்று சில விலங்குரிமை ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.[5][6] இதன் காரணமாகவே பல அறிஞர்கள் விலங்கு நலன் என்ற கருத்தையும் விலங்குரிமை என்ற கருத்தையும் இருவேறு எதிர் நிலைகளாகக் கருதுகின்றனர்.[7][page needed][8][9] வேறு சிலர் விலங்கு நல ஆதாயங்கள் எதுவாயினும் அவற்றை விலங்குரிமைக்கான முன்னேற்றப் படிகளாகக் கருதுகின்றனர்.

மனிதர்களிடத்திலும் கூட நனவின் (consciousness) வரையறையில் உள்ள தத்துவ சிக்கல்களுக்கு நடுவில் நவீன நரம்பியல் அறிவியலாளர்கள் மனிதரல்லா விலங்குகளிடம் நனவு என்பது உண்டு என்பதை ஒருமித்தமாக ஏற்கின்றனர்.[10][11] இருப்பினும், நனவு என்பது ஒரு மெய்யியல் கேள்வி என்றும் அது அறிவியல் ரீதியாக ஒருபோதும் தீர்க்கப்பட முடியாதது என்றும் சிலர் கருதுகின்றனர்.[12] குறிப்பிடத்தக்க வகையில் இந்தக் கேள்வியை அனுபவரீதியாகச் சோதிப்பதில் உள்ள சில சிக்கல்களைக் களையும் திறன் கொண்ட புதிய ஆய்வு ஒன்று நடந்தேறியுள்ளது. இந்த ஆய்வானது விலங்குகளின் நனவுசார் உணர்வுகளை நனவுசாரா உணர்விலிருந்து பிரித்தறியும் ஒரு தனித்துவமான வழியை வகுத்துள்ளது.[13] ரீசஸ் குரங்குகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நனவுசார்ந்து உணரப்படும் தூண்டுதல்களுக்கும் நனவுசாராது உணரப்படும் தூண்டுதல்களுக்கும் இடையில் முற்றிலும் எதிரான நடத்தை விளைவுகளை கணிக்கும் சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர். வியக்கத்தக்க வகையில், இக்கணிப்புகளை தெரியப்படுத்தப்பட்ட மனிதர்களுக்கு தெரியப்படுத்தப்படாத மனிதர்களுக்கும் இடையிலான ஆய்வில் வந்த விளைவுகளைப் போலவே அக்குரங்குகளின் நடத்தைகளும் துல்லியமாக இந்த நேரெதிர் விளைவுகளைக் அடிக்கோடிட்டுக் காட்டின.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Grandin, Temple (2013). "Animals are not things: A view on animal welfare based on neurological complexity" (PDF). Trans-Scripts 3: An Interdisciplinary Online Journal in Humanities And Social Sciences at UC Irvine. UC Irvine. Archived from the original (PDF) on 19 August 2014. பார்க்கப்பட்ட நாள் 20 December 2013.
  2. Hewson, C.J. (2003). "What is animal welfare? Common definitions and their practical consequences". The Canadian Veterinary Journal 44 (6): 496–99. பப்மெட்:12839246. 
  3. Broom, D. M. (1991). "Animal welfare: concepts and measurement". Journal of Animal Science 69 (10): 4167–75. doi:10.2527/1991.69104167x. பப்மெட்:1778832. https://archive.org/details/sim_journal-of-animal-science_1991-10_69_10/page/4167. 
  4. "Draft of the Universal Declaration on Animal Welfare" (PDF). media.animalmatter.org. Archived from the original (PDF) on 27 February 2012.
  5. Garner, R. (2005). Animal Ethics. Polity Press.
  6. Regan, T. (1983). The Case for Animal Rights. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520049048.
  7. Francione, G.L. (1996). Rain Without Thunder: The Ideology of the Animal Rights Movement. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56639-461-1.
  8. Francione, G. (1995). Animals, Property, and the Law. Temple University Press.
  9. "What is Animal Welfare and why is it important?". National Animal Interest Alliance. பார்க்கப்பட்ட நாள் 27 June 2014.
  10. "The Cambridge Declaration on Consciousness" (PDF). பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
  11. "Scientists Finally Conclude Nonhuman Animals Are Conscious Beings". பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
  12. "Do animals have consciousness?". 6 March 2015. பார்க்கப்பட்ட நாள் 26 May 2015.
  13. Ben-Haim, Moshe Shay; Monte, Olga Dal; Fagan, Nicholas A.; Dunham, Yarrow; Hassin, Ran R.; Chang, Steve W. C.; Santos, Laurie R. (2021-04-13). "Disentangling perceptual awareness from nonconscious processing in rhesus monkeys (Macaca mulatta)" (in en). Proceedings of the National Academy of Sciences 118 (15): e2017543118. doi:10.1073/pnas.2017543118. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:33785543. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கு_நலன்&oldid=4057955" இலிருந்து மீள்விக்கப்பட்டது