வி. கே. சசிகலா

இந்திய பெண் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி

வி. கே. சசிகலா (V. K. Sasikala, பிறப்பு: 18 ஆகத்து 1954) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.இவர் அதிமுகவின் முன்னாள் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்தார். முன்னாள் தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாகவும் மறைந்த எழுத்தாளரும் அரசியல்வாதியுமான ம. நடராசனின் மனைவியாகவும் இருந்தார். 2016இல் செயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் இவர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறிது காலம் அப்பதவியில் இருந்தார்.[5][6] இவரை "புரட்சித் தாய்" எனவும் "சின்னம்மா" எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். 2017ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடி பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார்.[7]

வி.கே.சசிகலா
அஇஅதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் [2]
பதவியில்
31 திசம்பர் 2016[1] – 12 செப்டம்பர் 2017[3]
முன்னையவர்ஜெ. ஜெயலலிதா
பின்னவர்எடப்பாடி க. பழனிசாமி[4]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஆகத்து 1954 (1954-08-18) (அகவை 70)
திருத்துறைப்பூண்டி
திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பிற அரசியல்
தொடர்புகள்
அஇஅதிமுக (2017 வரை).
துணைவர்(கள்)ம. நடராசன்
(இறப்பு. மார்ச்சு 20, 2018)
பிள்ளைகள்இல்லை
உறவினர்சசிகலா குடும்பம்
புனைப்பெயர்(s)புரட்சித்தாய், சின்னம்மா

சசிகலா நடராசன் என்று தொடக்கத்தில் அறியப்பட்டவர். அரசியல் நுழைவுக்குப் பின்பு வி. கே. சசிகலா என்றும், இவரின் ஆதரவாளர்களால் சின்னம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.

செல்வி செயலலிதாவுடன் இணைந்து வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தண்டனையைப் பெற்றார். பிறகு மேல்முறையீடு செய்து விடுதலையானார். ஆனால் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.[8]

வாழ்க்கைக் குறிப்பு

1954 ஆம் ஆண்டு ஆகத்து 18 ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு ஐந்தாவது குழந்தையாக சசிகலா பிறந்தார். இவரின் தாத்தா சந்திரசேகர் அவ்வூரில் மருந்துக்கடை நடத்திவந்தார். அவரது மறைவுக்கு பின் அவரின் மகன் விவேகானந்தன் அக்கடையை கவனித்துக்கொண்டார்.

பாரத ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்த சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம் 1950இன் இறுதியில் மன்னார்குடிக்கு மாற்றலாகி வந்ததால் விவேகானந்தனின் குடும்பத்தினர் மன்னார்குடிக்கு குடிபெயர்ந்தார்கள்.[9]

திருமணம்

சசிகலா 1973இல் மக்கள் தொடர்பாளர் என்ற அரசுப்பதவியில் இருந்தவரும் திமுக கட்சியைச் சேர்ந்தவருமான நடராசன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தைத் திமுக தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார்.[9][10] நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடராசன் தன் பதவியை இழந்தார். பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அப்பதவியை மீண்டும் பெற்றார்.

ஜெயலலிதாவுடன் பழக்கம்

பிறகு சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே வினோத் வீடியோ விசன் என்ற ஒளிநாடாவை வாடகைக்கு விடும் கடையை நடத்தினார். அது மட்டுமின்றி நிழற்படக்கருவியை இயக்கும் முறையை அறிந்து கொண்டு திருமணம் போன்ற சமூகக் கூட்டங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு நிழற்படம் எடுக்கத் தொடங்கினார்.

அப்போதைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா செயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகப்படுத்தினார்.[11] முதலில் செயலலிதாவின் கூட்டங்களுக்கு நிழற்படம் எடுக்க வந்த சசிகலா பின் செயலலிதாவுக்கு ஒளிநாடாக்களை வாடகைக்கு கொடுக்கும் நிலைக்கு வந்தார். இவ்வாறு இருவரின் நட்பும் வளர்ந்தது.

1987இல் எம். ஜி. ஆர் மறைவுக்கு பின்னர், செயலலிதா மற்றும் சானகி என இரு அணிகளாக பிரிந்து அதிமுக தேர்தலை சந்தித்த நேரத்தில், செயலலிதா பல அரசியல் போராட்டங்களை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எல்லாம் செயலலிதாவுடன் இருந்தவர் சசிகலா. செயலலிதா சட்டமன்றத்துக்குள் சென்றபோது, பல நெருக்கடிக்குள்ளானார். சட்டப்பேரவையிலேயே தாக்கப்பட்டார். இதனால் ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் செயலலிதா. இந்த நெருக்கடியான கால கட்டங்கள் அனைத்திலும் செயலலிதாவுக்கு ஆறுதலாக இருந்தா சசிகலா. அதன்பின்னர் செயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனிலேயே தங்க ஆரம்பித்தார்.[9]

1991-க்குப் பிறகு அ.தி.மு.க. சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர் தேர்வில் சசிகலா முக்கிய பங்கு வகித்தார். அ.தி.மு.க-வில் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். 

செயலலிதா ஒரு ஆங்கில செய்தி நிருபருக்கு அளித்த பேட்டியில் சசிகலா தன் உடன்பிறவாத சகோதரி என்றும் தன் தாய்க்கு இணையானவர் என்றும் கூறினார்.[12] அதன்பிறகு அதிமுகவினர் செயலலிதாவை அம்மா என்று அழைப்பது போல, சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கத் தொடங்கினர்.

செயலலிதா உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவருடன் இருந்தவர் சசிகலா. பிறகு செயலலிதா மறைந்தபிறகு அவருடைய இறுதிச்சடங்குகளையும் சசிகலாவே முன்னின்று செய்தார்.

எதிரான வழக்குகள்

சொத்துக் குவிப்பு வழக்கு

1991–96 தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சேர்த்த சொத்துக்கள் பற்றிய வழக்கின் முடிவில், சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அதில் ஜெயலலிதா, சசிகலா, ஜெ. இளவரசி, வி. என். சுதாகரன் ஆகியோர் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து சேர்த்ததாக குறிப்பிடப்பட்டது.[13]

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தீர்ப்பையும் தண்டனையும் நீதிபதி மைக்கேல் குன்ஹா அறிவித்தார். வழக்கில் ஜெயலலிதாவுடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவருடையத் தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 10 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.[14] அதன்பிறகு நீதிபதி குமாரசாமி கணக்ககுப்பிழை இருப்பதாகச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா உட்பட நால்வரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்டது.

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சசிகலா உட்பட நான்கு பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டது.[15] இதையடுத்து சசிகலா பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூரு சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற அறையில் நீதிபதியிடம் சரணடைந்தார்.[16]

அன்னிய செலாவணி மோசடி வழக்கு

அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்கில் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.[17][18] இரண்டு அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்குகளில் இருந்து 2015ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டார், இன்னும் மூன்று அன்னிய செலாவணி வழக்குகள் அவர் மீது உள்ளன.[19]

அரசியல் வாழ்க்கை

அதிமுக பொதுச்செயலாளராக (2016 - 2017)

அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு,29 திசம்பர் 2016 அன்று சென்னை வானரகத்திலுள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்குழுவில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்படி 2016 திசம்பர் 31 ஆம் தேதி அவர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.[20]

பிப்ரவரி 5, 2017 அன்று அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக (முதலமைச்சராக) தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவர் அப்பதவியை ஏற்க முடியாத நிலை நேரிட்டது.[21] இதனால் சசிகலா கட்சியை வழிநடத்தத் தன் அக்கா மகன் டிடிவி தினகரனை அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.

2017 செப்டம்பரில் கூடிய அதிமுக பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு 'இரட்டைத் தலைமை' முறை கொண்டுவரப்பட்டது. சசிகலாவின் நியமனங்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. சசிகலா அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.[7] 2022 ஏப்ரலில், சென்னை உரிமையியல் நீதிமன்றம் அவரது நீக்கத்தை உறுதி செய்தது.[22]

11 ஜூலை 2022 அன்று பொதுக்குழு கூட்டத்தில் 'இரட்டைத் தலைமை' முறையை ரத்து செய்யப்பட்டு, எடப்பாடி கே. பழனிசாமி கட்சியின் இடைக்ககால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[23][24] 28 மார்ச் 2023 அன்று, அதிமுக பொது செயலாளராக எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][25] 20 ஏப்ரல் 2023 அன்று, இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது.[26][27]

5 டிசம்பர் 2023 அன்று, சென்னை உயர் நீதிமன்றம் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தது.[28][29]

அரசியல் மறுபிரவேசம்

03 மார்ச் 2021 அன்று தான் அரசியலை விட்டே ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார்.[30][31]. அதன் பின்னர் தனது ஆதரவாளர்களிடம் செல்போனில் பேசி வந்த சசிகலா,கடந்த 2021 அக்டோபர் 16ஆம் தேதி செல்வி ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஒரு வார அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

மேற்கோள்கள்

  1. Sasikala takes over as AIADMK general secretary
  2. http://m.tamil.webdunia.com/article/regional-tamil-news/sasikala-removal-from-admk-general-secretary-post-117082100048_1.html
  3. Sasikala removed as AIADMK chief
  4. 4.0 4.1 MARIAPPAN, JULIE (28 March 2023). "EPS becomes AIADMK general secretary; OPS petition rejected in Madras HC". timesofindia. https://timesofindia.indiatimes.com/city/chennai/eps-becomes-aiadmk-general-secretary/articleshow/99053258.cms?from=mdr. 
  5. "அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம்".
  6. Sasikala removed as AIADMK chief
  7. 7.0 7.1 Sasikala Removed From AIADMK Post, Jayalalithaa to Be General Secretary Forever
  8. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 3 பேரும் குற்றவாளி! - விகடன்
  9. 9.0 9.1 9.2 "The Taming Of The Shrewd". Jeemon Jacob. tehelka. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2014.
  10. "I broke contact with Jayalalithaa". ndtv. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2014.
  11. "Wielding clout, dangling favours". Nirupama Subramanian. indiatoday. பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2014.
  12. "சசிகலாவைப் பற்றி ஜெயலலிதா சொன்னது".
  13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-25. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
  14. http://www.bbc.co.uk/tamil/india/2014/09/140927_jayalalitha_sentence
  15. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-16. பார்க்கப்பட்ட நாள் 2017-02-16.
  16. "பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைப்பு". தமிழ் இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 15, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "Setback for AIADMK chief Sasikala as 20-year-old case returns to haunt her". இந்துசுதான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "The Mannargudi case file: Long list of allegations against Sasikala and her family". நியுசுமினிட். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "ED challenges discharge of Sasikala from FERA case". இந்து. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 14, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  20. "சசிகலாவின் முதல் உரை".
  21. https://www.vikatan.com/news/coverstory/80725-sasikala-convicted-in-da-case--what-will-be-the-next-move-of-governor--opsvssasikala-dacase.html
  22. "TN court upholds decision to remove Sasikala as AIADMK general secretary". Press Trust of India. 11 April 2022. பார்க்கப்பட்ட நாள் 14 April 2022 – via Onmanorama.
  23. "AIADMK general council anoints Edappadi K Palaniswami as party interim general secretary". The Times of India. 11 July 2022. https://timesofindia.indiatimes.com/city/chennai/aiadmk-general-council-appoints-edappadi-k-palaniswami-as-party-interim-general-secretary/articleshow/92794556.cms?from=mdr. 
  24. "AIADMK Tussle: Court Setback For OPS, Rival EPS Takes Charge". ndtv. 11 July 2022.
  25. S, Mohamed Imranullah (28 March 2023). "Madras High Court rejects expelled AIADMK leaders' interim applications against party's 2022 general council resolutions" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/madras-high-court-rejects-expelled-aiadmk-leaders-interim-applications-against-partys-2022-general-council-resolutions/article66670519.ece. 
  26. "AIADMK Amended Constitution dated 20.04.2023.pdf". இந்தியத் தேர்தல் ஆணையம் (in Indian English). 20 April 2023.
  27. "Election Commission of India recognises Edappadi K. Palaniswami as AIADMK general secretary" (in en-IN). The Hindu. 20 April 2023. https://www.thehindu.com/news/national/tamil-nadu/election-commission-of-india-recognises-edappadi-k-palaniswami-as-aiadmk-general-secretary/article66760906.ece. 
  28. "Madras High Court dismisses V.K. Sasikala's claim over AIADMK general secretary post". The Hindu. 5 December 2023.
  29. அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
  30. அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை - புதிய தலைமுறை (03-03-2021)
  31. அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை - தினமணி நாளிதழ் செய்தி (03-03-2021)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._சசிகலா&oldid=3946862" இலிருந்து மீள்விக்கப்பட்டது