வே. மாசிலாமணி
அருள்திரு. வே. மாசிலாமணி ஐயர் (1858 - 1932) தமிழகத்தைச் சேர்ந்த கிறித்தவ நற்செய்திப் போதனையாளரும், சொற்பொழிவாளரும் ஆவார். பக்திப் பரவசமூட்டும், ஆன்மிக சொற்பொழிவுகள் ஆற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதிண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, வத்தலகுண்டுக்கு அருகிலிருக்கும் சிலுக்குவார்பட்டி என்ற கிராமத்தில் வேதமுத்து உபதேசியார் என்பவரின் இரண்டாவது மகனாக 1858ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு, பிச்சையா முத்து உபதேசியார், அருள்திரு. வே. ஜோசப் பெஞ்சமீன் ஐயர், அருள்திரு. வே. சந்தியாகு ஐயர் என்ற மூன்று சகோதரர்களும், மார்கிரட் அருள் அப்பம் என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். வேதமுத்து உபதேசியார், கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த ஓர் ஓய்வு பெற்ற இராணுவ வீரர். அவர் ரோமன் கத்தோலிக்கச் சபையிலிருந்து மனம் மாறி அமெரிக்கன் சபையில் விரும்பிச் சேர்ந்து, அச்சபையில் உபதேசியாராகவும் பணியாற்றினார். இதனால் இவர் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் தன்னுடைய ஊழியத்தைத் திறம்பட நடத்தி வந்தார். அவர் தன்னுடைய நான்கு குமாரர்களையும் இயேசு கிறிஸ்துவின் சேவைக்காகவும், திருப்பணிக்காகவும் அர்ப்பணித்து வளர்த்தார்.
பணிகள்
தொகுமாசிலாமணி ஐயர், மதுரையிலும், பசுமலையிலும் பொதுக் கல்வி கற்றார். பின்பு 1884 இல் மதுரை இறையியல் கல்லூரியில், இறையியல் பயின்றார். பின்பு, 1888 இல், அதே கல்லூரியில் ஆசிரியராகவும், விடுதிக் கண்காணிப்பாளராகவும், உபதேசியாராகவும் பணியாற்றினார். பின்னர் பசுமலை இறையியல் பள்ளியிலும் பணியாற்றினார். 1890 இல், தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் நகரின் கிழக்கே சீலோவாம் ஊரில் உள்ள டேனிய மிஷன் பள்ளியில் அவருடைய நண்பர் விசுவாசம் ஆலோசனையின் பேரில், ஆசிரியர் பணியில் சேர்ந்தார். பின்பு அதே பள்ளியில், 1893 இல் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார். அன்று இருந்த டேனிய மிஷன்தான் இன்று ஆர்க்காடு லுத்தரன் சபையாக மாறியுள்ளது.
ஆன்மிகப் பணிகள்
தொகு1892ல் சீலோவாமில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற மாதாந்தர ஊழியர் கூட்டத்தில், தேவசெய்தி அளித்த அருள்திரு.என்.பி. ஆன்சன், "எல்லோரும் பிரசங்கம் பண்ணலாம், ஆனால் எல்லோரும் சாட்சி சொல்ல முடியாது", என்று சொன்ன வாசகம், மாசிலாமணி உள்ளத்தில் ஒரு மனமாற்றத்தை உண்டு பண்ணியது. அவரை ஒரு உண்மையான ஊழியக்காரராய் உருவாக்கியது. 1897 இல் மீண்டும் அமெரிக்கன் மிஷனில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் உபதேசியாராய்ப் பணியாற்றி, 1901ல் குரு பட்டம் பெற்றார்.
அதன் பின்பு, 1901 முதல் 1906 வரை, மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியிலுள்ள, அமெரிக்கன் மிஷன் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஊர்களில் ஒன்றான, திருப்புவனத்தில் குருத்துவப் பணியையும், பசுமலை இறையியல் கல்லூரியில் ஆசிரியர் பணியையும் செய்தார்.
பின்னர், 1907ல், சகோதரர் ஜோசப் பெஞ்சமின் ஐயருடன், டேனிய சபையில் சேர்ந்தனர். அதனால் இருவரும் திருவண்ணாமலைக்குக் குடி பெயர்ந்தனர். மாசிலாமணி ஐயர் 1907ல், டேனிஷ் மிஷன் உபதேசியார் பயிற்சிப் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் சீலோவாமின் அருகில் உள்ள செங்கல் மேட்டில் குருசேகரப் போதகராய்ப் பொறுப்பேற்றார். பிறகு 1915 முதல் 1929 வரை சாரோனில் போதகராய்ப் பணியாற்றி, 1929ல் பணி ஓய்வு பெற்றார். இவர் மிகுதியும் திருக்கோவிலூரின் அருகில் உள்ள சீலோவாம், செங்கல்மேடு, சுவிசேஷபுரம், கீழகுண்டூர் மற்றும் திருவண்ணாமலையிலுள்ள சாரோன், தண்டரை, மோட்டுவாய் ஆகிய கிராமங்களில் ஊழியம் செய்தார்.
1932ல், மாசிலாமணி ஐயர், தனது 74வது வயதில் காலமானார். இவருடைய கல்லறையும், இவரின் சகோதரர், ஜோசப் பெஞ்சமின் ஐயரின் கல்லறையும் அருகருகே திருவண்ணாமலையில் இருக்கின்றன.
குடும்பம்
தொகுமாசிலாமணி ஐயருக்கு, ஏழு பிள்ளைகள் - அவர்கள் முறையே, தாயம்மாள் வேதமணி, நேசமணி, கிளாரா, லிதியாள், சாமுவேல், பால், நவம் ஆகியோர் ஆவர்.
சிறப்புகள்
தொகு- தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக நாட்டுப்புற இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டவர். கிறிஸ்தவ இலக்கியப் பணியாற்றியவர். இசை ஞானமுடையவர். கருநாடக இசையில் அதிக ஆர்வமுடைய்வர். இசைக்கருவி மீட்டுவதில் வல்லவர்.
- திருவிழாக்களிலும், வாரச் சந்தையிலும் பாடல்கள் பாடுவார். இசை மூலம் இயேசுவின் செய்திகளைக் கூறுவார்.
- கிராமிய ஊழியத்தில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். பாடல்கள் எழுதி, இசை அமைத்து, இசைக்கருவி மீட்டிப் பாடக்கூடியவர்.
பாடல்கள்
தொகுமாசிலாமணி ஐயரின் 11 பாடல்கள் “தமிழ்க் கிறிஸ்தவக் கீர்த்தனையில்” இடம் பெற்றுள்ளன.
உசாத்துணை
தொகுவெளி இணைப்புகள்
தொகு- தந்தானைத் துதிப்போமே[தொடர்பிழந்த இணைப்பு], வே. மாசிலாமணியின் பாடல்