வ. ஐ. சுப்பிரமணியம்

(வ. அய். சுப்பிரமணியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் (வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், பெப்ரவரி 18, 1926 - ஜூன் 29, 2009) மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார்.

வ. ஐ. சுப்பிரமணியம்
வ .ஐ. சுப்பிரமணியம்
பிறப்பு(1926-02-18)பெப்ரவரி 18, 1926
வடசேரி, நாகர்கோவில், தமிழ்நாடு
இறப்புசூன் 29, 2009(2009-06-29) (அகவை 83)
திருவனந்தபுரம், கேரளா
தேசியம்இந்தியர்
துறைதமிழ், மொழியியல்,
பணியிடங்கள்தமிழ்ப் பல்கலைக்கழகம், திராவிடமொழியியல் பள்ளி
ஆய்வு நெறியாளர்பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை
அறியப்படுவதுமொழியியலாளர்

வாழ்க்கைச் சுருக்கம் தொகு

சுப்பிரமணியன் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றவர் நெல்லை இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மொழியியலில் பெற்றார். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.

தமிழ்ப்பணி தொகு

புதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது இணைவேந்தராகவும் விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்தப் பக்க பலமாக இருந்தவர்.

மொழியியல் ஆய்வு தொகு

"புறநானூற்றுச் சொல்லடைவுகள்" என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் இவரது "வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்" 2 தொகுதிகளாக வந்துள்ளன. முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர். ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.

இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன.

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது தொகு

இவர் எழுதிய “வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி ஒன்று - மொழியும் பண்பாடும் இரண்டு - இலக்கணமும் ஆளுமைகளும் (இரண்டு தொகுதிகள்)” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மறைவு தொகு

சுப்பிரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் சூன் 29 2009 அன்று காலை எட்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார்.

பரவலர் பண்பாட்டில் தொகு

வ. அய். சுப்ரமணியத்தைக் நாயகனாகக் கொண்டு பிரபஞ்சன் காகித மனிதர்கள் எனும் புதினத்தை எழுதியுள்ளார்.[1]

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வ._ஐ._சுப்பிரமணியம்&oldid=3362089" இலிருந்து மீள்விக்கப்பட்டது