இசுலாமிய நாட்காட்டி

(ஹிஜ்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுலாமிய நாட்காட்டி (Islamic calendar) அல்லது முஸ்லிம் நாட்காட்டி (Muslim calendar) அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (Hijri calendar) அல்லது 'ஹிஜ்ரா நாட்காட்டி (அரபு மொழி: التقويم الهجري‎; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری ‎ தக்வீமே ஹெஜிரே கமரீ) ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது.[சான்று தேவை] இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி(ஸல்) அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜ்ரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும்.

ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.[1]

நாட்காட்டியின் அடிப்படை

தொகு

இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் ஓட்டத்தை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. சந்திரனின் படித்தலத்தை வைத்து இந்த நாட்காட்டி அமைந்துள்ளதால் ஒரு தரப்பினர் அதன் முதல் பிறையை பார்த்து தான் அடுத்த மாதத்தை ஆரம்பம் செய்யவேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் நாட்களை கணக்கிடுவதற்கும் இசுலாம் அனுமதித்துள்ளதால், கணக்கிட்டு முன்கூட்டியே நிர்ணயம் செய்யவேண்டும் என்றும் இருவேறு கருத்துக்களை வைக்கின்றனர்.

மாதங்கள்

தொகு

 இசுலாமிய நாட்காட்டி

  1. முஃகர்ரம்
  2. சஃபர்
  3. ரபி உல் அவ்வல்
  4. ரபி உல் ஆகிர்
  5. ஜமா அத்துல் அவ்வல்
  6. ஜமா அத்துல் ஆகிர்
  7. ரஜப்
  8. ஷஃபான்
  9. ரமலான்
  10. ஷவ்வால்
  11. துல் கஃதா
  12. துல் ஹஜ்

இசுலாமிய மாதங்களின் நாட்கள் அனைத்தும் சந்திர ஓட்டத்தை வைத்தே அமைய வேண்டும். இவ்வாறு சந்திரனின் படித்தலங்களை வைத்துத்தான் நாட்களை எண்ணிக் கொள்ளவேண்டும் என்று இறைவன் திருக்குரானில் கட்டளையிடுகிறான். முகம்மது (ஸல்) அவரிடம் அக்காலத்து மக்கள் வளர்ந்து தேய்ந்து வரும் பிறைகளைப் பற்றி கேட்டனர். அப்பொழுதுதான் பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது,

  • " (நபியே! தேய்ந்து வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; கூறுவீராக: “அவை மக்களுக்குக் காலங்காட்டியாகவும், ஹஜ்ஜுடைய நாட்களை அறிவிப்பவையாகவும் இருக்கின்றன.” மேலும், (அவர்களிடம் கூறும்:) “நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமானதல்ல. மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவனே (உண்மையில்) புண்ணியவான் ஆவான். எனவே வீடுகளுக்குள் அவற்றின் வாயில்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் வெற்றி பெறக்கூடும்.” (திருக்குர்ஆன் 02:189 )

மேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன.

  • "அவனே, சூரியனை வெளிச்சம் தரக்கூடியதாக அமைத்தான்; சந்திரனுக்கு ஒளியைக் கொடுத்தான். மேலும், வளர்ந்து தேயும் நிலைகளைச் சந்திரனுக்கு நிர்ணயம் செய்தான்; இவற்றின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையையும், கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக! இவற்றையெல்லாம் அல்லாஹ் சத்தியத்துடனேயே படைத்துள்ளான். அறிவுடைய மக்களுக்கு அவன் தன் சான்றுகளைத் தெளிவாக விளக்குகின்றான்." (திருக்குர்ஆன் 10:5)
  • "இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தி இருக்கிறோம்." (திருக்குர்ஆன் 36:39)
  • உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியன. இதுதான் சரியான நெறிமுறையாகும். எனவே, இம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்! எவ்வாறு, இணை வைப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களோடு போரிடுகிறார்களோ அவ்வாறே நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவர்களுடன் போர்புரியுங்கள்! மேலும் இறையச்சம் உள்ளவர்களோடு அல்லாஹ் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (திருக்குர்ஆன் 09:36)

இசுலாமிய மாதங்களின் பெயர்கள்

தொகு
எண் . இசுலாமிய நாட்காட்டி நீளம்
1 முஹர்ரம் 30
2 சஃபர் 29
3 ரபி உல் அவ்வல் 30
4 ரபி உல் ஆகிர் (அ) தானி 29
5 ஜமா அத்துல் அவ்வல் 30
6 ஜமா அத்துல் ஆகிர் (அ) தானி 29
7 ரஜப் 30
8 ஷஃபான் 29
9 ரமலான் 30
10 ஷவ்வால் 29
11 துல் கஃதா 30
12 துல் ஹிஜ்ஜா 29/(30)
மொத்தம் 354/(355)

ரமலான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகக் கருதப்படுகிறது. அதில் தான் நோன்பு நோற்கப்படுகின்றது. நோன்பின் பொழுது முஸ்லிம்கள் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர் உட்பட சாறுகள் மற்றும் உடலுறவை முற்றிலும் தவிர்க்கின்றனர். நோயாளிகள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளை பின்னர் நோற்றுக்கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர்.

இசுலாமிய மாதங்களில் ஷவ்வால் மற்றும் துல் ஹஜ் ஆகிய இரண்டு மாதங்களும் பெருநாள் கொண்ட (ஈதுடைய) மாதங்களாகும். ஷவ்வால் முதல் நாளன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகையும் , துல் ஹஜ் பத்தாம் நாளன்று ஈதுல் அள்ஹா எனப்படும் பக்ரீத் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. துல் ஹஜ் ஒன்பதாம் நாள் அரஃபாவுடைய நாளாகும். அன்று தான் சவூதி அரேபியாவில் உள்ள அரஃபா மைதானத்தில் ஹாஜிகள் எனப்படும் புனித ஹஜ் பயணிகள் அனைவரும் ஒன்று திரளுவார்கள்.

முஹர்ரம், ரஜப், துல் கஃதா மற்றும் துல் ஹஜ் ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்களாகும்.

நாட்கள்

தொகு

இசுலாமிய நாட்காட்டி சந்திரனின் அடிப்படையில் அமைந்ததாலும், முகம்மது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பின் படி ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நட்களை கொண்டதாக இருக்கும். சந்திரனின் ஓட்டத்தை வைத்தே ஒரு மாதத்தில் 29 நாட்களா அல்லது 30 நாட்களா என்பது முடிவாகும். பின்வரும் நபிமொழி அதனை உறுதிப்படுத்துகிறது.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நாம் (அன்றய கால மக்கள்) உம்மி சம்தாயமாவோம். எழுதுவதையும் அறிய மாட்டோம், விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேலை இருபத்தொன்பது நாட்களாகவும் சில வேலை முப்பது நாட்களாகவும் இருக்கும்!"

பார்க்க:- ஹதீஸ் நூல்: சகீ அல் புகாரி; ஹதீஸ் எண்: 1913 ; அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)

இசுலாமிய கிழமைகளின் பெயர்கள்

தொகு
எண் இசுலாமிய நாள் தமிழ் நாள்
1 வது யௌமுல் அஹத் ஞாயிற்றுக் கிழமை
2 வது யௌமுல் இஸ்னைண் திங்கட் கிழமை
3 வது யௌமுல் ஸுலஸா செவ்வாய்க் கிழமை
4 வது யௌமுல் அருபா புதன் கிழமை
5 வது யௌமுல் கமைஸ் வியாழக் கிழமை
6 வது யௌமுல் ஜுமுஆ வெள்ளிக் கிழமை
7 வது யௌமுல் ஸப்த் சனிக் கிழமை

அஹத் என்றால் அரபியில் 'முதல்' அல்லது 'ஒன்று' என பொருள் படும். ஆதலால் இங்கு 'யவ்முல் அஹத்' என்பதை முதல் நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இசுலாமிய அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை வாரத்தின் முதல் நாளாகும். சனிக்கிழமை வாரத்தின் கடைசி நாளாகும்.

நாளின் ஆரம்பம்

தொகு

இஸ்லாமிய மக்களின் நம்பிக்கையின் படி ஒரு நாளின் ஆரம்பம் சூரியன் மறையும் நேரமாகும். அதாவது ஒரு நாளின் முதல் பகுதி இரவு பின்னர் தான் பகல் என்று நம்புகின்றனர். முகம்மது நபியவர்களின் போதனைகளும் இதையே தெளிவு படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, அரபா நாளின் தொடக்கத்திலேயே தக்பீர் சொல்ல வேண்டும் என்பது அன்றைய பகற் பொழுதுக்கு முந்திய சூரியன் மறையும் நேரத்துடனான முன்னிரவு வேளையிலேயே தொடங்கப்படுவது வழமை. முதற் பிறையானது மறையும் நேரம் சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்கு பின்னர் இருப்பதால் முதல் பிறையை பார்த்த பின் தான் மாதத்தின் முதல் நாள் ஆரம்பம் ஆகின்றது என்பது அவர்களது நம்பிக்கையாக உள்ளது.

இஸ்லாமிய மாதங்களில்  புனிதமானவை  

தொகு

அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு என்று கூறப்படுகிறது. இந்தப் பன்னிரண்டு மாதங்களில் நான்கு மாதங்கள் புனிதமானவை என்றும் கூறப்படுகிறது.

ஆனால் புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்று திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. ஆனாலும் இந்த நான்கு மாதங்கள் யாவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

  • துல்கஅதா
  • துல்ஹஜ்
  • முஹர்ரம்
  • ரஜப்

அவை பின்வரும் நபிமொழி நமக்கு தெளிவுப்படுத்துகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும், பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல் ஆகிர், ஷஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

நூல் : புகாரீ : 3197, 4406, 4662, 5550, 7447  

மேற்கோள்கள்

தொகு
  1. Watt, W. Montgomery "Hidjra". Encyclopaedia of Islam Online. Ed. P.J. Bearman, Th. Bianquis, Clifford Edmund Bosworth, E. van Donzel and W.P. Heinrichs. Brill Academic Publishers. ISSN 1573-3912. 


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமிய_நாட்காட்டி&oldid=3363671" இலிருந்து மீள்விக்கப்பட்டது