1924 சென்னை மாகாண வெள்ளப் பெருக்கு
1924 சென்னை மாகாண வெள்ளப் பெருக்கு (1924 Madras Provincial Flood) என்பது 1924 ஜூலை மாதம் பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த பெருமழையால் காவிரி பைக்காரா உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் ஆகும். இந்த வெள்ளத்தில் அன்றைய, மலபார் மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம், சேலம் மாவட்டம், திருச்சினாப்பள்ளி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம் என மேற்குமுதல் கிழக்குவரையிலான பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டன. இந்த வெள்ளத்தின்போது பைக்காரா ஆறில் ஏற்பட்ட வெள்ளத்தில் 12 பாலங்கள் அழிந்தன, உதகை - கூடலூர் - மைசூர் சாலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. பவானி, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உடைப்புகள் ஏற்பட்டன. முக்கொம்பு அணையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.
காரணம்
தொகு1924 சூலை மாதத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழைப் பொழிந்தது. தெற்கு கன்னட மாவட்டத்தில் 97-155 செ.மீ மழை பதிவானது. அங்கு உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள புல்வெளிகளும், மலைக்கடுகளும் பிரித்தானிய அரசால் வணிக நோக்கங்களுக்காக அழித்திருந்தன. இயற்கையாகவே அவை நீரைத் தேக்குவதாகவும், வெள்ளத்தின் பாய்ச்சலைக் கட்டுப்படுத்தக் கூடியனவாக இருந்தன. மேலும் அக்காலத்தில் மலைகளில் அணைகள் இருக்கவில்லை, சமவெளிகளில் கல்லணை, கொடிவேரி அணைக்கட்டு போன்றவை மட்டுமே இருந்தன. இதனால் மழைவெள்ளம் தடுப்புகள் இன்றி கிழக்குநோக்கிப் பெருக்கெடுத்தது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவ மழை பலமாக பெய்ததால், தமிழ்நாட்டின் சமவெளிகள் மழை இல்லாமலேயே பெரும் வெள்ளத்ததினால் 1924 சூலை 16 அன்றும், பின்னர் சூலை 23 அன்றும், பின்னர் சூலை 26, 27 என மூன்று முறை வெள்ளப் பேரழிவு ஏற்பட்டன. காவிரியில் சூலை 24 அன்று 4.63 இலட்சம் கன அடி நீரும்[1], சூலை 26 அன்று 4.56 இலட்சம் கன அடி நீரும் வந்தது.[2] சூலை 16, 18 ஆகிய நாட்களில் சத்தியமங்கலம் அருகே 23 அடி, காவிரியில் 36 அடி உயரத்தில் வெள்ளம் பெருகியது. அடுத்த இரு நாட்களில் வெள்ளம் 38 அடிக்கு உயர்ந்தது. பைக்காரா பாலத்திற்கு மேலே இரண்டு அடி உயரத்திற்கு வெள்ளம் சென்றது.[3]
பின்விளைவுகள்
தொகுபைக்காரா வெள்ளத்தால் 12 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. உதகை - கூடலூர் - மைசூர் சாலையில் மண்சரிவுகள் ஏற்பட்டன. பவானி, காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் உடைப்புகள் ஏற்பட்டன. முக்கொம்பு அணையின் வலப்புறத்தில் 300 அடியும், மையத்தில் 700 அடி நீளப் பகுதியும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் பல ஊர்களும் சிற்றூர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன. உறையூர் குளம் உடைந்தது. முருங்கப்பேட்டையில் தண்டவாளம் அடித்துச் செல்லபட்டு ஊரே அழிந்தது. திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் சாலைப் பகுதியில் காவிரி ஆறு ஐந்து கி.மீ. தொலைவுக்கு தடம் மாறி பாய்தததால் அச்சாலை அழிந்தது.[3] திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் சுற்றுச் சுவர்கள் சரிந்தன. சூலை 18 அன்று கொள்ளிடம் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
இந்த வெள்ளத்தினால் மலபார் மாவட்டத்தில் 22,000, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6,136, சேலம் மாவட்டத்தில் 1,323, திருச்சினாப்பள்ளி மாவட்டத்தில் 7,710, தஞ்சாவூர் மாவட்டத்தில் 4,000 என மொத்தம் 43,209 வீடுகளை வெள்ம் அழித்தது. மேலும் இதையும் இதை ஒட்டிய தென் ஆற்காடு மாவட்டம் உள்ளிட்டப் பகுதிகளிலும் 12,202 ஏக்கர் நிலப்பகுதியில் 1.5 முதல் 6 அடி உயரத்திற்கு மணல் திட்டுகள் உருவாயின. இந்த வெள்ளத்தால் மொத்தம் 10,000 பேர்வரை இறந்தனர். காடுமேடெங்கும் பிணங்களால் துர்நாற்றம் வீசியது. தொற்றுநோய் பரவியது. உணவு, உறைவிடம் அழிந்ததால் விலைவாசி உயர்ந்தது, கூலி குறைந்தது. பஞ்சம் தலைவிரித்து ஆடியதால் கூட்டம் கூட்டமாக மக்கள் இடம் பெயர்ந்தனர். மலேசியாவுக்கு 2,74,985 பேர் தோட்டக் கூலிகளாக சென்றனர்.[3]
சீரமைப்பு
தொகுமீட்புப் பணிகளில் அரசு ஈடுபட்டது. மக்களைக் காப்பாறுவதில் மீனவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். கல்லணையை சீரமைக்க மிகுந்த கவனம் செலுத்தபட்டது. கொல்லிடப் பாலம் அதன் பழைய இடத்திலிருந்து மேற்கே 80 தொலைவில் கட்டும் பணி 1926 சனவரியில் துவக்கபட்டு, 1928 சனவரியில் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. 90 ஆண்டுகள் கடந்த நிலையில் அப்பாலம் 2018 ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் உடைந்தது.[4] வெள்ளத்தினால் வசிப்பிடங்களிலும், வயல்களிலும் ஏற்பட்ட மணல்திட்டுகளை அகற்றுவதற்காக 285 டிராம் வண்டிகள் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக அவை அகற்றப்பட்டன. அந்த மணல் இரயில்வே கட்டுமானங்களுக்கு பயன்படுத்தபட்டன. வசிக்கவே இயலாமல் சிதைந்துபோன கிராமங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்களில் புதிய கிராமங்கள் உருவாக்கபட்டன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ வீரமலை, பிரபாகரன் (2023-08-01). "கரூர்: 1924 - 2024 நூற்றாண்டு சாதனை நோக்கி மாயனூர் காவிரி ஆறு".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ Ramakrishnan, T. (2024-07-31). "No stranger to heavy flow, Cauvery river carried 4.56 lakh cusecs in 1924". The Hindu (in Indian English). பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-751X.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "ஒரு கோடைக்காலப் பெருவெள்ளத்தின் குறிப்புகள்". 2024-07-31.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ "2018-ம் ஆண்டு வெள்ளத்தில் உடைந்து சேதமடைந்த கொள்ளிடம் பழைய பாலத்தை இடித்து அகற்ற முடிவு: மழை காலத்துக்கு முன்பே பணிகளை முடிக்க ரூ.3.10 கோடி ஒதுக்கீடு". 2022-01-08.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)