இந்திய விடுதலைச் சட்டம், 1947

இந்திய விடுதலைப் போராட்டம், இந்தியப் பிரிவினை
(1947 இந்திய விடுதலைச் சட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய விடுதலைச் சட்டம், 1947 (Indian Independence Act 1947) என்பது பிரித்தானிய இந்தியாவுக்கு விடுதலை அளிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம். பிரித்தானிய இந்தியாவை இந்திய ஒன்றியம் மற்றும் பாக்கித்தான் என இரண்டாகப் பிரிவினை செய்தது. ஜூன் 15, 1947 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இச்சட்டத்துக்கு ஜூலை 18ம் தேதி பிரித்தானிய முடியின் ஒப்புதல் கிடைத்தது. மவுண்ட்பேட்டன் பிரபுவால் உருவாக்கப்பட்ட ஜூன் 3 திட்டம் அல்லது மவுண்ட்பாட்டன் திட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரசு, முசுலிம் லீக் மற்றும் சீக்கியர்களின் பிரதிநிதிகளின் ஒப்புதல் கிடைத்தபின்பு அதனடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:

  • பிரித்தானிய இந்தியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு மேலாட்சி அரசுகள் அமைக்கப்படும்
  • அவை இரண்டும் உருவாகும் தேதி ஆகஸ்ட் 15, 1947; அன்றே அப்பகுதிகளில் பிரித்தானியப் பேரரசின் ஆட்சி முடிவடையும்.
  • பிரித்தானியப் பேரரசரின் அதிகாரப்பூர்வ பட்டயங்களில் இருந்து “இந்தியாவின் பேரரசர்” நீக்கப்படும்
  • இந்தியாவின் சம்ஸ்தானங்களும் மன்னர் அரசுகளும் பிரித்தானியப் பேரரசுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் முடிவுக்கு வரும்; அவர்கள் தங்கள் விரும்பியபடி இரு மேலாட்சி அரசுகளுள் ஏதேனும் ஒன்றுடன் இணைந்து கொள்ளலாம்
  • இவ்விரு அரசுகளும் உள்விவகாரம், வெளிவிவகாரம், தேசியப் பாதுகாப்பு என அனைத்து விசயங்களிலும் முழு தன்னாட்சி அதிகாரம் பெற்றிருக்கும். பிரித்தானியப் பேரரசர் பெயரளவில் மட்டும் அவற்றின் நாட்டுத் தலைவராக இருப்பார். அவரது பிரதிநிதியாக “தலைமை ஆளுனர்” இருப்பார். இரு மேலாட்சி அரசுகளும் தங்கள் அரசியல் நிர்ணய மன்றங்களைக் கூட்டி புதிய அரசியலமைப்புச் சட்டங்களை இயற்றிக் கொள்ளலாம்
  • இரு மேலாட்சி அரசுகளும் பொதுநலவாயத்தின் உறுப்பினர்களாக இருக்கும். ஆனால் விருப்பமெனில் அவ்வமைப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம்.

வெளி இணைப்புகள்தொகு