நான்காம் ஈழப்போர் (Eelam War IV) என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற இறுதிப் போரைக் குறிக்கும். போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்த அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே, 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் ஒரு முரண்நிலை தோன்றி ஒரு விரோதப் போக்கு ஆரம்பமானது. கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[1][2]. இதன்படி தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகவும், அதற்கான 14 நாள் கால அவகாசத்தை வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம், உடன்படிக்கையின் அனுசரணையாளரான நோர்வேயின் தூதரகத்திற்கு எழுத்து மூலம் ஜனவரி 3 அன்று அறிவித்தது[3].

நான்காம் ஈழப்போர்
ஈழப் போர் பகுதி
நாள் சூலை 26, 2006 – மே 18, 2009
இடம் இலங்கை
தெளிவான இலங்கை ராணுவ வெற்றி; விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக குலைக்கப்பட்டனர்; பிரபாகரன் கொல்லப்பட்டார்.
பிரிவினர்
இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
மகிந்த ராஜபக்ச வேலுப்பிள்ளை பிரபாகரன்
பலம்
150,000 (ஏறத்தாழ.) 18,000 (ஏறத்தாழ.)

நான்கு ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டிருந்த போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரசப்படைகள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகளைக் கைப்பற்றின. போரின் இறுதியான காலகட்டத்தில், வடகிழக்குப் பிரதேசத்தில் உள்ள நந்திக் கடலேரியைச் சூழ்ந்த பகுதியில் சண்டை மிக உக்கிரமாக நடந்தது. மூன்று இலட்சம் வரையான தமிழ்ப் பொதுமக்கள் போர் நடந்த இடத்தினுள்ளே முடக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றியது. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கடைசிப் பிரதேசமும் வந்தடைந்த, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள், போர் முடிவுக்கு வந்ததாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்துவிட்டதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

இந்த இறுதிப் போரில் இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்கள் பல செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அரசு இதனை மறுத்து வருகின்றது.

சமாதான ஒழுங்கு

தொகு

2001ஆம் ஆண்டு மார்கழி மாதம் 5ஆம் திகதி நடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பெரிய அளவிலான வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது. முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வகையில் இரு பகுதியினருக்கும் இடையே நிபந்தனைகளற்ற உடன்பாடு காண்பதற்கு ரணில் களம் அமைத்து ஆரம்பித்தார். வாக்குறுதியும் அளிக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ஆம் திகதி அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிபந்தனைகளற்ற பேச்சு வார்த்தைகளை நோர்வே கொண்டு வந்தது. ஒரு மேசையில் பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் ஒழுங்கமைத்தது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் 30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு முன்னுதாரணமாக வாக்குறுதியளித்தது. அரசப் படைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதில்லை என்று அறிவித்தது. புதிய அரசாங்கம் இந்த நகர்வை வரவேற்றது. அதற்கு அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும், பதில் நகர்வைக்காட்டும் முகமாகவும், ஒரு மாத போர்நிறுத்தத்தைக் காலவரையறையற்ற நீண்ட காலப் போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகளின் பகுதிகளுக்கான பொருளாதாரத் தடைவிலகல் உத்தரவையும் அரசாங்கம் அறிவித்தது.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுல்

தொகு

அரசுத் தரப்பும் விடுதலைப்புலிகள் தரப்புமாகிய இரு தரப்பினரும், புரிந்துணர்வு அடிப்படையிலும், சம்பிரதாய முறையிலுமாகவே முதலில் போர் நிறுத்தத்தைச் செய்திருந்தனர். 2002ஆம் ஆண்டு மாசி மாதம் 22ம் திகதி நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தம் எழுத்து மூலமாகச் செய்யப்பட்டது. நடுவராக நோர்வேயும் அதனுடன் சேர்ந்த நோர்வீஜியன் நாடுகளும் இணைந்து மேற்பார்வை செய்யும் நாடுகளாக இருப்பதாகவும் நிர்வாக சபை போன்று யுத்த நிறுத்தத்தைப் பேணும் வகையில் செயற்படுவதாகவும், யுத்த நிறுத்த மேற்பார்வை நிபுணர்களின் சேவை பெறப்படுவதாகவும் அதற்கு 'ஸ்ரீலங்கா மேற்பார்வை சபை' என்ற பெயரிடுவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதே ஆண்டு ஆவணி மாதத்தில் அரசாங்கம் விடுதலைப்புலிகள் மீதான தடை உத்தரவை எடுத்தது விட ஒப்புக் கொண்டது. முறைப்படியான தடை உத்தரவை நீக்கும் முறைக்கும் நேரடியாக அணுகும் வகைக்கும், விட்டதை தொடர்வதற்கும் வழி உண்டாயிற்று.

(போர் நிறுத்த) இவ்வொப்பந்தத்தை தொடர்ந்து வர்த்தக ரீதியான வானூர்திப் பயணங்கள் யாழ்ப்பாணத்திற்கு ஆரம்பித்தன. ஏ9 பிரதான வீதி விடுதலைப் புலிகளால் திறந்துவிடப்பட்டது. தெற்கு இலங்கைக்குமான பொதுசன போக்குவரத்து வர்த்தக நடவடிக்கைககள் ஆரம்பமாகின. பல ஆண்டுகளுக்குப் பின் வன்னிப் பிரதேச பொதுமக்களும் பிற பிரதேசங்களும் ஏ9 வீதி ஊடாக யாழ்ப்பாணத்திற்கும் தென்பிரதேசங்களுக்குமான போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. பல வெளிநாடுகளின் பார்வையில் பல ஆண்டுகளாக சந்தேகிக்கப்பட்ட சமாதானம் நிறைவேறும் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது. அனேகமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்பே தொடங்கப்பட்டிருந்தன. சோன்புரி மாகாணம், பதம்மாகாணம், றோஸ்காடின், தாய்லாந்தில் 16 சுற்றுக்களும் 5 சுற்றக்களும் நடந்தேறியிருந்தன. நோர்வேயும், ஜேர்மனியும் இச் சுற்றுக்களில் பங்குபற்றின. இப்பேச்சுக்களின் அடிப்படையில் சமஷ்டி அடிப்படையிலான கோட்பாடுகளுக்கு விடுதலைப்புலிகள் இணங்கியதுடன், தமது நீண்டகாலக் கோரரிக்கையான பிரிவினை வாதத்தைத் தளர்த்தியிருந்தனர். இரு சாரராலும் இதற்கு சம்மதம் ஏற்பட்டிருந்தது. இவ்வழிவகை, விட்டுக்கொடுப்பு என்பதை இரு சாரரினாலும் ஏற்கப்பட்டதாக கருதப்பட்டது. சமஷ்டி கோரிக்கையை அரசு ஏற்றது, பிரிவினைவாதத்தை விடுதலைப்புலிகள் தளர்த்தினர். மிகவும் அரிதான ஒரு நிலைமை ஏற்பட்டிருந்தது. இரு சாரரும் பாரம் சுமத்தும் நிலையைக் குறைத்து இருந்தனர் தத்தம் வசமுள்ள போர்க் கைதிகளை பரிமாற்றம் செய்யவும் முதன்முறையாக ஒப்புக் கொண்டனர்.

போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகல்

தொகு

மாவிலாறு அணைக்கட்டிலிருந்து நீர் திறந்துவிடப்படுவதையும், அண்மித்த வயல் நிலப்பகுதிகளும் பாதிக்கப்படும் படியாக, அணைக்கட்டு திறப்பதை விடுதலைப்புலிகள் தடுத்திருந்தனர். அப்போது விடுதலைப் புலிகளின் முகாம்களை மாவிலாற்றை அண்மித்த பகுதிகளில், விமானப்படையின் ஜெட் விமானங்கள் தாக்கியிருந்தன. மாவிலாற்று அணைக்கட்டு திறந்து விடப்படாததைப் போர் தொடங்குவதற்கு உரிய காரணமாக அரசாங்கம் காட்டிக் கொண்டது. இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் ஆரம்பித்தது. 21 திகதி சூலை மாதம் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் நீர் விநியோகிக்கும் கதவுகள் மூடப்பட்டன. அரச கட்டுப்பாட்டில் இருந்த 15,000 மக்களுக்கு நீர் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனது. சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் (SLMM) ஸ்ரீலங்கா மேற்பார்வை சபை கதவுகளை திறக்கும் வண்ணமாக எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின. ஆடி மாதம் 26ஆம் திகதி இலங்கை விமானப்படை விடுதலைப்புலிகளின் மாவிலாற்றை அண்மித்த நிலைகளின் மீது குண்டுகளைப் பொழிந்தன. தரைமார்க்கமான படை நகர்வுகளும் துரிதப்படுத்தப்பட்டு கதவுகளைத் திறக்கும் முயற்சி தொடங்கியது. அரச பேச்சாளரான பாலித ஹோஹண அரசாங்கம் போர் நிறுத்தத்தை மீற வேண்டியதாக அறிவித்தார். பதிலாக விடுதலைப்புலிகளும் போர்நிறுத்தத்தை தாமும் மீறியதாக உணர்த்த வேண்டியதாயிற்று. நீர்ப்பாசனக் கதவுகள் சம்பிரதாய நிகழ்வாக ஆவணி மாதம் 8ஆம் திகதி திறக்கப்பட்டது. தாமாக திறந்து விட்டதாக விடுதலைப் புலிகளும் அறிவித்தன. முரண்பாடான அறிக்கைகள் இக் காலத்தில் வந்து கொண்டிருந்தன. நீர்திறக்கும் விடயம் பேரம் பேசும் விடயமல்ல என்று பாலித ஹோஹண கூறினார். புதிய பல தாக்குதல்கள் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டன. மாவிலாறு தேக்கத்தைச் சுற்றி தீவிர பல முனைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களை (SLMM) ஸ்ரீலாங்கா மேற்பார்வை; தலைவரும் அரசபடைகள் மீதான கண்டனமாகத் தெரிவித்தார், தாக்குதல்களை விடுதலைப்புலிகள் தான் தொடங்கியதாக அரசு அறிவித்தது. அவர்களுக்கு நீர்ப்பாசனத்தை திறப்பதில் விருப்பமில்லை என்பது தெளிவு என்று கூறியது. மக்களுடைய நலன் கருதி தாமகவே திறந்துவிட்டதாக விடுதலைப்புலிகள் கூறினார். ஆனாலும் கடுமையான இரு தரப்புச் சண்டை மாவிலாறு பகுதியை தத்தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக நடந்தது. முடிவில் மாவிலாறு அணையும் நீர்தேக்கமும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி (2006/08/15) அரசபடைகளின் பூரண கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. நான்கு வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டிருந்த யுத்த நிறுத்தத்தை முறித்துக் கொண்டு அரசப்படைகள், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பல பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொண்டன. சம்பூர், வாகரை இன்னும் பல கிழக்குப் பிரதேசப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. இந்தப் போக்கிற்கு, 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி விடுதலைப்பலிகளின் விமானப்படை கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தை தாக்கி விமானங்கள் பலவற்றை அழித்திருந்தமை காரணமாயிருந்தது, கட்டுநாயக்கா தாக்குதலானது விடுதலைப்புலிகள் வரலாற்றில், வெளியார் எவரது உதவியும் பெறாமல் வெற்றிகரமாக நடாத்தி முடித்த முதலாவது வரலாற்று நிகழ்வாகும்.

கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[4][5].

ஸ்ரீலங்கா விமானப் படையின் பெரிய அளவிலான தாக்குதல்

தொகு

14/8/2006இல் விமானப்படை முல்லைத்தீவில் பேரழிவை ஏற்படுத்திய தாக்குதலை நடத்தியது, 61 பெண் பிள்ளைகள் இதனால் கொல்லப்பட்டனர். அப்பிள்ளைகள் பாடசாலை மாணவிகள் என்று விடுதலைப்புலிகள் அறிக்கையிட்டது. அவர்கள் முதலுதவிப் பயிற்சிக்காக ஒன்று கூடியிருக்கும் போது திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும் விடுதலைப்புலிகள் கூறினர். அரசாங்கமோ 'அவர்கள் சிறுவர் -விடுதலைப்புலிகள் இராணுவப் பயிற்சிக்காக அழைக்கப்பட்டவர்கள்' என்று கூறியது. சுவீடன் ஸ்ரீலங்கா போர் நிறுத்த மேற்பார்வைக் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று ஆராய்ந்து அறிக்கையிட்டனர். அதன்படி இறந்தவர்கள் இராணுவப்பயிற்சிக்காக அழைக்கப்பட்டவர்கள் அல்ல என்று அறிக்கையிட்டனர். 7/5/2007இல் சுப்பர் சொனிக் போர் விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து சேமித்து வைக்கப்பட்ட எரிபொருள் களஞ்சியங்கள் - அவை பாரிய அளவு கொண்டவை கிளிநொச்சி, இரத்தினபுரம் பகுதியிலும் இரணைமடுப்பகுதிலும் அமைந்தவை அவை – அவற்றை நாசமாக்கின. கார்த்திகை மாதம் 2007இல் கிளிநொச்சியில் பலமான தற்பாதுகாப்பு அரண் கொண்ட பகுதியிலும் தமிழ்ச்செல்வனும் அவருடன் ஐந்து உயர் மட்ட தரத்திலுள்ள விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்

தொகு

முதலாவதான விடுதலைப்புலிகளின் தாக்குதல் அவர்களது வான்படை வரலாற்றில் கட்டுநாயக்க அரச வான்படைத்தளத்தின் மீதான தாக்குதலாகும். 26/3/2007ல் அத் தாக்குதலில் இறந்தவர்கள் மூவர் காயமுற்றோர் பலர். விடுதலைப்புலிகளின் வான் படைத் தாக்குதல் பளை இராணுவத்தளத்தின் மீது நடாத்தப்பட்டதில் ஆறு இராணுவத்தினர் கொல்லப்பட்டு 13 இராணுவத்தினர் காயப்பட்டனர். கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்தின் மீதான இரண்டாவது தாக்குதல் 26/4/2007ல் நடந்தது. முதலில் நடந்த அதே இடத்தில் ஒரு மாதத்தின் பின்பு இரண்டாவது தாக்குதலாக இது அமைந்தது. 29/4/2007 காலை விடுதலைப்புலிகளின் வான்படைக் குண்டு போட்டதில் இரண்டு எரிபொருள் தாங்கிகள் கொலன்னாவவிலும், முத்து ராஜ வெலவிலும் அழிந்தன. இது தலைநகர் கொழும்பிற்கு மிக அண்மித்த பகுதிகளாகும். பளையில் நடந்த மறுதாக்குதல் பளை விமாத்தளத்திற்கு அண்மித்ததாக அமைந்தது. அப்பிரதேசத்தின் பிரதான அரசபடைகளின் தளமாக இது இருந்தது. விமானக் குண்டு எதிர்ப்பு காரணமாக குண்டுகள் புகையிரத பாதையில் விழுந்தன. இதில் ஆறு இராணுவத்தினர் பலியாகினர். 26/4/2007ல் கொழும்பு விமானப் பாதுகாப்புத்தள அறிக்கையின்படி அடையாளம் காணப்பட முடியாத விமானங்களின் நடமாட்டம் இருப்பதாகவும் 'ரடார்' காட்டியதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டது. எப்படியிருந்த போதும், சில நாட்களின் பின்பு அதிகாலையில், சித்திரை மாதம் 29ம் திகதி நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதி நிகழ்வை கண்டு கொண்டிருக்கும்போது, கொழும்பை அண்மித்திருந்த எரிபொருள் தள நிலைகள் மீது குண்டுகள் பொழியப்பட்டன. நகரின் மின்சாரம் பூரணமாக இல்லாமல் செய்து நிலைகளை அடையாளம் காணாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும் விடுதலைப்புலி விமானங்களைச் சுட்டு விழுத்தாதையிட்டு அரச எதிர்க்கட்சியும் பொது மக்களும் அதிருப்தி தெரிவித்தனர். 75மில்லியன் ரூபாவுக்கும் மேலான செலவு தரும் பெரிய பிழைபாடுகள் விமான எதிர்ப்புக் கருவிகளில் இருந்ததாக அரசு அறிக்கையிட்டு தமது பலவீனத்தை மறைத்துக் கொண்டது.

போர் நிறுத்தத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் வெளியேற்றம்

தொகு

2/11/2008ம் ஆண்டு யுத்த நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் தன்னிச்சையாக விலகத் தீர்மானித்தது. கடந்த இரண்டு வருடகாலமாக பேப்பர் மூலமான சமாதான நீடிப்பு விரிவாக்கப்பட்டிருந்நது. பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்க வருடாந்த மந்திரி சபைக் கூட்டத்தில் விரிவாக்கப் பிரகடனம் செய்த பின்பு 2/1/2008ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் இன்னுமொரு குண்டு வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். 28க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்வருமாறு அமைந்த அறிக்கை ஒன்று வெளிவந்தது. 'இலங்கை அரசு நேற்று (3/1/2008) இயல்பான நடவடிக்கையை தன்னிச்சையாக தீர்மானித்து யுத்த நிறுத்தத்தில் இருந்து விலகியது. தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்த வெள்ளைப் போர் ஒப்பந்தம் நடைமுறையில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்ததைவிட்டு விலகியுள்ளது. பிரதமர் ரட்ணஸ்ரீ விக்கிரம நாயக்க மந்திர சபைக் கூட்டத்தில் இவ் விவகாரத்தை முன்வைத்தார். யுத்த நிறுத்த ஒப்பந்த நடைமுறையில் உள்ள போதே இரண்டாவது குண்டு 2/01/2008இல் தலைநகர் கொழும்பில் வெடித்துள்ளது. 5 பேர் கொல்லப்பட்டனர் 28 பேர் காயமடைந்தனர். நோர்வீஜியன் அரசும் ஸ்ரீலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் மேற்கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் (22/2/2002) இவ்வறிக்கை மூலம் சிதைவடைந்தது. பொருளடக்க விதிகள் 4:4 ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் விதிகள், நடைமுறைகள் 16/1/2008 திகதியில் இருந்த நடைமுறையில் இல்லாது போகிறது' இவ் விவகாரம் 29/12/2007ல் பாதுகாப்புச் செயலர் கோதபாஜ ராஜபக்ச மத்தியில் பேசு பொருளாக வைக்கப்பட்டிருந்தது. உதவி வழங்கும் நாடுகளான ஐக்கிய அமெரிக்கா, கனடா, நோர்வே நாடுகள் மத்தியில் இந்த விவகாரம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியதால் இந்நாடுகள் தமது திருப்தியீனத்தை இலங்கை அரசுக்கு வெளிப்படுத்தியிருந்தன. இலங்கை அரசும் திருப்தியீனத்தை வெளிப்படுத்தியது. அயல் நாடான இந்தியாவும் போர் நிறுத்தம் மீறப்படுவதை திகைப்பூட்டும் அச்சமாகக் கருதி தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது.

கண்காணிப்புக் குழு வெளியேறியது

தொகு

இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் ஜனவரி 16 ஆம் நாள் இலங்கையில் இருந்து வெளியேறவுள்ளதாக அக்குழு தெரிவித்தது[6].

இணைத்தலைமை நாடுகளின் கருத்துகள்

தொகு

நோர்டிக் நாடுகள்

தொகு

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா வெளியேறியது பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஆதரவான முக்கிய உடன்பாடு ஒன்று முடிவுக்கு வந்ததாகவே அர்த்தம் என்று நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நோர்டிக் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர்[7].

ஜப்பான்

தொகு

"போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் வெளியேறியது கவலையை தோற்றுவித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு வன்செயல்களை அதிகரிக்கச் செய்யும்" என்று ஜப்பான் தெரிவித்தது[8].

ஐக்கிய அமெரிக்கா

தொகு

"இலங்கையில் நடைபெற்று வரும் மோதல்களுக்கு அமைதி வழியிலான தீர்வைக்காண்பதை இது மேலும் கடினமாக்கி உள்ளது" என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் தனது அறிக்கையில் தெரிவித்தார்[9].

ஐக்கிய நாடுகள்

தொகு

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து இலங்கை அரசு தன்னிச்சையாக விலகிக் கொண்டது தமக்கு கவலை அளிப்பதாகவும் அரசு விலகிக் கொண்டது வடக்கில் மோதல்களை உக்கிரமடையச் செய்வதுடன் அது கொழும்பு உட்பட நாடு முழுவதும் பரவலாம் என்றும் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்தார்[10].

வரவேற்பு

தொகு

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து இலங்கை அரசு விலகிக் கொண்டதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வி. ஆனந்தசங்கரி கருத்துத் தெரிவிக்கையில், போர்நிறுத்த உடன்பாடு விடுதலைப் புலிகள் தம்மை பலப்படுத்திக் கொள்ளவே உதவியிருக்கிறது என்றும் அரசு விலகிக் கொண்டது தமக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்தார்[11]

கிழக்கில் போர்

தொகு

நோர்வே நாட்டின் நடுநிலையுடன் அமுலுக்கு வந்த சிறிலங்கா இராணவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் தோல்வியில் முடிந்தது. 21/07/2006இல் சமாதான ஒப்பந்தம் ஆரம்பமாகி மாவிலாறு அணைக்கட்டு போருடன் ஒப்பந்தம் இரு பகுதியாலும் மீறப்பட்டது. அரசபடைகள் கிழக்கு மாகாணத்தை முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். 11/07/2007இல் தொப்பிகல சண்டையில் தொப்பிகல கைப்பற்றப்பட்டதுடன் அரசபடைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கிழக்குமாகாணம் வந்ததை பிரகடனப்படுத்தினாரகள். தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டகளப்பு மாவட்ட உள்ளூர் தேர்தலான மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டது. 10/03/2008 அன்று தேர்தல் நடந்தது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியே வென்றது. அதன் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணசபையின் முதன் மந்திரியானார். 16/05/2008 அன்று பதவியும் ஏற்றார்.

வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் நிலைமைகள்

தொகு

மனித உரிமைகளக்கு புறம்பான குற்றவாளியாக கருணா கருதப்பட்டிருந்த காலத்தில் அவர் நீதிக்குப் புறம்பான பல மரணங்களுக்கு காரணமாக இருந்தார். பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டமை சிறுவயது விடுதலைப்புலி போராளிகளை இணைத்திருந்தமை போன்ற குற்றமும் அவர் மீது இருந்தது. புறம்பாக தனித்து இயங்கிய கருணா குழு பல நிதி மோசடிகளையும் செய்ததாக கருதப்பட்டிருந்தது. அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றவர்களால் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் பல நடவடிக்கைகளில் ஈடுப்டிருந்தார். அரசாங்கம் கருணாவிற்;கு உதவி செய்யும் வகையில் அவரை பிரித்தானியாவிற்கு அகதி அந்தஸ்தில் செல்வதற்கு உதவியது. பின்பு கருணா சட்டபூர்வமற்ற வகையில் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக முறைப்படி கைதுசெய்யப்பட்டு போர்க்குற்றவாளியாக்கப்பட்டிருந்தார்.

வடக்கில் போர்

தொகு

இந்த இடத்தில், வடக்கில் நடந்த முறைகேடான போராட்டங்கள் 2001ஆம் ஆண்டிலிருந்து இடம் பெற்றிருந்தன. விடுதலைப்புலிகள் பெரும் எடுப்பிலான தாக்குதல்களை அரச படைகளின் பாதுகாப்பு நிலைகள் மீது யாழ்குடா நாட்டில் நடத்தின. நீரிலும் நிலத்திலுமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை முரட்டுத்தனமான தாக்குதல்கள் அரசப்படைகளின் நிலைகள் மீது விடுதலைப்புலிகளின் 400 – 500 போராளிகள் வரையிலானவர்கள் பங்குபற்றினார். பீரங்கிகள், பல்குழல்பீரங்கிகள் அரசப்படை நிலைகள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்டன. பளையில் உலங்கு வானூர்தி தளம் மீதும் திறவு கோல் நிலையில் இயங்கிய முன்னிலை அரண்கள் மீதும் பயங்கரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முதலில் முகமாலை அரச இராணுவத்தளங்களின் முன்னிலை எதிர்ப்பை முறியடித்து பாதுகாப்பு அரண்களைச் சுற்றி வளைத்து யாழ்ப்பாணம் நோக்கி விடுதலைப்புலிகளின் படைகள் முன்னேறின. இதன் இடையே 10 மணித்தியாலங்கள் தற்காலிகமாக தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சில நாட்களுக்கு உக்கிரமான தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தன. அரசப்படைகளுக்கு அதிக அளவில் சேதங்களை, காயங்களை விடுதலைப்புலிகள் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

இத் தாக்குதல்கள் தொடர்ச்சியாக சில மாதங்கள் நீடித்தன. மோதல்கள் புரட்டாதி மாத தொடக்கத்தில் அதிகரித்து மோதல்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் வரை நீண்டு சென்றன. இரு புறங்களிலும் ஆட்லறி பீரங்கிகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. திடீர் தாக்குதல்கள் அதிகரித்தது. விடுதலைப்பலிகளின் உயிலங்குளம் தளம், தம்பனைத் தளம் முன்னேறிய அரச படைகளிடம் பறிபொயின. விடுதலைப்புலிகளின் பலமான தமாக விளங்கிய பறப்பாங்கண்டல் மன்னார்த் தளம் 27ம் திகதி மார்கழி மாதம் 2007ம் ஆண்டு பறிபோனது. சண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இராணுவக் கொமாண்டர் ஜெனரல் சரத் பொன் சேகா அளித்த விபரம் பின்வருமாறு அமைந்திருந்தது. ' ஸ்ரீலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்ப எல்லை, முன்னணி அரண்களைத் தாண்டி வன்னியின் உள்ளே உள்ள விடுதலைப்புலிகளின் எல்லா மையங்களையும் சுற்றி வளைத்ததாகவும், 3000 வரையிலான விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்டதாகவும், 2008 முதல் ஆறு மாத காலத்திற்குள் இது நடந்துள்ளதாகவும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டிற்குள் விடுதலைப்புலிகளை அடியோடு அழித்துவிட முடியுமென்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர். விமானப்படைத் தளபதியும் கடற்படைத் தளபதியும் இக் கருத்தை ஆதரித்தனர். அரச இராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விமானப்படைத் தாக்குதலில் கடுமையான காயத்திற்குள்ளாகியுள்ளார் என கருதியது. 2007 கார்த்திகை மாதம் 26 அன்று நடந்த விமானத் தாக்குதலில் 'பங்கரில்' இருந்த போது கிளிநொச்சி ஜெயந்தி நகரில் இச் சம்பவம் நடந்ததாக கதை பரவியது. முன்னதாக கார்த்திகை மாதம் 2ல் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் விமானத் தாக்குதலில் மரணமடைந்திருந்தார். புலனாய்வுத்துறைப் பொறுப்பாளராக இருந்த சாள்ஸ் மற்றும் முக்கிய பகுதி நிலைத் தலைமைகள் தமது தாக்குதலில் கொல்லப்பட்டிருந்ததாகவும், உட்சென்று ஊடுருவித் தாக்குதலிலும் பல தலைமைகள் அழிந்துவிட்டதாகவும் இணையத்தளத்தில் அரசப்படையினர் தெரிவித்தனர். இதன் முன்பாக நாகர்கோவில் புலிகளின் தளமும் முகமாலைத் தளமும் முடங்கியதாக அரசு அறிவித்தது.

மன்னார் மாவட்டம் கைப்பற்றப்படல்

தொகு

ஆவணி மாதம் 2ம் திகதி 2008ல் ஸ்ரீலங்கா இராணுவம் வெள்ளாங்குளம் நகரைக் கைப்பற்றியதன் மூலம், மன்னார் மாவட்டப்புற அரணாக விளங்கிய முக்கியப் பகுதி அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இப் பகுதி கைப்பற்றப்பட்டதனால் மன்னார் மாவட்டத்தின் முழுப்பகுதியும் 8 மாத காலத்தினுள் அரசப் படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்தடைந்தது.

கடற்போர்

தொகு

22/03/2008 அன்று அரசபடையினரின் வேகத்தாக்குதல் படகு கடற்கண்ணி வெடி மூலம் வெடிக்க வைக்கப்பட்ட சந்தேகத்துடன் அழிந்து போனது. இது விடுதலைப்புலிகளின் கடற்புலிகளால் செயற்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இச் சம்பவம் இலங்கையின் வடகிழக்கு கரைக் கடலில் நடந்து முடிந்தது.

விமானப் போர்

தொகு

குறிப்பிடத் தக்க அளவிற்கான விமானப் போர்த் தாக்குதல்கள் இருதரப்பினர்களாலும் இந்தப் போர் மையங்களில் நடந்தன. குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் ஸ்ரீலங்கா விமானப் படைத் தாக்குதல்களை நடத்தியது. விடுதலைப்புலிகளின் விமானப்படையும் சிறியரக விமானம் மூலம் ஸ்ரீலங்கா இராணுவ நிலைகளைத் தாக்கியது.

புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதல்

தொகு

புதுக்குடியிருப்பில் இலங்கைப் படையினர் வேதி ஆயுதங்களால், குறிப்பாக நச்சு வாயுவால் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.[12] இந்தத் தாக்குதல்களில் இருந்து தப்பி வந்த விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான லோரன்சு இந்தத் தகவலை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களைக் கொன்று குவித்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வேதி ஆயுதங்கள் இலங்கை படையினருக்கு இந்திய அரசாங்கத்தால் தரப்பட்டதாகும்.[13]

யுத்தத்தின் முடிவு

தொகு

19/05/2009 ஸ்ரீறிலங்கா இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்தது. 26 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. 58ஆவது பிரிவுத் தளபதி பிரிகேடியர் செவேந்திர சில்வா, 59ஆவது பிரிவுக் தளபதி பிரிகேடியர் பிரசன்னா டிசில்வா, 53ஆவது பிரிவுத் தளபதி கொமாண்டர் கமல் குணரத்ன, தலைமையில் சிறிய பகுதிக்குள் அடக்கப்பட்ட விடுதலைப்புலிகளும் மக்களும் ஒன்றாக அமைந்திருந்த நந்திக்கடலேரிப் பகுதிக்குள் சதுர வடிவில் முற்றுகையிடப்பட்டனர். இந்தக் கடைசிப் போரில், விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமைகள் ஜெயம், பானு, லோறன்ஸ், பாப்பா, லக்ஸ்மணன், பாலசிங்கம் நடேசன், பொட்டம்மான், சூசை, வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிய வந்நது. காலை 19/5/2009ல் 4வது விஜயபாகு (றெஜி மென்ற்) பிரிவு றொகித அலுவிகாரையால் தலைமை வகிக்கப்பட்ட அணியினர் தலைவர் பிரபாகரனது உடலைக் கண்டுபிடிக்கப்பட்டதுடன். 3 தசாப்தங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. 22/05/2009ல் ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ பின்வரும் உறுதிப்படுத்திய தகவலை வெளியிட்டார். 6261 ஸ்ரீலங்கா இராணுவம் இழக்கப்பட்டது என்றும் காயப்பட்டோர் 29551 என்றும் அறிவித்தார். பிரகேடியர் உதயநாயக் கார வெளியிட்ட தகவலின் படி ஏறத்தாழ 22000 விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக அறிய வந்நது.

புலிகளின் வீழ்ச்சி

தொகு

கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வடக்குப் பகுதி நோக்கிய தாக்குதலை இலங்கை அரசு ஆரம்பித்தது. 2009 சனவரியில் புலிகளின் அரசியல் தலை நகரமாகக் கருதப்பட்ட கிளிநொச்சி அரச படைகளிடம் வீழ்ந்தது[14]. இதன் தொடர்ச்சியாக 2009 மே 18ம் திகதி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை முற்றுமாகத் தோற்கடித்து விட்டதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து புலிகளின் அடுத்த தலைவராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொண்டார் பத்மநாதன். ஆயினும் விடுதலைப் புலிகள் அமைப்பினுள்ளே இது சம்பந்தமாக குழப்பங்கள் நிலவின. ஆயினும் ஆகஸ்ட் 2009 இல் தன்னைத் தானே தலைவராக நிறுவிய பத்மநாதனை இலங்கை அரசு மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் கைது செய்தது[15].

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்
  2. Colombo to annul CFA
  3. "போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகல்: எழுத்து மூலம் நோர்வேக்கு சிறிலங்கா அறிவிப்பு". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.
  4. போர் நிறுத்தத்திலிருந்து விலக சிறிலங்கா அரசு முடிவு: நோர்வேக்கும் அறிவிக்கப்படும்
  5. Colombo to annul CFA
  6. ஜனவரி 16 ஆம் நாள் கண்காணிப்புக்குழு வெளியேறுகிறது
  7. பொதுமக்களை பாதுகாத்த முக்கிய உடன்பாடு முறிவடைந்துள்ளது: நோர்டிக் நாடுகள்
  8. சிறிலங்கா அரசின் முடிவு வன்செயல்களை அதிகரிக்கச் செய்யும்: ஜப்பான்
  9. சிறிலங்கா அரசின் முடிவால் எமக்கு நெருக்கடி: அமெரிக்கா
  10. சிறிலங்கா அரசின் நடவடிக்கை பெரும் கவலை தருகின்றது: ஐ.நா.
  11. "CFA abrogation unmasks LTTE - TULF leader". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2019-01-24.
  12. Colombo uses chemical weapons: LTTE
  13. http://www.lankasrinews.com/view.php?2b34OX14a3255Aye4d4YOo6ca0ac4BP34d3BTmA2e0dU0MmKce04cYdJ0cc3vlYAde
  14. Sri Lankan War Time Line – BBC
  15. "Thailand says Tamil Tiger leader arrested in Malaysia". Archived from the original on 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நான்காம்_ஈழப்போர்&oldid=3953955" இலிருந்து மீள்விக்கப்பட்டது