ஃபெஞ்சல் புயல்

ஃபெஞ்சல் புயல் (Cyclon FENGAL) என்பது இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகிய புயல் ஆகும். இது 2024 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது புயலும், 2024 ஆம் ஆண்டின் நான்காவது புயலுமாகும்.[1] ஃபெஞ்சல் என்பது சவூதி அரேபிய நாடு பரிந்துரைத்த பெயர் ஆகும்.[2] இப்புயல் 30 நவம்பர் 2024 அன்று காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

ஃபெஞ்சல் புயல்
தொடக்கம்நவம்பர் 23, 2024
மறைவுநவம்பர் 30, 2024 பிற்பகல் (கணிப்பு)
சேதம்None
2024 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

புயல் உருவாதல்

தொகு

நிலநடுக் கோட்டை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், கடந்த 23 நவம்பர் 2024 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிவித்தது. 24 நவம்பர் 2024 நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 26 நவம்பர் 2024 இரவு 11.30 மணியளவில் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்ததாகவும், அது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 27 நவம்பர் 2024 அன்று புயலாக வலுப்பெறக் கூடும் எனவும் இது அடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்தது.[3]

புயலாக மாறுவதில் தாமதம்

தொகு

28 நவம்பர் 2024 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் நகர்வு வேகம் குறைந்து ஒரு கட்டத்தில் பல மணி நேரங்களாக நகர்வின்றி ஒரே இடத்தில் நிலை கொண்டதால் ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்து புயல் உருவாகும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் தற்காலிக புயலாக கரையை கடக்கும் வாய்ப்புள்ளதாகவும் அறிவித்தது.[4]

ஃபெஞ்சல் புயலாக மாறுதல்

தொகு

29 நவம்பர் 2024 பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதாகவும் இப்புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காரைக்கால்- மகாபலிபுரம் இடையே 30 நவம்பர் 2024 பிற்பகல் புயலாகவே கரையை கடக்கும் எனவும் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தொகு

ஃபெஞ்சல் புயல் காரணமாக இலங்கை மற்றும் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் அந்தந்த ல்மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொண்டன. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 26 நவம்பர் 2024 அன்று மயிலாடுதுறை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுடன் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.[5] 28 நவம்பர் 2024 அன்று புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி பேரிடர் மேலாண்மை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு அவசர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். புதுச்சேரியில் 24/7 கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து வந்ததால் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 28 நவம்பர் 2024 அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.

அரசு நிகழ்ச்சிகள் ரத்து

தொகு

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.[6]

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தொகு

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. 27 நவம்பர் 2024 அன்று கன மழை பெய்த விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை , திருவாரூர், திருவள்ளூர், தஞ்சாவூர், திருச்சி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல் கொடைக்கானல் ஒன்றியம் மட்டும் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. புயல் கரையை கடக்கும் பகுதி என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு 28,29,30 ஆகிய தேதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்தார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தொகு

புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 2 திசம்பர் 2024 வரை மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்தது.[7]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபெஞ்சல்_புயல்&oldid=4151549" இலிருந்து மீள்விக்கப்பட்டது