அதியமான்
அதியமான் (அதியன், அதிகன், அதிகமான், சத்தியபுத்திரன்[1], சத்தியபுத்திரன் அதியன்[2]) சங்ககாலத்தில் அதிகன் நாட்டை தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசர்கள் ஆவர். சங்ககாலத் தகடூர் இக்காலத்தில் பழை தருமபுரி என்னும் பெயருடன் தருமபுரி அருகே விளங்கி வருகிறது. இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபு ஒன்றைச் சார்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. அதியர் மரபினர் சேரரின் கிளைக்குடிகளாக இலக்கியச் சான்றுகள் மூலமும் தொல்லியல் சான்றுகளின் மூலமும் அறியப்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக,
- பனம்பூ மாலை சேரருக்கே உரியதாயினும், அது அதியனின் முன்னோர்களைப் போல் அதியருக்கும் உரியதே என்றும், புறம் 99 இல் கூறப்பட்டுள்ளது. இது, சங்ககாலத்தில் அதியரும் சேரரும் ஒரே குடியைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.[3]
- பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டில் அதியர் மரபைச் சேர்ந்த விடுகாதழகிய பெருமாளின் வேலூர் மாவட்டம் திருமலைக் கல்வெட்டில் வஞ்சியர் குலபதி எழினி என்றும், சேர வமிசத்து அதிகைமான் எழினி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.[4]
- கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவனப்பள்ளியில் கிடைத்த விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டில் விடுகாதழகிய பெருமாளை சேரமான் பெருமாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]
- சித்தூர் மாவட்டம் லதிகம்/லட்டிகம் என்று இன்று வழங்கப்படும் ஊரில் உள்ள விடுகாதழகிய பெருமாளின் கல்வெட்டில், சங்ககால சேரரின் சின்னங்களான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.[6]
- விடுகாதழகிய பெருமாள் என்ற பெயரில் உள்ள அழகிய பெருமாள் எனும் பட்டம் பிற்கால சேரருக்கும் இருந்தது.
- 16ஆம் நூற்றாண்டைச் சேர்த்த கரபுரநாதர் புராணத்தில், அதியனை சேரலன் என்றே குறிக்கப்படுகின்றது.[7]
இவற்றின் மூலம், அதியர் மரபினர் சேரரின் கிளை மரபினர் என்பதும்[8], பிற்கால சோழருக்குக் கீழ் பிற்கால அதியர் மரபினனான விடுகாதழகிய பெருமாள் ஆட்சி செய்த நிலப்பரப்பும் அறியவருகிறது. மேலும், சிந்துவெளி எழுத்தாய்வு அறிஞரான இரா. மதிவாணன் அவர்கள், நியூ கினியாவுக்கு அருகிலுள்ள சாலமன் தீவில் இயற்கையாக விளைந்த கரும்புப் பயிரை பொ.ஊ.மு. 3000 கால அளவில் தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்ட சேரனின் பெயர் அதியஞ்சேரல், என்று கூறுகிறார். சங்க இலக்கியப்படி, கரும்பை முதன் முதலில் சங்ககால தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிட்டது அதியமான் மரபினர் என்றுள்ளது. இதிலிருந்தும், அதியஞ்சேரல் என்ற பெயரிலிருந்தும் அதியர் குடியினர் சேரரின் கிளைக்குடியினர் என்பதை அறியலாம்.
அதிகமான் கள்ளர்குலப்பட்டப்பெயர்களுள் ஒன்று, மேலும் ஒருசார் கள்ளர், அதிகமான் வழிவந்த பிற்காலச் சிற்றரசருள் ஒருவனுடைய படை மறவரா யிருந்திருக்க வேண்டும் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி குறிப்பிடுகின்றது.[9]
இடம்
தொகுசங்ககாலம்
தொகுதற்கால தருமபுரி மாவட்டம் தவிற, சங்ககால அதியர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு எது எது என்று முழுமையாக அறியப்படவில்லையென்றாலும், பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து[1] பொ.ஊ. 1ஆம் நூற்றாண்டு[2][10] வரை இதுவரை கிடைத்துள்ள தொல்லியல் ஆதாரங்களையும் சங்க இலக்கிய ஆதாரங்களையும் வைத்து பார்க்கும் போது, அதியன் நாடு மலையமான் ஆட்சி செய்த திருக்கோவலூர் நாட்டின் எல்லை வரை நீண்டிருந்தது தெரியவருகிறது.
பிற்காலம்
தொகுபிற்கால அதியர் மரபினர், இதுவரை கிடைத்துள்ள இலக்கியம் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் படி, பிற்கால சோழருக்குக் கீழ், பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, தற்கால ஆந்திரத்தில் உள்ள சித்தூர், தமிழ்நாட்டின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளை உள்ளடக்கி ஆட்சி புரிந்தனர்.[11]
சங்கப் பாடல்களில்
தொகுசங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அதியர் கோமான் என்று அஞ்சியும் (அதியமான்)[12] அவன் மகன் எழினியும் [13] குறிப்பிடப்படுகின்றனர். எழினி அதியமான் எழினி என்றும் குறிப்பிடப்படுகிறான். சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீண்ட ஆயுள் தரும் நெல்லிக்கனி அதியமானுக்கு கிடைத்த போது அதை தான் உண்ணாமல் ஔவையாரின் சேவைகருதி அவருக்கு ஈந்தான். ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் நெடுமான் அஞ்சி அதிகன் என்றும் குறிப்பிடப்படுகிறான்.[14] இவன் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகக் குறிப்பிடப்படுகிறான்.[15] இவன் மகன் எழினியை மற்றொரு புலவர் கடையேழு வள்ளல்களில் ஒருவன் என்கிறார்[16]. அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் முதன் முதலாகத் தமிழ்நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர்[17].
அதியன், அதிகன் என்னும் சொற்கள் ஒருவனையே குறிப்பதால் ‘அத்தி’ என்னும் அரசனும் இக் குடியைச் சேர்ந்தவன் எனக் கொள்வது பொருத்தமானது என்றும் ‘அத்திமரம்’ இக் குடிமக்கள் தலைவனின் காவல்மரமாக இருந்திருக்கலாம் என்றும் கூறுவாருமுளர்.
அதியர் மரபு அரசர்கள்
தொகுஅதியர் மரபு சேரர் மரபிலிருந்து எப்போது எப்படி முதன்முதலில் தோன்றியது என்பது தெரியவில்லையென்றாலும், பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகரின் காலத்தில் அசோகரால் வெட்டப்பட்ட இரண்டாம் பெரும்பாறை கல்வெட்டில், மூவேந்தர்களுடன் அதியர் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால், குறைந்தபட்சம் பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே, அதியர்கள் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெரியவருகிறது. அக்கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த அதியர் மரபு அரசர்கள் பெயர்கள் தெரியவில்லையென்றாலும் அதற்கு பிந்தைய காலத்திலிருந்து பிற்கால சோழர் காலம் வரை ஐந்து அதியர் மரபு அரசர்கள் பல்வேறு இலக்கியம் மற்றும் தொல்லியல் சான்றுகள் மூலம் அறியப்படுகிறார்கள்.
- அதியமான் நெடுமிடல்
- அதியமான் நெடுமான் அஞ்சி - பொ.ஊ.மு. 1ஆம் நூற்றாண்டு[2]
- அதியமான் பொகுட்டெழினி
- இராசராச அதியமான் - பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, பிற்கால சோழருக்குக் கீழ்
- விடுகாதழகிய பெருமாள் - பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, பிற்கால சோழருக்குக் கீழ்
அதியமான் நெடுமிடல்
தொகுஅதியமான் நெடுமான் அஞ்சி
தொகுஅதியமான் பொகுட்டெழினி
தொகுஅதியமான் பொகுட்டெழினி என்பவன் சங்ககாலத்தில் தகடூர் நாட்டை ஆண்ட ஒரு மன்னன். அதியமான் மரபைச் சேர்ந்த இம்மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன். இவனது தந்தையைப் பாடிய ஔவையார், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் இவனையும் பாடியுள்ளனர். இவனும் வீரத்திலும், கொடைச் சிறப்பிலும் புகழ் பெற்று விளங்கியது மேற்படி புலவர்களுடைய பாடல்கள் மூலம் தெரிகிறது.
அதியமானுக்கும் சேர மன்னனுக்கும் நிகழ்ந்ததாக இலக்கியங்கள் கூறும் தகடூர்ப் போர் இவனுக்கும் சேரனுக்கும் இடையிலேயே நிகழ்ந்ததாகக் கூறுவாரும் உளர். இப்போரில் இறந்தவன் பொகுட்டெழினியே அன்றி நெடுமான் அஞ்சி அல்ல என்கின்றனர் இவர்கள். இப்போர் பற்றி விபரிக்கும் தகடூர் யாத்திரை என்னும் நூல் முழுமையாகக் கிடைக்காததால் இது குறித்துத் தெளிவான முடிவு எதுவும் இல்லை. இந் நூலிலிருந்து இது வரை கிடைத்த பாடல்கள் எதிலும் மன்னர்களின் இயற் பெயர்கள் இடம்பெறவில்லை.
இம்மன்னனே சங்ககால அதியர் மரபின் கடைசி மன்னன் என வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.
இராசராச அதியமான்
தொகுஇராசராச அதியமான் என்பவன், 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தகடூர்நாட்டை ஆண்ட அரசன். சோழப் பேரரசுக்குக் கீழ்ப்பட்டு ஆட்சி செய்து வந்தான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். சங்க காலத்துக் மன்னர்களான அதியமான் மரபினரில் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் அரசனாக அறியப்படும் முதல் மன்னன் இவனாவான். தகடூர்ப் பகுதியில் இவன் கோயில்களுக்குத் தானம் அளித்ததையும், திருப்பணிகள் செய்ததையும் குறிப்பிடும் பல கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன[18].
இப்போது அதியமான் கோட்டை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த கோட்டையைக் கட்டியவன் இராசராச அதியமானே எனக் கருதப்படுகிறது[18]. தருமபுரிப் பகுதியில் உள்ள மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் என்னும் ஊர்களுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலத்து வழித்தூரம் குறிக்கும் கற்கள் இரண்டு அதியமான் பெருவழி என்னும் சாலையில் இருந்த நாவல்தாவளத்துக்கான தூரத்தைக் குறிக்கின்றன. இக் கற்களும் இதே மன்னன் காலத்தவை எனப்படுகின்றன[11].
விடுகாதழகிய பெருமாள்
தொகுவிடுகாதழகிய பெருமாள் என்பவன் அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவன் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவன். இவன் இப் பகுதியை ஆண்ட இராசராச அதியமானின் மகன். இவனது ஆட்சி சுமார் 25 ஆண்டுகள் நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. சோழப் பேரரசுக்கு அடங்கி ஆட்சி புரிந்த இம்மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவன். இவனது ஆட்சிப்பகுதி ஆந்திராவில் உள்ள சித்தூர், தமிழ் நாட்டின் வட ஆற்காடு, தென் ஆற்காடு, சேலம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி விரிவடைந்திருந்தது[11].
இவனது காலத்தைச் சேர்ந்தவையாகக் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவன் சைவக் கோயில்களுக்குச் செய்த திருப்பணிகள் பற்றியும் சமணக் குடைவரை கோயில்களைப் புதுக்கி அமைத்தமை பற்றியும் கூறுகின்றன. வாணியம்பாடியில் உள்ள ஒரு சைவக் கோயிலில் சிவனுக்கு விடுகாதழகிய ஈசுவரமுடையார் என்ற பெயர் இருப்பதும், ஊத்தங்கரை என்னுமிடத்தில் விடுகாதழகிய பெரும்பள்ளி என்னும் சமணப் பள்ளி ஒன்று இருந்தது பற்றிக் கல்வெட்டுகள் கூறுவதாலும்[19] சமணம், சைவம் இரண்டுக்கும் இம்மன்னன் உதவியளித்துச் சமயப் பொறையை கடைப்பிடித்து வந்தமை தெரிகிறது.
விடுகாதழகிய பெருமாளுக்குப் பின்னர் ஹொய்சளர் வலிமை பெற்றதால் சோழர்கள் தகடூர்ப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை இழந்ததுடன், அதியர் மரபினரின் ஆட்சியும் அற்றுப்போனது[20]. விடுகாதழகிய பெருமாளே அதியர் மரபின் கடைசி மன்னனாவான்.
கல்வெட்டுக்கள்
தொகுஜம்பைக் கல்வெட்டு
தொகுஅதியர்களை அசோகரின் கிர்னர் கல்வெட்டில் சத்தியபுத்திரர் என குறிபிடபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக இக்விளங்குகின்றது. சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமான் அஞ்சியை ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.
- கல்வெட்டு வரி: ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி
- கல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)[21]
சங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இக் கல்வெட்டின் ஒரு சிறப்பு. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் "சதிய புத்தோ" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம், பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட அசோகனின் கல்வெட்டொன்றில், தன் நாட்டுக்கு வெளியேயுள்ள சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும்[22] முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும்.
மேலும், அதியமானை ஸதியபுதோ என்றும் குறிப்பிட்டதில் உள்ள 'ஸதிய' என்பது அதியர் என்னும் சொல்லின் வடமொழி ஒலி. 'புதோ' என்பது 'புத்திரன்' என்னும் வடசொல்லின் சிதைவு. 'மகன்' என்னும் தமிழ்ச்சொல்லின் மொழிபெயர்ப்பு.[23] 'மகன்' எனும் சொல் 'மான்' என மருவியது.[24]
இவற்றையும் பார்க்கவும்
தொகு- அதியமான் நெடுமிடல்
- அதியமான் நெடுமான் அஞ்சி
- அதியமான் பொகுட்டெழினி
- இராசராச அதியமான்
- விடுகாதழகிய பெருமாள்
- தகடூர்
- அதியமான் கோட்டை
- அதியமான் பெருவழி
- ஜம்பைக் கல்வெட்டு
- தகடூர் யாத்திரை
- தகடூர்ப் போர்
- தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
- வே. தில்லைநாயகம் எழுதிய அரசரும் புலவரும்
- தகடூர் வரலாறும் பண்பாடும் (நூல்)
வெளியிணைப்புக்கள்
தொகு- ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் கல்வெட்டு பரணிடப்பட்டது 2013-06-10 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 அசோகனின் பெரும்பாறை இரண்டாம் கல்வெட்டு (Edict II)
- ↑ 2.0 2.1 2.2 ஜம்பைக் கல்வெட்டு
- ↑ தொன்னிலை மரபின் நின் முன்னோர் போல
ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து
- புறநானூறு, 99 - ↑ விடுகாதழகிய பெருமாளின் திருமலை கல்வெட்டு, From S.I.I, Vol 1, pg:106
- ↑ கல்வெட்டு தொடர் எண் : /1975, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டு தொகுப்புகள், தமிழக தொல்லியல்துறை
- ↑ A.R.E 1906, nos 544, 545, 547
- ↑ பூதலத்தினி லதிகமான் மணிமுடி பொறுத்தர சியற்றுங்காற்
காதலாய்க்கருங் காட்டிடைச் சித்தரைக் கண்டு வந்தனை செய்து
வீதலின்மருந் தொன்றரு ளென்னலும் விண்புகு கருநெல்லித்
தீதிலாக்கனி யொன்றினை யுதவவே சேரலன் மகிழ்வெய்தி
- கரபுரநாதர் புராணம் - ↑ University of Madras Lexicon, அதியர் - atiyar * n. id. Name of the line of Atiyamāṉ, a branch of the Cēras; அதியமான் வம்சத்தோர். (புறநா. 91.)
- ↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. 1985. pp. 208.
- ↑ தகடூர்ப் போர்
- ↑ 11.0 11.1 11.2 சாந்தலிங்கம், சோ., 2006, பக். 103
- ↑ புறம் 91-3,
- ↑ புறம் 392,
- ↑ சிறுபாணாற்றுப்படை 103
- ↑ சிறுபாணாற்றுப்படை
- ↑ பெருஞ்சித்திரனார் தம் புறம் 158 தொகுப்பில் ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல் கொடும்பூண் எழினி என்கிறார்
- ↑ புறம் 396
- ↑ 18.0 18.1 சாந்தலிங்கம், சோ., 2006, பக். 102
- ↑ சாந்தலிங்கம், சோ., 2006, பக். 104, 105
- ↑ சாந்தலிங்கம், சோ., 2006, பக். 106
- ↑ "ஜம்பை கல்வெட்டு". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2015.
- ↑ http://www.philosophyprabhakaran.com/2013/06/blog-post_25.html
- ↑ Kongu Nadu, a History Up to A.D. 1400, முனைவர் வீ. மாணிக்கம்
- ↑ ஸதியபுதோ=ஸதிய+புதோ=அதியன்+மகன்=அதியன்+மான்(மரூஉ)=அதியமான்
உசாத்துணைகள்
தொகு- சாந்தலிங்கம், சோ., வரலாற்றில் தகடூர், புது எழுத்து வெளியீடு, காவிரிப்பட்டினம். 2006.