அப்துர் ரசித் கர்தார்

இந்திய நடிகர்

அப்துர் ரசித் கர்தார் (Abdur Rashid Kardar) (1904-1989) ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். பித்தானிய இந்தியாவில் (இப்போதைய பாக்கித்தானில் உள்ளது) இலாகூரில் உள்ள பாடி கேட் பகுதியில் திரைப்படத் துறையை நிறுவிய பெருமைக்குரியவர்.[1][2]

அப்துர் ரசித் கர்தார்
பிறப்பு(1904-10-02)2 அக்டோபர் 1904
இலாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா இன்றைய பாக்கித்தான்)
இறப்பு22 நவம்பர் 1989(1989-11-22) (அகவை 85)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர்
அமைப்பு(கள்)பாலிவுட்
வாழ்க்கைத்
துணை
அக்தர் சுல்தானா

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

தொகு

கர்தார் இலாகூரில் உள்ள பாடி கேட் பகுதியில் புகழ்பெற்ற அரெய்ன் செயில்தார் குடும்பத்தில் பிறந்தார். பாக்கித்தானியத் துடுப்பாட்ட அணியின் முதல் தலைவர் அப்துல் ஹாபிஸ் காதர் இவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார்.[3]

கர்தார் ஒரு கலை அறிஞராகவும், வனப்பெழுத்து கலைஞராகவும் வெளிநாட்டு திரைப்படத் தயாரிப்புகளுக்கு சுவரொட்டிகளை தயாரிக்கவும், 1920 களின் முற்பகுதியில் செய்தித்தாள்களுக்கு எழுதவும் தொடங்கினார்.[4] இவரது பணி பெரும்பாலும் பிரித்தானிய இந்தியாவைச் சுற்றியுள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களைச் சந்திக்க வழிவகுத்தது.

1928 ஆம் ஆண்டில், தி டாட்டர்ஸ் ஆஃப் டுடே என்ற முதல் ஊமைத் திரைப்படம் இலாகூரில் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் நகரத்தில் ஒன்பது திரைப்பட நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இலாகூரில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் ஹாலிவுட் அல்லது இலண்டனில் தயாரிக்கப்பட்டதைத் தவிர மும்பை அல்லது கொல்லத்தாவில் தயாரிக்கப்பட்டன. தி டாட்டர்ஸ் ஆஃப் டுடே வடமேற்கு ரயில்வே முன்னாள் அதிகாரியான ஜி. கே. மேத்தாவின் தயாரிப்பில் சங்கரதேவ் ஆர்யா என்பவரின் இயக்கத்தில் வெளியானது.[5] மேத்தா இலண்டனில் இருந்து புகைப்பட கருவியை இறக்குமதி செய்தார். இந்தத் திட்டத்தில் உதவி இயக்குனராக தனக்கு உதவுமாறு அவர் கர்தாரிடம் கேட்டுக்கொண்டார். இறுதியில் ஒரு நடிகராக தனது படத்தில் கர்தாருக்கு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். கர்தாரின் நண்பரும் சக எழுத்தாளருமான முகமது இஸ்மாயில், இந்த திரைப்படத்தின் தயாரிப்பில் கர்தாருடன் சேர்ந்தார்.[4]

திரைப்படத் துறைக்கு அடித்தளம் அமைத்தல்

தொகு

1928 ஆம் ஆண்டில், கர்தார் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரும் தங்கள் உடமைகளை விற்று, இலாகூரில் திரைப்படத் துறைக்கு அடித்தளமாக இருந்த யுனைடெட் பிளேயர்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினர். 1930 ஆம் ஆண்டில் இவர்கள் தங்களது நிறுவனத்தின் கீழ் முதல் ஊமைத் திரைப்படத்தைத் தயாரித்தனர்.[4]

ஹுஸ்ன் கா டாகு என்கிற மிஸ்டீரியஸ் ஈகிள் என்ற திரைப்படத்தின் மூலம் கர்தார் இயக்குனராக அறிமுகமானார். குல்சார் பேகம் என்பவருக்கு இணையாக கர்தார் ஆண் கதாநாயகனாகவும், இஸ்மாயில் துணை வேடத்திலும் நடித்திருந்தனர். இப்படத்தில் அமெரிக்க நடிகரான ஐரிஸ் கிராஃபோர்டு என்பவரும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் மிதமான வெற்றியையேப் பெற்றது. ஆனால் முக்கியமாக இலாகூரை ஒரு செயல்படும் திரைப்படத் துறையாக நிலைநிறுத்தியது.

கர்தார் புரொடக்ஷன்ஸ் அமைத்தல்

தொகு

கர்தார் 1930 இல் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்து கிழக்கிந்திய திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் அவர்களுக்காக சுமார் ஏழு படங்களை உருவாக்கினார். 1937இல் நிறுவனம் மூடப்பட்ட பிறகு இவர் மும்பைக்கு குடிபெயர்ந்து பாக்பன் என்ற ஒரு திரைப்படத்தை உருவாக்கினார். இதில் கோஹர் தங்கப் பதக்கத்தை வென்ற நடிகை பிம்லா குமாரி, பி. நந்த்ரேகர் மற்றும் சித்தாரா தேவி ஆகியோர் நடித்திருந்தனர்.[6]

அதைத் தொடர்ந்து, 1937 ஆம் ஆண்டின் இறுதியில் ரஞ்சித் மூவிடோன் நிறுவனத்தில் சேர்ந்து அவர்களுக்காக மூன்று படங்களை இயக்கினார். இங்கிருந்து அவர் சிர்கோ புரொடக்டசன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சென்றார்., ஆனால் ஒரு வருடம் கழித்து, 1939 ஆம் ஆண்டில், சிர்கோ புரோடக்டசன்ஸ் லிமிட்டெட் கலைக்கப்பட்டபோது, கர்தார் நிறுவனத்தை வாங்கி, கர்தார் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 1940 முதல் திரைப்படங்களை உருவாக்கத் தொடங்கினார். அந்த நாட்களில் சிறந்த வசதிகளுடன் கூடிய அரங்கங்களில்ல் ஒன்றாக கர்தார் ஸ்டுடியோஸ் இருந்தது. மேலும் குளிரூட்டப்பட்ட ஒப்பனை அறைகளைக் கொண்ட முதல் இடமாகவும் இருந்தது.

பிற்கால ஆண்டுகள்

தொகு

1946 ஆம் ஆண்டில், கர்தார் கே. எல். சைகல் மற்றும் இசையமைப்பாளர் நௌசாத் ஆகியோருடன் சேர்ந்து வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஷாஜஹான் என்ற படத்தை தயாரித்தார்.[7] இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன.[8]

நௌசாத், மச்ரூக் சுல்தான்புரி, சுரையா மற்றும் பாக்கித்தானியத் திரைப்படத்துறையின் நிறுவனர்களில் ஒருவரான நசீர் அகமது கான் போன்ற பல கலைஞர்களை இந்தித் திரைப்படத் துறைக்கு அறிமுகப்படுத்தினார். கர்தாரின் துலாரி (1949) படத்தில் இடம்பெற்ற சுஹானி ராத் தால் சுகி என்ற பாடல் மூலம் பாடகர் முகமது ரபி தனது முதல் வெற்றியை இவரது திரைப்படத்தின் மூலம் பெற்றார். புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதற்காக இவர் கர்தார்-கொலினோஸ் போட்டியையும் தொடங்கினார். இந்த போட்டியின் மூலம் இவர் சந்த் உசுமானி மற்றும் மகேந்திர கபூர் ஆகியோரைக் கண்டுபிடித்து தொழில்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

குடும்பமும் இறப்பும்

தொகு

கர்தார் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனைவி அக்தர் சுல்தானா தனது கணவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு 1988 இல் இறந்தார். இந்தியத் திரைப்படத்துறையின் முன்னோடி தயாரிப்பாளர்-இயக்குனரின் மனைவி சர்தாரின் சகோதரி பகர் இவரது இரண்டாவது மனைவி ஆவார். மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் வசித்து வந்த கர்தார், தனது 85 வயதில், 1989 நவம்பர் 22 அன்று, காலமானார்.[9]

மேற்கோள்கள்

தொகு
  1. "Our Founders (scroll down for Kardar profile)". The Film and TV Producers Guild of India website. 2 April 2012. Archived from the original on 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2022.
  2. A. R. Kardar (a profile). Indian Cinema Heritage Foundation website. Retrieved 5 February 2022.
  3. Ahmed, Ishtiaq. Pre-Partition Punjab's Contribution to Indian Cinema. Taylor & Francis. pp. The pioneer of the Lahore film industry and later, a legendary film-maker in Bombay, A.R. Kardar was also a Lahore Arain belonging to the Zaildar family of Bhaati Gate.
  4. 4.0 4.1 4.2 "Our Founders (scroll down for Kardar profile)". The Film and TV Producers Guild of India website. 2 April 2012. Archived from the original on 30 March 2015. பார்க்கப்பட்ட நாள் 5 February 2022.
  5. Malik, Iftikhar H. (2005). Culture and customs of Pakistan. Westport, Conn.: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313331268.
  6. Rehina Pereira (31 March 2021). "Remembering A Pioneer: A R Kardar". Indian Cinema Heritage Foundation website. பார்க்கப்பட்ட நாள் 6 February 2022.
  7. Ashish Rajadhyaksha; Paul Willemen; Professor of Critical Studies Paul Willemen (2014). Encyclopedia of Indian Cinema. Routledge. p. 306. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-94318-9.
  8. Ashok Raj (2009). Hero Vol.1. Hay House, Inc. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-81398-02-9.
  9. Vidura. Vol. 27. C. Sarkar. 1990.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துர்_ரசித்_கர்தார்&oldid=4169328" இலிருந்து மீள்விக்கப்பட்டது