அப்துல் ரசாக் (துடுப்பாட்ட வீரர்)

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அப்துல் ரசாக் (Abdul Razzaq, பிறப்பு - டிசம்பர் 2, 1979) பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முனாள் சகலத் துறையர் மற்றும் தலைவர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடினார். 1996 ஆம் ஆண்டில் லாகூர், கடாபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது 16 ஆவது வயதில் இவர் அறிமுகமானார். 2009 ஐசிசி உலக இருபது20 போட்டியில் கோப்பை வென்ற பாக்கித்தான் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத்துறையர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். மொத்தமாக இவர் 265 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் 46 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

தனது 38 ஆம் வயதில் ஓய்வினை அறிவித்த பிறகு உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட இருபதாக அப்துல் ரசாக் தெரிவித்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அப்துல் ரசாக் ஆயிஷா என்பவரைத் திருமணம் செய்தார்.[2] இவருக்கு முகம்மது அஃப்சால், முகம்மது ஃபைஷால், முகம்மது அஷ்ஃபாக் ஆகிய மூன்று சகோதரர்களும், சைமா ஷாகித் எனும் சகோதரியும் உள்ளனர்.

சர்வதேச போட்டிகள் தொகு

1996 ஆம் ஆண்டில் லாகூர், கடாபி துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தனது 16 ஆவது வயதில் இவர் அறிமுகமானார். பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1999 ஆம் ஆண்டில் பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். 1999-2000 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கார்ல்டன் மற்றும் யுனைட்டட் சீரிசில் சிறப்பாக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இதில் ஹோபார்ட்டில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 50 ஓட்டங்களைப் பதிவு செய்தார். மேலும் 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இதே தொடரில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரன போட்டியில் கிளென் மெக்ராவின் ஒரே ஓவரில் 5 நான்குகள் அடித்து 20 ஓட்டங்களை எடுத்தார். மேலும் இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதினைப் பெற்றார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் பாக்கித்தான் அணியில் நிலையான இடத்தைத் தக்கவைத்தார்.

1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் தொகு

இவர் தொடர்ச்சியாகப் பந்து வீச்சாளராகவும், மட்டையாளராகவும் சிறப்பக செயல்பட்டதனால் பாக்கித்தான் தேர்வுக்குழு உறுப்பினர்கள் இவரை உலகக்கிண்ணத் தொடருக்குத் தேர்வு செய்தனர். இங்கிலாந்தில் நடைபெற்ற 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் சகலத்துறையராக இவர் சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் அரைநூறினைப் பதிவு செய்தார். மேலும் இன்சமாம் உல் ஹக்குடன் இணைந்து அணியின் மொத்த ஓட்டத்தை 275 ஆக உயர்த்த உதவினார்.[3] இந்தப் போட்டியில் இவர் 60ஓட்டங்கள் அடித்து அணியை சூப்பர் சிக்ஸ்க்கு செல்ல உதவினார்.[3] பின் பிரிஸ்டலில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களை வீசி 32 ஓட்டஙகளை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 3 ஓவர்களை மெய்டனாக வீசினார்.[4]

சான்றுகள் தொகு

  1. "Abdul Razzaq to make comeback aged 38". ESPN. http://www.espn.in/cricket/story/_/id/23433022/abdul-razzaq-make-comeback-aged-38. 
  2. "Abdul Razzaq Is Married To Ayesha". Awami Web.
  3. 3.0 3.1 "16th Match: Australia v Pakistan at Leeds, May 23, 1999 | Cricket Scorecard". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2 October 2010.
  4. "5th match: Pakistan v West Indies at Bristol, May 16, 1999 | Cricket Scorecard". Cricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2 October 2010.