அமானி வில்லியம்ஸ் ஹண்ட் அப்துல்லா
அமானி வில்லியம்ஸ் அப்துல்லா (ஆங்கிலம்: Amani Williams Hunt Abdullah; (மலாய் Amani Williams Hunt bin Abdullah) (பிறப்பு: மே 21, 1953) மலேசியாவில் பழங்குடியினர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் ஒரு சமூக நீதியாளர். தீபகற்ப மலேசியா பழங்குடியினர் கழகத்தின் தலைவராகச் செயலாற்றியவர்.
அமானி வில்லியம்ஸ் அப்துல்லா Amani Williams Hunt bin Abdullah 阿曼尼威廉姆斯亨特 | |
---|---|
பிறப்பு | 21 மே 1953 தாப்பா பேராக் |
இருப்பிடம் | ஈப்போ, மலேசியா |
தேசியம் | மலேசியர் |
மற்ற பெயர்கள் | தலைவர், தீபகற்ப மலேசியா பழங்குடியினர் கழகம் (1987 - 1991) நிறுவனர், பேராக் மலேசியப் பழங்குடியினர் வாரியம் மலேசியப் பழங்குடியினர் ஆலோசகர் மன்ற உறுப்பினர் |
கல்வி | 1. இளங்கலை பொருளாதாரம் 2. சட்டவியல் 3. சட்டத் தொழில் சான்றிதழ் மலாயா பல்கலைக்கழகம் |
பணி | வழக்கறிஞர் |
பணியகம் | கமால் பாங் நிறுவனம் ஈப்போ |
அறியப்படுவது | மலேசியப் பழங்குடியினர் உரிமைப் போராளி |
சமயம் | இஸ்லாம் |
பெற்றோர் | தப்பனார்: பீட்டர் வில்லியம்ஸ்-ஹண்ட் |
வாழ்க்கைத் துணை | காத்திமாதுல் ஹுஸ்னா ஜைனுடின் |
பிள்ளைகள் | 6 |
மலேசியப் பூர்வீக மக்களின் முதல் ஆண் வழக்குரைஞர். மலேசியாவின் 13வது தேர்தலில் போட்டியிடும் முதல் மலேசிய பூர்வீகக் குடியினர். தீபகற்ப மலேசியாவின் வரலாற்றிலேயே ஒரு பூர்வீகக் குடியினர் தேர்தலில் நிற்பது இதுவே முதல் முறை.
மலேசியாவில் 149,512 பழங்குடியினர் மக்கள் வாழ்கின்றனர்.[1] அவர்களில் மூன்றே மூன்று பேர்தான் வழக்குரைஞர்களாகப் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஒருவர் அமானி வில்லியம்ஸ் அப்துல்லா. மற்ற இருவரும் பெண்கள்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுBah Tony என்று ஓராங் அஸ்லி மக்களால் அன்பாக அழைக்கப்படும் அமானி வில்லியம்ஸ், பேராக், தாப்பா, கம்போங் சுங்கை தெலோம் எனும் பழங்குடியினர் கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை தாப்பா தொடக்கப் பள்ளியிலும், இடைநிலைப் பள்ளியை தாப்பா ஆங்கிலப் பள்ளியிலும் முடித்துக் கொண்டு, 1972ஆம் ஆண்டு, தம்முடைய பட்டப்படிப்பை மேற்கொள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பொருளாதாரத் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர், தனியார் வங்கியில் ஓர் உயர்நிலை அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இளம் வயதில் தான் ஒரு வழக்குரைஞராக வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார்.[2] 1999ஆம் ஆண்டு சட்டப் படிப்பைப் பகுதி நேரமாக மேற்கொண்டார்.
முதல் ஆண் வழக்குரைஞர் எனும் சாதனை
தொகுவங்கியில் 26 ஆண்டுகாலம் பணியாற்றிய பின், 2006இல் வேலையை நாஜிநாமா செய்துவிட்டு, மலாயா பல்கலைக்கழகத்தில் முழுநேர சட்டப்படிப்பைத் தொடர்ந்தார். சட்டத் தொழில் சான்றிதழையும் பெற்றார்.
இவர் 2010 அக்டோபர் 22இல், ஈப்போ உயர்நீதிமன்றத்தில் நீதிபதி டத்தோ ஜைனல் அட்சாம் அப்துல் கனி முன்னிலையில் வழக்குரைஞராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.[3] மலேசியாவின் பூர்வீகக் குடிமக்களில் முதல் ஆண் வழக்குரைஞர் எனும் சாதனையையும் படைத்தார்.[4]
தந்தையார் பிரித்தானிய அதிகாரி
தொகுதந்தையாரின் பெயர் பீட்டர் டாரல் ரைடர் வில்லியம்ஸ்-ஹண்ட் (ஆங்கில மொழி: Peter Darell Rider Williams-Hunt). இவர் ஓர் ஆங்கிலேயர். இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், மலாயா பூர்வீகக் குடிமக்களின் நலனபிவிருத்தி அதிகாரியாகச் சேவை செய்தார்.
இவருடைய தந்தையார் பிரித்தானிய அதிகாரியாகப் பணிபுரிந்த காலத்தில், அவருக்கு வேறுவிதமான பொழுதுபோக்கும் இருந்தது. வானில் இருந்து நிலப் புகைப்படங்களை எடுப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இவர் ஏறக்குறைய 6000 படங்களை எடுத்து மலாயா அரும் காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார். அதைத் தவிர மலேசியப் பூர்வீகக் குடிமக்களைப் பற்றியும் ஆய்வுநூல்களை எழுதியுள்ளார்.[5][6]
துயர நிகழ்ச்சி
தொகுதாயாரின் பெயர் வா டிராமான் (ஆங்கில மொழி: Wah Draman). கேமரன் மலை அடிவாரத்தில் இருக்கும் கோலா வோ எனும் இடத்தைச் சேர்ந்தவர். இவர் பழங்குடியினர் மக்களில் செமாய் (ஆங்கில மொழி: Semai) இனத்தைச் சேர்ந்தவர். வா டிராமானின் தந்தையார் செமாய் இன மக்களின் கிராமத்துத் தலைவர்.
அமானி வில்லியம்ஸ் அப்துல்லாவின் தந்தையார், அடர்ந்த காட்டில் பொதியுந்து ஓட்டிச் செல்லும் போது நடந்த விபத்தில், ஒரு நீண்ட மூங்கில் குச்சி அவருடை நெஞ்சில் ஆழமாய்ப் பாய்ந்துவிட்டது. எட்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 11, 1953இல், பத்து காஜா மருத்துவமனையில் இறந்து போனார். அமானி வில்லியம்ஸ் அப்துல்லா பிறந்த மூன்றாவது வாரத்தில் அந்தத் துயர நிகழ்ச்சி நடைபெற்றது.[7]
பொது வாழ்க்கை
தொகுஅமானி வில்லியம்ஸ் அப்துல்லா, மலேசியாவில் பெரும்பாலான பழங்குடியினர் மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவர் பழங்குடியினர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். இவர் ஒரு வழக்குரைஞர் என்பதால், தம் இன மக்களுக்கும், ஏழை இந்திய மக்களுக்கும் இலவச சட்ட உதவிகள் செய்து வருகிறார்.
1987 ஆம் ஆண்டில் இருந்து 1991 வரை, தீபகற்ப மலேசியா பழங்குடியினர் கழகத்தின் தலைவராக பதவி வகித்தார். பேராக் மலேசியப் பழங்குடியினர் வாரியத்தை உருவாகியவ இவர், மலேசியப் பழங்குடியினர் ஆலோசகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். தவிர, மலேசிய வழக்கறிஞர் மன்றத்தில், மலேசியப் பழங்குடியினர் உரிமைக்குழு செயலவை உறுப்பினராகவும் இருக்கின்றார்.
ஏழ்மைப் பின்னணியைக் கொண்ட இவர், புறக்கணிப்பு செய்யப்பட்ட சமூக அடிமட்ட மக்களுக்காக கடந்த 30 ஆண்டுகளாகப் பல சேவைகளைச் செய்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் காத்திமாதுல் ஹுஸ்னா ஜைனுடின். இவருக்கு ஆறு பிள்ளைகள். இருவர் ஆண்கள். நால்வர் பெண்கள்.
அரசியல்
தொகுஓராங் அஸ்லி சமூகத்தவரின் மேம்பாட்டிற்காக, தேசிய ஆலோசனை மன்றத்தை மலேசியாவின் கிராமப்புற வட்டார மேம்பாட்டு அமைச்சு அமைத்துள்ளது. அதன் செயலவை உறுப்பினர்களில் ஒருவராக அமானி வில்லியம்ஸ் ஹண்ட் அப்துல்லா தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறார்.
அரசியலில் ஈடுபட்டு தன்னுடைய சமூகத்தவரின் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று நம்பிய அமானி வில்லியம்ஸ், 2011ஆம் ஆண்டில், ஜ.செ.க எனும் ஜனநாயக செயல் கட்சியுடன் இணைந்தார்.[8] ஆனால், அக்கட்சியினர் பழங்குடி மக்களின் தேவைகளை அறிந்து கொள்வதில் அக்கறை காட்டவில்லை என்று குறை சொல்லப்பட்டது. அதனால், அவர் அக்கட்சியில் இருந்து விலகிக் கொண்டார்.[9]
மேற்கோள்கள்
தொகு- ↑ The largest group are the Senois, constituting about 54% of the total Orang Asli population. The Proto-Malays form 43%, and the Semang forming 3%.
- ↑ Orang asli realises his ambition.
- ↑ "Orang Asli Activist is Admitted to the Bar". Archived from the original on 2012-08-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
- ↑ Amani Williams Hunt bin Abdullah.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ An introduction to the Malayan aborigines / by Peter Darrell Rider Williams-Hunt.
- ↑ Title: introduction to the Malayan aborigines / P. D. R. Williams-Hunt ; with a foreword by Sir Gerald Templer[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Moore, Elizabeth (1953). The Williams-Hunt CollectionAerial photographs and cultural landscapes in Malaysia and Southeast Asia. London. p. 284.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ Peletakan Jawatan Bah Tony Tidak Gugat PR Perak, Kata Nizar.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Bah, who handed his resignation letter to DAP Secretary-General Lim Guan Eng, is said to be unhappy with the DAP's decision to field a Chinese candidate for the Chenderiang state seat". Archived from the original on 2014-01-08. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.