அம்பலம் (பட்டம்)
அம்பலம் (Ambalam) என்பது தமிழ்நாட்டில் உள்ள சில சாதிகளின் பட்டப்பெயராகும்.
சொற்பிறப்பு
தொகுஅம்பலம் என்பதற்கு பலர்கூடும் வெளி என்று பொருள், மேலும் அம்பலம் என்பது கள்ளர் சாதிப் பட்ட பெயர்களுள் ஒன்றாகும்.[1][2]தமிழ்நாட்டில் சில சாதிகளின் பட்டப் பெயராகவும் உள்ளன. கவியரசு கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய நூலில் தலைமறைந்து செல்வதை கள்ளத்தனம் என்றும், துணிந்து நிற்பதை மறத்தனம் என்று அழைப்பதை அறிவீர்கள். இவை, பின்னால் வந்த வழக்குகள். உளவறியும் கடினமான வேலையை செய்ததால்தான், கள்ளப்படைக் குலத்தினரை "அம்பலக்காரர்கள்" என்று மரியாதையோடு அழைக்கிறது மறவர் நாடு என்கிறார். அம்பலகாரன் என்ற சொல்லுக்கு "கள்ளர் சாதித் தலைவன்" (chief of the Kallar caste) என்றும் "கள்ளர் நாட்டுத் தலைவன்" என்றும் பொருள் தருகிறது தமிழகராதி.[3][4][5] “அம்பலம்” என்னும் பட்டமுடைய கள்ளர்கள் மேலூர்ப் பகுதிக் கள்ளர் மற்றும் கிளைவழி கள்ளர்கள் ஆவார்கள். அழகர்மலையை ஒட்டி அதன் தென்பகுதியிலும், கிழ்ப்பகுதியிலும் அம்பலம் எனும் பட்டமுடைய கள்ளர்கள் வாழ்ந்து வருவதாக தொ. பரமசிவன் அவர்களது 'அழகர் கோயில்' நூலில் குறிப்பிடுகிறார்.[6] 1836 ஆம் நூற்றாண்டு மெக்கென்சி கையெழுத்துப் பிரதி ( Mackenzie Manuscripts) கள்ளர் சாதியினரின் பட்டப்பெயர் அம்பலகாரர் இன்று குறிப்பிடுகிறது.[7] அட்டமா சித்தி அருளிய பட்டமங்கை எனத் திருவிளையாடற் புராணம் கூறுகின்ற அம்மனின் தலம் தான் பட்டமங்கலம் என்ற ஊர். அந்தப் பட்டமங்கல அம்பலக்காரருக்கு திருக்கோட்டியூர் பெருமாள் கோயில் தேர் திருவிழாக்களில் பட்டுப் பரிவட்டம் கட்டிச் சிறப்புகள் செய்திடுவர் என்று கலைஞர். மு.கருணாநிதி அவர்கள் தென்பாண்டிச் சிங்கம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.[8] கிழவன் சேதுபதி மன்னரின் தெற்குப் பகுதி கள்ளர் படைக்குத் தலைவனாயிருந்தவர் இளந்தரி முத்துலிங்க அம்பலக்காரன் என்பவர்.[9]
கல்வெட்டுக்களில் அம்பலம் பட்டம்
தொகு- கங்கைகொண்ட சோழபுரத்துத் திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதி இளங்காரிக்குடையான் சங்கரன் அம்பலம் என்று திருவா வடுதுறைக் கோயில் கல்வெட்டு கூறுகிறது.[10]
- மதுரை, மேலூர், சொக்கலிங்கபுரம் சிவன் கோயிலில் உள்ள விநாயகர் சிற்றாலய முன் மண்டபத் தூணில் சொக்கலிங்கபுரத்தில் இருந்த கட்டசிம்ப அம்பலக்காரன் பிச்சன் அம்பலம் மற்றும் அவனது மனைவி வீராயி ஆகியோரது பக்தியைத் தெரிவிக்க்கிறது.[11]
- தஞ்சைப் பெருவுடையார் கோயில் திருச்சுற்றின் வடபுறச் சுவற்றில் இருக்கும் நீண்ட கல்வெட்டு. பெரியகோவிலில் இசைக்கலைஞர்களாக பணியாற்றிய 130 பேர்கள். இவர்களின் விபரங்கள் மற்றும் இவர்களுக்கான நிவந்தங்களும் இக்கல்வெட்டில் உள்ளன. இந்த இசைக்கலைஞர்களில் சோழ தேச போர்வீரர்களும் இருந்துள்ளனர். குதிரைப்படை, யானைப்படை, வலங்கை வேளாக்காரப்படை மற்றும் பல்வேறு படைப்பிரிவில் இருப்பவர்கள். கோவில் இசைக்கலைஞர்களாகவும் இருந்தனர், அதில் பக்கவாத்தியம் வாசிப்பவர் ராஜகண்டியர் தெரிந்த வலங்கை வேளைக்காரர் பட்டாலகன் அம்பலம் என்பவர் குறிப்பிடப்படுகின்றார் .
- மதுரை, மேலூருக்கு அருகிலுள்ள நரசிங்கம்பட்டியில் கி.பி. 1615 ஐ சார்ந்த கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சு, உப்பு ஆகிய வற்றை வணிகம் செய்ய நகரத்தார்கள் எல்லாரும் நரசிங்கன்பட்டி அர்ச்சுனப் பெருமாள் அம்பலகாரர் வீட்டுக்குவந்து ஒன்று கூடிப் போவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[12]
- சென்னை அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள செப்பேடுகளில், 14-6-1659 ஆண்டு மூணுடைப்பு என்ற கிராமத்தின் திசைக்காவல் பணிபுரியும் பளுத்தாண்டிக் குப்பச்சி அம்பலகாறன் என்பவன் திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதி முத்துராமலிங்க துரையும் பள்ளிமடம் வந்திருந்த போது அவர்களைப் பாதகாணிக்கை, சீனி சர்க்கரையுடன் வணங்கிச் சந்தித்தான். அவனது கோரிக்கையைக் கேட்ட அவ்வரசர்கள் அதற்கிணங்க அவனுக்கு புன்செய், நன்செய் நிலங்களை மானியமாகத் தந்ததை இச்செப்பேடு குறிப்பிடுகிறது.
- அம்பலகாரர் என்று தலைகாவல் முறி பட்டயங்கள் வழங்கப்பட்டுள்ளன. தாது வைகாசி மீ 17 உ ஏரிமங்கலம் நாட்டிலிருக்கும் கறுத்த காங்கய அம்பலகாரர், கீழத்தூவாகுடியைச் சேர்ந்த செங்கிபட்டியிலிருக்கும் ஒத்தய மேல் கொண்டார் அம்பலகாரர் கருவிப்பட்டியிலிருக்கும் இராமைய மேல் கொண்டார் அம்பலக்காரர் இவர்களுக்குக் கூகையூர் சீமை நாட்டார், சொக்கநாத உடையார் , மற்றமுள்ள உடையார் கிராமத்துக் குடியானவர்கள் ஆகிய நாங்கள் மேன் காவல் பட்டயம் எழுதி குடுத்தோம்.[13]
- தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் இருக்கும்நெற்குப்பை செப்பேட்டில் காணியாளவந்த சோழப்புரையர், அஞ்சாத கண்டப்புரையர், வணங்கனாத்தேவன், தொண்டைமான் அம்பலம், சொக்கட்டான் அம்பலம் என ஐந்து அம்பலகாரர் இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இந்த ஐந்து அம்பலகாரர்களும் தற்பொழுது முறையே முதலியம்பலம், கருப் பையா அம்பலம், மதியாரி அம்பலம், மாலையிட்டான் அம்பலம், சொக் கட்டான் அம்பலம் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் முறையே முல்லை மங்கலம், சதுர்வேத மங்கலம், சிர்சேர்ந்த மங்கலம், கன்ன மங்கலம், வேல மங்கலம் என்ற ஐந்து நிலைநாட்டிலிருந்து வந்தவர்கள்.[14]
- தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி. வட்டம், கோட்டையூரில் அமைந்துள்ள தெற்கு ஊரணியின் வடகரையில் எடுப்பிக்கப்பட்டுள்ள அம்பலகாரர் சமாதியில் திண்ணை மேடையின் கீழ்புரத்தில் பதிப்பட்டுள்ள சமாதிக்கல்வெட்டில், 1889 ஆண்டு கோட்டையூர் கைலாச அம்பலகாரர் சிவலோக பதவி அடைந்தமை குறிப்பிடப்படுகின்றது.[15]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ அகராதி - பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி. p. 47.
- ↑ தமிழ்மொழி அகராதி. p. 113.
- ↑ Landmarks In Indian Anthropology Vol-iii. p. 100.
- ↑ செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முழுத் தொகுப்பு. p. 247.
- ↑ பல்லவர் வரலாறு. p. 62.
- ↑ அழகர் கோயில். p. 72.
- ↑ Asiatic Journal And Monthly Register (1837) Vol.22. p. 297.
- ↑ தென்பாண்டிச்_சிங்கம்_கலைஞர்_மு_கருணாநிதி. p. 3.
- ↑ புதுக்கோட்டை வரலாறு. p. 32.
- ↑ அமுதசுரபி -1992,திங்களிதழ். p. 33.
- ↑ மதுரை மாவட்டக் கல்வெட்டுகள். p. 153.
- ↑ நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. p. 2.
- ↑ கள்ளர் சரித்திரம். p. 117.
- ↑ Kalvettu Magazine. p. 20.
- ↑ vanam Journal Collections. p. 201.