அயோத்திப் பிரச்சினை

(அயோத்தி சிக்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அயோத்தி சிக்கல் (Ayodhya dispute) என்பது 1992 வரை பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்பதைப் பற்றியான ஒரு சமூக, சட்டப் பிரச்சினையாகும். சர்ச்சைக்குரிய இடம் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ளது. இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள். இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.

அயோத்தியின் சர்ச்சைக்குறிய இடத்தின் வரைபடம்

இந்திய உச்ச நீதிமன்றம் 9 நவம்பர் 2019 அன்று அயோத்தி சிக்கலுக்கான தீர்ப்பு வழங்கியதன், பல நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக நடைபெற்ற அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்தின் சர்ச்சை முடிவு கட்டப்பட்டது.

வரலாறு

தொகு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது. ஆனால் 1949இல் ராமர், சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன.[சான்று தேவை] 1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. 1989இல் அலகாபாத் நீதிமன்றம், இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின. மசூதியை இடித்து விட்டு, அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன. இந்தப் பிரச்சனை பாஜக கட்சியின் அரசியல் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. பாபர் மசூதியின் இடிப்பு இன்று வரை இந்து-முஸ்லீம்களிடையே பல மோதல்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கி வருகிறது. 1993இல் இந்திய அரசு சர்ச்சைக்குரிய 67.7 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திக் கொண்டது. தற்போது அந்த இடம் யாருக்கு சொந்தம் (அரசுக்கா, இந்துத்வ அமைப்புகளுக்கா அல்லது வக் போர்டு வாரியத்துக்கா), அங்கு யாருக்கு எதைக் கட்டும் உரிமையுள்ளது போன்ற பிரச்சனைகள் ஒரு முக்கிய வழக்காக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு

தொகு

2010 ஆம் ஆண்டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடமே என்றும், இடிபட்ட பாபர் மசூதியின் கும்மட்டம் இருந்த இடம் தான் ராமரின் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்றாகப் பிரிக்கப்பட்டு சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா விராஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் அமையாமல், மத நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திய உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அகில இந்திய இஸ்லாமியத் தனிநபர்ச் சட்ட வாரியம் இரண்டும் அறிவித்தன. இந்து மகாசபை செய்த மேல் முறையீட்டு மனுவைப் ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், மே 2011இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தடை செய்துள்ளது.[1]

அயோத்தி சமரசக் குழு 2019

தொகு

2.77 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொள்ளும் பிணக்கை தீர்க்க உச்சநீதிமன்றம், ஒய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் ஓய்வு பெற்ற நீதிபதி பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய மூன்று உறுப்பினர்கள் கொண்ட சமரசக் குழுவை 7 மார்ச் 2019 அன்று உச்ச நீதிமன்றம் நிறுவியது.[2] மேலும் இச்சமரசக் குழு தனது அறிக்கையை 8 வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.

உச்ச நீதிமன்ற விசாரணை

தொகு

சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே 6 ஆகத்து, 2019 முதல் நாள்தோறும் இந்திய உச்ச நீதிமன்றத்தில், இப்பிணக்கு குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு தொடர்ந்து விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.[3][4]

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

தொகு

நவம்பர் 09, 2019 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பை வாசித்தார். பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது என்றும் தெரிவித்தார். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை. ஆகையால் நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் மனுக்களை ரத்து செய்யப்படுகின்றது எனவும், இராம் லல்லா அமைப்பின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சன்னி வக்பு வாரியத்திற்கு மசூதி கட்டிக் கொள்ள அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் அரசு வழங்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்படுகிறது என தலைமை நீதிபதி தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்திய அரசுக்கே உரிமை என்றும் ராம ஜென்ம பூமியில் மூன்று மாதத்திற்குள் ஒரு அறக்கட்டளை மூலம் இராமருக்கு கோயில் கட்ட அரசு அனுமதி வழங்கலாம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.[5][6][7][8][9]

அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதை

தொகு
  • 1528: பாபரின் படைத்தலைவர் மீர் பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார்
  • 1542-1605: அக்பர் அயோத்தியில் குழந்தை இராமருக்காக உயரமான மேடை நிறுவினார்.
  • 1855: பாபர் மசூதியின் உள்முற்றத்திற்கும், வெளி முற்றத்திற்கும் இடையே சுவர் எழுப்பப்பட்டதால், இந்து-முஸ்லீம் இடையே பதற்றம் தணிந்தது. பாபர் மசூதியின் வெளிமுற்றத்தில் இந்துக்கள் குழந்தை இராமர் சிலையை நிறுவி வழிபட்டனர். இசுலாமியர் உள்முற்றத்தில் தொழுகை நடத்தினர்.
  • 1883: பாபர் மசூதியின் வெளிமுற்றத்தில் இருந்த இராமர் சிலை இருந்த மேடையைச் சுற்றி கோயில் எழப்பும் இந்துக்களின் கோரிக்கையை பைசாபாத் மாவட்ட துணை ஆணையர் மறுத்தார்.
  • சனவரி, 1885: இரகுபர் தாஸ் எனும் சாது பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் உள்ள இராமர் மேடையைச் சுற்றி கோயில் கட்ட அனுமதி கோரி அயோத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். (வழக்கு எண் 61/1885)
  • 1 நவம்பர் 1886: பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான சாது இரகுபர் தாசின் மனுவை அவத் தலைமை நீதித்துறை ஆணையாளர், தள்ளுபடி செய்தார்.
  • 12-23 டிசம்பர் 1949: நள்ளிரவில் மசூதியின் உள்முற்றத்தில் குழந்தை இராமரின் சிலை நிறுவப்பட்டது. எனவே சிலை நிறுவியவர்கள் மீது அயோத்தி காவல் நிலையம், இந்திய தண்டச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.
  • 28 டிசம்பர் 1949: காவல் துறை அறிக்கையின்படி, பைசாபாத் குற்றவியல் நீதிபதி, அயோத்தியில் அமைதியை குலைக்கும் இச்சிக்கலைத் தீர்க்க அரசு வழக்கறிஞர் தலைமையில் சமசரசக் குழு அமைக்க உத்தரவிட்டார்.
  • 5 சனவரி 1950: ராம ஜென்மபூமியில் இராமர் வழிபாட்டை தடுத்ததற்காக, இராமச்சந்திர பரமஹம்சர் எனும் சாது ஐந்து இசுலாமியர்கள் மற்றும் பைசாபாத் நீதிபதிக்கு எதிராக பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு (வழக்கு எண் 50/1950) தொடர்ந்தார்.
  • 16 சனவரி 1950: கோபால் சிங் விசாரத் என்பவர் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ராம ஜென்மபூமியில் உள்ள இராமர் சிலையை வழிபட வழக்கு தொடுத்தார்.
  • 1 பிப்ரவரி 1951: பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மேற்படி இரண்டு வழக்குகளையும் ஒன்றிணைத்தது.
  • 3 மார்ச் 1951: பைசாபாத் நீதிமன்றம் பாபர் மசூதியின் வெளி முற்றத்தில் குழந்தை இராமர் சிலையை நிறுவி இந்துக்கள் வழிபடலாம் என்றும் முஸ்லீம்கள் பாபர் மசூதி அமைந்த இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் நுழையக்கூடாது என உத்தரவிட்டது.
  • 6 சனவரி 1964: பாபர் மசூதியைச் சுற்றியிருந்த 23 மனைகள் பாபர் மசூதிக்கே உடைமையானது என மத்திய சன்னி வக்பு வாரியம் பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
  • 1 பிப்ரவரி 1986: உமேஷ் சந்திர பாண்டே தொடுத்த வழக்கில் பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் பாபர் மசூதியின் பூட்டு திறக்கப்பட்டது.
  • 10 சூலை 10, 1989:பைசாபாத் மாவட்ட நீதிபதிகள், ராம ஜென்மபூமி-பாபர் மசூதி நிலச்சிக்கல் தொடர்பான 4 வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
  • 25 செப்டம்பர் 1990:பாரதிய ஜனதா கட்சி தலைவர்எல். கே. அத்வானி குஜராத் மாநிலத்தின் சோம்நாத்திலிருந்து மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பிகார் வழியாக அயோத்திக்கு இரத யாத்திரை புறப்பட்டார்.
  • 19 அக்டோபர் 1990: இந்தியக் குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டத்தின் கீழ் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி இருந்த நிலப்பகுதிகள், கட்டிடங்கள் அரசுடைமை ஆக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இந்து-முஸ்லீம்களின் எதிர்ப்பால் அரசாணை திரும்பப் பெறப்பட்டது.
  • 6 டிசம்பர் 1992: பாபர் மசூதி இடிப்பு இடிக்கப்பட்டது. இடித்த கரசேவர்கள் மீது இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டது. முதல் தகவல் அறிக்கையில் பெயர் தெரியாத கரசேவர்களையும், இரண்டாம் தகவல் அறிக்கையில் எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் சிலர் பெயர் இருந்தது.
  • அக்டோபர், 1993: மத்திய புலனாய்வுக் குழு பாபர் மசூதி இடிக்க காரணமான எல். கே. அத்வானி உள்ளிட்டக்கியவர்கள் மீது ஒருங்கிணைந்த குற்றச்சாட்டு பதிவு செய்தது.
  • மே, 2001:மத்திய புலனாய்வுக் குழுவின் சிறப்பு நீதிமன்றம், எல். கே. அத்வானி உள்ளிட்டர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டது.
  • ஏப்ரல், 2017:இந்திய உச்ச நீதிமன்றம் எல். கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பிற கரசேவகர்கள் மீது நடக்கும் குற்றவழக்குகளுடன் இணைத்தது.
  • 30 செப்டம்பர் 2010: அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம ஜென்மபூமி அறக்கட்டளை மற்றும் சன்னி வக்பு வாரியம் சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
  • 9 மே 2011:அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
  • 6 ஆகஸ்டு 2019:அயோத்தி பிரச்சினையை தீர்க்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
  • 16 அக்டோபர் 2019: அயோத்தி வழக்கில் ராம ஜென்மபூமி அறக்கட்டளை, நிர்மோகி அகாரா மற்றும் சன்னி வக்பு வாரியத்தின் சார்பாக வழக்கறிஞர்கள் 40 நாட்கள் தொடர்ந்து தங்கள் தரப்பு வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
  • 9 நவம்பர் 2019: ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதியரசர்கள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அயோத்தி பிரச்சினையில் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு இராமர் கோயிலை நிறுவ 3 திங்களுக்குள் ஒரு அறக்கட்டளைய நிறுவவும், இசுலாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்கவும் ஆணையிட்டுள்ளது.

இதனையும் காண்க

தொகு
  • கோவில் மலை – இதேபோல் எருசலேமில் சர்ச்சைக்குரிய இடம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Supreme Court stays Allahabad High Court verdict on Ayodhya". தி இந்து (மே 9, 2011)
  2. "அயோத்தி விவகார மத்தியஸ்தர் குழு: நடுநிலையாக செயல்படுவாரா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்?". தினமணி (08 மார்ச், 2019)
  3. "அயோத்தி சமரசக் குழு தோல்வி : ஆகஸ்டு 6 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை".தினத்தந்தி (02 ஆகத்து, 2019)
  4. "அயோத்தி விவகாரத்தில் சமரசம் ஏற்படவில்லை: 6-ந்தேதியில் இருந்து தினமும் விசாரணை- உச்ச நீதிமன்றம்". மாலைமலர் (02 ஆகத்து, 2019)
  5. அயோத்தி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் - பிபிசி
  6. அயோத்தி வழக்கின் தீர்ப்பு முழு விவரம்
  7. அயோத்தி:சர்ச்சைக்குரிய நிலம் இந்துகளுக்குச் சொந்தம்; முஸ்லீம்களுக்கு மாற்று இடம் - பி பி சி - தமிழ்
  8. "அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்:உச்சநீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு". Archived from the original on 2019-11-10. பார்க்கப்பட்ட நாள் 2021-02-28. தினமணி (09 நவம்பர்,2019)
  9. "அயோத்தியில் ராமர் கோவில் - இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் - உச்சநீதிமன்றம்". NEWS18 தமிழ் (09 நவம்பர், 2019)
 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்திப்_பிரச்சினை&oldid=3912638" இலிருந்து மீள்விக்கப்பட்டது