அருணகிரிநாதர்

தமிழ் கடவுள் முருகனின் அருளாளர்
(அருணகிரி நாதர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருணகிரிநாதர், தெற்கிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் பொ.ஊ. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 16000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1088-இக்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள். இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.[1] மேலும், "திருப்புகழ்" இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்றாக உள்ளது. இது கவிதை மற்றும் இசை நயத்திற்காகவும், அதன் மத, தார்மீக மற்றும் தத்துவ உள்ளடக்கங்களுக்காகவும் மக்களால் அறியப்படுகின்ற ஒரு நூலாக இருக்கிறது.

அருணகிரிநாதர்
கரூர் அருகே அருணகிரிநாதர் சிலை]]
பிறப்புபொ.ஊ. 1370
திருவண்ணாமலை, விஜயநகரப் பேரரசு
(இன்றைய தமிழ்நாடு, இந்தியா)
இறப்புபொ.ஊ. 1450 (அகவை 80)
திருவண்ணாமலை, விஜயநகரப் பேரரசு
(இன்றைய தமிழ்நாடு, இந்தியா)
சமயம்இந்து
தத்துவம்கௌமாரம்

அருணகிரிநாதர் வரலாறு

தொகு

அருணகிரிநாதர் பொ.ஊ. 1370-ல் தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர்[2] ஆவார். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். இவருக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் நடந்தது. ஆனாலும், அருணகிரிநாதர் தீய பழக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார் என்றும், தனது இளமைக்காலத்தை மோசமான வாழ்க்கையாகத் தொடர்ந்ததாகவும், அவரது சகோதரி எப்போதுமே தனது சகோதரரை மகிழ்விக்க தான் சம்பாதித்த அனைத்தையும் கொடுத்தார் எனவும் புராணக்கதைகள் கூறுகின்றன.

எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து அவதிப்பட்டார். என்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட்டதால், கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். அதனால் இவரது சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடன் கடிந்து கொண்டபோது, தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு தன் குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி வெட்கப்பட்டு, வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்டு, அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கி “அருணகிரி நில்!” என்று யாரோ சொல்வதைக் கேட்டார்.

அதனால் திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்கும்போது, வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. மேலும், முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தினார், சீர்திருத்தம் மற்றும் பக்தியின் பாதையை அவருக்குக் காட்டினார், மனிதகுலத்தின் நலனுக்காக பக்தி பாடல்களை உருவாக்க“முத்தைத் தரு பத்தித் திருநகை” என பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தார் என அருணகிரிநாதரின் வரலாற்றைப் பற்றி புராண நூல்களில் குறிப்பு காணப்படுகிறது.[3][4]

பாடல்கள்

தொகு

அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. மேலும் ஒரு புதிய வழிபாட்டு முறையான இசை மூலம் வழிபடுவதை உலகிற்கு உணர்த்தும் விதமாக அவை உள்ளன.[5]

அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றன.

பாடல்கள் மீட்பு

தொகு

இவர் எழுதிய திருப்புகழ் (அருணகிரிநாதர்) பாடல்கள் பல ஆண்டுகளாக சொற்பமே இங்கும் அங்கும் ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. மன்னர்களும் புரவலர்களும் தமிழை ஆதரிக்காததால் பிற நூல்களைப் போல திருப்புகழ்ப் பாடல்களும் பாடுவாரின்றிக் கிடந்தன. வி.டி. சுப்பிரமணிய பிள்ளை மற்றும் அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை போன்றோர் அவற்றின் மதிப்பைப் புரிந்துகொண்டு அவற்றை மீட்டெடுத்து வெளியிட்டனர்.

1871 இல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை, ஒரு மாவட்ட அதிகாரியாக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் (நகரம்) சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர், திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து, நூல்களைக் கூட்டி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், முதலாவது பதிப்பு, 1894கிலும் மற்றும் இரண்டாவது பதிப்பு 1901 இல். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

திரைப்படம்

தொகு

1964ம் ஆண்டில் அருணகிரிநாதர் என்கிற தமிழ் திரைப்படம் வெளியானது. இதில் புகழ் பெற்ற பின்ணணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

உருவ அமைப்பு

தொகு

அருணகிரிநாதர் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும், அவருக்குரிய "சரவணபவ" எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருப்பதாகக் கூறுவர்.[6]

அருணகிரிநாதரின் நூல்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்களும் மேற்கோள்களும்

தொகு
  1. "Thiruppugazh — musical way of worship". The Hindu (India). 11 July 2003 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031014055626/http://www.hindu.com/thehindu/fr/2003/07/11/stories/2003071101270600.htm. பார்த்த நாள்: 31 October 2011. 
  2. https://books.google.co.in/books?id=ffUXAAAAIAAJ&dq=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
  3. "Excess indulgence will result in pain". The Hindu (India). 14 November 2002 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712015856/http://hindu.com/2002/11/14/stories/2002111400900900.htm. பார்த்த நாள்: 31 October 2011. 
  4. Arunagirinathar
  5. Arunagirinathar பரணிடப்பட்டது மார்ச்சு 24, 2008 at the வந்தவழி இயந்திரம்
  6. தினமலர் ஆன்மீக மலர் - நவம்பர் 12 2013 பக்கம் 3 ஆறுவிரல் ரகசியம் பத்தி

http://www.dinamalar.com/E-malar.asp?ncat=28&showfrom=11/12/13#top

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணகிரிநாதர்&oldid=3772535" இலிருந்து மீள்விக்கப்பட்டது