அலிமா யாக்கோப் என்று அழைக்கப்படும் அலிமா பிந்தி யாக்கோபு (Halimah binti Yacob; மலாய்: Halimah Yacob; (ஜாவி: حاليمه بنت ياچوب; சீனம்: 哈莉玛·雅各布); என்பவர் சிங்கப்பூர் அரசியல்வாதியும்; தற்போதைய சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும் ஆவார். சிங்கப்பூர் வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மேதகு
அலிமா யாகோப்
Halimah Yacob
சிங்கப்பூரின் 8-ஆவது அதிபர்
பிரதமர்லீ சியன் லூங்
முன்னையவர்டோனி டான்
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் 9-ஆவது சபாநாயகர்
Deputyசார்லசு சோங்
லிம் பியாவ் சுவான்
முன்னையவர்மைக்கேல் பால்மர்
பின்னவர்டான் சுவான்-ஜின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 ஆகத்து 1954 (1954-08-23) (அகவை 70)
சிங்கப்பூர்
அரசியல் கட்சிமக்கள் செயல் கட்சி (2001–2017)
சுயேச்சை வேட்பாளர் (2017–இன்று வரை)
துணைவர்(கள்)முகமது அப்துல்லா அல் அப்சி
(Mohammed Abdullah Alhabshee)
பிள்ளைகள்5
கையெழுத்து
இந்தோனேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட போது அதிபர் அலிமா யாக்கோப்

சிங்கப்பூரில் வழக்கறிஞர் தொழில் புரிந்தவர். சிங்கப்பூரை ஆட்சி செய்து வரும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் சனவரி 2013 முதல் ஆகத்து 2017 வரை சிங்கப்பூர் 9-ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவும் சேவை செய்தவர்.[1]

பொது

அலிமா யாகோப்; ஜுரோங் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் (Jurong Group Representation Constituency) தொகுதியின் கிழக்கு புக்கிட் பாத்தோக் (Bukit Batok East) நாடாளுமன்ற உறுப்பினராக, 2001-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை சேவை செய்து உள்ளார்.

2015-ஆம் ஆண்டு முதல் 2017 வரை மார்சிலிங்-ஈவ் டீ சமூக பிரதிநிதித்துவ நாடாளுமன்ற உறுப்பினராகவும் (Marsiling ward of Marsiling–Yew Tee GRC) பதவி வகித்தார்.

அலிமா யாகோப் பற்றிய சர்ச்சை

2017-ஆம் ஆண்டு சிங்கப்பூர் அதிபருக்கானத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப் படுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட ஒரு பாரம்பரிய இனக் குழுவினருக்கு அதிபர் பதவி ஒதுக்கப் படுகிறது.

அதன்படி இந்த முறை மலாய்க்காரச் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அதிபர் பதவி ஒதுக்கப்பட்டது. அதிபருக்கான வேட்பாளர்களில் திருமதி அலிமா யாகோப் அவர்களும் ஒருவராகும்.

கொஞ்ச காலமாக அலிமா யாகோப் பற்றிய ஒரு சர்ச்சை இருந்தது. அலிமா ஒரு மலாய்க்காரர் அல்ல எனும் சர்ச்சை இருந்து வந்தது. பின்னர் அலிமா ஒரு மலாய்க்காரர் எனும் சான்றிதழைச் சிங்கப்பூர் அரசு வழங்கியது.[2]

சட்ட திருத்தம்

 
ஜப்பானிய முன்னாள் பிரதமர் சின்சோ அபே - அதிபர் அலிமா யாக்கோப்

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, 2017-ஆம் ஆண்டு ஆகத்து 7-ஆம் தேதி, இவர் தன் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்தும்; மற்றும் மக்கள் செயல் கட்சியின் உறுப்பினர் என்பதில் இருந்தும் பதவி விலகினார். சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு மலாய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டியிடலாம் என்று சமீபத்தில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.[3]

2017 செப்டம்பர் 13 ஆம் நாள், குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்த வேறு நபர்கள் யாரும் தகுதி உடையவர்களாக இல்லாத காரணத்தால், அலிமா யாகோப் போட்டி இல்லாத எளிதான வெற்றியின் மூலம் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் நாள் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், சிங்கப்பூர் நாட்டின் வரலாற்றில் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் ஆகியுள்ளார்.[4]

அலிமா யாகோப் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக ஆளும் கட்சியான மக்கள் நடவடிக்கை கட்சியின் (People's Action Party) நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து உள்ளார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்றப் பதவியையும்; சபாநாயகர் பதவியையும் ராஜினாமா செய்தார். தவிர மக்கள் நடவடிக்கை கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.[5]

வாழ்க்கை

 
ரஷ்ய அதிபர் விலாடிமர் புட்டின் - அதிபர் அலிமா யாக்கோப்

அதிபர் அலிமா 1954 ஆகஸ்டு 23-ஆம் தேதி, இந்தியாவைச் சேர்ந்த தந்தையாருக்கும்; மலேசியாவைச் சேர்ந்த தாயாருக்கும் 1954-ஆம் ஆண்டு சிங்கப்பூர் குயின் ஸ்டிரீட் (குயின்ஸ் தெரு - Queen Street) பகுதியில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.[2]

குடும்பத்தில் கடைசி ஐந்தாவது குழந்தை. தந்தையார் ஒரு காவலாளியாக வேலை செய்தவர். சொற்ப வருமானம். தந்தையார் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அப்போது அலிமாவிற்கு எட்டு வயது.[6]

தள்ளுவண்டி உணவுக் கடை

தந்தையார் இறந்த பிறகு, குடும்பப் பொறுப்பைத் தாயார் ஏற்றுக் கொண்டார். குடும்பத்திற்காகத் தாயார் கடினமாக உழைத்தார். தள்ளுவண்டியில் சின்னதாக ஓர் உணவுக் கடை.[7]

விடியல் காலை நான்கு மணிக்குப் போகிற அலிமா, இரவு 10 மணிக்குத் தான் வீட்டிற்கே வந்து சேர்வார். 10 வயதில் இருந்தே அலிமாவின் அன்றாட வாழ்க்கை பள்ளிக்கு வெளியேதான் பெரும்பாலும் கழிந்து உள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து மளிகை சாமான்களை வாங்க மார்க்கெட்டிற்குச் செல்வார்.[8][9]

பால்ய வயது வாழ்க்கை

பள்ளி விட்டு நேரடியாகக் கடைக்குப் போய் விடுவார். இரவு பத்து மணி வரையில், தள்ளுவண்டிக் கடையில் சில்லறை வேலைகள். பீங்கான் மங்குகளைக் கழுவுதல்; பொதுக் குழாயில் இருந்து கடைக்குத் தண்ணீர் பிடித்து வருதல்; கடைக்கு வருபவர்களுக்கு சேவை செய்தல்; இப்படித்தான் அலிமாவின் பால்ய வயது வாழ்க்கை பயணித்து இருக்கிறது.[10]

சிங்கப்பூர் பாலிடெக்னிக் (Singapore Polytechnic) கல்லூரிக்கு வெளியே அவர்களின் நாசி பாடாங் (Nasi Padang) உணவு வியாபாரம். தள்ளுவண்டியில் ஓர் ஒட்டுக் கடை. தாயாருக்கு உதவி செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒரே ஒரு பள்ளிச் சீருடை. அதிலும் சல்லடைத் துவாரங்கள். ஒவ்வொரு நாளும் துவைத்து; காய்ந்தும் காயாத நிலையில் அணிந்து செல்ல வேண்டிய ஏழ்மை நிலை. காலணி காலுறைகளில் ஆங்காங்கே ஓட்டைகள்.[10][11][12][13]

வாழ்க்கையின் வறுமை

அவர் சொல்கிறார்: "நான் வாழ்க்கையின் வறுமையைப் பார்த்து விட்டேன். நன்றாகவே அனுபவித்து விட்டேன். எதிர்காலத்தின் நிச்சயமற்ற தன்மையில் என்னுடைய அன்றாட வாழ்க்கை நகர்ந்து சென்று இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையை எண்ணி எண்ணி கலங்கி இருக்கிறேன். இருந்தாலும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.”[10]

”இளம் வயதில் என்னுடைய நோக்கம், இலக்கு எல்லாம் பள்ளிப் படிப்பை முடிப்பது; அப்புறம் ஏதாவது ஒரு வேலையைப் பார்ப்பது; அப்படியே என் அம்மாவுக்கு ஆதரவாக இருப்பது. அதுதான் அப்போதைக்கு என் இலட்சியமாக இருந்தது என்று அதிபர் அலிமா சொல்கிறார்.”[10]

பள்ளியில் இருந்து நீக்கம்

அலிமா படிப்பில் மிகவும் கெட்டிக்காரர். இருப்பினும் சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளியில் (Singapore Chinese Girls’ School) படிக்கும் போது பள்ளியில் இருந்து நீக்கப் பட்டார். அதற்கும் காரணம் குடும்பத்தைக் காப்பாற்ற, தாயாருக்கு உதவி செய்தது ஆகும்.

அதனால் ஒழுங்காகப் பள்ளிக்குப் போக முடியவில்லை. அடிக்கடி விடுப்பு எடுத்தார். அதனால் பள்ளியில் இருந்து நிறுத்தப் பட்டார். ஒருநாள் பள்ளியின் தலைமையாசிரியை அவரை அழைத்து இறுதியாக எச்சரிக்கை செய்துவிட்டுப் பள்ளியில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்.[10]

தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளி

அந்த னிகழ்வு அவருடைய வாழ்க்கையில் மிக மிக மோசமான கட்டங்களில் ஒன்றாகும். அவருடைய பள்ளி வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்ட கட்டம். அதிபர் அல்மா இவ்வாறு கூறுகிறார்: அப்போது எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். சுய பரிதாபத்தில் வாழ்வதைவிட எழுந்து நின்று போராடுவதே சிறப்பு என்று என்னையே உற்சாகப் படுத்திக் கொள்வேன் என்று கூறுகிறார்.

அடுத்து தஞ்சோங் காத்தோங் பெண்கள் பள்ளியில் (Tanjong Katong Girls School) உயர்நிலைப்பள்ளி படிப்பு.[13] அடுத்து சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு. படிப்பைத் தொடர்ந்தார். 1978-ஆம் ஆண்டு சட்டத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். 1981-ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக அனுமதிக்கப் பட்டார்.

2001-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் மாஸ்டர்ஸ் பட்டம். பின்னர் இவர் அரசியலுக்கு வந்தார். ஓர் அமைச்சரானார். 2016-ஆம் ஆண்டில் சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பு செய்து இருக்கிறார்கள்.[14]

அதிபர் அலிமாவின் கணவர்

பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது தான், இவர் தன் கணவரைச் சந்தித்தார். கணவரின் பெயர் முகமது அப்துல்லா (Mohammed Abdullah Alhabshee). அரபு நாட்டைச் சேர்ந்தவர். 1980-இல் திருமணம். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். அதிபர் அலிமாவின் கணவர் இவருக்குத் துணையாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார்.

அதிபர் அலிமாவின் தாரக மந்திரம் என்பது உழைப்பு. அந்த உழைப்பிலேயே வாழ்ந்து வளர்ந்து; இன்று சிங்கப்பூரின் ஆக உயர்ந்த பதவியில் உச்சம் பார்க்கிறார். எல்லாவற்றுக்கும் காரணம் அவரின் அசராத உழைப்பு. அயராத விடா முயற்சி. அசைக்க முடியாத தன்னம்பிக்கை.

அமைச்சர் பதவி

அலிமா சிங்கப்பூர் தேசிய தொழிற்சங்கக் காங்கிரசில் (National Trades Union Congress) சட்டத்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். 1992-ஆம் ஆண்டில் அதன் சட்டத் துறையின் இயக்குநரானாகப் பதவி உயர்ந்தவர். பின்னர் 1999-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தொழிலாளர் ஆய்வுகள் நிறுவனத்தின் (Singapore Institute of Labour Studies) இயக்குநராகவும் நியமிக்கப் பட்டார்.[15]

2001-ஆம் ஆண்டில் அரசியலில் காலடி வைத்தார். ஜுரோங் தொகுதியின் (Jurong GRC) நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப் பட்டார். 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் ஒரு வெற்றி. சிங்கப்பூர் சமூக அபிவிருத்தி, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சராகப் பதவி (Minister of State for Community Development, Youth and Sports). பின்னர் சமூகக் குடும்ப மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் (Minister of State for Social and Family Development) பதவி வழங்கப்பட்டது.[15]

2013 ஜனவரி 8-ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார். சிங்கப்பூர் வரலாற்றில் சபாநாயகர் பதவியை வகித்த முதல் பெண்மணி எனும் வரலாற்றையும் படைத்தார். கடைசியில் தற்சமயம் சிங்கப்பூரின் அதிபர் பதவியில் உச்சம் பார்க்கிறார்.[16]

அடுக்குமாடி வீட்டில் எளிய வாழ்க்கை

சிங்கப்பூரின் அதிபர் எனும் வகையில் அலிமா அவர்கள், சிங்கப்பூர் இசுதானா அதிபர் மாளிகையில் தான் தங்க வேண்டும். ஆனால் அவர் அதை விரும்பவில்லை. பழைய இயூசுன் (HDB flat in Yishun Avenue 4) அடுக்குமாடி வீட்டிலேயே தங்கி வந்தார். சாதாரணமான எளிய வாழ்க்கை போதும் என்பதே அவரின் விருப்பம்.[17][18][19]

ஆனால் சிங்கப்பூர் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தார்கள். அலிமா ஒரு நாட்டின் அதிபர். அவர் ஒரு சாதாரண அடுக்குமாடி வீட்டில் தங்கினால், அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரிக்கைகள் செய்து வந்தார்கள்.[20]

அடுக்குமாடி வீடுகளில், அக்கம் பக்கத்தில் வாழ்ந்தவர்களுக்குப் பெருமைதான். ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகளின் கெடுபிடிகள். சுற்றிலும் நேரலைக் காமராக்கள். 24 மணி நேரமும் போலீஸ்காரர்களின் சோதனைகள். சமயங்களில் அதுவே பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியது.[21][22]

சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு மைல்கல்

இப்போது அலிமா அவர்களுக்கு நாட்டின் ஆக உயரிய பதவி. அந்தப் பதவிக்கான அவரின் பயணம் மிக நீண்டது. பற்பல இன்னல்களையும்; பற்பல இடர்பாடுகளையும் தாண்டியது. இறுதியில் வெற்றிக் கனியை எட்டிப் பிடித்து எடுத்துக்காட்டாய் வாழ்கிறார்.

அலிமாவின் வாழ்க்கை வரலாறு சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுகூட சொல்லலாம். ஒரு சாமானிய பெண்ணின் அசாத்திய திறமையைக் கண்டு உலகமே வியக்கிறது. இனவாதத்திற்கு எதிரான அவரின் கோட்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது.[23]

மேற்கோள்கள்

  1. "Halimah Yacob Became First Woman Speaker of the Singapore Parliament". Jagran Josh. 16 January 2013. http://www.jagranjosh.com/current-affairs/halimah-yacob-became-first-woman-speaker-of-the-singapore-parliament-1358244405-1. பார்த்த நாள்: 16 January 2013. 
  2. 2.0 2.1 Tham, Yuen-C (17 July 2017). "More consultation needed before my decision to run for president: Halimah Yacob". Straits Times இம் மூலத்தில் இருந்து 29 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170729132657/http://www.straitstimes.com/politics/more-consultation-needed-before-my-decision-halimah. 
  3. "Halimah Yacob to be sworn in as Singapore's 8th president on Thursday: PMO". The Straits Times. 13 September 2017. Archived from the original on 17 December 2017. பார்க்கப்பட்ட நாள் 11 July 2020.
  4. "PM Lee accepts Halimah Yacob's resignation from the PAP". Channel NewsAsia. 7 August 2017 இம் மூலத்தில் இருந்து 7 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170807211217/http://www.channelnewsasia.com/news/singapore/pm-lee-accepts-halimah-yacob-resignation-from-the-pap-9099312. 
  5. "Halimah Yacob named Singapore's first female president". Al Jazeera. 13 September 2017. Archived from the original on 2 May 2019. பார்க்கப்பட்ட நாள் 2017-09-14.
  6. hermesauto (2017-09-11). "Halimah Yacob set to be Singapore's first female president: A timeline of her career". The Straits Times (in ஆங்கிலம்). Archived from the original on 25 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-25.
  7. Long, Susan (25 January 2013). "New Speaker of Parliament Halimah Yacob tells Susan Long how she went from selling pushcart nasi padang and almost getting expelled from school to one of the highest offices in the land.". The Straits Times. http://eresources.nlb.gov.sg/newspapers/digitised/issue/straitstimes20130125-1. 
  8. Cheam, Jessica (10 January 2013). "A strong advocate for workers, women and minorities". The Straits Times (Singapore) இம் மூலத்தில் இருந்து 21 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170721022531/http://www.asiaone.com/print/News/Latest%2BNews/Singapore/Story/A1Story20130108-394132.html. "Her Indian-Muslim father was a watchman who died when she was eight years old." 
  9. Chang, Clarence (25 October 2006). "I feared for my life". New Paper (Factiva). 
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 "Madam Halimah shares the struggles she faced in childhood and grew up in a poor family, as the youngest of five children. She lost her father at an early age, "I lost my father, when I was only eight. He was a watchman, and fought illness for many years. Despite that, he worked very hard to provide for the family till the very end. The family struggled to make ends meet, "After his death, my mum became the breadwinner and worked very hard to provide for the family. She worked at a food stall and was out by 4 am, and was not home until 10 pm every day". sg.theasianparent.com (in ஆங்கிலம்). 13 September 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  11. Low, Patrick Kim Cheng (2018). Leading successfully in Asia (Second ed.). Cham, Switzerland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319713472.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  12. Rajan, Uma (28 June 2016). "To Singapore with Love...". In Pillai, Gopinath & Kesavapany, Krishnasamy (eds.). 50 Years of Indian Community in Singapore. World Scientific Publishing Co. p. 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-813-14058-5. Archived from the original on 18 February 2020. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017. Notable female politicians include Dhanam Avadai, PAP Member for Moulmein (1965–1968), lawyer Indranee Rajah, the current Senior Minister of State, Ministry of Law and Ministry of Education, and Indian-origin politician Halimah Yacob, former Minister and current Speaker of Parliament.
  13. 13.0 13.1 Mokhtar, Faris (18 August 2017). "Mom's the inspiration for former Speaker". Today (newspaper) இம் மூலத்தில் இருந்து 14 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181114074149/https://www.todayonline.com/singapore/moms-inspiration-former-speaker. 
  14. Lim, Yan Liang (7 July 2016). "Halimah Yacob conferred honorary Doctor of Laws degree by NUS". Straits Times இம் மூலத்தில் இருந்து 30 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180630133242/https://www.straitstimes.com/singapore/halimah-yacob-conferred-honorary-doctor-of-laws-degree-by-nus. 
  15. 15.0 15.1 Asia, Tatler. "Halimah Yacob - The first female President of Singapore, Halimah Yacob has been a pioneering politician with an impressive career at NTUC and an advocate for compassionate causes". Tatler Asia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  16. Auto, Hermes (11 September 2017). "2011 - She became Minister of State at the Ministry of Community Development, Youth and Sport". www.straitstimes.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  17. Zhang, Laura (8 August 2017). "Our First Gentleman to be, Mohamed Abdullah Alhabshee". www.theindependent.sg (The Independent) இம் மூலத்தில் இருந்து 17 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170817134932/http://www.theindependent.sg/our-first-gentleman-to-be-mohamed-abdullah-alhabshee/. 
  18. "Halimah wants to continue living in her HDB flat". The Straits Times. 14 September 2017. Archived from the original on 15 July 2020. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
  19. "President Halimah to move out from Yishun residence to a new location". 2 October 2017. Archived from the original on 27 February 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2017.
  20. "President Halimah Yacob will be moving out of her HDB flat in Yishun so as to better "ensure her safety and security", said the Ministry of Home Affairs (MHA)". sg.news.yahoo.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  21. "President Halimah Yacob will soon move out of the jumbo Yishun flat where she and her family have stayed for over two decades, due to challenges in ensuring her security and protection". TODAY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.
  22. "President Halimah to move out of Yishun flat". The New Paper. 3 October 2017. Archived from the original on 15 July 2020. பார்க்கப்பட்ட நாள் 15 July 2020.
  23. "President Halimah Yacob was greeted by a cheering crowd at the void deck of her Yishun Avenue 4 block as she left her home to go to work". Stomp (in ஆங்கிலம்). 19 September 2017. பார்க்கப்பட்ட நாள் 26 July 2022.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Halimah Yacob
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிமா_யாக்கோபு&oldid=3778813" இலிருந்து மீள்விக்கப்பட்டது