இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு

முதலாம் எட்வர்டு (Edward I, 17/18 சூன் 1239 – 7 சூலை 1307) இங்கிலாந்தின் மன்னராக 1272 முதல் 1307 வரை பதவியில் இருந்தவர். முடி சூடுவதற்கு முன்னர் இவர் எட்வர்டு பிரபு (The Lord Edward) எனப் பொதுவாக அழைக்கப்பட்டார்.[1] இவர் தனது பதவிக் காலத்தில் பெரும்பாலும் அரச நிருவாகத்தையும், பொதுச் சட்டத்தையும் சீரமைப்பதில் ஈடுபட்டார். ஒரு விரிவான சட்ட விசாரணை மூலம், எட்வர்டு பல்வேறு நிலப்பிரபுக்களின் உரிமைகளை மீளாய்வு செய்தார். இதன் மூலம் குற்றவியல் மற்றும் சொத்துச் சட்டங்களை எழுத்துச் சட்டங்களின் மூலம் சீர்திருத்தி எழுதினார். எவ்வாறாயினும், எட்வர்ட் இராணுவ விவகாரங்களிலேயே தனது கவனத்தை செலுத்தினார்.

முதலாம் எட்வர்ட்
Edward I
இங்கிலாந்தின் மன்னர்
ஆட்சிக்காலம்20 நவம்பர் 1272 – 7 சூலை 1307
முடிசூட்டுதல்19 ஆகத்து 1274
முன்னையவர்மூன்றாம் ஹென்றி
பின்னையவர்இரண்டாம் எட்வர்டு
பிறப்பு17/18 சூன் 1239
வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, இலண்டன், இங்கிலாந்து
இறப்பு7 சூலை 1307 (அகவை 68)
பர்க், கம்பர்லாந்து, இங்கிலாந்து
புதைத்த இடம்27 அக்டோபர் 1307
துணைவர்காஸ்டிலின் எலனோர்
(தி. 1254–1290)
பிரான்சின் மார்கரெட்
(தி. 1299–1307)
குழந்தைகளின்
பெயர்கள்
எலனோர் மூலம்
இளவரசி எலனோர்
ஜோன்
அல்பொன்சோ
மார்கரெட்
மேரி
எலிசபெத்
என்றி
எட்வர்ட் II
மார்கரெட் மூலம்:
தோமசு
எட்மண்ட்
மரபுபிளான்டஜெனெட்
தந்தைஹென்றி III
தாய்எலனோர்

மூன்றாம் என்றியின் மூத்த மகன் என்ற வகையில், எட்வர்ட் அவரது தந்தையின் ஆட்சியின் போதான அரசியல் சூழ்ச்சிகளில், குறிப்பாக ஆங்கிலேயப் பிரபுக்களின் நேரடிக் கிளர்ச்சி போன்றவற்றில் தன்னை ஆரம்பம் தொடக்கம் ஈடுபடுத்திக் கொண்டார். 1259 இல், பிரபுத்துவ சீர்திருத்த இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். ஆனாலும், தந்தையுடனான இணக்கப்பட்டை அடுத்து, இரண்டாம் பிரபுக்களின் போரில் தந்தைக்கு ஆதரவாக செயற்பட்டார்.[2] லூவிசு சமரின் போது எட்வர்ட் கிளர்ச்சியின் ஈடுபட்ட பிரபுக்களினால் பணயமாகப் பிடிக்கப்பட்டார்.[3] ஆனாலும் சில மாதங்களில் அவர்களிடம் இருந்து தப்பி வெளியேறினார்.[4] பின்னர் லெஸ்டரின் 6-வது பிரபு சைமன் டி மொன்ஃபோர்ட்டுடனான சண்டையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1265 இல் எவெசாம் என்ற இடத்தில் சைமன் தோல்வியடைந்தார்.[5] அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரபுக்களின் கிளர்ச்சி அடக்கப்பட்டது.[6] இங்கிலாந்து அமைதியாக இருந்த போது, எட்வர்ட் ஒன்பதாவது சிலுவைப் போரில் இணைந்து திருநாடு சென்றார்.[7] 1272 இல் நாடு திரும்புகையில், தந்தை இறந்ததாக செய்தி தெரிவிக்கப்பட்டது.[8] 1274 இல் இங்கிலாந்து திரும்பியதை அடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் ஆகத்து 19 இல் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.[9]

1276–77 இல் வேல்சில் இடம்பெற்ற சிறு கிளர்ச்சியை அடக்கிய எட்வர்ட்,[10] 1282–83 இல் இரண்டாவது கிளர்ச்சியை எதிர் கொண்டு, வேல்சை முழுமையாகக் கைப்பற்றி, ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஏற்படுத்தினார். வேல்சின் நகர்ப்புறங்களில் பல கோட்டைகளையும், நகரங்களையும் நிர்மாணித்து, ஆங்கிலேயர்களைக் குடியமர்த்தினார். அடுத்ததாக, அவரது பார்வை இசுக்கொட்லாந்து பக்கம் திரும்பியது. இசுக்கொட்லாந்தின் ஆட்சிக்கு உரிமை கோரியவர்களிடம் இருந்து மத்தியஸ்தம் வகிக்க அழைக்கப்பட்டார். எட்வர்ட் இசுக்கொட்லாந்து இராச்சியத்தின் மீதான நிலப்பிரபுத்துவ மேலாதிக்கத்திற்கு உரிமை கோரினார். இதனை அடுத்து ஆரம்பமான இசுக்கொட்லாந்தின் விடுதலைக்கான போர், எட்வர்டின் இறப்பின் பின்னரும் தொடர்ந்தது. இதே காலத்தில் முதலாம் எட்வர்டு பிரான்சுக்கு எதிரான போரிலும் (1294–1303) தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பு அக்குவிட்டைன் பகுதியைக் கைப்பற்றியதை அடுத்து இப்போர் வெடித்தது. இப்பகுதி இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இப்போரில் எட்வர்டு இப்பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்றியிருந்தாலும், இப்பிரச்சினை இசுக்கொட்லாந்து மீதான ஆங்கிலேயர்களின் இராணுவ அழுத்தத்தைக் குறைத்திருந்தது. அதே நேரம் உள்ளூரிலும் சில பிரச்சினைகள் கிளம்பின. 1290களின் மத்தியில், அளவுக்கதிகமான இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக உள்ளூரில் அதிக வரி அறவிட வேண்டி வந்தது. இதனால் எட்வர்ட் திருச்சபை மற்றி திருச்சபை அல்லாதோரிடம் இருந்தும் எதிர்ப்பை எதிர்நோக்கினார். ஆரம்பத்தில் இந்த நெருக்கடிகள் தவிர்க்கப்பட்டன, ஆனால் சிக்கல்கள் தீர்க்கப்படாமல் இருந்தன. 1307 இல் எட்வர்ட் இறந்ததின் பின்னர், இசுக்கொட்லாந்துடனான போர் மற்றும் பொருளாதார, அரசியல் பிரச்சினைகளை தனது மகன் இரண்டாம் எட்வர்டிடம் விட்டுச் சென்றார்.

மேற்கோள்கள் தொகு

  1. Burt 2013, ப. 75; Carpenter 1985; Lloyd 1986; Powicke 1947
  2. Prestwich 1997, ப. 42–43
  3. Maddicott 1983, ப. 592–599
  4. Prestwich 1997, ப. 48–49
  5. Sadler 2008, ப. 105–109
  6. Prestwich 1997, ப. 63
  7. Morris 2009, ப. 83, 90–92
  8. Prestwich 1997, ப. 78, 82
  9. Prestwich 1997, ப. 82
  10. Powicke 1962, ப. 413

உசாத்துணைகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு