இடுக்கி வனவிலங்கு சரணாலயம்

கேரளாவில் உள்ள வனவிலங்கு சரணாலயம்

இடுக்கி வனவிலங்கு சரணாலயம் (Idukki Wildlife sanctuary) இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இடுக்கி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியைச் சுற்றி அமைந்துள்ள இடுக்கி வனவிலங்கு சரணாலயம் பல்லுயிர் மற்றும் வளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது.

இடுக்கி வனவிலங்கு சரணாலயம்
Idukki Wildlife sanctuary
அமைவிடம்இடுக்கி மாவட்டம், கேரளம், இந்தியா
ஆள்கூறுகள்76° 55' மற்றும் 77° 4' 5' கிழக்கு தீர்க்கரேகை 9° 45' 30' மற்றும் 9° 53' 30' வடக்கு அட்சரேகை.
பரப்பளவு105.364 km2 (40.7 sq mi)
நிறுவப்பட்டது1976
நிருவாக அமைப்புகேரள வனத்துறை , கேரள அரசு

விளக்கம்

தொகு

இடுக்கி வனவிலங்கு சரணாலயம் இடுக்கி அணையின் (இடுக்கி நீர்த்தேக்கம்) நீர்ப்பிடிப்புப் பகுதியைச் சுற்றியுள்ள ஒரு வனப்பகுதியாகும். இடுக்கி நீர்மின் திட்டத்திற்காக எக்டேர் கணக்கில் மழைக்காடுகளை அகற்றியதால் அங்குள்ள வனவிலங்குகளுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டது.[1] இதனை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது. இடுக்கி வனவிலங்கு சரணாலயம் தொடுபுழா மற்றும் உடும்பஞ்சோலா தாலுகாக்களில் [2] 105.364 சதுரகிலோமீட்டர் (40.7 சதுர மைல்) பரப்பளவிற்கு விரிந்துள்ளது. இதில் 72 சதுர கிலோமீட்டர் (27.8 சதுரமைல்) வன நிலமாகவும் 33 சதுரகிலோமீட்டர் (12.7 சதுரமைல்) நீர்த்தேக்கத்தின் நீர்நிலையாகவும் உள்ளது.[2] 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட்ட அரசு ஆணைப்படி இந்த இடம் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. [3] சரணாலயம் கடல் மட்டத்திலிருந்து 450 முதல் 1272 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. [2] சரணாலயத்தின் மிக உயரமான சிகரம் வஞ்சூர் மேடு ஆகும், இது 1272 மீட்டர் (4173 அடி) உயரம் கொண்டது.[2]

இடுக்கி, செருதோணி மற்றும் குளமாவு அணைகள் இந்த சரணாலயத்தில் அமைந்துள்ளன. வனவிலங்கு சரணாலய காப்பாளர் தலைமையகம் பினியா அருகே வெள்ளப்பாறையில் உள்ளது. இங்கு வனத்துறையின் இயற்கை ஆய்வு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடுக்கி மாவட்டத் தலைமையகம், பைனாவு சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது.

வானிலை

தொகு

சரணாலயத்தில் சராசரி வெப்பநிலை 13º செல்சியசு முதல் 29º செல்சியசு வரை மாறுபடும். வெப்பமான மாதங்கள் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகும். [2]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்

தொகு

காட்டுப்பலா, நாகமரம், அயனி (மரம்), இருளி மரம், கறுவா (மரம்), தேக்கு, சிசே மரம், வேங்கை (மரம்) உள்ளிட்ட ப்ல்வேறு மரங்கள் இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளன.[2]

சரணாலயத்தில் ஆசிய யானைகள், சாம்பார் மான்கள், கேளையாடு, சருகுமான் போன்ற மான் இனங்கள், பொன்னெட் மக்காக் மற்றும் நீலகிரி லங்கூர் உள்ளிட்ட குரங்குகள், இந்திய ராட்சத அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, காட்டுப் பூனை, செந்நாய் மற்றும் நரி போன்ற விலங்குகள் காணப்படுகின்றன.[2] இவை தவிர சரணாலயத்தில் காளைகள், பசுக்கள் மற்றும் எருமைகள் உள்ளிட்ட ஏராளமான வளர்ப்பு விலங்குகளும் உள்ளன. 1976 ஆம் ஆண்டு இடுக்கி அணை கட்டப்பட்டதன் மூலம் வனவிலங்கு சரணாலயத்திற்குள் இவை சிக்கிக் கொண்டவையாகும். . வேட்டையாடும் இனங்கள் இங்கு குறைவாக இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான கால்நடைகள் உணவுக்காக புல்லின் அளவைக் குறைப்பதோடு இடுக்கி வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.[4]

மலை இருவாட்சி, கரும்புள்ளி மரங்கொத்தி, காட்டுப் பஞ்சுருட்டான் , மலபார் தீக்காக்கை, கருப்புச்சின்னான், காட்டுக்கோழி, சிரிப்பான், மீன்கொத்தி , மயில் உள்ளிட்ட பல பறவைகள் சரணாலயத்தில் உள்ளன. [1] 2017 ஆம் ஆண்டு இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்ட பறவை-பட்டாம்பூச்சி கணக்கெடுப்பில் பல அரியவகை பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன. பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கூட்டமைப்புடன் இணைந்து கேரள வனத்துறை இந்த ஆய்வை நடத்தியது. [5] கணக்கெடுப்பில் 163 வகையான பறவைகள் மற்றும் 107 வகையான பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டன. [5]

2019 ஆம் ஆண்டு சரணாலயத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வண்ணத்துப்பூச்சி இனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. பட்டாம்பூச்சிகள், பறவைகள், ஆமைகள் மற்றும் எறும்புகள் குறித்த கணக்கெடுப்பு கேரள வனம் மற்றும் வனவிலங்கு துறை மற்றும் திருவாங்கூர் இயற்கை வரலாற்று சங்கம் இணைந்து நடத்தியன. 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மேலாண்மைத் திட்டத்தில் 76 பட்டாம்பூச்சி இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன, 2019 கணக்கெடுப்பில் 182 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. [6]

வைரமணி

தொகு

வைரமணி என்பது கோடைக்காலத்தில் இடுக்கி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள இடுக்கி நீர்த்தேக்கத்தில் உருவாகும் ஒரு தீவு ஆகும்.[7] இந்த தீவு, மனித தலையீடு இல்லாமல், கோடை மாதங்களில் பல பறவைகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறி வருகிறது. [7] தற்போது, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள படகு மூலம் மட்டுமே இத்தீவை அணுக முடியும். 1974 ஆம் ஆண்டில் இடுக்கி அணையின் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியதால் வைரமணி கிராமம் தண்ணீரில் மூழ்கியது. [8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Wildlife in Idukki, Kerala, wildlife tourism in kerala, wildlfe travel in kerala". www.kerala.com.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Idukki Wildlife Sanctuary". www.forest.kerala.gov.in.
  3. "WILDLIFE SANCTUARIES, NATIONAL PARKS, OTHER PROTECTED AREAS AND BIOSPHERE RESERVES". forest.kerala.gov.in.
  4. Raman, Giji K. (14 May 2022). "Feral cattle pose threat to Idukki wildlife" (in en). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/feral-cattle-pose-threat-to-idukki-wildlife/article65407200.ece. 
  5. 5.0 5.1 "ഇടുക്കി വന്യജീവി സങ്കേതത്തില്‍ സര്‍വെ; പക്ഷികളെയും ശലഭങ്ങളെയും കണ്ടെത്തി | Idukki | Kerala | Deshabhimani | Saturday Jan 21, 2017". www.deshabhimani.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-24.
  6. "ഇടുക്കി വന്യജീവി സങ്കേതത്തിൽ ശലഭ സ്പീഷീസുകളിൽ വൻ വർധന" (in ml). ManoramaOnline. https://www.manoramaonline.com/news/kerala/2019/10/02/butterfly-species-increase-in-idukki.html. 
  7. 7.0 7.1 Raman, Giji K. (4 May 2022). "Birds take a two-month break on this islet" (in en). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/birds-take-a-two-month-break-on-this-islet/article65378373.ece. 
  8. "ഇടുക്കി ഡാമിനുള്ളിലെ വൈഡൂര്യം; വെള്ളത്തിൽ മറഞ്ഞ വൈരമണി ഗ്രാമം" (in ml). Manoramanews. https://www.manoramanews.com/news/spotlight/2022/01/08/idukki-dam-vairamani-village.html.