செந்நாய்
செந்நாய் புதைப்படிவ காலம்:பிலிசுடோசினுக்கு பிறகு[1]-Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | கேனினே
|
பேரினம்: | குஅன் ஹாட்ஜ்சன், 1838
|
இனம்: | கு. அல்பினசு
|
இருசொற் பெயரீடு | |
குஅன் அல்பினசு (பாலாசு, 1811) | |
செந்நாயின் பரவல் |
செந்நாய் (Dhole, Cuon alpinus), நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இது ஆசியக் காட்டு நாய், இந்தியக் காட்டு நாய், காட்டு நாய் எனப் பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலைவாழ் மக்கள் இந்த விலங்கை வேட்டைக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள்.
படிவளர்ச்சி
தொகுசெந்நாய், கடைசி உறைபனிக் காலத்தில் தப்பிப்பிழைத்த நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்காகும். உறைபனி காலத்தில் செந்நாய்கள் மிகப்பரந்த நிலப்பரப்பை உள்ளடக்கிய யூரேசியா, வட அமெரிக்காக் கண்டங்களில் வாழ்ந்தன. செந்நாய் 'லூப்பசு' என்ற மூதாதைய நாய்க் குடும்ப உறுப்பினரிடம் இருந்து ஏறத்தாழ இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து படிவளர்ச்சி அடைந்ததாக இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி கொண்டு ஆராய்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன[3].
வகைப்பாடு
தொகுசெந்நாய் உடல் அமைப்பில் ஆப்பிரிக்கக் காட்டு நாயையும், தென்னமெரிக்காவின் புதர் நாயையும் ஒத்து இருக்கும். இவ்வினங்கள் அனைத்திலும் ஒன்றுபோல் இருக்கும் நறுக்கும் கடைவாய்ப் பல் இவற்றின் மூதாதையத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது. என்றாலும் பல்வேறு அறிஞர்கள் இவ்வினங்களின் படிவளர்ச்சி தொடர்புகள் பற்றிய ஐயங்களை எழுப்பியுள்ளனர்[4]
உள்ளினங்கள்
தொகுவகைப்பாட்டியலில் பொதுவில் ஏற்கப்பட்ட மூன்று உள்ளினங்கள் செந்நாயில் உள்ளன. ஆனால், பல ஆராய்ச்சியாளர்கள் பல உள்ளினங்களை உருவம், நிறம் அடிப்படையில் விவரித்துள்ளனர்.[5] செந்நாயின் சில உள்ளினங்களும் அவற்றின் வாழிடங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
உள்ளினங்கள் | காணப்படும் இடங்கள் | உருவ அமைப்பு |
---|---|---|
அடசுத்தசு (adustus) | இவ்வினம் வடக்கு மியான்மர் மற்றும் இந்தோ-சீனப் பகுதிகளில் காணப்படுகிறது. | இவை செம்பழுப்பு நிற உடல்மயிர் போர்வையைக் கொண்டவையாகும். |
டுக்குனென்சிசு (dukhunensis) | இந்தியாவில் கங்கை ஆற்றுக்குத் தெற்கே மட்டும் காணப்படும் ஓர் உள்ளினம் ஆகும். | இவை செந்நிற உடல்மயிர் போர்வையையும், பாதங்களில் குட்டை மயிர்களையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவையாகும். |
வியுமோசசு (fumosus) | மேற்கு சேசுவான், சீனா மற்றும் மங்கோலியா பகுதிகளில் வாழும் உள்ளினம். | இவை மஞ்சள் கலந்த செந்நிற உடல்மயிர் போர்வையையும், அடர்த்தியான பின்புறத்தையும் சாம்பல் நிறக் கழுத்தையும் கொண்டவை. |
இன்ஃவியுசுக்கசு (infuscus) | தென் மியான்மர், மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் பகுதிகளில் வாழும் | இவை அடர்த்தியான பழுப்பு நிற உடல்மயிர் போர்வையையும் மற்றும் தனிச்சிறப்பான மண்டையோட்டையும் கொண்டது. |
ஜாவானிக்கசு (javanicus) | குட்டையான ஒளிரும் சிவப்பு நிறத்தைக் கொண்ட இவ்வினம் ஜாவா பகுதிகளில் காணப்படுகிறது. | இவ்வின விலங்குகள் தாம் வாழும் பகுதிகளுக்குத் தகுந்தாற்போல் உடலின் நிறம் மாறுவதாக அறியப்பட்டுள்ளது. |
இலானிகெர் (laniger) | காசுமீர், தெற்கு திபெத் பகுதிகளில் காணப்படும் | இவ்வினம் மஞ்சள் கலந்த சாம்பல் நிற உடலைக் கொண்டது. |
இலெப்டுரசு (lepturus) | சீனாவின் யாங்சீக்கும் (Yangze) தெற்கே காணப்படும் | இந்த உள்ளினம் சீரான செந்நிற உடல்மயிர் போர்வையையும் மென்மயிரையும் கொண்டவை. |
பிரிமேவசு (primaevus) | இமாலய மலைகளின் நேப்பாளம், சிக்கிம் (இந்தியா), பூட்டான் பகுதிகளில் வாழும் | இந்த உள்ளினம் மிக நீளமான செந்நிற உடல்மயிர் போர்வையையும், பாதங்களில் நீண்ட மயிர்களையும் கொண்டவை. |
சுமத்ரென்சிசு (sumatrensis) | சுமத்திரா தீவுகளில் காணப்படும் | இவ்வினம் குட்டையான, ஒளிரும் சிகப்பு நிறத்தையும், முகத்தில் கறுப்பு உணர் மயிரிழையையும் (மீசை) கொண்டவை. |
* எப்பெரியசு (hesperius) | கிழக்கு துருக்கிசுத்தான், தென் சைபீரியா, மேற்கு சீனப்பகுதிகளில் வாழும் | இவ்வினம் நீளமான மஞ்சள் நிற மயிர் போர்வையையும், வெள்ளை நிற அடிப்பகுதியையும், முகத்தில் பழுப்புநிற உணர் மயிரிழையும் (மீசை) கொண்டவை. |
பரவல்
தொகுவரலாற்று பரவல்
தொகுமுற்காலத்தில் செந்நாய்கள் ஆசியாவின் தெற்கு, கிழக்கு, தென் கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்தன. இவை ஆசியாவின் வடக்கில் தியன்-சான் (Tian-Shan), ஆல்டை மலைகளில் (Altai mountains) இருந்து சோவியத்து நாட்டின் மாரிடைம் மாகாணப் பகுதி வரையிலும், தெற்கில் மங்கோலியா, கொரியா, சீனா, திபெத், நேபாளம், இந்தியா, மியான்மர், கம்போடியா, வியட்நாம், லாயொசு, தாய்லாந்து, மலேசியத் தீபகற்பம், ஜாவா-சுமத்திராத்தீவுகளில் வாழ்ந்தன.[4].
தற்போதைய பரவல்
தொகுதற்போது செந்நாயின் இருப்பு கீழ்க்காணும் இடங்களில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடு அல்லது பகுதி | இடம் |
---|---|
நடு, கிழக்கு ஆசியா | திபெத், லடாக், தென் சீனா, வட கொரியா |
இந்தியா | மத்திய, வட கிழக்கு, தென் இந்தியா, நேப்பாளம் |
பூடான் | கேகிங் (Kheng) |
வங்காள தேசம் | உறுதி செய்யப்படா இருப்பு ? |
மியான்மர் | பல்வேறு பாதுகாக்கப்பட்ட காடுகளில் |
இந்தோ-சீனாப் பகுதி | வியட்நாம், லாயொசு, தாய்லாந்து, கம்போடியா |
இந்தோனேசியா, மலேசியா | ஜாவா, சுமத்திரா தீவுகள் |
உடல் அமைப்பு
தொகுஏறத்தாழ 12 முதல் 20 கிலோ கிராம் வரையிலான எடையில் இருக்கும் செந்நாய் 90 செ.மீ. நீளமும் 50 செ. மீ. தோல் பட்டை உயரமும் கொண்டது. வாலின் நீளம் 4 முதல் 14 செ மீ வரை இருக்கும். ஆண் , பெண் செந்நாய்களிடையே மிகமிகக் குறைந்த பாலியல் இருவத்தோற்றம் காணப்படுகிறது. உடலின் புற அமைப்பிலும் உடற்கூறியல் அமைப்புகளிலும் பாலியல் இருவத்தோற்றம் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதில்லை. செந்நாயின் உடல் மயிர்ப் போர்வை சிகப்பு முதல் பழுப்பு நிறத்தையும், முன் கழுத்து, நெஞ்சு, அடிப்பகுதிகள் வெள்ளை நிறத்தையும் கொண்டவை. உலகில் செந்நாய் காணப்படும் பகுதிகளில் தென் பகுதிகளில் வாழும் செந்நாயின் மென்மயிர்கள் மிகவும் குட்டையானவை; சிகப்பு நிறத்தினாலானவை. ஆனால், வடபகுதிகளில் வாழும் செந்நாய்கள் நீளமான மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தினால் ஆன மென்மயிர்களைக் கொண்டவையாகும்.
செந்நாய்கள் நாய் குடும்பத்திலேயே மிகவும் தனித்தன்மை வாய்ந்த பல்லமைப்பைக் கொண்டவை,
செந்நாயின் உடல் அமைப்பில் உள்ள சில குறிப்பிடத்தக்க பண்புகள்:
- மண்டை ஓடு அகலமான குவிமாட உருவிலானது.
- முகவாய் குறுகிய அகலமான அமைப்பைக் கொண்டது.
- கண்களில் பழுப்பு நிறத்திலான விழித்திரைப்படலம் காணப்படும்.
- கருப்பு நிற மூக்கு. முக்கோண வடிவிலான மூக்கு.
- முகத்தின் மொத்த நீளத்தில் பாதி அளவிலான காதுகள்.
வாழிடம்
தொகுசெந்நாய்கள் பல்வேறு வகை காடுகளில் வாழும் தன்மை உடையன. இவை வெப்பமண்டலத்தில் பசுமை மாறா காடுகள், மித பசுமை மாறாக் காடுகள், முற்புதர் காடுகள், வறண்ட இலையுதிர் காடுகளிலும், மிதவெப்ப மண்டலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 3000 மீட்டருக்கும் உயரமான உயர் மலைப் புல்வெளிகளிலும் காணப்படுகின்றன. இவை பாலைவனத்தில் வாழ்வதற்கானச் சான்றுகள் ஏதும் இல்லை.
இந்தியாவில் செந்நாய்கள் வெப்பமண்டல, வறண்ட, ஈரப்பதமுள்ள, இலையுதிர் காடுகளில் வாழ்கின்றன. இவற்றின் உயிர்தொகையின் அளவு இவற்றின் இரையான குளம்பிகளின் உயிர் தொகையும், மனித நடமாட்டம், இனப்பெருக்கத்துக்குத் தகுந்த இடம, நீர் நிலை முதலிய காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
இனப்பெருக்கம்
தொகுபிறந்த ஒரு ஆண்டுக்குப் பிறகு ஆண், பெண் இரண்டும் இனப்பெருக்கத்துக்குத் தயாராகும். பெண் விலங்குகள் பல்லிருது பண்புடையவை. இவை 4 முதல் 6 வாரத்திற்கு ஒரு முறை சினைப்பருவம் அடையும். ஒரு குழுவில் உள்ள எந்த ஒரு உறுப்பினரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடலாம். இச்செயல் குழுவின் மற்ற உறுப்பினர்களால் தடை செய்யப்படுவதில்லை. இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் 60 - 62 நாட்கள் ஆகும். பெண் செந்நாய் சுமார் 5 முதல் 10 குட்டிகளை குகைகள், மண் வளைகளுக்குள் ஈனும். பிறந்த குட்டிகள் 200 முதல் 350 கிராம்கள் வரையிலான எடையில் இருக்கும். பிறந்த பத்து நாட்களில் குட்டிகள் பிறந்தபொழுது இருந்த எடையை விட இரண்டு மடங்காகும். பிறந்த மூன்று வாரங்களில் தாய் நன்கு மென்ற இறைச்சியை குட்டிகளுக்கு உணவாக அளிக்கும். குட்டி தன் இரையைத் தானாக உண்ணும் வரை அதன் தாயோ அக்குழுவில் இருக்கும் வேறு சில உறுப்பினர்களோ குட்டிகளுக்கு உணவளிக்கும்.
சூழியல்
தொகுசமூக வாழ்க்கை
தொகுசெந்நாய் குழுவாக வாழும் ஒரு விலங்கு. இவை தம் குழுவில் வாழும் உறுப்பினர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மிகவும் கட்டுக்கோப்பான 5 முதல் 12 உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும் தன்மையை உடையவை. சில நேரங்களில் ஒரு குழு மற்றொரு குழுவுடன் இரு குழுக்களின் நன்மைகளுக்காக நட்பு பேணும். சூழ்நிலைக் காரணங்களே குழுக்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கின்றது. மிகவும் அதிகப்படியாக 40 செந்நாய்களைக் கொண்ட குழுக்கள் காணப்பட்டுள்ளது. இவை இரண்டு அல்லது மூன்று குழுக்கள் சேர்ந்து இருந்ததிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. வயது முதிர்ந்த (7-8 வயது) செந்நாய்கள் குழுக்களில் இருந்து சில காலம் விலகி இருப்பதும் உண்டு. ஒரு குழுக்குள் வாழும் உறுப்பினர்களிடையே சண்டைகள் வருவதில்லை. ஏனெனில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒவ்வொரு பணி இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் ஒரு ஆண், பெண் செந்நாய் இருக்கும். பெரும்பாலும் அவை மட்டுமே இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஓய்வு நேரங்களில் குழுவில் உள்ள செந்நாய்கள் அனைத்தும் விளையாடும். குழுவில் இருந்து விலகும் ஒரு பெண் உறுப்பினரால் ஒரு குழு இரண்டாகப் பிரிகின்றது. குழுவில் வாழும் ஒவ்வொரு உறுப்பினரும் அக்குழுவின் வாழ் எல்லைக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கழிப்பிடமாகப் பயன்படுத்தும். இக்கழிப்பிடம் ஒரு குழுவின் வாழ் எல்லை மற்றொரு குழுவுக்கு உணர்த்தவும் உதவுகிறது.
உணவு முறை
தொகுஊனுண்ணி விலங்கான செந்நாயின் உணவு பலதரப்பட்ட முதுகெலும்புள்ள, முதுகெலுப்பில்லாத விலங்குகளால் ஆனவை. இவற்றின் உணவு வண்டுகள், கொறிணிகள், பறவைகள், குளம்பிகள் போன்ற விலங்குகள் ஆகும். மற்ற கொன்றுண்ணி விலங்குகளைப் போல செந்நாயும் சில நேரங்களில் புற்களையும் இதர தாவரங்களையும் அரிதாக உட்கொள்கிறது. இவை பெரும்பாலும் 40 முதல் 50 கிலோ எடையுள்ள குளம்பிகளான புள்ளி மான், கடத்தி மான் போன்றவற்றை வேட்டையாடி உண்கின்றன. இவை சில வேளைகளில் இறந்த விலங்குகளின் உடல்களையும் உண்பதுண்டு.
முதுமலை காட்டு விலங்கு உய்விடத்தில் செந்நாயின் எச்சங்களை ஆய்வு செய்த பொழுது கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளும் அவற்றின் விழுக்காடும்
செந்தாயின் எச்சத்தில் காணப்பட்ட விலங்கு | சதவீதம் |
---|---|
புள்ளி மான் | 41 - 70 % |
கடத்தி மான் | 22 - 23% |
கால்நடைகள் | 4 - 15% |
முயல்கள் | 3 - 20 % |
செந்நாய்கள் 10 முதல் 30 உறுப்பினர்கள் கொண்ட குழுவாகச் சேர்ந்து வேட்டையாடும். குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் வேட்டையாடும் பொழுது ஒரு குறிப்பிட்ட இடமும் வேலையும் தரப்படுகிறது. அவை இரையை பின்புறம் இருந்து துரத்துதல், பக்கவாட்டில் துரத்துதல், இரையின் மேல் பாய்தல் போன்றவையாகும். இவை பெரும்பாலும் வேட்டையாடி உண்டாலும் சில சமயம் வேறு விலங்கு வேட்டையாடிய இரையைத் திருடுவதும் உண்டு.
காப்புநிலை
தொகுசெந்நாய்ப் பரவியுள்ள அனைத்து நாடுகளிலும் இதன் உயிர்த்தொகைக் குன்றி வருகிறது. அதற்கு மிக முக்கியமான காரணங்களாகக் கருதப்படுவை:
- இரையாகும் விலங்கின் உயிர்த்தொகை குன்றுதல்
- வாழிடம் அழிக்கப்படுதல்
- வேட்டையாடப்படுதல்
- மனிதர்கள் காட்டுக்குள் நடமாடுவதால் காட்டுக்குள் பெருகும் ஊர் நாய்கள் உணவுக்கு போட்டியாக வருதல்.
- ஊர் நாய்கள், இதர விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்கள்
பல்வேறு அரசுகளும், பன்னாட்டு அமைப்புகளும் இவ்விலங்கை வேட்டையாடுவதையோ தொந்தரவு செய்வதையோ சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்துள்ளது.
தமிழ் இலக்கியங்களில் செந்நாய்
தொகுதமிழ் இலக்கியங்களில் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள்களுள் செந்நாயும் ஒன்று இதனைப் பற்றி தமிழிலக்கியங்கள் குறித்துள்ளன. பாலை நிலத்தில் வேட்டையாடித் திரியும் செந்நாய், மணலைக்கிளறி தண்ணீர் குடித்து விட்டு போகும் என குறுந்தொகை கூறுகிறது.
குறுந்தொகை
தொகு- வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
- குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
- வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
- வருகதில் அம்ம தானே
- அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.[6]
- குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
- பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும் [7]
நற்றிணை
தொகு- 1.ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
- ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
- அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்[8]
- 2.களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து
- பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்
- பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய்[9]
குறுந்தொகையில் 141:6 பாடலும் மலைபடுகடாம் 338ஆம் பாடலிலும் கலித்தொகையில் 83:1.என வரும் வரிகளிலும் இதனை அறியலாம்.
பூனாச்சி புதினம்
தொகுபெருமாள் முருகன் தன் பூனாச்சி புதினத்தில் இதை காட்டு நாய் என்று குறிப்பிடுகிறார். முன்பு இவை காட்டில் பெருமளவில் இருந்ததை, அவரது கதைமாந்தர்கள் நினைவுகூர்கிறார்கள்.
- செந்நாய் சீழ்க்கை, அலறல், குழந்தை கத்துதல் போன்று பல விதமான ஒலிகளை எழுப்பவல்லது.
- இவை சில சமயம் 40 உறுப்பினர்களுக்கு மேல் கொண்ட குழுக்களாகக் காணப்படும்.
- குழுவில் உள்ள ஒரு செந்நாய் மற்றொரு செந்நாய்க் குட்டியை பாதுகாக்கவும் உணவளிக்கவும் செய்யும்.
- செந்நாய் தன்னை விட பத்து மடங்கு அதிக எடையுள்ள இரையையும் தாக்கும். எடுத்துக்காட்டாக ஒரு குழு சேர்ந்து புலியையும் கொன்று தின்னும்.
- செந்நாய், வெப்பநிலை மழைக்காடுகள், வறண்ட இலையுதிர் காடுகள், குளிர்ந்த உயர் மலை காடுகள், திறந்த சமவெளி போன்ற வாழிடங்களில் வசிக்கக் கூடியது.
- இவை சுமார் 2.3 மீட்டருக்கும் (7.5 அடிகள்) மேல் எம்பிக் குதிக்கவல்லன.
- இதன் பல் வரிசை அமைப்பு நாய்க் குடும்பத்திலேயே தனித்தன்மை வாய்ந்தது.
- மிகச் சிறப்பாக நீந்த வல்லது. பெரும்பாலும் தன் இரையை நீருக்குள் வரவழைத்து, பின் வேட்டையாடும்.
- இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாழும் இந்த வகை நாய் ஒன்று ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது.[11]
ஆவணப்படம்
தொகுமைசூரைச் சேர்ந்த கிருபாகர், சேனானி என்ற காட்டுயிரில் ஆர்வளர்களான இரு இளைஞர்கள், 2006இல் செந்நாய்களைப் பற்றி ‘The Pack’ என்ற தலைப்புடைய 50 நிமிட ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார்கள். இந்த ஆவணப்படமானது பந்திப்பூர் காடுகளில் படமாக்கப்பட்டது. இந்தப் படம் 2008இல் ‘கிரீன் ஆஸ்கர்’ என்று சொல்லப்படும் காட்டுயிர்ப் படங்களுக்கான பரிசை பிரிட்டனில் பெற்றது.[12]
செந்நாய்களின் படங்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Dhole" (PDF). L.S Durbin, A. Venkataraman, S. Hedges and W. Duckworth. Canids.org. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-02-10.
- ↑ "Cuon alpinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes justification for why this species is endangered
- ↑ Molecular Systematics of the Canidae. Robert K. Wayne, Eli Geffen, Derek J. Girman, Klaus P. Koepfli, Lisa M. Lau and Charles R. Marshall Systematic Biology, Vol. 46, No. 4 (Dec., 1997), pp. 622-653
- ↑ 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
- ↑ Wozencraft, W. C. (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-8221-4. http://www.bucknell.edu/msw3.
- ↑ குறுந்தொகை 56, சிறைக்குடி ஆந்தையார், பாலை திணை – தலைவன் சொன்னது
- ↑ குறுந்தொகை 141, மதுரைப் பெருங்கொல்லனார், குறிஞ்சி திணை – தலைவி சொன்னது
- ↑ நற்றிணை 43, எயினந்தையார், பாலை திணை – தோழி சொன்னது
- ↑ நற்றிணை 103, மருதன் இள நாகனார், பாலை திணை - தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2005-04-03. பார்க்கப்பட்ட நாள் 2009-05-24.
- ↑ வண்டலூர் உயிரியல் பூங்காவில் செந்நாய் 3 குட்டிகளை ஈன்றது
- ↑ சு. தியடோர் பாஸ்கரன் (4 ஆகத்து 2018). "வேட்டைக்காரன்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2018.