இன்குலாப்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

இன்குலாப் (Inkulab, பிறப்பு: 1944 - இறப்பு: திசம்பர் 1, 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார். சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும். 2017ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது இவர் எழுதிய காந்தள் நாட்கள் என்னும் நூலுக்கு அவரின் மறைவிற்குப் பின்னர் வழங்கப்பட்டது.[1] ஆனால், அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.[2]

பிறப்பும் படிப்பும்

தொகு

இன்குலாப்பின் இயற்பெயர் செ. கா. சீ. சாகுல் அமீது.[3] கீழக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இசுலாமியச் சமூகத்தில் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சித்த மருத்துவர். பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்ந்து படித்தார். அக்காலத்தில் மீரா என்னும் கவிஞர் அக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தார். எனவே அவருடன் இன்குலாப்புக்கு நட்பு ஏற்பட்டது.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இளங்கலை(தமிழ்) வகுப்பில் சேர்ந்துப் பயின்றார். படிப்பை முடித்து சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். ஈரோடு தமிழன்பன், நா. பாண்டுரங்கன் போன்றோருடன் இன்குலாப் புதுக்கல்லூரியில் பணி புரிந்தார்.

இந்தி எதிர்ப்புப் போர்

தொகு

1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாட்டில் வெடித்தது. அப்போது உடன் பயின்ற மாணவர்களான கவிஞர் நா. காமராசன், கா. காளிமுத்து, பா. செயப்பிரகாசம், ஆகியோருடன் இன்குலாப் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முனைப்பாக இறங்கினார். காவல் துறையின் தடியடிகளுக்கும் ஆளானார். சிறைக்கும் சென்றார்.

பொது வாழ்வுப்பணி

தொகு

தொடக்கக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்து, பிற்காலத்தில் மார்க்சியக் கொள்கையாளர் ஆனார். கீழவெண்மணியில் 1968 இல் நிகழ்ந்த 43 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட நிகழ்விற்குப் பிறகு இன்குலாப் மார்க்சியத்தை நாடினார். கம்யூனிச்டு இயக்கச் சார்பாளர் ஆனபிறகு மார்க்சிய லெனினிய புரட்சிகர இயக்கத்திலும் அதன் பின்னர் மா. லெ. அடிப்படையில் இயங்கிய தமிழ்த் தேசிய விடுதலையிலும் ஈடுபட்டு இயங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்தார். கல்லூரி ஆசிரியர் சங்கப் போராட்டங்களிலும் முன்னணியில் இருந்தார்.

படைப்புகள்

தொகு

இளவேனில் என்பவர் நடத்திய கார்க்கி இதழில் கவிஞர் இன்குலாப்பின் தொடக்கக் கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் ஏராளமான கட்டுரைகளையும் கவிதைகளையும் அவ்வப்போது எழுதினார். மனுசங்கடா, நாங்க மனுசங்கடா என்னும் இவர் எழுதிய பாட்டு எண்ணற்ற மேடைகளில் தலித்து மக்களால் பாடப்படுகிறது.

கவிதைத்தொகுதிகள்

தொகு
 1. இன்குலாப் கவிதைகள் (1972)
 2. வெள்ளை இருட்டு (1977)
 3. சூரியனைச் சுமப்பவர்கள் (1981 திசம்பர்)
 4. கிழக்கும் பின்தொடரும் (1985 பிப்ரவரி)
 5. கூக்குரல்
 6. இன்குலாப் கவிதைகள் - தொகுதி இரண்டு
 7. ஒவ்வொரு புல்லையும் (மேற்குறிப்பிட்ட தொகுப்புகளும் புதிய கவிதைகளும் அடங்கியது 1999)
 8. ஒவ்வொரு புல்லையும் - இரண்டாம் பதிப்பு (1972 முதல் 2004 வரை எழுதிய கவிதைகளின் தொகுதி - 2004)
 9. பொன்னிக்குருவி (2007 நவம்பர்)
 10. புலிநகச்சுவடுகள்
 11. காந்தள் நாட்கள் (2016) - 2017 ஆம் ஆண்டிற்கான சாகித்யா அகாதெமி விருது பெற்ற நூல்
 12. ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் (2017 திசம்பர் 1 - அனைத்துக்கவிதைகளும் அடங்கியது)

சிறுகதைத்தொகுதி

தொகு
 1. போகிப்பாறை

கட்டுரைத்தொகுதிகள்

தொகு
 1. யுகாக்கினி
 2. ஆனால்

நாடக நூல்கள்

தொகு
 1. ஒளவை
 2. மணிமேகலை
 3. குரல்கள்
 4. துடி
 5. மீட்சி
 6. இன்குலாப் நாடகங்கள் (அனைத்து நாடகங்களும் அடங்கியது)

நேர்காணல்கள்

தொகு
 1. அகிம்சையின் குரலை ஆதிக்கவாதிகள் கேட்பதில்லை
 2. மானுடக்குரல் : இன்குலாப் நேர்காணல்கள் (அனைத்து நேர்காணல்களும் அடங்கியது)

மொழிபெயர்ப்புகள்

தொகு
 1. 'மார்க்சு முதல் மாசேதுங் வரை' - எஸ் .வி. ராஜதுரையுடன் இணைந்து

விருதுகள்

தொகு
 • "காந்தள் நாட்கள்" என்னும் கவிதைத்தொகுதிக்காக 2017ஆம் ஆண்டில் இவருக்கு சாகித்யா அகாதெமி விருது மரணத்திற்குப் பின்னர் வழங்கப்பட்டது. அதனை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர்.
 • சிற்பி இலக்கிய விருது
 • கவிஞர் வைரமுத்து விருது
 • 2006ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதினை திருப்பி அளித்தார். ஈழத் தமிழர்களை காக்க அரசு தவறிவிட்டதாக இதற்கு காரணம் தெரிவித்தார்.

மறைவு

தொகு

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இன்குலாப் சிகிச்சை பலனின்றி திசம்பர் 1, 2016 அன்று உயிரிழந்தார்.[4] அவரது உடல் செங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்பட்டது.

மேற்சான்றுகள்

தொகு
 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2017-12-21.
 2. http://tamil.thehindu.com/tamilnadu/article22216753.ece
 3. இன்குலாப் பேசுகிறேன்: மக்கள் பாவலர் இன்குலாப் முதலாண்டு நினேவேந்தல் வெளியீடு
 4. "முற்போக்குக் கவிஞர் இன்குலாப் காலமானார்". தி இந்து -தமிழ் பதிப்பு. 1 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 திசம்பர் 2016.

உசாத்துணை

தொகு
 • வாழ்க்கைத்தடம் தொடர் கட்டுரைகள்-காக்கைச் சிறகினிலே இதழ்கள்
 • மக்கள் கவிஞர் இன்குலாப் நேர்காணல்-பொன்னி பதிப்பகம், மடிப்பாக்கம், சென்னை --600091

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்குலாப்&oldid=3948466" இலிருந்து மீள்விக்கப்பட்டது