எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா

மலேசியாவில் ஒரு தேசியப் பூங்கா

எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா (மலாய்: Taman Negara Endau-Rompin; ஆங்கிலம்: Endau-Rompin National Park) என்பது மலேசியா, பகாங், ஜொகூர் மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும்.[1]

எண்டாவ்-ரொம்பின்
தேசியப் பூங்கா
Endau-Rompin National Park
எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா
அமைவிடம்ஜொகூர் மற்றும் பகாங், தீபகற்ப மலேசியா
அருகாமை நகரம்ககாங்
ஆள்கூறுகள்
பரப்பளவு870 km2 (340 sq mi)
நிறுவப்பட்டது1993
நிருவாக அமைப்புஜொகூர் வனப்பூங்காக்கள் அமைப்பு

மலேசியாவின் தித்திவாங்சா மலைத்தொடரின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா. இது ஒரு பாதுகாக்கப்பட்ட வெப்பமண்டல மழைக்காடு ஆகும். ஜொகூர் மாநிலத்தின் இரண்டாவது மிக உயரமான மலையான குனோங் பெசார் மலை இந்தப் பூங்காவில் தான் உள்ளது.[1]

எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா 870 கி.மீ². (340 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது. தாமான் நெகாராவிற்கு அடுத்த நிலையில், தீபகற்ப மலேசியாவில் இரண்டாவது பெரிய தேசிய பூங்காவாகத் தகுதி பெற்று உள்ளது.[2]

பொது தொகு

 
எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் ஒரு நீர்வீழ்ச்சி.

இந்தப் பூங்கா மலேசிய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இரண்டாவது தேசியப் பூங்கா ஆகும். முதலாவதாக அறிவிக்கப்பட்ட தேசியப் பூங்கா தாமான் நெகாரா.

எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவின் வழியாக எண்டாவ் மற்றும் ரொம்பின் நதிகள் பாய்கின்றன. அதனால் இந்தப் பூங்கா அவற்றின் பெயரைப் பெற்றது. மற்ற ஆறுகள் சிகாமட், ஜெலாய் மற்றும் ஜாசின் ஆறுகள்.[2]

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மீன்பிடிக்கத் தடை தொகு

எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவிற்கு இரண்டு அதிகாரப்பூர்வ நுழைவு வழிகள் உள்ளன: மெர்சிங் மாவட்டத்தில் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள கம்போங் பெத்தா (Kampung Peta) நுழைவாயில்; மற்றும் சிகாமட் மாவட்டத்தில் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள ஜெலாய் நுழைவாயில்.

நவம்பர் முதல் மார்ச் வரையிலான மழைக் காலங்களில், இந்தப் பூங்கா பொதுமக்களுக்கு மூடப்படும். செப்டம்பர், அக்டோபர் இரண்டு மாதங்கள் மீன்களின் இனச் சேர்க்கைக் காலம். அதனால் அந்தக் காலத்தில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.[3]

வரலாறு தொகு

 
எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் ஒரு காட்சி.

1892-ஆம் ஆண்டில் எண்டாவ்; ரொம்பின் பகுதிகளில் முதல் வன ஆய்வுகள் எச்.லேக் (H.W. Lake) மற்றும் லெப்டினன்ட் எச். கெல்சால் (Lieutenant H.J. Kelsall) எனும் பிரித்தானிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டன. 1933 ஆம் ஆண்டில் வன காப்பகமாக மலாயா அரசாங்க அரசிதழில் வெளியிடப்பட்டது.[4]

பின்னர் 1972-ஆம் ஆண்டில், பகாங்கில் உள்ள லெசோங் வனப்பகுதியும் எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் இணைக்கப்பட்டு இந்தப் பூங்கா விரிவுபடுத்தப்பட்டது.[4]

தேசிய பூங்காக்கள் சட்டம் 1980 (மலேசியா) தொகு

1980-ஆம் ஆண்டில், தேசிய பூங்காக்கள் சட்டம் 1980 (மலேசியா) (National Parks Act 1980 (Malaysia) மலேசிய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், கூட்டாட்சி நடுவண் அரசாங்கத்திற்கும் மற்றும் மாநில அரசாங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள். அதனால் எண்டாவ்; ரொம்பின் பகுதியை ஒரு தேசியப் பூங்காவை உருவாக்குவதற்குத் தடையாக இருந்தது.

இருப்பினும் எண்டாவ்; ரொம்பின் பகுதியில் சுமத்திரா காண்டாமிருகங்களுக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, வனவிலங்குகள் மற்றும் தேசியப் பூங்காக்கள் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எண்டாவ்; ரொம்பின் பகுதிகள் வனவிலங்கு சரணாலயம் என அதிகாரப் பூர்வமாகச் சட்டமாக்கப்பட்டது.[5]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் தொகு

 
எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் மழைக்காட்டு மரங்கள்.

எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்கா, உலகின் பழைமையான வெப்பமண்டல மழைக்காட்டு வளாகங்களில் ஒன்றாகும். 248 மில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறை அமைப்புகளைக் கொண்டுள்ள நிலப்பகுதியாகும்.

எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் மிக அரிதான உயிரினங்கள் வாழ்கின்றன. பாலூட்டிகளில் மலேசியப் புலி (Malayan tiger), இந்தோசீன சிறுத்தை (Indochinese leopard), படைச்சிறுத்தை (Clouded leopard), ஆசியப் பொன்னிறப் பூனை (Asian golden cat), சிறுத்தைப் பூனை (leopard cat), பளிங்குப் பூனை (marbled cat), ஆசிய யானை (Asian elephant), மலாயா தப்பிர் (Malayan tapir), போர்னியோ தாடிப் பன்றி (Bornean bearded pig), பட்டைப் பன்றி (Banded pig), குரைக்கும் மான் (Barking deer), கடமான் (Sambar deer), சிறிய எலி மான் (Lesser mouse-deer) ஆகியவை அடங்கும்.

அழிந்து போன சுமத்திரா காண்டாமிருகங்கள் தொகு

பெரிய எலி மான் (Greater mouse-deer), சூரியக் கரடி (Sun bear), நண்டு உண்ணும் குரங்கு (Long-tailed macaque), பன்றி வால் கொண்ட மக்கா குரங்குகள் (Pig-tailed macaque), மங்கிய இலைக் குரங்கு (Dusky leaf monkey) மற்றும் பட்டை லாங்கூர் (Raffles' banded langur) போன்ற அரிய வகை உயிரினங்களும் இங்கு உள்ளன.

வடக்கு சுமத்திரா காண்டாமிருக இனத்தின் (Northern Sumatran rhinoceros) மிகப் பெரிய எண்ணிக்கையை இந்தப் பூங்கா கொண்டு இருந்தது, ஆனால் அந்தக் காண்டாமிருகங்கள் எல்லாம் இப்போது மலேசியாவின் காடுகளில் இருந்து முற்றாக அழிந்து விட்டன.[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Endau-Rompin is a beautiful national park in the southeastern part of Peninsular Malaysia. Together with Taman Negara and Royal Belum State Park it contains some of the oldest rain forests in the world". www.wonderfulmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  2. 2.0 2.1 "Established in 1993, the 48,905-ha Endau-Rompin (Johor) National Park is the largest protected area in the southern half of Peninsular Malaysia". Johor National Parks. 20 August 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  3. "Endau Rompin National Park is the second largest National Park in the Peninsular Malaysia, just after Taman Negara. The park is rich with unique flora and fauna, with rocks that are from millions of years ago". johor.attractionsinmalaysia.com. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  4. 4.0 4.1 "In 1892, miner and surveyor H.W.Lake and Lieutenant H.J.Kelsall entered the Endau-Rompin area to conduct scientific research and documentation. They recorded and collected inexhaustible specimens". 14 May 2017. பார்க்கப்பட்ட நாள் 9 April 2022.
  5. Malaysian Nature Society. Endau Rompin National Park பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம். Extracted April 24, 2007
  6. https://news.nationalgeographic.com/2015/09/150930-sumatran-rhino-extinction-indonesia-animals-conservation/

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு