எஸ். கே. தேவமணி

(எஸ்.கே. தேவமணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டத்தோ எஸ். கே. தேவமணி (பிறப்பு: செப்டம்பர் 10, 1957) மலேசிய அமைச்சரவையின் பிரதமர் துறையில், துணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் ம.இ.காவின் உதவித் தலைவர்களில் ஒருவர். மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய மொழியில் மிகச் சரளமாகப் பேசி, மலாய்க்கார நாடாளுமன்ற உறுப்பினர்களையே வியப்பில் ஆழ்த்தியவர்.

எஸ்.கே. தேவமணி
S.K. Devamany
மலேசிய இந்திய காங்கிரஸ் உதவித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2008
மலேசிய நாடாளுமன்றம்
கேமரன் மலை
பதவியில்
2008–2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 10, 1957 (1957-09-10) (அகவை 67)
யாம் செங் தோட்டம், செமாங்கோல், தைப்பிங், பேராக்
அரசியல் கட்சிமலேசியா மலேசிய இந்திய காங்கிரஸ்
பாரிசான் நேசனல் பங்காளிக் கட்சி
உயரம்230px
துணைவர்திருமதி சரஸ்வதி
பிள்ளைகள்3
வாழிடம்ஈப்போ / கேமரன் மலை
வேலைமலேசியா நாடாளுமன்ற உறுப்பினர்
இணையத்தளம்http://www.pmo.gov.my/skdevamany/

நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு இலவசமாக எஸ்.பி.எம். தேர்வுக்கான மலேசிய மொழிப் பாடத்தைக் கற்றுக் கொடுத்து சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவியவர். இவர் போதித்த மாணவர்கள் பலர் பட்டதாரிகளாகி அரச உயர்ப் பதவிகளில் இருக்கின்றனர்.

வரலாறு

தொகு

எஸ்.கே.தேவமணி மலேசியாவின் பேராக், தைப்பிங், செமாங்கோல் எனும் இடத்தில் 1957 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தையார் எஸ்.கிருஷ்ணசாமி, ஒரு தமிழ்ப்பள்ளியின் ஆசிரியர். இருப்பினும், அவருடைய குடும்பத்தில் பொருளாதார வகையில் ஏழ்மை நிலவியது. அதுவே, அவருக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் துடிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இவர் படிவம் ஐந்து படிக்கும் வரையில், அவருடைய இல்லத்தில் தொலைக்காட்சி வசதிகள் இல்லை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடியாத நிலையில் அவருடைய குடும்பம் இருந்தது. தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றால் அவர் அண்டை வீடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளைப் பார்த்து வந்தார்.[1]

தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வி

தொகு

தன்னுடைய தொடக்கக் கல்வியைத் தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை தைப்பிங், கிங் எட்வர்ட் பள்ளியிலும் பயின்றார். 1975ஆம் ஆண்டு மலேசிய உயர்நிலைக் கல்வியை முடித்தார். எஸ்.கே.தேவமணி தன்னுடைய இளம் வயதிலேயே பொதுப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். மேல்கல்வியைத் தொடர முடியாத குடும்பச் சூழ்நிலை. அதனால், தற்காலிக பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொழிலைத் தொடங்கினார்.

1975 – 1977 ஆண்டுகள் வரை பேராக், ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1978ஆம் ஆண்டு, கோலாலம்பூர், செராஸ் புறநகர்ப் பகுதியில் இருந்த சிறப்பு ஆசிரியர்ப் பயிற்சிக் கல்லூரியில், உடல்நலப் பயிற்சித் துறையில் சிறப்பு பயிற்சி பெற்றார்.

ஆசிரியர் வாழ்க்கை

தொகு

1979 – 1982ஆம் ஆண்டுகளில் சுங்கை சிப்புட் லாசா நில மேம்பாட்டுத் திட்டத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர், 1982ஆம் ஆண்டு மலாயா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் பட்டப் படிப்பை மேற்கொண்டார். மலாய் இலக்கியத் துறையில் இளநிலை பட்டத்தில் சிறப்புநிலை பெற்றார்.

1985 லிருந்து 1990 வரையில் பத்து குராவ் பள்ளியில் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். அடுத்து 1990 லிருந்து 1995 வரையில் சிம்மோர் பள்ளியில் பணியாற்றினார். ஈப்போ, தைப்பிங், கூலிம், பினாங்கு ஆகிய இடங்களில் இயங்கும் ரிபா கல்லூரியின் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பும் வகித்தார். இந்தக் காலகட்டத்தில் அரசியலிலும் ஈடுபடத் தொடங்கினார்.

ஸ்ரீ முருகன் கல்வி மையம்

தொகு

எஸ்.கே.தேவமணி, மலாயா பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா என்பவர் வரலாற்றுத்துறை விரிவுரையாளராக இருந்தார். அவர், மலேசியாவில் மேல் உயர்நிலைக்கல்வி பயிலும் இந்திய மாணவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று எஸ்.கே.தேவமணியையும் மற்ற இந்திய மாணவர்களையும் கேட்டுக் கொண்டார். இந்திய சமுதாயத்தைக் கல்வித் துறையில் மேம்படுத்த வேண்டும் என்பது டாக்டர் எம். தம்பிராஜாவின் இலட்சியமாக இருந்தது.

1982 செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ஸ்ரீ முருகன் கல்வி மையம் தோற்றுவிக்கப்பட்டது.[2] எஸ்.கே.தேவமணி மலேசிய மொழியைப் போதித்தார். நான்கு கிளைகளுடன் அப்போது தொடங்கிய ஸ்ரீ முருகன் கல்வி மையம், தற்சமயம் மலேசியாவின் 28 நகரங்களில் 103 வகுப்புகளை நடத்தி வருகிறது.

16,000 இந்திய பட்டதாரிகள்

தொகு

ஸ்ரீ முருகன் கல்வி மையம் இதுவரையில் 250,000 இந்திய மாணவர்களுக்கு கல்விச் சேவை வழங்கியுள்ளது. அவர்களில் 16,000 மாணவர்களைப் பட்டதாரிகளாகவும் உருவாக்கி உள்ளது.[3] எஸ்.கே.தேவமணி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு துணை அமைச்சராகவும் பதவிகள் வகித்தாலும், இன்றும் ஸ்ரீ முருகன் கல்வி மையங்களுக்குச் சென்று இந்திய மாணவர்களுக்கு இலவசக் கலவிச் சேவையை வழங்கி வருகிறார்.[4]

அரசியல் வாழ்க்கை

தொகு
  • 1990 முதல்: ஈப்போ ம.இ.கா தாமான் அல்ப்காப் கிளைத் தலைவர்.
  • 1995 – 2000: பேராக் மாநில ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவர்
  • 1998: ம.இ.கா தேசிய இளைஞர் பகுதியின் துணைத் தலைவர்
  • 2000 – 2004: ஈப்போ மாநகர் மன்ற உறுப்பினர்
  • 2001 முதல்: பேராக் மாநில ம.இ.கா கல்விப் பகுதித் தலைவர்
  • 1995 – 2000: ம.இ.கா தேசிய இளைஞர் பகுதி ஆட்சிக்குழு உறுப்பினர்

கேமரன் மலையில் போட்டி

தொகு

2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரண்டாவது தவணையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வாகை சூடினார். அதன் பின்னர் அவர் பிரதமர் துறையின் துணை அமைச்சராக நியமனம் செய்யப் பட்டார்.

2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டத்தோ விருதைப் பெற்றார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ம.இ.கா. பேராளர் மாநாட்டில் தேசிய உதவித் தலைவர்களில் ஒருவராகத் தேர்வு செய்யப் பட்டார்.

தன்னுடைய கேமரன் மலை தொகுதியில் தன்னால் இயன்ற உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். ஏழை மக்கள் வீடுகள் கட்டும் போது இவரும் களம் இறங்கி ஒரு தச்சனாக வேலைகளையும் செய்கின்றார் என்று அவரைப் பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.[5] மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கம் நில ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும் என்று போராட்டம் செய்து வருகிறார். இதனால் அவர் சார்ந்துள்ள ஆளும் பாரிசான் நேசனல் கட்சியின் மேல்மட்டத்தில் இருந்தும் எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.[6]

பொது

தொகு

இவருடைய மலேசிய மொழி ஆற்றல் தான் இவரை அமைச்சர் தகுதிக்கு உயர்த்தி விட்டது. எஸ்.கே.தேவமணியின் மலேசிய மொழி ஆற்றலைக் கண்டு வியந்து போன முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி அவரை தன்னுடைய பிரதமர் துறையிலேயே துணையமைச்சராக அமர்த்திக் கொண்டார்.

இந்தியச் சமூகங்கள் சார்ந்த கல்வி அமைப்புகள், கல்வி இலக்கிய சமய விழாக்கள், ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் போன்றவற்றில் பொதுநலச் சேவைகளில் ஈடுபட்டு மலேசிய இளைஞர்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். மலேசியாவில் விரைவில் நடக்கவிருக்கும் 13-வது பொதுத் தேர்தலில் எஸ்.கே.தேவமணிக்கு ஆதரவாக பல அரசு சாரா இயக்கங்கள் ஆதரவுகள் தெரிவித்து வருகின்றன.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. We had no TV until I was in Form Five because we couldn’t afford it. When there was something special on TV, we would watch at a neighbour’s home. And once a month, the nearby temple would screen “MGR” movies as part of its regular festivals.
  2. "The Sri Murugan Centre - SMC was founded in September 24, 1982 by Dato Dr. M. Thambirajah together with a group comprising 48 students of the Tamil Language Society and some lecturers of University of Malaya, Kuala Lumpur". Archived from the original on ஜூன் 2, 2012. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 23, 2012. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. The SMC, established in 1982, has 103 branches throughout Malaysia. It has so far taught some 250,000 less fortunate students, of whom 16,000 have successfully pursued their studies to a higher level.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Sri Murugan Centre, has helped thousands of Indian school children from the national schools and national-type Tamil schools in Perak in their education. It provides free tuition to students to prepare them for their various examinations". Archived from the original on 2010-01-31. பார்க்கப்பட்ட நாள் 2012-03-23.
  5. "Bantuan membeli peralatan pembinaan rumah itu disampaikan oleh Ahli Parlimen Cameron Highlands, Datuk S. K. Devamany di Kampung Melayu, Brinchang di sini baru-baru ini". Archived from the original on 2013-03-23. பார்க்கப்பட்ட நாள் 2013-03-23.
  6. Devamany criticises Hishamuddin over Tamil schools land. THE ruling Barisan Nasional Government should work proactively to allocate land for Tamil schools.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Two non-governmental organisations have pledged their support for Cameron Highlands MP SK Devamany and urged Prime Minister Najib Tun Razak to retain him in the next general election". Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2012-03-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._தேவமணி&oldid=3947381" இலிருந்து மீள்விக்கப்பட்டது