எஸ். ஏ. ராஜ்கண்ணு

எஸ். ஏ. ராஜ்கண்ணு (10, மே, 1946 - 11, சூலை, 2023) என்பவர் ஒரு இந்திய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளராவார். இவர் பாரதிராஜா, பாக்யராஜ், ராதிகா, ராஜேஷ் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களை அறிமுகப் படுத்தியவராவார்.[1]

துவக்க கால வாழ்க்கை தொகு

எஸ். ஏ. ராஜ்கண்ணு தமிழ்நாட்டின், பொள்ளாச்சி அருகே உள்ள சேரிப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவருடன் ஆறு அண்ணன்களும் ஒரு தங்கையும் பிறந்தனர். எஸ். ஏ. ராஜ்கண்ணு பத்தாம் வகுப்பு வரை படித்தார். பள்ளியில் படிக்கும் போது விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவராக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு படிப்பில் ஆர்வம் இல்மாததால் வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார். முதலில் தேங்காய் வணிகம் செய்த இவர் பின்னர் டூரிங் டாக்கிஸ் திரையரங்கின் உரிமையாளராக ஆனார்.[2]

திரைப்பட தயாரிப்பாளரான பொள்ளாச்சி ரத்தினம் என்பவரின் இரு தங்கைகளில் ஒரு தங்கையை ராஜ் கண்ணுவின் அண்ணன் சிவசுப்பிரமணியனும், மற்றொரு தங்கையை ராஜ் கண்ணுவும் மணந்தனர். பின்னர் பொள்ளாசி ரத்தினமும் சிவசுப்பிரமணியனும் இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து ராஜ் கண்ணுவுக்கும் திரைப்படங்களைத் தயாரிக்க ஆசை கொண்டார். மைத்துனரிடமும், அண்ணனிடமும் தன் ஆசையை ராஜ்கண்ணு வெளிப்படுத்தியபோது அவர்கள் அவரது ஆசையை ஏற்க மறுத்தனர்.[2]

திரைப்பட தயாரிப்பாளராதல் தொகு

ஒரு சமயம் பொள்ளாச்சி ரத்தினமும், சிவசுப்பிரமணியனும் தயாரித்த தலைப்பிரசவம் என்ற படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க ராஜ் கண்ணு வந்தார். அப்படத்தில் உதவி இயக்குநராக பாரதிராஜா பணியாற்றிவந்தார். சுறுசுறுப்பாக பணியாற்றிவந்த பாரதிராஜா இவரைக் கவர்ந்தார். பாரதிராஜாவை அழைத்து அவரிடம் ஏதாவது கதை உள்ளதா என்று ராஜ் கண்ணு வினவினார். பாரதிராஜா கூறிய மூன்று கதைகளில் மயிலு என்ற கதை ராஜ்கண்ணுவுக்குப் பிடித்துப் போனது. ராஜ்கண்ணு தன் மனைவியின் நகைகள், நிலபுலன்களை விற்று மயிலு கதையை பதினாறு வயதினிலே என்ற படமாக 4.75 இலட்சம் செலவில் எடுத்தார். படத்தை யாரும் வாங்க முன்வராததால் தானை துணிந்து படத்தை வெளியிட்டார். படம் மிகப் பெரும் வெற்றியை ஈட்டி பலமடங்கு இலாபத்தை ஈட்டியது. அதன் பிறகு 12 படங்களை ராஜ் கண்ணு தயாரித்தார்.[2]

1981 இல் அர்த்தங்கள் ஆயிரம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அது மிகப்பெரிய தோல்விப்படமாக ஆனது. கையில் இருந்த பணம் கரைந்து கடனில் சிக்கினார். அதன் பின்னர் பாக்யராஜ் இவருக்கு எங்க சின்ன ராசா படத்தை இயக்கி நடித்துக் கொடுத்தார். இருந்தும் கடனில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்தார். ராஜேஷ் மூலமாக ராஜ்கண்ணுவின் நிலையை அறிந்த கமல்ஹாசன் ராஜ்கண்ணுவுக்கு மகாநதி படத்தை நடித்துக் கொடுதார் அதன் பிறகே இவர் கடன்களில் இருந்து விடுபட்டார்.[2]

இறப்பு தொகு

சென்னையின் புறநகரின் சிட்லப்பாக்கத்தில் வசித்துவந்த ராஜ்கண்ணு மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் 11 ஆம் நாள் தன் 77 வயதில் இறந்தார்.[3]

தயாரித்த சில படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "'16 வயதினிலே' பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவு - 'என் ஒளி விளக்கு' என பாரதிராஜா புகழஞ்சலி". இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.
  2. 2.0 2.1 2.2 2.3 "அஞ்சலி: எஸ்.ஏ.ராஜ்கண்ணு சவாலைச் சாதனையாக மாற்றியவர்!". இந்து தமிழ். 2023-07-21. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024. {{cite web}}: Unknown parameter |கட்டுரையாளர்= ignored (help)
  3. "'16 வயதினிலே' பட தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு காலமானார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._ராஜ்கண்ணு&oldid=3866988" இலிருந்து மீள்விக்கப்பட்டது