ஒனோ நோ கோமாச்சி
ஒனோ நோ கோமாச்சி, (Ono no Komachi, யப்பானியம்:小野 小町 பொது 825 – 900) யப்பானிய நாட்டின் பெண் வாகா கவி ஆவார். ஃகயன் காலகட்டத்தை சேர்ந்த இவர், ரொக்காசென் எனப்படும் ஆறு முக்கிய வாகா கவிகளில் ஒருவர். மேலும் பிசிவாரா நோ கின்டோ என்ற பிரபல யப்பானிய கவியால் முப்பத்தி ஆறு கவிதை தெய்வங்களில் ஒருவராக குறிக்கப்படுகின்றார். இவர் தனது நிகரற்ற அழகின் காரனமாகவும் கவனம் பெற்றவர். இன்றைக்கும் யப்பானில், அழகிய பெண்களை குறிக்க கோமாச்சி என்ற பதமே பயன்படுத்தப் படுகின்றது.
வாழ்க்கை வரலாறு
தொகுகோமாச்சியின் பிறப்பு மற்றும் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் அதிகம் காணக் கிடைப்பதில்லை. நாட்டார் பாடல்கள் இவர் அகிடா நிலப்பரப்பை சேர்ந்தவர்[1] என்றும் அரண்மனை சேவகி எனவும் குறிக்கின்றன. இவரின் கால கட்டத்தை நோக்கும்போது, இவர் பேரரசர் நிமாயோவின் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இன்னும் சில கதைகள் இவர் காதலை பற்றி குறிப்பிடுகின்றன. இவற்றில் பிரபலமானது, கோமாச்சிக்கும் ஃபுககுசா நோ சோசோ என்ற முக்கிய அரச பிரதிநிதிக்குமான காதல் கதை ஆகும். இதன்படி தன்னை காதலிக்கும் ஃபுககுசாவிடம், தொடர்ந்து 100 இரவுகளை தன்னுடன் கழித்தால் தானும் அவரை காதலிப்பதாக கோமாச்சி கூறுகின்றார். அதன்படியே 99 இரவுகளை அவருடன் கழிக்கும் ஃபுககுசா 100வது நாள் இரவில் அவரை சந்திக்கும் முன்னரே மரணமடைந்துவிடுகிறார்[2]. இன்னும் சில கதைகள், 100வது நாளில் ஃபுககுசாவின் தந்தை இறந்து விடுவதால்தான் அவரால் கோமாச்சியை சந்திக்க முடியவில்லை என்கின்றன[3].
இவரை பற்றிய கதைகள் அனைத்தும், இவரின் முதுமையை பற்றியும் வர்ணிக்கின்றன. முழுமையாக தனது இளமையையும் அழகையும் இழந்த கோமாச்சி, தனது காதலர்களால் கைவிடப்பட்ட நிலைமையில் தெருவில் பிச்சை எடுத்து பிழைத்ததாக இவை கூறுகின்றன.
கவிதைகள்
தொகுகோமாச்சியின் கவிதைகள் வாகா எனப்படும் யப்பானிய கவிதை மரபை சேர்ந்தவை. காதலின் ஏக்கம், தனிமை, பிரிவு, காமம் ஆகியவை கோமாச்சியின் வாகாவில் அதிக இடம் பிடித்தன[4]. பேரரசர் உதாவினால் தொகுக்கப்பட்ட கோகின் வகாசு எனப்படும், சிறந்த வாகா கவிதைகளின் தொகுப்பில் இவரது கவிதைகள் இடம்பெற்றன. இவ்வாகா தொகுப்பில் இடம்பெற்ற ஒரே பெண்கவியின் கவிதைகள் கோமாச்சியினுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம்
தொகுகோமாச்சியின் கதைகளில் சில, பிற்கால யப்பானிய இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. நோ எனப்படும் யப்பானிய பாரம்பரிய நாட்டியக் கலையின் ஐந்து நாடகங்கள் கோமாச்சியின் வரலாற்றை இயம்புகின்றன[5]. மேலும் ஒகுரு கியாகுனின் இசூ (நூறு கவிகளின் நூறு கவிதைகள்) என்ற வாகா தொகுப்பிலும் இவரது கவிதைகள் இடம் பிடித்துள்ளன.
இவரின் புகழ் பாடும் வகையில், இவரது பிறப்பிடமாக கருதப்படும் அகிடா பிரதேசத்து தொடருந்து சேவைக்கு இவரின் பெயர் வைக்கப்படுள்ளது. மேலும் இந்த பகுதியில் அதிகம் விளையும் ஒருவகை அரிசிக்கும் இவரின் பெயர் (அகிடோ கோமாச்சி) வைக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Rexroth, Kenneth; Ikuko Atsumi (1977). Woman poets of Japan. New York: New Directions Pub. Corp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8112-0820-6.
- ↑ [1]
- ↑ Komachi and the Hundred Nights by Kanze Kiyotsugu Kan'ami
- ↑ Rexroth, Kenneth; Ikuko Atsumi (1977). Woman poets of Japan. New York: New Directions Pub. Corp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8112-0820-6 Her beauty may be legendary but her rank as one of the greatest erotic poets in any language is not. Her poems begin the extreme verbal complexity which distinguishes the poetry of the Kokinshū Anthology from the presentational immediacy of the Man'yōshū
- ↑ Keene, Donald (1970). Twenty Plays of the Nō Theater. New York: Columbia University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-231-03454-7