கருவூலம்
நிதியைப் பாதுகாத்து வழங்கும் இடம் .
கருவூலம் (ஆங்கிலம்: Treasury) என்னும் சொல் அரசு-நிதியைப் பாதுகாத்து வழங்கும் இடம் ஆகும். இக்காலத்தில் இது அரசு நாணயங்களைப் பேணும் இடமாகத் திகழ்கிறது. இவை தலைமைக் கருவூலம், கிளைக்கருவூலம் என்னும் அமைப்புகளில் இயங்கிவருகின்றன.
பண்டைக்காலக் கருவூலங்கள்
தொகுபண்டைக்காலங்களில் அரசர்கள் தங்கள் செல்வங்களை நிதியறைகளில் சேமித்து வைத்தனர். அன்னியர்கள் படையெடுத்து வரும் போது இந்த நிதியறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செல்வங்களைக் கொள்ளையடித்துச் செல்வர். ஆகவே இந்த நிதியறைகள் மிகுந்த பாதுகாப்புடன் வலிமையானதாக அமைக்கப்பட்டு இருக்கும்.
சங்ககாலக் கருவூலங்கள்
தொகுதமிழ்நாட்டில் சங்ககாலத்தில் இருந்த கருவூலங்கள் பற்றிய செய்திகளைச் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன.
- மாந்தை - சேர அரசர்களின் கருவூலம் மரந்தை அல்லது மாந்தை என்னும் துறைமுக நகரத்தில் இருந்தது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கடம்பர்களை வென்று கொண்டுவந்த செல்வத்தையும், இமயம் வரை வென்றதால் அடிபணிந்த மன்னர்கள் கொண்டுவந்து தந்த திறைச் செல்வத்தையும் இங்குப் பாதுகாத்தான்.[1]
- குடந்தை - சோழர்களில் 'கொற்றச் சோழர்' எனப் போற்றப்பட்டவர்கள் குடந்தை நகரில் அரசுச் செல்வத்தைப் பாதுகாத்தனர்.[2]
- காவிரிப்பூம்பட்டினம் - புகார்த் துறைமுகத்தில் அரசு விருந்தினர்களைப் பேணுவதற்காகச் அரசுச்செல்வம் வைக்கப்பட்டிருந்தது.[3]
- மருங்கூர்ப் பட்டினம் என்னும் துறைமுகப் பட்டினத்தில் பாண்டியர் தம் கருவூலத்தை வைத்திருந்தனர்.[4]
- மாவிலங்கை என்னும் தன் தலைநகரில் நல்லியக்கோடன் என்னும் வள்ளல்-அரசன் தன் கருவூலத்தை வைத்திருந்தான்.[5]
- பாடலி என்னும் நகரில் நந்த அரசர்கள் கங்கை ஆற்று நீருக்கடியில் தம் கருவூலத்தை வைத்திருந்தனர்.[6]
- செங்கண்மா – அரசன் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் தன் கருவூலத்தை அவனது தலைநகரில் வைத்திருந்தான்.[7]
வரலாற்றில் கருவூல அமைப்பு
தொகுகொளடில்யம் எனும் நூல் கருவூலம் (நிதியறை) அமைக்க வேண்டிய அமைப்பைக் குறிப்பிடுகிறது. அதன்படி,
- நிதியறைகள் சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும்.
- அதன் நாற்புறமும் நீர்க்கசிவில்லாதபடி பள்ளம் தோண்டி இருக்க வேண்டும்.
- அதன் நாற்புறமும் அடிப்பரப்பும் பெரிய கற்களையும்,பருத்து வயிரம் ஏறிய மரங்களாகிய பஞ்சரத்தையும்
- நிலமட்டத்தோடு ஒத்த மூன்று தளங்களையும் பலவகை உள்ளறைகளையும் கொண்டிருக்க வேண்டும்.மூன்று தளங்களில் நீரும், கல்லும் விரவி இறுக்கப்பட்டு மேல், நடு, கீழ் தளங்களாக இருக்க வேண்டும்.
- பொறிகளால் அமைக்கப்பட்ட ஏணிகளையும், தெய்வப்படிவம் அமைந்த கதவினையும் உடையதாக நிலவறை அமைதல் வேண்டும்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ சேரலாதன் கடம்பு அறுத்து, இமயத்து வில் பொறித்து, மரந்தை முற்றத்து ஒன்னார் பணிந்து திறை தந்த … நன்கலம் பொன் செய் பாவை வயிரமொடு நிலம் தினத் துறந்த நிதியம் – அகநானூறு 127, நிலம் தினத் துறந்த நிதியம் – மலைபடுகடாம் 575
- ↑ கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதியம் - அகம் 60
- ↑ காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன செழுநகர் நல்விருந்து அயர்மார் ஏமுற விழுநிதி - அகநானூறு 205
- ↑ ஊணூர் உம்பர் விழுநிதி துஞ்சும் … மருங்கூர்ப்பட்டினம் – அகநானூறு 227
- ↑ வயவர் தந்த வான்கேழ் நிதியம் … பாண்டிலில் ஏற்றித் தருவான் – சிறுபாணாற்றுப்படை 249
- ↑ நந்தர் சீர்மிகு பாடலி குழீஇ கங்கை நீர்முதல் கரந்த நிதியம் – அகம் 265
- ↑ நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பு – அகநானூறு 378, செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் ஊர் – மலைபடுகடாம் 478