கவியூர் மகாதேவர் கோயில்

கவியூர் மகாதேவர் கோயில் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லாவில் கவியூர் என்னுமிடத்தில் உள்ள முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் திருக்கவியூர் மகாதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் மூலவர் சிவன், பார்வதி ஆவர். இருப்பினும் இங்குள்ள அனுமன் சன்னதிக்காக இந்தக் கோயில் பெயர்பெற்றது. திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய நிர்வாகத்தின் கீழ் உள்ள முக்கியமான சிறப்பு நிலை [1] கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [2] [3]

முதன்மை நுழைவாயில்
நரசிம்மர், இரண்யகசிபுவைக் கொன்ற விஷ்ணுவின் அவதாரம்
கஜேந்திரா

கோயில் தொகு

கவியூர் மகாதேவர் கோயில் சங்கஞ்சேரி-கவியூர் சாலையில் கவியூர் சந்திப்பில் இருந்து 200 மீட்டர் மேற்கே அமைந்துள்ளது. மூலவர் சிவன் என்றாலும், அனுமனும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். [4] திருவல்லாவில் SCS சந்திப்பில் இருந்து சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இக்கோயில் 21 அகலமான படிகளைக் கொண்டுள்ளது. அதன்மூலமாக கம்பீரமான கிழக்கு கோபுரத்திற்குச் செல்லலாம். முதன்மை நுழைவாயில் வழியே சென்று நீண்ட ஆனைக்கொட்டிலை அடையலாம். கிழக்கு முற்றத்தில் கொடிமரமும், அருகில் இருபுறத்திலும் இரண்டு உயரமான விளக்குக் கம்பங்களும் உள்ளன.[5] கோட்டை போல் அமைந்துள்ள பகுதி 2 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். வெளிப்புறச் சுவர் நடுத்தர உயரத்தில் உள்ளது. லேட்டரைட்டால் ஆன இச்சுவரின் மீது சமீபத்தில் சிமென்ட் பூசப்பட்டுள்ளது. வெளிப்புறச் சுவர் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. [6] தெற்கு, மேற்கு பகுதிகளில் கோபுரங்கள் உள்ளன. வடக்கில் ஒரு நீண்ட ஊட்டுப்புரா அமைந்துள்ளது. வடகிழக்கு பகுதியில் அர்ச்சகர்கள் பயன்பாட்டிற்காக ஒரு குளம் உள்ளது. கோயில் வளாகத்திற்கு வெளியில் மேற்குப் பகுதியில் கீழ்த்திருக்கோயில் மகா விஷ்ணு கோயில் உள்ளது. மேற்கில் பொளச்சிரா ஏரி எனப்படுகின்ற ஒரு பெரிய ஏரி உள்ளது. ஒரு காலத்தில் இது கவியூர் கோயிலுக்கு சொந்தமானதாக இருந்தது. தற்போது மீன்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உள்நாட்டு மீன் விதை பண்ணை செயல்படுகிறது.

புராணங்கள் தொகு

கோயிலைச் சுற்றிலும் பலவிதமான புராணக்கதைகள் உள்ளன.[2] [3] [5] முதல் புராணக் கதையின்படி, ராவணனை தோற்கடித்து அயோத்திக்கு திரும்பிய ராமரால் சீதை, அனுமன், சுக்ரீவன், விபீஷணன் முன்னிலையில் சிவனின் மூலவர் சிலை நிறுவப்பட்டது. ராமர், இமயமலையிலிருந்து ஒரு தெய்வீக சிவலிங்கத்தை கொண்டு வர, அனுமனைப் பணித்தார். அனுமன் இமயமலைக்குச் சென்று எங்கு தேடியும் சிலை கிடைக்காமல் போகவே, அதற்காக சிறிது நேரம் எடுத்துக்கொண்டார். சிலையை அமைக்க நல்ல நேரம் நெருங்கிய நிலையில், ராமர் உடனடியாக சிலையை அமைக்க முடிவெடுத்து, அங்கிருந்த மண்ணைக்கொண்டு ஒரு சிவலிங்கத்தை வடிவமைத்து அங்கு அமைத்தார். திரும்பி வந்த அனுமன் சிலை நிறுவப்பட்டதைக் கண்டு வருத்தமடைந்ததார். அதை அறிந்த ராமர் அனுமனிடம் அதனை அகற்றிவிட்டு, அனுமன் கொணர்ந்த திவ்யலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி கூறினார். அனுமன் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டபோதிலும், முன்பு ராமர் அமைத்த சிலை அப்படியே இருந்தது. மாறாக, அதைச் சுற்றியுள்ள நிலம் நகர ஆரம்பித்து, ஒரு சிறிய குன்றினை உருவாக்கியது. அனுமன் மன்னிப்புக் கேட்டு, அவர் செய்த திவ்யப் பிரதிஷ்டைக்கு அருகில் எப்போதும் தங்குவதற்கு ராமரிடம் அனுமதி கோரினார். இதனால் கவியூர் அனுமனின் தலமாக மாறியது. இது பாரம்பரியமாக தென்னிந்தியாவின் மிக முக்கியமான அனுமான் கோவிலாகக் கருதப்படுகிறது.

இரண்டாவது புராணக்கதை கோயில் வளாகத்திற்குள் அனுமன் சிலை அமைத்தது தொடர்பானதாகும். வில்வமங்கல முனிவர் ஒருமுறை இந்தக் கோயிலுக்குச் சென்று, வளாகத்திற்குள் நுழைந்ததும், வெளித் திருச்சுற்றின் வடகிழக்குப் பகுதியில் உள்ள பெரிய இலஞ்சி (மிமுசோப்ஸ் எலங்கி) மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கும் அனுமனை தரிசித்து, பின்னர் மரத்தின் உச்சியில் இருந்து இறங்கி, சிவபெருமானுக்கு அருகில் உள்ள முற்றத்தில் வசதியான நிலையில் அமரும்படி இறைவனை கேட்டுக்கொண்டார். அனுமன் தனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டு உள் முற்றத்தின் வடமேற்கு மூலையில் உள்ள முனிவரின் ஜப கெண்டிகையில் அமர்ந்தார். பின்னர், மகாராஜா சித்திர திருநாள் பலராம வர்மாவின் கனவில் தோன்றியதன் விளைவாக, ME 1108 (கி.பி. 1934) இல் அனுமானுக்காக ஒரு தனி சன்னதி கட்டப்பட்டது.

துணைத்தெய்வங்கள் தொகு

மூலவரான சிவன் திருக்கவியூரப்பன் என்று அழைக்கப்படுகிறார். சிவலிங்கம் மணல் மற்றும் தர்ப்பை புல்லால் ஆனது என்று நம்பப்படுகிறது. அருகில் அவரது மகன்களான கணபதி, சுப்ரமணியர் உள்ளனர். கருவறையின் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி, கணபதி உள்ளனர். தென்மேற்கில் அய்யப்பன் கிழக்கு நோக்கி மேற்கில் மூலராஜேஸ்வரியாக பார்வதி உள்ளனர். உள் முற்றத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பிரதான கருவறைக்கு வெளியில் அனுமன் உள்ளார். நாலாம்பலத்திற்கு வெளியில் வடகிழக்கு புற முற்றத்தில் நாகர்கள் (நாகராஜா, நாக யட்சி), வடமேற்குப் பகுதியில் உள்ள பிரதான கோயில் வளாகத்தின் அடியில் அமைந்துள்ள கீழத்திருக்கோயிலில் நான்கு கைகளுடன் நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோர் உள்ளனர்.

வரலாறு தொகு

முக்கிய புராணத்தின் படி, இந்தக்கோயில் திரேதா யுகத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அதன் உண்மையான கட்டுமான காலம் தெரியவில்லை. கேரள கோயில் கட்டிடக்கலைப்பாணியின் ஆரம்ப கட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கோயில் உள்ளது. பல முக்கிய வரலாற்றாசிரியர்கள் அங்குள்ள இரண்டு 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டினைக் கொண்டு கருவறையின் அடித்தளம் 10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது அதற்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். [7]

ஒரு கல்வெட்டுகளில் கலி சகாப்தம் 4051 (கி.பி.951), இரண்டாவது கல்வெட்டு கலி சகாப்தம் 4052 (கி.பி.952)ஐச் சேர்ந்ததாகும். [8] முதல் கல்வெட்டு மகிழஞ்சேரி தேவன் சென்னனால் கவியூர் சிவபெருமானுக்கு ஏக்கர் நிலம் தானமாக வழங்கியதைப் பதிவு செய்கிறது. இரண்டாவது கல்வெட்டு மாகலத்து நாராயணன் கேயவன், மங்கலத்து நாராயணன் கித்திரன் என்ற இருவர் நில தானம் செய்ததை விவரிக்கிறது. இந்தக் கல்வெட்டுகளின்படி தானமாக வழங்கப்பட்ட மொத்த நிலங்கள் 202 ஏக்கருக்கு நிகராக இருக்கும் என நம்பப்படுகிறது. [9] இந்தக் கல்வெட்டுகள் கேரளாவில் காணப்படுகின்ற மிகப் பழமையான கல்வெட்டுகளில் ஒன்றாகும். இவை மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். [10] இக்கோயில் பத்திலத்தில் பொட்டிகள் [11] என அழைக்கப்படும் பத்து பிராமண குடும்பங்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1899இல், திருவிதாங்கூர் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டது.[12]

கட்டடக்கலை தொகு

கேரளாவின் பழைய கட்டுமானக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலில் செப்புத்தகடுகள் வேயப்பட்ட கூரை, தங்கக் கொடி மரம், கிழக்கில் அகலமான படிகள் ஆகியவற்றைக்கொண்டு கேரளாவின் மிக அழகான கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது.[13][14][15][16][17] மிக நுணுக்கமான கட்டடக்கலை இக்கோயில் வெளிப்படுத்துகிறது. [18] கருவறை வட்ட வடிவில் 46 அடி சுற்றளவில் உள்ளது. பழங்கால அடித்தளமானது ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. ஆரம்ப கால கட்டடக்கலைப்பாணியை அதில் காணமுடிகிறது. [7]

விழாக்கள் தொகு

திருத்தப்பட்ட புதிய அட்டவணையின்டி இக்கோயிலில் முன்னர் இருந்த 16 ஆண்டு விழாக்களுக்கு மாறாக சிங்கம் கன்னியில் பந்ராந்தகலபம் (சூலை), ஆயில்யம் (செப்டம்பர்), திருஉற்சவம் (ஆண்டு விழா-டிசம்பர்–சனவரி), அனுமன் ஜெயந்தி(டிசம்பர்–சனவரி), உத்திரடடாதி அட்டத்தருநாள் (சனவரி), சிவராத்திரி (பிப்ரவரி–மார்ச்), கலாபிசேகம் (ஏப்ரல்), சக்ரகலசம் (மே–சூன்) ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[19]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://travancoredevaswomboard.org/wp-content/uploads/2012/07/Roc.1169.15.Est_.1-dt.-09.02.2015-Grade-Revising-of-Temples-4.pdf [bare URL PDF]
  2. 2.0 2.1 The Temples of Kerala- S. Jayashankar- Controller of Publications, 1999, Directorate of Census Operations,Kerala, Page313-314
  3. 3.0 3.1 Mahakshethrangalude Munnil- Nalankal Krishnapillai- DC Books (22 December 1997)-ASIN: B007E4WVMA
  4. "Kaviyoor Mahadeva Temple- Kaviyoor Mahadevar Temple Pathanamthitta Kerala".
  5. 5.0 5.1 Rudrakshamala- Aswathi Thirunal Gaouri Lakshmi Bayi-Poorna Publications- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-300-1547-7,page 209-227
  6. Thiruvalla Grnthavari- P. Unnikrishnan Nair-School of Social Sciences, Mahatma Gandhi University, 1998 Page 48
  7. 7.0 7.1 An Architectural Survey of Temples of Kerala- H. Sarkar- Archaeological Survey of India,1978, pp 166,166
  8. TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES VOL PART I ,A.S. RAMANATHA AYYAR, GOVERNMENT PRESS, TRIVANDRUM,2010 p.6, 7.
  9. Keralacharithram- A History of Kerala- Dr. M. R. Raghava Varier and Dr. Rajan Gurukkal- Vallathol Vidyapeetham, Sukapuram, 1992, Page 123
  10. Keralathinde Samskarika Charithram(A Cultural History of Kerala)- P. K. Gopalakrishnan- The State institute of Languages, Trivandrum 1987, pages271,428
  11. "Kaviyoor Graamam".
  12. Temples of Travancore- Travancore Govt- Printed at Sri Vilas Press, Central Station Road, Trivandrum, 1949Page290
  13. "God's own architecture". The Hindu. 13 July 2006. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/gods-own-architecture/article3196134.ece. 
  14. .ramukatakam.com/PAGES/WRITING/Architecture in Kerala_Reviews/writing_glimpsesofarchkerala_reviews_06a.html
  15. Living Wood: Sculptural Traditions of Southern India- George Michell (Editor)- South Asia Books/Marg Publications; 1st Ed. edition (December 1992)பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8185026176
  16. Temple arts of Kerala: a South Indian tradition-Ronald M. Bernier-S. Chand, 1982
  17. "Frontline.in".
  18. Monumental efforts- interview with George Michell-The Week Vol.13, No.35, 20 August 1995, page 57
  19. Revised Pathivus sanctioned by the Government for the Kaviyoor Devaswom 1935- Govt. of Travancore, 1935 pegeii (introduction)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவியூர்_மகாதேவர்_கோயில்&oldid=3832888" இலிருந்து மீள்விக்கப்பட்டது