கிப்பன் பண்டம்

ஒரு பொருளின் விற்பனை விலை ஏறிக்கொண்டிருக்கும்போது வழக்கத்துக்கு மாறாக அதன் நுகர்வளவும் கூடுமானால் அப்பண்டத்தைக் கிப்பன் பண்டம் (Giffen good) என்பர். பொதுவாக எந்தவொரு பண்டத்தின் விலையும் கூடும்போது மக்கள் அதைக் குறைவாக வாங்கி வேறு மாற்றுப் பண்டத்தை வாங்கத் தொடங்குவர். அவ்வாறில்லாமல், மக்களின் நுகர்திறன் குன்றும்போது கிப்பன் பண்டங்களின் விலை ஏறிக்கொண்டிருந்தாலும்கூட இருப்பதில் மலிவானவையாக இருப்பதால் அவர்களின் வரும்படியில் அவற்றையே வாங்க முடிகிறது.

கிப்பன் விளைவு

தொகு

பொதுவாக, விலை நெகிழ்திறன் (price elasticity) நுகர்தேவையுடன் (demand) எதிர்மறை உறவு கொண்டிருக்கும். இவ்வழக்கத்திற்கு மாறாக கிப்பன் பண்டங்கள் நேர் விலை-நிகழ்திறன் உறவு கொள்வன. இதன் பின்புலச் சூழல்களின் பொருளியல் மாதிரியை இயற்றியவர் சர்[1] இராபர்ட்டு கிப்பன் என ஆல்பிரடு மார்சல் என்பவர் தனது பிரின்சிப்பில்ஸ் ஆப் எகனாமிக்ஸ் ("பொருளியல் கோட்பாடுகள்") என்ற நூலில் தெரிவித்துள்ளார்.[2] கிப்பனின் நினைவாகவே இப்பொருளியல் நிகழ்வு கிப்பன் விளைவு என்றும் இப்பண்டங்கள் கிப்பன் பண்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

இயங்கமைவு

தொகு

வறுமைச் சூழலில் அன்றாட உணவில் பயன்படும் மலிவான தானியங்களைக் கொண்டு மார்சல் இவ்விளைவை விளக்குகிறார். இத்தானியங்களின் விலை மிகும்போது மக்களின் வாங்குதிறன் குன்றுகிறது. ஏற்கனவே ஏழ்மைநிலையில் உள்ள மக்களால் வாங்குதிறன் குன்றிய சூழலில் வேறு நயம் உணவுப்பொருட்களை வாங்க முடிவதில்லை. இதனால் நயம் பண்டங்களின் நுகர்வு குறைகிறது. இதனால் ஏற்படும் ஊட்டக்குறைவை ஈடுகட்டும் வகையில் மக்கள் அன்றாட நுகர்வுப் பொருளான உணவு தானியத்தைக் கூடுதலாக உட்கொள்கின்றன. இதனால் ஒரு பொருளின் நுகர்வு வழக்கத்திற்கு மாறாக விலை ஏறும்போதும் ஏறுகிறது.

பகுப்பாய்வு

தொகு

ஒரு பண்டத்தின்மீது கிப்பன் விளைவு ஏற்படுவதற்கு பின்வரும் மூன்று நிலைமைகள் ஒரு சூழலில் அமைந்திருக்க வேண்டும்.

  1. அப்பண்டம் ஒரு மலிவான இழிவுப் பண்டமாக இருத்தல் வேண்டும்.
  2. அப்பண்டத்தின் பயன்பாட்டை ஒட்டிய மாற்றுப் பண்டங்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
  3. மேலும், வாங்குநரின் வருவாயின் பெரும்பகுதி செலவு தெரிவு செய்யப்பட்டுள்ள பண்டத்தில் இருக்க வேண்டும்.

"மாற்றுப் பண்டங்களின் போட்டியினால் விலை அமையாமல் வாங்குநரின் வருவாயினால் மட்டும் அமைகின்றபடி ஒரு பண்டத்தின் மதிப்பும் தரமும் இழிநிலையில் இருத்தல்" என்று முதலாவது கூறை மாற்றியமைத்தால் அதுமட்டுமே போதுமான சூழல்கூறாகும்.

 
கிப்பன் பண்டங்களின் விலை-நுகர்தேவை கோட்டுப்படம்

இந்நிலையை அருகே தரப்பட்டுள்ள வரைபடம் விளக்குகிறது. முதலில் நுகர்பவருக்கு தமது வருவாயை Y என்ற பண்டத்தின்மீதோ X என்ற பண்டத்தின்மீதோ செலவு செய்யும் வாய்ப்புள்ளது. இத்தெரிவுநிலையில் விலைக்கேற்ப நுகர்தேவை மாறுவதை MN என்ற கோட்டில் காட்டலாம். அந்தக்கோட்டை நுகர்பவரின் வரவு-செலவுக் கட்டுப்பாடு எனலாம். படத்தில் I0 என்று பெயரிட்டுள்ள இணைபயன் வளையீ நுகர்வோரின் முன்னுரிமைகளைக் காட்டுகிறது. அவ்வளைவில் சிறப்பான, உகப்பான கொள்முதல் கலவையை A என்ற புள்ளி குறிக்கிறது.

X என்ற பண்டத்தின் விலை இறங்கும்போது, இரு விளைவுகள் ஏற்படுகின்றன. ஒப்பீடு விலை குறைந்த விலையையுடைய X பண்டத்திற்கு சார்பாக நிற்கிறது. இவ்விளைவை பிரதியீட்டு விளைவு என்பர். வரைபடத்தில் A என்ற புள்ளியிலிருந்து B என்ற புள்ளிக்கு இணைபயன் வளையீ நகர்வதில் இவ்விளைவு காட்டப்படுகிறது. B என்ற புள்ளி முந்தைய வளைவின் ஒரு சுழற்சி மையமாகும்.

அதே நேரத்தில், விலைக்குறைப்பு நுகர்பவரின் வாங்குதிறனைக் கூட்டுகிறது. வரவு-செலவுக் கட்டுப்பாடு இவ்வாறு வெளிநோக்கி நகர்வதை வருவாய் விளைவு என்பர். வரைபடத்தில் MP என்று பெயரிடப்பட்டுள்ள புள்ளிகளாலான கோடு இதைக் காட்டுகிறது. P என்பது புதிய விலையினால் வகுக்கப்பட்ட வருவாயாகும்.

முதலாவதான பிரதியீட்டு விளைவு X என்ற பண்டத்தின் நுகர்தேவையை Xa எனும் புள்ளியிலிருந்து Xb எனும் புள்ளிவரை ஏற்றுகிறது. அதே வேளையில், இரண்டாவதான வருவாய் விளைவு அதை Xb இலிருந்து Xc என்ற புள்ளிக்கு இறக்குகிறது. மொத்த விளைவாக X பண்டத்தின் நுகர்தேவை அளவு Xa இலிருந்து Xc ஆகக் குறைகிறது. பிரதியீட்டு விளைவைக் காட்டிலும் கூடுதலாகத் தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வருவாய் விளைவு இருக்கும் பண்டம் கிப்பன் பண்டம் ஆகும்.

நிகழ்வாழ்வில் எடுத்துக்காட்டுக்கள்

தொகு

1845-ஆம் ஆண்டு முதல் 1849-ஆம் ஆண்டு வரை நிலவிய அயர்லாந்துப் பஞ்சத்தின்போது உருளைக் கிழங்கின் விலை ஏறிய வண்ணமிருந்தும் கொள்முதலில் இறக்கத்துக்கு மாற்றாக ஏற்றமிருந்ததை வெகுநாட்களாக கிப்பன் விளைவுக்கு எடுத்துக்காட்டாகச் சுட்டி வந்தனர். ஆனால், 1999-ஆம் ஆண்டு சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செர்வின் ரோசன் என்பவர் தனது முரணொத்த உருளைக்கிழங்கு மெய்ம்மைகள் ("Potato paradoxes") என்ற தலைப்பிலான கட்டுரையில் இது தவறு என நிறுவினார்.[3] அவர் கிப்பன் விளைவைப் பொதுவான நுகர்தேவை மாதிரியைக் கொண்டே விளக்க முடியும் என்று குறிப்பிட்டார். தவிர பஞ்சத்தின்போது உருளைக்கிழங்கின் நுகர்வு எப்படி கூடிக்கொண்டே இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.[4] சீனாவின் உணான் மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு வறுமையில் வாடிய குடும்பங்களில் அரிசி ஒரு கிப்பன் பண்டமாக இருந்ததை ஆய்வுகள் நிறுவின.[5] இதுவே நிகழ்வாழ்வில் ஆவணப்படுத்தப்பட்ட முதலாவது கிப்பன் பண்டமாகும். நுகர்தேவையின் நெகிழ்வும், உணவுக் கலோரித் தேவையின் நெகிழ்வும் ஏழ்மையின் கடுமையைச் சார்ந்து நிகழ்வதால் இவ்விளைவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கினர். இதனால் அரசுகளின் ஏழைகளுக்கான சிறப்பு நல்கைகளைத் (மானியங்களைத்) தக்கவாறு திட்டமிட வேண்டும் என்பது புலனானது.

2005-ஆம் ஆண்டு பெட்ரோலின் விலை செங்குத்தாக ஏறிக் கொண்டிருந்தது. அப்போது கிப்பன் விளைவாக இருக்கலாம் என த நேசன் (The Nation) என்ற இதழில் பணிபுரிந்த சாசா அபிரம்சுக்கி என்பவர் கருதினார். விலையேற்றத்தால் பெட்ரோலுக்குத் தங்கள் வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடும் ஏழை அமெரிக்கர்களால் தங்கள் வண்டிகளின் பராமரிப்புக்கும், பழுது நீக்கத்துக்கும் தேவையான அளவு செலவு செய்ய முடியாது. அதனால் அவ்வண்டிகளின் பெட்ரோல் தேவை கூடுமென்றும் அவர் ஒரு கருத்தை முன்வைத்தார். இச்சூழலில் பெட்ரோல் ஒரு இழிவுப் பண்டமாகவும், பராமரிப்பு ஒரு மாற்றுப் பண்டமாகவும் அமையுமென அவர் கூறினார்.[6] ஆனால் அவரது கருத்துக்குச் சார்பாக போதிய அளவு தரவுகள் அமையவில்லை.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Royal Society Citation
  2. Marshall, Alfred. "Value and Utility". Principles of Economics. London: Macmillan and Co., Ltd. p. 17. பார்க்கப்பட்ட நாள் 2006-07-20. [A]s Sir R. Giffen has pointed out, a rise in the price of bread makes so large a drain on the resources of the poorer labouring families and raises so much the marginal utility of money to them, that they are forced to curtail their consumption of meat and the more expensive farinaceous foods: and, bread being still the cheapest food which they can get and will take, they consume more, and not less of it. {{cite book}}: Cite has empty unknown parameters: |origmonth=, |month=, |origdate=, and |coauthors= (help); Unknown parameter |accessmonth= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. செர்வின் ரோசன் (1999). "Potato Paradoxes". Journal of Political Economy 107 (6): S294-S313. http://ideas.repec.org/p/fth/chices/135.html. பார்த்த நாள்: 2006-08-05. 
  4. "As price goes up, so does demand". The Economist. 2007-07-18. http://www.economist.com/blogs/freeexchange/2007/07/as_price_goes_up_so_does_deman. பார்த்த நாள்: 2011-05-01. 
  5. Jensen, Robert T.; Miller, Nolan H. (2008), "Giffen Behavior and Subsistence Consumption", American Economic Review, American Economic Association, 98 (4): 1553–77, This paper provides the first real-world evidence of Giffen behavior, i.e., upward sloping demand. Subsidizing the prices of dietary staples for extremely poor households in two provinces of China, we find strong evidence of Giffen behavior for rice in Hunan, and weaker evidence for wheat in Gansu. The data provide new insight into the consumption behavior of the poor, who act as though maximizing utility subject to subsistence concerns, with both demand and calorie elasticities depending significantly, and non-linearly, on the severity of their poverty. Understanding this heterogeneity is important for the effective design of welfare programs for the poor.
  6. சாஷா அப்ரம்ஸ்கி (அக்டோபர் 2005). "Running on fumes ("புகையில் ஓடுதல்")". த நேசன் (அக்டோபர் 17, 2005): 15-19. http://www.thenation.com/doc/20051017/abramsky. பார்த்த நாள்: 2006-08-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்பன்_பண்டம்&oldid=3595003" இலிருந்து மீள்விக்கப்பட்டது