கிப்பு (quipu, khipu) என்பது, முற்காலத்தில் அன்டியத் தென் அமெரிக்கப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த தகவல்களைப் பதிவுசெய்து வைப்பதற்குரிய ஒரு கருவி ஆகும். இதைப் பேசும் முடிச்சு எனவும் அழைப்பது உண்டு. இது பருத்தி அல்லது ஒருவகை ஒட்டக உரோமத்தை நூற்று உருவாக்கிய புரிகளால் ஆன பல நிற நூல்களைக் கொண்டது. இது, இப்பிரதேசத்தில் வாழ்ந்த இன்கா மக்களுக்குத் தரவுகளைச் சேகரித்துப் பதிவுசெய்து வைப்பதற்குப் பயன்பட்டது. வரி அறவீட்டுக் கண்காணிப்பு, மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான பதிவுகள், காலக்கணிப்புத் தகவல்கள், படைத்துறை அமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பான தகவல்கள் இவ்வாறு பதியப்பட்டன.[1] இந்த நூல் அல்லது இழைகளில் ஒரு குறித்த முறையில் இடப்பட்ட முடிச்சுக்கள் எண்கள் அல்லது பிற வகை மதிப்புக்களைக் குறித்தன. இவ்வெண்கள் பத்தை அடியாகக் கொண்ட இடம்சார்ந்த குறியீட்டு முறையில் இருந்தன. ஒரு கிப்பு குறைந்த எண்ணிக்கையான இழைகள் முதல் 2000 இழைகள் வரை கொண்டிருக்கலாம்.[2] இதன் வடிவத்தை இழைகளாலான ஈரத்துடைப்பத்தின் வடிவத்துடன் ஒப்பிடுவது உண்டு.[3][4]

இன்காப் பேரரசுக் காலத்தைச் சேர்ந்த ஒரு கிப்பு. தற்போது லார்க்கா அருங்காட்சியகத்தில் உள்ளது.

கிப்பு என ஐயத்துக்கு இடமின்றி அடையாளம் காணக்கூடிய பொருட்கள் முதன் முதலாக கிபி முதலாம் ஆயிரவாண்டைச் சேர்ந்த தொல்லியல் பதிவுகளில் காணப்பட்டன. பின்னர் இவை, இன்காக்களின் கட்டுப்பாட்டில் இருந்த தகுவாந்தின்சுயு பேரரசின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்தன. இப்பேரரசு கி.பி 1450க்கும் 1532க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அன்டெசுப் பகுதி முழுவதும் சிறப்புற்று விளங்கியது. அப்பகுதி எசுப்பானியப் பேரரசின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பின்னர் கிப்புவின் பயன்பாடு படிப்படியாக இல்லாமல் போய் ஐரோப்பிய எழுத்துமுறை அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டது. எனினும் பல ஊர்களில், பதிவு செய்யும் தேவைகளுக்காகவன்றி சடங்குத் தேவைக்காக, கிப்பு ஒரு முக்கியமான பொருளாகவே இருந்து வந்தது. எங்கே, எப்படி சேதமடையாத கிப்புக்கள் இன்னும் இருக்கின்றன என்பது குறித்துத் தெளிவில்லை. பல கிப்புக்கள் இறந்தவர்களின் உடல்களுடன் கல்லறைகளில் வைக்கப்பட்டன.[5]

பெயர்தொகு

தகுவாந்தின்சுயுவின் நிர்வாக மொழியும் அப்பகுதியின் பொது மொழியாகவும் விளங்கிய கெச்சுவா மொழிச் சொல்லான கிப்பு, முடிச்சு அல்லது முடிச்சுப் போடுதல் என்னும் பொருள் கொண்டது.[6]

நோக்கம்தொகு

கிப்புக்களில் பதியப்பட்டிருந்த தகவல்கள் பெரும்பாலும் பதின்ம முறையில் அமைந்த எண்கள் ஆகும். எசுப்பானியர்கள் ஆக்கிரமித்த தொடக்க காலங்களில், எசுப்பானிய அலுவலர்கள், திறை செலுத்தல், பொருட்களின் உற்பத்தி போன்றவை தொடர்பான தகராறுகளைத் தீர்ப்பதற்கு, கிப்புக்களிலேயே தங்கியிருந்தனர். எசுப்பானிய வரலாற்று எழுத்தாளர்களும், கிப்பு என்பது, எண் தொடர்பான தகவல்களை நினைவில் வைத்திருப்பதற்கான சாதனம் என்றே கூறுகின்றனர்.

சில வகை முடிச்சுக்களும், நிறம் போன்ற வேறு அம்சங்களும் எண்ணல்லாத பிற தகவல்களைக் குறிப்புடுவதாக நம்பப்படுகிறது. ஆனாலும், இத்தகைய குறியீடுகள் எதுவும் இன்னும் படித்து அறியப்படவில்லை. இந்த முறையில், அகரவரிசை அல்லது எழுத்துக்களை ஒத்த ஒலியனியல் குறியீடுகள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை என்பதே பொதுவான கருத்து. ஆனாலும், கெரி உர்ட்டன் என்பார், கிப்புவில் இரும முறை ஒன்று பயன்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் ஒலியனியல் அல்லது படஎழுத்து முறை சார்ந்த தகவல்கள் பதியப்பட்டிருக்கக்கூடும் எனவும் கூறுகிறார்.

இதுவரை கிப்புவுக்கும், பெருவிய ஆன்டெசுப் பகுதி மொழியான கெச்சுவாவுக்கும் இடையில் எவ்வித தொடர்பும் கண்டறியப்படவில்லை. இதிலிருந்து, கிப்புக்கள் நாவால் ஒலிப்பதற்கான எழுத்து முறையோ அல்லது ஒலியன்களைக் குறிப்பனவோ அல்ல என்பதை உணரக்கூடியதாக உள்ளது.

குறியீட்டு முறைதொகு

மார்ச்சாவும், ராபர்ட் ஆசரும் பல நூற்றுக்கணக்கான கிப்புக்களை ஆய்வு செய்து, அவற்றில் உள்ள பெரும்பாலான தகவல்கள் எண் சார்ந்தவையே எனவும் அவற்றை வாசிக்க முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர். இவற்றில் கானப்படும் ஒவ்வொரு முடிச்சுத் தொகுதியும் ஒரு இலக்கத்தைக் (digit) குறிக்கும். கிப்புக்களில் மூன்று வகையான முடிச்சுக்கள் காணப்படுகின்றன. இவை, பொதுவான நுனி முடிச்சு (overhand knot), "நீண்ட முடிச்சு", எட்டு வடிவ முடிச்சு என்பன. நீண்ட முடிச்சு, என்பது நுனி முடிச்சுடன் கூடுதலாக ஒரு சுற்றுச் சேர்ந்தது. ஆசரின் முறையில், எட்டுவடிவ முடிச்சுடன், கூடுதல் முறுக்கும் சேர்ந்த நான்காவது வகையும் உண்டு. இது, "EE" எனப்படுகிறது. கிப்பு முறைமையில், எண்கள், தொடராக உருவாக்கப்படும் முடிச்சுத் தொகுதிகளினால், குறிக்கப்படுகின்றன. இவை பத்தை அடியாகக் கொண்டவை.

 • இழையொன்றில் வரிசையாக அமைந்துள்ள முடிச்சுத் தொகுதிகள் இழையில் அவற்றின் இடத்தைப் பொறுத்து பத்தின் வெவ்வேறு படிகளைக் குறிக்கின்றன. இழையின் கீழ் நுனியை அண்டியுள்ள முடிச்சுக்கள் ஒன்றுகளையும், அதற்கு மேலுள்ளவை பத்துக்களையும், அதற்கும் மேலே உள்ளவை நூறுகளையும் குறிக்கின்றன.
 • பத்துக்களைக் குறிக்கும் இடத்திலும் அதற்கு மேலுள்ள இடங்களிலும் அமைந்த இலக்கங்கள் எளிமையான முடிச்சுக்களின் தொகுதியால் குறிக்கப்படுகின்றன (எ.கா., பத்தின் இடத்தில் 4 எளிய முடிச்சுக்களின் தொகுதி 40 ஐக் குறிக்கும்).
 • ஒன்றின் இடத்தில் உள்ள இலக்கங்கள் நீண்ட முடிச்சுக்களினால் குறிக்கப்படுகின்றன (எ.கா., 4 சுற்றுக்களுடன் கூடிய ஒரு முடிச்சு எண் 4 ஐக் குறிக்கும்). இந்த வகையில் ஒன்று என்னும் இலக்கத்தைக் குறிக்க முடியாது. அதனால் "ஒன்று" இலக்கம் எட்டு வடிவ முடிச்சினால் காட்டப்படுகிறது.
 • குறித்த இடத்தில் முடிச்சு எதுவும் இல்லாதிருப்பது பூச்சியத்தைக் குறிக்கும்.
 • ஒன்றுகளைக் குறிக்கும் இலக்கத்துக்கான முடிச்சுகள் வேறுபட்ட முறையில் அமைவதால், எண் எங்கு முடிவடைகிறது என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. இதனால், ஒரே இழையில் பல எண்களைக் காட்டுவதும் சாத்தியமாகிறது.

அழிப்புதொகு

1583 இல், கிப்புக்களை சாத்தானின் வேலையாகக் கருதி, அவற்றை முற்றிலும் அழிக்குமாறு ரோமன் கத்தோலிக்க திருச்சபை உத்தரவு பிறப்பித்தது.[7]

மேற்கோள்கள்தொகு

 1. D'altroy, Terence N. (2001). 18
 2. "Quipu" 2012, http://www.ancientscripts.com/quipu.html
 3. Urton, Gary, Carrie Brezine. Harvard University. (2009)
 4. http://www.nytimes.com/2016/01/03/world/americas/untangling-an-accounting-tool-and-an-ancient-incan-mystery.html Quipu த நியூயார்க் டைம்ஸ்
 5. Urton, Gary. (2011). "Tying the Archive in Knots, or: Dying to Get into the Archive in Ancient Peru
 6. Urton 2003. p. 1.
 7. Questioning the Inca Paradox

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Quipu
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

Discovery of "Puruchuco" toponymதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்பு&oldid=3239944" இருந்து மீள்விக்கப்பட்டது