கிறித்துமசு குடில்

(கிறித்துமஸ் குடில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிறிஸ்துமசு குடில் என்பது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது போல அமைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வின் முப்பரிமாண சித்தரிப்பை குறிக்கும். இது வீடுகளிலும், ஆலயங்களிலும், பேரங்காடி போன்ற பொது இடங்களிலும் கிறிஸ்துமசு காலங்களில், குறிப்பாக திருவருகைக் கால இறுதி நாட்களில் துவங்கி கிறிஸ்து பிறப்புக் காலம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும்.

உரோமை நேப்பில்ஸ் நகரில் 2006ஆம் ஆண்டு காட்சிபடுத்தப்பட்ட குடில்

இதில் குழந்தை இயேசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், தேவதூதர்கள், மூன்று அரசர்கள் ஆகியோர் சித்தரிக்கப்படுவர். இவர்களோடு பெத்லகேமின் விண்மீன், ஒட்டகம், ஆடு, காளை, கழுதை முதலிய மிருகங்களும் இடம் பெறும். பெறும்பான்மையாக இந்நிகழ்வு மலைக்குகையிலோ அல்லது மாடடைக்குடிசையிலோ நிகழ்வது போன்று சித்தரிக்கப்பட்டும். இவற்றை செய்ய தாள், அட்டை, கல் என பல்வேறு பொருட்கள் பயன்படுத்தப்படலாம்.

முதன் முதலில் கி.பி. 1223இல் அசிசியின் பிரான்சிசுவினால் இவ்வகை குடில்கள் உயிருள்ள மிருகங்களாலும், மனிதர்களை மாதிரிகளாகவும் கொண்டு அமைக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[1]

கிறிஸ்து பிறப்பு

தொகு
 
செருமனியில் அட்டையினால் செய்யப்பட்ட குடில்

கிறிஸ்துமசு குடில் சித்தரிக்கப்பட அடிப்படையான நிகழ்வுகள் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் விவரிக்கப்பட்டுள்ளது.[2][3] லூக்கா நற்செய்தியின்படி வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவு தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தபோது ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து மெசியாவின் பிறப்பை அறிவித்ததாகவும், பின்னர் அவர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். (Luke 2:8-20) மத்தேயு நற்செய்தியில் கிழக்கிலிருந்து ஞானிகள் ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டு எருசலேமுக்கு வந்து, குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.(Mat.2:1-23) இவர்கள் மூன்று பேர் என்பதற்கோ அல்லது இவர்கள் இயேசு பிறந்த அதே இரவில் வந்ததாகவோ விவிலியத்தில் இல்லை. ஆயினும் இவ்விரவின் சித்தரிப்பிலேயே இவர்களும் காட்சிப்படுத்தப்படுகின்றார்கள்.

குடிலில் மிருகங்கள்

தொகு

இயேசு பிறந்த இடத்தில் மிருகங்கள் இருந்ததாக விவிலியத்தில் இல்லை. ஆயினும் குடிலில் காளையும், கழுதையும் காட்சிபடுத்தப்படுகின்றது. எசாயா 1:3இன் படி "காளை தன் உடைமையாளனை அறிந்து கொள்கின்றது; கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்து கொள்கின்றது; ஆனால் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை;" என்னும் இறைவாக்கினை சுட்டிக்காட்ட இவை இடம்பெறுகின்றன. மேலும் காளை மீட்பரின் வருகைக்காக இஸ்ரயேல் காத்திருந்ததையும், கழுதை கடவுளுக்கு பணிபுரிய தாழ்ச்சியுடன் ஆயத்தமாய் இருக்கவேண்டும் என்பதையும் புறவினத்தாரையும் குறிக்கின்றது.

மேலும் இயேசுவைக்காண கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் ஒட்டகத்தில் வந்தனர் வாந்தனர் என விவிலியத்தில் இல்லை ஆயினும் இவர்கள் பயணித்ததாக ஒட்டகமும் குடிலில் காட்சிப்படுத்தப்படுகின்றது. எசாயா 60:6இல் உள்ளபடி "ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்: மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்: இளம் நாட்டினர் யாவரும் பொன், நறுமணப்பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்." என்னும் இறைவாக்கு ஞானிகளின் வருகையை முன் உரைப்பதாக நம்பப்படுவதால் இவர்கள் ஒட்டகங்களோடு காட்சிப்படுத்தப்படுகின்றனர்.

வத்திக்கான் நகரக் குடில்

தொகு

திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திகான் நகரின் புனித பேதுரு சதுக்கத்தில் ஆண்டுதோறும் குடில் வைக்கும் பழக்கத்தை 1982இல் ஏற்படுத்தினார்.[4]

2006ஆம் ஆண்டு வத்திக்கான் நகரக்குடிலில் குழல் ஊதுவோர் முதலிய இசைக்கலைஞரின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன.[5] 2007ஆம் ஆண்டு குடில் பெத்லகேம் அல்லாமல் மத்தேயு நற்செய்தியில் உள்ளது போல இயேசுவின் நாசரேத்து இல்லம் சித்தரிக்கபட்டிருந்தது.[6]

1968முதல் திருவருகைக் கால மூன்றாம் ஞாயிரில் வத்திக்கான் நகர புனித பேதுரு சதுக்கத்தில் திருப்பயணிகள் மற்றும் உரோமை நாட்டு குழந்தைகள் கொண்டுவரும் குடிலில் வைக்கப்பட இருக்கும் திருஉவச்சிலைகளுக்கு திருத்தந்தை ஆசி அளிக்கும் வழக்கமும் உள்ளது.[7] 1978ஆம் ஆண்டு, 50,000 பள்ளிக்குழந்தைகள் இந்நிகழ்வில் கலந்துக்கொன்டனர்.[7]

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. Francis of Assisi." Cross, F. L., ed. The Oxford dictionary of the Christian church. New York: Oxford University Press. 2005
  2. Brown, Raymond E.. The Birth of the Messiah. Doubleday, 1997.
  3. Vermes, Geza. The Nativity: History and Legend. Penguin, 2006
  4. Murphy, Bruce and Alessandra de Rosa. Italy for Dummies. For Dummies, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-470-06932-5.
  5. Wooden, Cindy. "No Room at the Inn? Vatican Nativity Scene Gets More Figures". Catholic Online International News, December 18, 2007.
  6. "Vatican: Away with the Manger: Saint Peter's Square Nativity Scene Nixes Stable for Joseph's Workshop". WorldNetDaily.com, December 19, 2007.
  7. 7.0 7.1 Christmas in Italy. World Book Encyclopedia, Inc., 1996, 1979.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறித்துமசு_குடில்&oldid=4041038" இலிருந்து மீள்விக்கப்பட்டது