அண்ணல் தங்கோ

தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
(கு. மு. அண்ணல் தங்கோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கு. மு. அண்ணல் தங்கோ (12 ஏப்ரல் 1904 - 4 சனவரி 1974) என்பவர் ஒரு தனித்தமிழ் அறிஞர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் ஓர் செங்குந்தர் கைக்கோளர் குடும்பத்தில் முருகப்ப முதலியார் - மாணிக்கம்மள் இணையருக்கு மகனாக ஏப்ரல் 12, 1904 அன்று பிறந்தார்.[1][2] இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் ‘சுவாமி நாதன்’. பிற்காலத்தில் தனித்தமிழில் அண்ணல் தங்கோ என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.[3] தன் இளம் வயதில் தந்தையை இழந்ததால், தொடக்கக்கல்வி மட்டுமே படிக்க முடிந்தது. பின்னர் தனது சுயமுயற்சியால் தமிழ் மற்றும் பலமொழிகளில் புலமை பெற்றார்.

காங்கிரசில்

தொகு

இவர் 1918இல் காங்கிரசில் சேர்ந்தார். 1923இல் மதுரை வக்கீல் புதுத்தெருவில் கள்ளுக்கடை மறியலில் மூன்று மாதங்களென இருமுறை ஆறு மாத கடுங்காவல் தண்டனையை அடைந்தார்.[3] நாகப்பூர் சிவில் லைனில் தேசியக் கொடியை ஏற்ற ஆங்கிலேய அரசு விதித்த தடையைமீறி தேசியக் கொடியை ஏற்றி வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டதால் ஏழு மாதங்கள் கடுங்காவல் சிறை தண்டனைப் பெற்றார்.[3] 1927 இல் நீல் சிலை சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு சிலையை உடைக்க முயன்றபோது கைது செய்யப்பட்டு, நீதியரசர் பம்மல் சம்பந்த முதலியாரால் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கபட்டு கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[3] இது போன்ற பல போராட்டங்களில் பங்கேற்று ஐந்து முறை சிறை சென்றார். "பெரியார்" ஈ. வெ. இராமசாமியின் குடிஅரசு இதழில் சிலகாலம் பணிபுரிந்தார்.[3]

1934 பெப்ரவரி 18 ஆம் நாள் கந்தியடிகளை குடியாத்தம் நகருக்கு அழைத்து வந்தார் அண்ணல் தங்கோ. இவர் திரட்டித் தந்த தீண்டாமை ஒழிப்பு நல நிதியை மட்டும் பெற்றுக் கொண்ட காந்தியடிகள் இவர் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், முன்னரே இசைவு தெரிவிக்காத ஆம்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டுச் சென்றார். இதனால் மனம் உடைந்த அண்ணல் தங்கோ இனி காங்கிரசில் இருப்பது தேவையில்லை என்று அதில் இருந்து விலகினார்.[3]

தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில்

தொகு

1936இல் காங்கிரசில் இருந்து விலகி நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் இணைந்தார். 1944ஆம் ஆண்டில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவானபோது அதற்குத் ‘தமிழர் கழகம்’ என பெயர் சூட்டுமாறு வலியுறுத்தினார்.[4]

உலகத்தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை

தொகு

வேலூரில் 1937இல் உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவையைத் தொடங்கினார். ஆண்டுதோறும் பொங்கல் விழாவை வேலூரில் கொண்டாடினார். அதில் பல தமிழறிஞர்களையும் சான்றோர்களையும் கலந்துகொள்ள வைத்து தமிழ் உணர்வை வளர்த்தார். 1937 மற்றும் 1938இல் தமிழர் உரிமை மாநாடுகளை நடத்தினார்.

திருக்குறள் நெறி தமிழ்த்திருமணம்

தொகு

1927 இல் தனது திருமணத்தை, தானே தலைமை தாங்கி, சமசுகிருதம் தவிர்த்து, தூய தமிழில் திருக்குறளைக் கூறி சிவமணி அம்மாளை மணந்தார். இதன் மூலம் ‘திருக்குறள்’ நெறி தமிழ்த் திருமணத்தை’ அறிமுகப்படுத்தினார். இவர்களுக்கு அண்ணல் தமிழர் தங்கோ (பிறப்பு 21-06-1944) மகன் பிறந்தார்.[5]

தமிழ் நிலம் இதழ்

தொகு

1942இல் ‘தமிழ் நிலம்’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.

எழுதிய திரைப்படப் பாடல்கள்

தொகு

நடிகர் சிவாஜிகணேசனைத் திரை உலகுக்கு அறிமுகப்படுத்திய ‘பராசக்தி’ படத்திலும், ‘பெற்ற மனம்’, பசியின் கொடுமை’, 'கோமதியின் காதலன்' ஆகிய திரைப்படங்களிலும் பாடல் எழுதி இருக்கிறார்.

இறப்பு

தொகு

வாழ்நாள் முழுவதும் திருக்குறள் நெறியைப் பரப்பவும் தனித்தமிழை வளர்க்கவும் பாடுபட்ட கு. மு .அண்ணல்தங்கோ குடற்புண் அழற்சியினால் பாதிக்கப்பட்டு 1974, சனவரி 4 அன்று வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார்.[3]

நாட்டுடமையாக்கம்

தொகு

கு. மு. அண்ணல்தங்கோவை பெருமைப்படுத்தும் வகையில் அவருடைய படைப்புக்களை 2008 ஆம் ஆண்டு நாட்டுடமை ஆக்கினார் முதல்வர் கருணாநிதி.[3]

எழுதிய நூல்கள்

தொகு
  • அண்ணல் முத்தம்மாள் பாடல்கள்
  • மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?
  • சிறையில் நான் கண்ட கணவு (அல்லது) தமிழ்மகள் தந்த செய்தி[6]
  • அறிவுப்பா
  • என் உள்ளக்கிழவி சொல்லிய சொல்
  • நூற்றுக்கு நூறு காங்கிரஸ் வெற்றிப்படைப் பாட்டு

மேற்கோள்கள்

தொகு
  1. (in தமிழ்) செங்குந்த மித்திரன். 20. சென்னை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். April 2020. p. 1. https://archive.org/details/senguntha-mithiran-apr-2020/mode/1up. 
  2. (in தமிழ்) செங்குந்த மித்திரன். 20. சென்னை: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம். April 2020. p. 26. https://archive.org/details/senguntha-mithiran-apr-2020#page/26/mode/1up. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 (in ta) தூய தமிழைக் காத்த விடுதலைப் போராட்ட வீரர் அண்ணல்தங்கோ. 2024-04-12. https://www.hindutamil.in/news/opinion/columns/1229693-tamil-freedom-fighter-annal-thango.html. 
  4. செ.அருள்செல்வன் (13 ஏப்ரல் 2017). "அண்ணல் தங்கோ எனும் ஆளுமை!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. குடிஅரசு, 1-7-1944, பக்.11
  6. குடிஅரசு, 16-9-1944, பக்9
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணல்_தங்கோ&oldid=4126722" இலிருந்து மீள்விக்கப்பட்டது