கூரில் தீவுகள்
கூரில் தீவுகள் (Kuril Islands, உருசியம்: Кури́льские острова́, குரீல்ஸ்கியே ஓஸ்த்ரவா, சப்பானியம்: (千島列島 சிசிமா ரெட்டோ?), என்பது உருசியாவின் சக்காலின் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு எரிமலைத் தீவுக்கூட்டம் ஆகும். இது 1300 கிமீ நீளத்துக்கு சப்பானின் ஹொக்கைடோ வின் தென்கிழக்கில் இருந்து 300 கிமீ நீளத்திற்கு உருசியாவின் கம்சாத்கா வரை 300 கிமீ நீளத்திற்கு நீண்டுள்ளது. பசிபிக் பெருங்கடலின் வடக்கே அக்கோத்ஸ்க் கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 56 தீவுகளும், பல சிறிய பாறைகளையும் கொண்டுள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு ஏறத்தாழ 15,600 சதுர கிமீ (6,000 சதுர மைல்கள்) ஆகும்[1], மொத்த மக்கள் தொகை ஏறத்தாழ 19,000.[2]
இத்தீவுக்கூட்டத்தின் அனைத்துத் தீவுகளும் உருசியாவின் ஆட்சி எல்லைக்குள் உள்ளதானாலும், சப்பான் இங்கு தெற்கேயுள்ள இரண்டு தீவுகளுக்கும், ஷிக்கோட்டான், மற்றும் ஹபோமாய் ஆகிய சிறுதீவுகளுக்கும் உரிமை கோருகிறது.
வரலாறு
தொகுபழங்குடிகளான ஐனு மக்கள் கூரில் தீவுகளின் ஆரம்பகாலக் குடிகள் ஆவர். சப்பானியர்கள் ஏடோ காலப்பகுதியில் (1603-1868) இத்தீவுகளைக் கைப்பற்றினர்[3]. 1644 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சப்பானிய வரைபடத்தில் ஷிரெட்டோக்கோ குடாவின் வடகிழக்கே 39 தீவுகள் காட்டப்பட்டுள்ளன. 17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசியப் பேரரசு கூரில் தீவுகளுக்குள் ஊடுருவியது. 18ம் நூற்றாண்டில் உருசியக் குடியேற்றம் கூரில் தீவுகளின் மிகப்பெரும் தீவான இத்தூருப் வரை பரந்திருந்தது. இத்தூருப்பின் தெற்கே உள்ள சில தீவுகள் சப்பானிய தோக்குகாவா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது.
1811 ஆம் ஆண்டில் உருசியக் கடற்படைத் தளபதி வசீலி கலோவ்னினும் அவனது மாலுமிகளும் இங்கு வந்தபோது குனாஷிர் தீவில் வைத்து சப்பானிய நம்பு வம்சத்தின் படையினரால் கைப்பற்றப்பட்டனர். அதே வேளையில் சப்பானிய வணிகர் ஒருவர் 1812 ஆம் ஆண்டில் உருசியர்களால் கைப்பற்றப்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லைகளை நிர்ணயிப்பதில் உடன்பாடு ஏற்பட்டது.
1855 ஆம் ஆண்டில் வணிகம், கடல்வழிப் போக்குவரத்து, மற்றும் எல்லைகளை வரையறுத்தல் என்ற உடன்பாடு எட்டப்பட்டு, இத்தூருப், உரூப் ஆகியவற்றிற்கிடையில் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, இத்தூருப்பிற்கு தெற்கே சப்பானியப் பிரதேசம் எனவும், உரூப்பின் வடக்கே உருசியப் பிரதேசம் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சக்காலின் இரு நாட்டு மக்களும் வாழக்கூடிய இடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1875 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சென் பீட்டர்ஸ்பர்க் உடன்பாட்டின் படி, கம்சாத்காவின் தெற்கே கூரில் தீவுகள் அனைத்தையும் சப்பானுக்கு விட்டுக் கொடுத்து, பதிலாக சக்காலின் பிரதேசத்தை உருசியா ஏற்றுக் கொண்டது.
1904-1905 இல் இடம்பெற்ற உருசிய சப்பானியப் போரின் போது குஞ்சி என்ற இளைப்பாறிய சப்பானிய போர் வீரனும், சும்சு தீவில் வசித்து வந்தவனுமான குஞ்சி என்பவனின் தலைமையில் சென்ற கூட்டம் ஒன்று கம்சாத்கா கரையைக் கைப்பற்றியது. இவர்களைக் கலைப்பதற்காக உருசியா அங்கு தனது படைகளை அனுப்பியது. போர் முடிவுற்றவுடன் ஏற்படுத்தப்பட்ட உருசிய-சப்பானிய மீன்பிடித்தல் உடன்பாட்டின் சப்பானியர்கள் உருசியப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமைஅயை 1945 வரையில் பெற்றிருந்தனர்.
1918-1925 காலப்பகுதியில் சப்பானியர்கள் சைபீரியாவில் இராணுவ ஊடறுப்பு நிகழ்த்திய போது வடக்கு கூரில்களில் நிலைகொண்டிருந்த சப்பானியப் படையினர் ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பியப் படையினருடன் இணைந்து தெற்கு கம்சாத்கா பகுதியைக் கைப்பற்றினர்.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியம் தெற்கு சக்காலின், மற்றும் கூரில் தீவுகளைக் கைப்பற்றியது. ஆனாலும், சப்பானியர்கள் கூரில் தீவுகளில் உள்ள குணாசிர், இத்தூருப், சிக்கோட்டான், ஹபொமாய் ஆகிய தீவுகளுக்கு உரிமை கோருகின்றனர். இந்த நான்கு தீவுகளும் இணைந்த பகுதியை அவர்கள் வடக்குத் தீவுகள் பிரதேசம் என அழைக்கின்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-03-09.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Kuril Islands: factfile". The Daily Telegraph (London). November 1, 2010. http://www.telegraph.co.uk/news/worldnews/asia/japan/8101395/Kuril-Islands-factfile.html.
- ↑ Stephan, John J (1974). The Kuril Islands. Oxford: Clarendon Press. pp. 50–56.
வெளி இணைப்புகள்
தொகு- http://depts.washington.edu/ikip/index.shtml (Kuril Island Biocomplexity Project)
- Kuril Islands at Ocean Dots.com
- Chishima: Frontiers of San Francisco Treaty in Hokkaido பரணிடப்பட்டது 2007-05-28 at the வந்தவழி இயந்திரம்
- Pictures of Kuril Islands