ஹொக்கைடோ

ஹொக்கைடோ ( ஹன் எழுத்தில்:北海道) என்பது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவாகும். மேலும், இது இந்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமுமாகும். ஹொக்கைடோ என்ற சொல் வடகடல்வழி எனப் பொருள்படும். முன்னர், இது எசொ(Ezo) என அழைக்கப்பட்டது. இது (இ)ற்சுகரு (Tsugaru) கடல்நீரேரியால் ஹொன்ஷூ தீவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.[1] இருப்பினும் இப்போது செய்கன் (Seikan) என அழைக்கப்படும் செயற்கைக் கடலடி குகைவழியால் ஹொன்ஷூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சப்போரோ (Sapporo) இதன் தலைநகராகும். இதுவே இத்தீவின் பெரிய நகரமுமாகும்.

ஹொக்கைடோ தீவின் செயற்கைக் கோள்படம்

புவியியல்தொகு

ஹொக்கைடோ தீவு யப்பானின் வடக்கு முனையில் உருசியாவிற்கு அண்மையில் அமைந்துள்ளது. இத்தீவு யப்பான் கடல், ஓகோட்ஸ்க் கடல் மற்றும் பசுபிக் பெருங்கடலினால் சூழப்பட்டுள்ளது. தீவின் மையத்தில் ஏராளமான மலைகளும், எரிமலை பீடபூமிகளும் அமைந்துள்ளன. ஹொக்கைடோ 83,423.84 கிமீ 2 (32,210.12 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. இத்தீவு யப்பானின் இரண்டாவது பெரிய தீவாக திகழ்கிறது. இற்சுகரு நீரிணையினால் ஒன்சுவிலிருந்து பிரிக்கப்படுகின்றது.[2] ஹொக்கைடோ நிர்வாக ரீதியாக ரிஷிரி, ஒகுஷிரி, ரெபன் உள்ளிட்ட பல சிறிய தீவுகளை உள்ளடக்கியது. இத்தீவு பரப்பளவு அடிப்படையில் உலகின் 21வது பெரிய தீவாகும்.

நில நடுக்கம்தொகு

யப்பானின் ஏனைய பகுதிகளை போலவே ஹொக்கைடோவிலும் நில அதிர்வு பாதிப்பு உண்டு கோமா மலை, உசு மவுண்ட், ஷாவா ஹின்சன், தருமா மலை, டோகாச்சி மலை மற்றும் மீகன் மவுண்ட் ஆகியவை செயற்படும் எரிமலையாக கருதப்படுகின்றன. 1993 ஆம் ஆண்டில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் உருவான சுனாமி ஒகுஷிரியை பேரழிவிற்கு உட்படுத்தி 202 மக்களைக் காவு கொண்டது. இத்தீவின் 2003 ஆம் ஆண்டில் அருகே 8.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் தீவு முழுவதும் இருட்டடிப்பு ஏற்பட்டது.[3]

சனத்தொகைதொகு

2015 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 5,383,579 மக்கள் வசிக்கின்றனர்.[4][5] இந்த தீவு யப்பானின் குறைந்தளவு மக்கட்தொகை அடர்த்தியை கொண்டது. மத்திய பிராந்தியத்தின் சப்போரா, ஆசாஹிகா மற்றும் தெற்கில் ஹகோடேட் என்பன இந்த தீவின் முக்கிய நகரங்களாகும். ஹொக்கைடோவின் மிகப் பெரிய நகரமான சப்போரா யப்பானின் ஐந்தாவது பெரிய நகரமாகும். 2019 ஆம் ஆண்டு மே மாத சனத்தொகை கணக்கெடுப்பின் படி சப்போராவில் 1,957,914 மக்களும், 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி  ஆசாஹிகாவில் 359,536 மக்களும், ஹகோடேடில் 279,851 மக்களும் வாழ்கின்றனர்.

காலநிலைதொகு

ஹொக்கைடோ யப்பானின் குளிரான பிராந்தியமாகும். ஆகத்து மாதத்தில் சராசரி வெப்பநிலை 17 முதல் 22 °C (62.6 முதல் 71.6 °F) வரையிலும், சனவரி மாதத்தில் சராசரி  வெப்பநிலை −12 முதல் −4 °C (10.4 முதல் 24.8 °F) வரையிலும் இருக்கும். இரு நிகழ்வுகளிலும் உயரம், தூரத்தின் காரணமாக தீவின் மேற்குப் பகுதியில் வெப்பநிலை கிழக்கை விட சற்று அதிகமாக இருக்கும். 2019 ஆண்டில் மே 26 இல் பதிவு செய்யப்பட்ட  39.5 செல்சியஸ் வெப்பநிலையே இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலையாகும்.[6] ஹொக்கைடோ யப்பானின் பிற தீவுகள் போலல்லாமல் சூன் - சூலையில் மழைக்காலத்தினால் பாதிக்கப்படுவதில்லை. கோடையின் அதன் காலநிலையினால் சுற்றுலாப் பயணிகள் பயணிகளை ஈர்க்க வைக்கிறது. இந்த தீவில் பொதுவாக பனிப் பொழிவு நவம்பரில் ஆரம்பிக்கின்றது. உயர்தரமான பனிப் பொழிவு மற்றும் உள்ள ஏராளமான மலைகளினால் பனி விளையாட்டுக்களின் பிரபலமான பிராந்தியமாக கருதப்படுகின்றது.

பொருளாதாரம்தொகு

ஹொக்கைடோவின் பொருளாதாரத்தில் விவசாயமும் பிற முதன்மைத் தொழில்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. யப்பானின் மொத்த விவசாய நிலங்களில் நான்கில் ஒரு பங்கை ஹொக்கைடோ கொண்டுள்ளது. கோதுமை, சோயாபீன்ஸ், உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வெங்காயம், பூசணிக்காய், சோளம், பால், மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட பல விவசாய பொருட்களின் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. யப்பானின் 22% வீதமான காடுகளில் கணிசமான அளவு மரத்தொழிலையும் கொண்டுள்ளது. கடற்றொழில் மற்றும் மீன்வளர்ப்பு உற்பத்தியில் தேசத்தில் முதலிடம் வகிக்கிறது.[7] 2013 ஆம் ஆண்டில் ஒரு விவசாயிக்கு ஹொக்கைடோவில் சராசரி பண்ணை அளவு 26 ஹெக்டேர் ஆகும். சுற்றுலாத்துறையும் முக்கிய இடத்தை பெறுகின்றது. இதன் குறிப்பாக குளிர்ந்த கோடை காலத்தில் யப்பான் மற்றும் பிற ஆசிய நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்படுகிறார்கள். குளிர்காலத்தில், பனிச்சறுக்கு மற்றும் பிற குளிர்கால விளையாட்டுக்களினால் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றது.[8] ஹொக்கைடோவின் தொழில்துறை வளர்ச்சியில் நிலக்கரி சுரங்க முக்கிய பங்கு வகித்தது.[9]

கல்விதொகு

ஹொக்கைடோவில் 37 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் 7 தேசிய பல்கலைக்கழகங்களும், 5 உள்ளூர் பொது பல்கலைக்கழகங்களும், மற்றும் 25 தனியார் பல்கலைக்கழகங்களும் அடங்கும். 34 ஜூனியர் கல்லூரிகளும், 5 தொழிநுட்ப கல்லூரிகளும் உண்டு.

மேலும் பார்க்கதொகு

ஹொக்கைடோ பல்கலைக்கழகம்

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொக்கைடோ&oldid=3093743" இருந்து மீள்விக்கப்பட்டது