கெம்வெசேத்
இளவரசர் கெம்வெசேத் (Khaemweset) ( காம்வேசு, கேம்வேசு அல்லது கேம்வாசேத் அல்லது செத்னே காம்வாசு என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்பவர் இரண்டாம் ராமேசசின் நான்காவது மகனும் அவரது ராணி ஐசெட்னோப்ரெட்டின் இரண்டாவது மகனுமாவார். எகிப்திய சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகள் இவரது மரணத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுகளாக நினைவுகூரப்பட்டன. [1] வரலாற்று கட்டிடங்கள், கல்லறைகள் மற்றும் கோவில்களை அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் முயற்சியின் காரணமாக கெம்வேசேத் "முதல் எகிப்தியவியலாலர் " என்று விவரிக்கப்படுகிறார்.
கெம்வெசேத் படவெழுத்துக்களில் | |||||||
---|---|---|---|---|---|---|---|
கெம்வெசேத் ḫꜥ m wꜣst "தீபையில் தோன்றுபவர்" | |||||||
பிரித்தானிய அருங்காட்சியத்திலுள்ள கெம்வெசேத்தின் சிலை. |
வாழ்க்கை
தொகுஇளமைக்காலம்
தொகுகெம்வெசேத் இரண்டாம் ராமேசசுவின் நான்காவது மகனும் அவரது ராணி ஐசெட்னோபிரெட்டின் இரண்டாவது மகனுமாவார். இவர் தனது தாத்தா பார்வோன் முதலாம் சேத்தியின் ஆட்சியின் போது பிறந்தார். முதலாம் சேத்தியின் 13 வது ஆட்சிகாலத்தில், பட்டத்து இளவரசர் ரமேசசு நுபியாவில் ஒரு சிறிய கிளர்ச்சியை ஏற்படுத்தினார். இவர் தனது சிறு வயது மகன்களான அமுன்-கெர்-கெபெசெப் மற்றும் கெம்வெசேத் ஆகியோரை இந்தப் போர்களுக்கு தன்னுடன் அழைத்துச் சென்றார். இந்த நேரத்தில் இவர்க்கு 4 வயது மட்டுமே இருந்திருக்கலாம். இவரும், இவரது மூத்த சகோதரனும் போர்க்களத்தில் ஒரு தேரில் பயணம் செய்வதாகக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் பீட் எல் வாலியில் உள்ள கோவிலில் காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. [2]
கெம்வெசேத் வெளிநாட்டு போர்களின் போது தனது சகோதரர்களுடன் வளர்ந்தார். மேலும் இவர் காடேசு போர், கோட் (நகாரின்) முற்றுகை மற்றும் சிரியாவில் தாபூர் முற்றுகை ஆகியவற்றின் காட்சிகளில் இருக்கிறார். இரண்டாம் ராமேசசின் 5 ஆம் ஆண்டு காடேசு போரின் காட்சிகளில், கட்டியின் தலைவர்களின் முன்னணி மகன்களான இளவரசர்களுடன் (இவர்கள் போர்க் கைதிகளாக இருக்கலாம்) கடவுளுக்கு முன் காட்டப்படுகிறார். கோட் போரை சித்தரிக்கும் காட்சிகளில், கெம்வெசேத் கைதிகளுக்கு முன்பாகவும் தனது தந்தைக்கு உதவியாளராக பணியாற்றுவதாகவும் காட்டப்பட்டுள்ளார். இரண்டாம் ராமேசசின் 10 ஆம் ஆட்சியாண்டில், தாபூர் போரின் போதும் கெம்வெசேத் காட்டப்பட்டுள்ளார். [3]
கோயில் பணி
தொகுஇந்த ஆரம்ப காலத்திற்குப் பிறகு, இவர் சில இராணுவப் பயிற்சிகளைப் பெற்றிருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் போர்க்களத்திலாவது இருந்திருக்கலாம், இவர் மெம்பிசுவில் உள்ள தாவ் கோயிலின் பூசாரியானார். இந்த நியமனம் இரண்டாம் ராமேசசின் 16 ஆம் ஆட்சிகாலத்தில் இருந்தது. இவர் ஆரம்பத்தில் அக்கோயிலில் தலைமை பூசாரிக்கு துணையாக இருந்திருப்பார். பூசாரியாக இருந்த காலத்தில் இவர் சக்காராவின் செராபியத்தில் பல அபிஸ் காளைகளை அடக்கம் செய்வது உட்பட சடங்குகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். ராமேசசின் 16 ஆம் ஆட்சிக்காலத்தில், அபிஸ் காளை இறந்து செராபியத்தில் புதைக்கப்பட்டது. இறுதிச்சடங்கிற்கான பரிசுகளை இவரும் இவரது சகோதரர் இளவரசர் ரமேசசு மற்றும் பிரதம அமைச்சர் பாசர் ஆகியோர் வழங்கினர். அடுத்த காளை அடக்கம் ராமேசசின் 30 ஆம் ஆட்சிகாலத்தில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் கருவூலத்தின் தலைவர் சூட்டி மற்றும் மெம்பிசு நகரத் தலைவர் ஊய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்த இரண்டாவது அடக்கத்திற்குப் பிறகு கெம்வெசேத் செராபியத்தை மறுவடிவமைப்பு செய்தார். இவர் நிலத்தடியில் ஒரு ஓவியக் கூடத்தை உருவாக்கினார். அங்கு தொடர்ச்சியான அடக்க அறைகள் ஏற்படுத்தப்பட்டு பல அபிஸ் காளைகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. [2]
கெப்-சேத் திருவிழாக்கள்
தொகுஇவரது தந்தையின் 25 வது ஆட்சிக்காலத்தில், இவரது மூத்த சகோதரர் ராமேசசு பட்டத்து இளவரசரானார். மேலும் 30 வது ஆண்டு ஆட்சிகாலத்தில், இவரது பெயர் சேத் திருவிழாக்களின் அறிவிப்புகளில் இடம் பெறத் தொடங்கியது. இவை பாரம்பரியமாக மெம்பிசில் நடைபெற்றன. ஆனால் சில சடங்குகள் மேல் எகிப்தில் எல் கப் மற்றும் கெபெல் எல்-சில்சிலாவில் செய்யப்பட்டன. இவர் செம் பாதிரியாராக இருந்தபோது, மெம்பிசில் உள்ள பிதா கோயிலைக் கட்டியெழுப்பியிருக்கலாம். மெம்பிசில் இவரது செயல்பாடுகளை சான்றளிக்கும் பல கல்வெட்டுகள் உள்ளன. [3]
கெம்வெசேத் முந்தைய மன்னர்கள் மற்றும் பிரபுக்களின் நினைவுச்சின்னங்களை மீட்டெடுத்தார். சக்காராவில் உள்ள உனாஸ் பிரமிடு, மஸ்தாபத் அல்-பிராவுன் எனப்படும் ஷெப்செஸ்காப்பின் கல்லறை, நியுசெர் இனியின் சூரியக் கோயில், சாஹுரே பிரமிட், ஜோசர் பிரமிட் மற்றும் ஊசர்காப் பிரமிடு ஆகியவற்றுடன் தொடர்புடைய மறுசீரமைப்பு நூல்கள் கண்டறியப்பட்டன. யூசர்காப் பிரமிட் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கெம்வேசேத்தை பிரசாதம் தாங்குபவர்களுடன் காட்டுகின்றன. [3]
கூபு மன்னரின் மகனான இளவரசர் கவாப்பின் சிலையை கெம்வெசேத் மீட்டெடுத்தார்.
இந்த மறுசீரமைப்புகளில் சில இவர் செம் பூசாரியாக இருந்த காலத்தில் நடந்தன. திசோசர் பிரமிட்டின் வேலை இரண்டாம் ராமேசசின் 36 ஆம் ஆட்சிகாலத்தின் தேதியிடப்பட்டது. சில கல்வெட்டுகள் கெம்வெசேத்தின் பட்டத்தை "கலைஞர்களின் தலைவர்" அல்லது "கைவினைகளின் தலைவர்" என்று குறிப்பிடுகின்றன. எனவே, இரண்டாம் ராமேசசு 45வது ஆட்சிகாலத்தில் மெம்பிசில் உள்ள பிதா கோயிலின் பிரதான பூசாரியாக பதவி உயர்வு பெற்ற பிறகு, இந்த மறுசீரமைப்புகளில் சில மேற்கொள்ளப்பட்டன. [2]
பட்டத்து இளவரசர்
தொகுகெம்வெசேத் தனது தந்தையின் இறப்பிற்கு அரியணையில் அமர்ந்தார். இவருக்குப் பிறகு இவரது சகோதரர் மெர்நெப்தா பதவிக்கு வந்தார். [1] இவர் மெம்பிசின் ஆளுநராகவும் பணியாற்றினார்.
அடக்கம்
தொகு1851 மற்றும் 1853 க்கு இடையில் சக்காராவின் செராபியத்தை முதன்முதலில் ஆய்வு செய்தபோது, பிரஞ்சு எகிப்தியவியலாளர் அகஸ்டே மரியட் ஒரு பெரிய பாறையை கண்டார். அதை வெடிபொருட்களைப் பயன்படுத்தி நகர்த்தப்பட்டது. பாறையின் சிதைந்த எச்சங்கள் அகற்றப்பட்டவுடன், ஒரு மனிதனின் மம்மியை உள்ளடக்கிய ஒரு சவப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் ஏராளமான இறுதிச் சடங்கிற்கான செல்வங்களும் இருந்தன. ஒரு தங்க முகமூடி, மேலும் தாயத்துக்கள் இதனை இரண்டாம் ராமேசசின் மகனும் செராபியம் கட்டிய இளவரசர் கெம்வெசேத் என்று பெயரிட்டன. இந்த எச்சங்கள் இப்போது அழிந்துவிட்டன. ஆனால் இது கெம்வெசேத்தின் கல்லறை அல்ல என்றும், இளவரசரைப் போன்று மனித வடிவில் உருவாக்கப்பட்ட அபிஸ் காளையின் எச்சங்கள் என்றும் எகிப்தியியலாளர்கள் நம்புகின்றனர்.
உசாத்துணை
தொகு- M. Ibrahim Aly, À propos du prince Khâemouaset et de sa mère Isetneferet, in: Mitteilungen des Deutschen Archäologischen Instituts Abteilung Kairo 49 (MDAIK 1993) 97-105.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Aidan Dodson & Dyan Hilton, The Complete Royal Families of Ancient Egypt, Thames & Hudson (2004), p. 170-171
- ↑ 2.0 2.1 2.2 Kitchen, Kenneth A., Pharaoh Triumphant: The Life and Times of Ramesses II, King of Egypt, Aris & Phillips. 1983, pp 40, 89, 102-109, 162, 170, 227-230. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85668-215-5
- ↑ 3.0 3.1 3.2 Kitchen, K.A., Ramesside Inscriptions, Translated & Annotated, Translations, Volume II, Blackwell Publishers, 1996
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் கெம்வெசேத் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Prince Khaemwaset
- Khaemwaset - Nozomu Kawai. The Encyclopedia of Ancient History DOI: 10.1002/9781444338386.wbeah15225